76. துன்பம் நேர்கையில்..

பிரச்னைகள் நமக்கு கொடுக்கும் வலியைவிட, அவற்றை நினைத்து நினைத்து நாம் அல்லல்படுவதுதான் அதிக வலியையும் வேதனையையும் நமக்குக் கொடுக்கிறது.
76. துன்பம் நேர்கையில்..
Published on
Updated on
1 min read

வெளியே சென்றிருந்த சிஷ்யன் ஆசிரமத்துக்குத் திரும்பும்போது இறுகிய முகத்துடன் இருந்தான்.

வாங்கி வந்திருந்த சமையல் பொருட்களை அடுக்களையில் கொண்டுபோய் வைத்துவிட்டு, அதே இறுக்க முகத்துடன் ஒரு ஓரமாய் சென்று அமர்ந்தான்.

அவனைப் பார்த்து, நேசத்துடன் புன்னகைத்தார் குரு. பதிலுக்கு புன்னகை வரவில்லை அவனிடமிருந்து.

புன்னகைக்கும் மனநிலையில் அவன் இல்லை என புரிந்துகொண்டார் குரு. அவன் மனக்குழப்பத்துக்கு காரணம் என்ன என்பதை அறியும் முயற்சியில் இறங்கினார்.

அவனுக்கு அருகே வந்து அமர்ந்துகொண்டார். தலையை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தார்.

"என்ன பிரச்னை?" என்று கேட்டார்.

"ஒன்றுமில்லை குருவே.." என்றான் சிஷ்யன்.

"பரவாயில்லை, என்னிடம் சொல்வதற்கு என்ன தயக்கம்?" என்று வற்புறுத்தினார் குரு.

ஓரிரு விநாடிகள் அமைதியாக இருந்தான் சிஷ்யன். அவன் கண்கள் கலங்க ஆரம்பித்ததை கவனித்தார் குரு.

"அங்காடியில் ஒருவர், நான் அறியாமல் செய்த பிழைக்காக என்னைக் கடுமையாக ஏசிவிட்டார்.." என்றான் சிஷ்யன். பேசியபோதே அவன் உதடுகள் துடிதுடித்தன.

"அதுதான் உன் பிரச்னைக்கு காரணமா? அதை எண்ணித்தான் இப்படிக் கலங்குகிறாயா?" என்றார் குரு.

"ஆமாம் குருவே. என்னை அறியாமல் அவர் மீது மோதிவிட்டேன் நான். அதற்கு உடனடியாக மன்னிப்பும் கேட்டுவிட்டேன். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் மிகவும் கடுமையான வார்த்தைகளில் என்னை வசை பாடிவிட்டார் அவர்.." என்றான் சிஷ்யன்.

அவனது கண்களிலிருந்து வழிய ஆரம்பித்த நீரைத் துடைத்துவிட்டார் குரு. சமாதானப்படுத்த முயன்றார்.

"இது ஒரு சின்னப் பிரச்னை. ஆனால், இதன்மூலம் நீ அறிந்துகொள்ள வேண்டிய பெரிய தத்துவம் இருக்கிறது" என்றார்.

கண்ணீரை நிறுத்திவிட்டு, குருவின் வார்த்தைகளை உள்வாங்க ஆரம்பித்தான் சிஷ்யன்.

தான் நினைத்தபடியே அவனது எண்ணங்களை மடைமாற்றம் செய்ய ஆரம்பித்த மகிழ்ச்சியில்.. குரு தொடர்ந்தார்.

"வேறு ஏதேனும் சேதாரம் அவருக்கு உன்னால் ஏற்பட்டிருக்குமானால், அதைச் சரி செய்து கொடுத்திருக்கலாம். அப்படி இல்லாததால், அது மிகவும் சிறிய பிரச்னைதான். உன் தவறை உணர்ந்து நீ அவரிடம் மன்னிப்பும் கோரிவிட்டாய். அத்தோடு அந்தப் பிரச்னை தீர்ந்தது. ஆனால் நீ அதை உனக்குள் சுமந்தபடியே இருப்பதுதான் பெரிய பிரச்னை. பிரச்னைகள் நமக்கு கொடுக்கும் வலியைவிட, அவற்றை நினைத்து நினைத்து நாம் அல்லல்படுவதுதான் அதிக வலியையும் வேதனையையும் நமக்குக் கொடுக்கிறது.." என்றார் குரு.

கண்களைத் துடைத்துக்கொண்டான் சிஷ்யன். புன்னகைத்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com