75. இறைவா.. சரியா?

கோபம் என்னும் குணத்தை மனிதன் என்று துறக்கிறானோ, அன்றுதான் புயலைப் படைக்கும் இறைவனிடம் நியாயம் கேட்கும் தகுதியை அவன் பெறுவான்.
75. இறைவா.. சரியா?

பலத்த மழை பெய்துகொண்டிருந்தது. இடியும் மின்னலும் உடன் சேர்ந்துகொண்டன. இயற்கையின் தாண்டவம் நடந்துகொண்டிருந்தது.

ஆசிரமத்தின் கதவுகளும் ஐன்னல்களும் அடிக்கும் காற்றை சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தன. கதவுகளையும் ஜன்னல்களையும் சாத்திவிட்டு, குருவும் சிஷ்யனும் நெடுநேரம் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். சூழல், அந்த அமைதியைக் கொடுத்திருந்தது அவர்களுக்கு.

அமைதியைக் கலைத்தான் சிஷ்யன். “காலையில் சந்தைக்கு சென்றிருந்தபோதே அங்கே இருந்தவர்கள், இன்று புயல் வரும் என பேசிக்கொண்டிருந்தார்கள்” என்றான். சிஷ்யன்.

“'ஆமாம், அப்படித்தான் தெரிகிறது. இம்முறை சேதாரம் அதிகமாக இருக்கும்போல் தோன்றுகிறது..” என்றார் குரு. காதுகளைக் கிழித்த பேய்க்காற்றின் சத்தம் அதை ஆமோதிப்பதுபோல் இருந்தது.

“குருவே, எனக்கொரு சந்தேகம்..” - திடீரென கேள்விக்குத் தாவினான் சிஷ்யன்.

அவனை நோக்கி, “என்ன சந்தேகம்.. கேள்..” என்றார் குரு.

"நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு.. ஐம்பூதங்களையும் படைத்து ஆள்வது இறைவன்தானே?" என்றான்.

"ஆமாம். அதனால்தான் அவன் எல்லாம் வல்லவன்!" என்றார்.

"அப்படியானால், இவ்வளவு சேதாரத்தை இந்த பூமிக்கும், பூமியில் வாழும் மனிதர்களுக்கும் விளைவிக்கும் புயலை இறைவன் ஏன் படைக்க வேண்டும் குருவே? எனக்கு புரியவில்லை!" -

அவன் கேள்வியில் தொணித்த நியாயத்தை ஆமோதித்தார் குரு. தொண்டையை செறுமிக்கொண்டு, அவனுக்கு விளக்கம் சொல்லிப் புரியவைக்க முயன்றார்.

"கடவுள் படைத்த உயிரினங்களிலேயே அவருக்கு மிகவும் பிடித்தது மனிதனாகத்தான் இருக்க வேண்டும். அதனால், தன் ஒவ்வொரு செயலிலும் மனிதனுக்கு நற்குணங்களை போதிக்கவே விரும்புகிறான் இறைவன். அப்படித்தான் இதை நான் கருதுகிறேன்.." - குரு.

சிஷ்யனுக்கு தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. நற்குணத்துக்கும் புயலுக்கும் என்ன சம்மந்தம் இருக்கமுடியும் என குழம்பினான்.

அவன் முகத்தில் தெரிந்த அறியா வினாவை அறிந்துகொண்டார் குரு. தொடர்ந்து பேசலானார்.

“புயல் வரும்போது அதன் தீவிரம் எப்படி இருக்கும் என நம்மால் கணிக்க முடியாது. புயல் கடந்த பிறகுதான் அதனால் ஏற்பட்ட அழிவுகளும் சேதாரங்களும் மொத்தமாக தெரியவரும். அப்படித்தான் மனிதனுக்கு இருக்கும் கோபம் என்ற குணமும். அழுகை, ஆச்சரியம், ஆனந்தம்.. இப்படி எத்தனையோ உணர்வுகளை அறியவும் அறியவைக்கவும் கற்றுவைத்திருக்கும் மனிதன், தேவையே இல்லாத கோபத்தையும் பழகிக்கொண்டான்..” என்றார்.

“கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்று சொல்வதெல்லாம் வெற்றுச் சாக்குகளே. கோபம் வந்துவிட்டால் அறிவு மழுங்கிவிடும். என்ன பேசுகிறோம், எதைச் செய்கிறோம், யாரையெல்லாம் காயப்படுத்துகிறோம், அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதையெல்லாம் துளியும் சிந்திக்காமல் சேதாரங்களைச் செய்துவிடுகிறோம். இங்கே சேதாரம் என்பது உடையும் உறவுகளாக இருக்கலாம், அழியும் பொருட்களாகவும் இருக்கலாம்..” - குரு சொல்லச் சொல்ல கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான் சிஷ்யன்.

“இயற்கைத் தாண்டவத்தின் மூலம் இறைவன் கொடுக்கும் புயலாக இருக்கட்டும், மனிதன் தன்னைத்தானே சீர்குலைத்துக்கொள்ளும் கோபமாக இருக்கட்டும்.. இரண்டிலும் விளைவுகள் கோரமானதாகத்தான் அமைகின்றன..” என்று கூறிவிட்டு, சிஷ்யனின் முகத்தை ஏறிட்டார் குரு. அவனது ஆழமான சிந்தனை, அவன் முகத்தில் தெரிந்தது.

"இந்த கோபம் என்னும் குணத்தை மனிதன் என்று துறக்கிறானோ, அன்றுதான் புயலைப் படைக்கும் இறைவனிடம் நியாயம் கேட்கும் தகுதியை அவன் பெறுவான்.." என்றார் குரு.

மூடப்பட்டிருந்த ஜன்னல் கதவுகளை ஓங்கி அடித்துத் திறந்தது, வலிமையோடு மோதிய புயல் காற்று.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com