79. மனிதனுக்குள் மலை

மனித மனம் அவ்வளவு ஆழமானது. அந்த ஆழத்துக்குள் அத்தனை அற்புத சக்திகள் பொதிந்திருக்கின்றன. அதை அவன் உணர்ந்துகொள்வதும் இல்லை. உலகுக்கு வெளிக்காட்டுவதும் இல்லை.
79. மனிதனுக்குள் மலை

சிஷ்யன் பிரமிப்புடன் பார்க்க.. அமைதியுடன் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார் குருநாதர். அவர்களுக்கு எதிரே.. சற்று தொலைவில் பிரம்மாண்டமான கோபுரம்போல உயர்ந்து எழுந்திருந்தது அழகிய மலை ஒன்று.

பயணத்தில் வழியில் அந்த மலையைக் கண்டதும் இருவருக்கும் மகிழ்வாக இருந்தது. கரடு முரடான கற்பாறைகள் கொண்ட மலையாக இல்லாமல், பச்சைப்பசேலென இருந்தது அது. மொத்த மலைக்கும் ஒரு பச்சைப் போர்வை பூசியதுபோல இருந்தது. மரங்களும் செடி, கொடிகளும் மொய்த்திருந்தன.

“நீள அகலம் கணக்கிட்டு, திட்டம் போட்டுத் தீட்டிவைத்த ஓவியம் போலவே இந்த மலையானது மிகச்சரியான முக்கோண வடிவத்தில் இருக்கிறது குருவே. படைப்பின் அற்புதம் மலைக்கவைக்கிறது..” என புருவம் உயர்த்தி, நெகிழ்ந்தான் சிஷ்யன்.

“ம்..” கொட்டினார் குரு.

இருவரும், அந்த ரம்மியமான பொழுதினை ரசித்து, ருசித்து, அனுபவித்துக்கொண்டிருந்தனர்.

ஒருசில நிமிடங்கள் காற்றின் காதுகளைக் கிழிக்கும் இசைச் சந்தத்துடனும் இனிமையுடனும் கழிந்தன. பேரமைதியைக் கலைத்தார் குருநாதர்.

“இயற்கை நமக்கு அழகை மட்டுமல்ல, அற்புதமான தத்துவங்களையும் அள்ளி அள்ளித் தருகிறது. தனது ஒவ்வொரு படைப்புகளிலும் மனிதன் கற்றறிந்துகொள்ள வேண்டிய உண்மைகளை ஒளித்துவைத்திருக்கிறான் இறைவன்..” என்றார் குரு.

கண்களில் மலையின் அழகையும் காதுகளில் குருநாதரின் கருத்துகளையும் அள்ளிக்கொண்டு, நின்றிருந்தான் சிஷ்யன்.

“மனிதன், தன் திறமைகளை வெளிக்காட்டி விடாமுயற்சிகளால் வெற்றிகளை அடைந்து, சுற்றி இருக்கும் அனைவரையும் வியக்கவைக்கிறான். பாராட்டுகளை வென்றெடுக்கிறான். ஆனால்.. அவன் வெளிக்காட்டும் திறன்களைவிட பன்மடங்கு அவனுக்குள் ஒளிந்திருக்கிறது. மனித மனம் அவ்வளவு ஆழமானது. அந்த ஆழத்துக்குள் அத்தனை அற்புத சக்திகள் பொதிந்திருக்கின்றன. அதை அவன் உணர்ந்துகொள்வதும் இல்லை. உலகுக்கு வெளிக்காட்டுவதும் இல்லை..” என்று கூறி, தன் பேச்சை நிறுத்தினார் குரு.

சிஷ்யனை ஏறிட்டுப் பார்த்தார்.

மனித மனதுக்குள் பொதிந்துகிடக்கும் மகாசக்திகளுக்கும் ஓங்கி எழுந்திருக்கும் மலைக்கும் என்ன சம்பந்தம் என சிஷ்யனுக்குப் புரியவில்லை. இரண்டுக்கும் உள்ள முடிச்சு என்னவென அறிய பேராவல் கொண்டான். குருவின் கருத்தை தொடர்ந்து கேட்க காதல் கொண்டான்.

குரு தொடர்ந்தார்.

“வெளிப்பார்வைக்குத் தெரியும் மலையின் அளவு சிறியதுதான். பூமிக்கடியில் புதைந்திருக்கும் அதன் நீள அகலம் மிகவும் பரவலானது. பரவிக் கிளைத்திருக்கும் வேரினை பூமிக்குள் ஒளித்துவைத்துக்கொண்டு, ஒரே ஒரு விளிம்பை மட்டுமே வெளிக்காட்டும் பெரும் மரத்தைப் போன்றது இது. வெளியில் தெரியும் சிறு விளிம்புக்கே இவ்வளவு வியக்கிறோம் என்றால், தரைக்கு அடியில் ஒளிந்து கிடக்கும் பிரம்மாண்டத்தை என்னவென்று வியப்பது?!” என்றார் குரு.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்துகிடக்கும் அளப்பறிய ஆற்றலின் பிரம்மாண்டம் புரிந்தது சிஷ்யனுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com