74. முகம்

ஐம்புலன்களில் நான்கு புலன்களை அறிந்துணரும் கருவிகள் முகத்திலேயே அமைந்திருக்கின்றன. முகமே மனிதர்களின் ஆதாரம்
74. முகம்

குளித்துவிட்டு வந்த சிஷ்யன், கண்ணாடியில் தன் முகம் பார்த்துக்கொண்டு நின்றான். அரும்பு மீசை மலர ஆரம்பித்திருந்த அதிசயத்தை ரசித்தான்.

தொலைவில் இருந்த குருநாதர் அதைக் கவனித்தார். அங்கிருந்தபடியே, தான் பெறாத அந்தப் பிள்ளையை ரசித்தார், ஓரிரு விநாடிகள்.

சிஷ்யனை நோக்கி நடந்துவந்தார் குரு.

“பிறக்கும்போதே மனிதர்களுக்கு ஏன் மீசை முளைப்பதில்லை.. தெரியுமா?” என்று கேட்டார் குரு. அவரது கேள்வியில் கிண்டல் தொணித்திருந்தது.

யோசித்தான் சிஷ்யன். பதில் தெரியவில்லை. அமைதியாக இருந்தான். குருவே பேச்சைத் தொடர்ந்தார்.

“ஆளும் வளரணும்.. அறிவும் வளரணும்.. பிறகே மீசை வளரும்..” என்றார் குறும்புச் சிரிப்புடன். குழந்தையின் குறும்புடன் குரு இப்படி இருப்பது எப்போதாவது நிகழும் அபூர்வம்.

“அப்படியானால் மீசை முளைக்கும் ஒவ்வொருவருக்கும் அறிவும் வளர்ந்துவிட்டதாக பொருள் கொள்ளலாமா குருவே?” என்றான் சிஷ்யன். அவன் அப்பாவியாகத்தான் கேட்டான்.

வெடிச்சிரிப்பு கொடுத்தார் குரு. “இல்லை.. நான் விளையாட்டுக்குச் சொன்னேன்..” என்றார்.

“முகத்தில் அகம் பார்க்கலாம் என்பார்கள். முகத்தில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் எப்படி வடிவமைத்திருக்கிறான் இறைவன் எனக் கவனித்தால், நாம் கடைப்பிடிக்க வேண்டிய தத்துவங்கள் பலவற்றை அதிலிருந்து தெரிந்து தெளியலாம்..” என்றும் தொடர்ந்து சொன்னார் குரு.

தெரிந்துகொண்டு தெளிவடைய தயாரானான் சிஷ்யன். குரு விளக்கிப்பேச ஆரம்பித்தார்.

“வெட்ட வெட்ட வளரும் ரோமங்கள், விடாமுயற்சியின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றன. இரண்டு காதுகள், ஒரு வாய் மட்டுமே படைத்திருப்பது எதற்காகத் தெரியுமா? பேசுவதைவிட இரண்டு மடங்கு கேட்க வேண்டும். அப்போதுதான் அறிவு வளரும். மற்றவர்களின் அனுபவம் கேள்வி ஞானத்தில் வரும். பார்ப்பதையெல்லாம் சாப்பிடக் கூடாது என்பதற்காகத்தான் முப்பத்தி இரண்டு பற்கள் அரண் அமைத்துக்கொண்டிருக்கின்றன பற்களாக. கோட்டையில் காவல் இருக்கும் கண்டிப்பான காவலர்களாக இருக்கின்றன பற்கள். அதேசமயம், காவலில் கனிவும் வேண்டும் என்பதற்காகத்தான் மெல்லிய ரோமங்கள் சூழ இருக்கின்றன நம் கண்கள். அல்லவை விலக்கி, நல்லவை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கவே நாசிகளில் ரோமங்களால் ஆன வடிகட்டிகள் படைக்கப்பட்டிருக்கின்றன. ஐம்புலன்களில் நான்கு புலன்களை அறிந்துணரும் கருவிகள் முகத்திலேயே அமைந்திருக்கின்றன. முகமே மனிதர்களின் ஆதாரம்..” என்றார் குருநாதர்.

மீண்டும் ஒருமுறை கண்ணாடியில் தன் ஆதாரத்தைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டான் சிஷ்யன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com