77. முயற்சியும் பயிற்சியும்

ஆர்வ மிகுதியால் அனுபவங்களைச் சேர்ப்பதற்கு முன்னரே, சொந்தத் தொழில் ஆரம்பித்துவிட்ட தன் தவறு அந்த இளைஞனுக்குப் புரிந்தது.
77. முயற்சியும் பயிற்சியும்

ஒரு சில மாதங்களுக்கு முன் குருவை சந்தித்துவிட்டுப் போயிருந்த இளைஞன் ஒருவன் மறுபடியும் ஆசிரமத்துக்கு வந்திருந்தான். வருத்தத்துடனும் ஏக்கத்துடனும் வந்து, குருவை வணங்கிவிட்டு, அவர் எதிரே அமர்ந்தான்.

“வணக்கம் அய்யா.. நான் முன்பு வந்திருந்தபோது என் வியாபாரத்தில் வெற்றிகளை அடைய என்ன செய்வது என உங்களிடம் கேட்டேன். முயற்சிகளை தொடர்ந்துகொண்டே இரு; விடாமுயற்சியே வெற்றியைத் தேடித்தரும் என்று கூறினீர்கள். அதன்படியே நடந்துகொண்டேன். என் முயற்சிகளை ஒருபோதும் நிறுத்தவே இல்லை. என்னால் ஆன எல்லா வழிகளிலும் முயற்சித்துக்கொண்டே இருந்தேன். ஆனாலும்.. போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் என்னால் என் தொழிலில் வெற்றிபெற முடியவில்லை. என்னால் இந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் மனஅழுத்தத்துக்கு மருந்து உண்டா என உங்களிடம் ஆலோசனை கேட்பதற்காக இன்று வந்திருக்கிறேன்..” என்றான் அந்த இளைஞன்.

குருநாதர் அவனுக்குப் பதில் அளிப்பதற்கு முன்பாக ஓடிவந்து அருகே அமர்ந்துகொண்டான் சிஷ்யன். குரு கொடுக்கப்போகும் ஆலோசனையை கேட்கும் ஆவல் அவனுக்கும் இருந்தது.

பேச ஆரம்பித்தார் குருநாதர்.

“முயற்சிகளை செய்துகொண்டே இருப்பது மிக முக்கியம்தான். அதேசமயம், அந்த முயற்சிகளை சரியாக செய்வதற்கு ஏற்ற திறமையும் போதுமான பயிற்சியும் நிச்சயம் இருக்க வேண்டும். உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன்..” - நிறுத்தினார் குரு. நிதானித்தான் இளைஞன். கவனம் குவித்துக்கொண்டான் சிஷ்யன்.

தன் ஆலோசனையைத் தொடர்ந்தார் குருநாதர்.

“மலையேறுவதுதான் உன் முயற்சி என்று வைத்துக்கொள்வோம். மலையேற்றத்துக்குப் பயன்படும் உபகரணங்களை கையோடு எடுத்துக்கொண்டு செல்வது, உன் திறமைகளைப் பயன்படுத்த நீ தயாராக இருப்பதற்குச் சமம். திறமைகள் மட்டுமே போதும் என்று சொல்லிவிட முடியாது. அந்தக் கருவிகளைச் சரியாகப் பயன்படுத்தும் முறையான பயிற்சிகளையும் நீ எடுத்துக்கொள்ள வேண்டும். அதுதான் சிகரங்களைச் சீக்கிரம் அடையத் தேவைப்படும் தகுதிகளாகும். திறமைகளையும், அதைப் பயன்படுத்துவதற்கு தேவைப்படும் பயிற்சிகளையும் கைவசமாக்கிய பின்னரே முயற்சிகள் பலனளிக்கும்..”.

கொஞ்சம் கொஞ்சமாக தன் தரப்பில் இருக்கும் தவறுகள் புரிய ஆரம்பித்தன அந்த இளைஞனுக்கு.

“உன் தொழிலுக்குத் தேவைப்படும் முறையான பயிற்சிகளை நீ எடுத்துக்கொள்ளவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான் உனக்கு வெற்றிகள் வசமாகாமல் போயிருக்கின்றன என்று யூகிக்கிறேன். முதலில் நீ, சொந்தத் தொழில் செய்வதை நிறுத்து. உன் தொழிலில் சிறந்து விளங்கும் ஒரு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்துகொள். அங்கே, கண்ணும் கருத்துமாக இருந்தால், உனக்குத் தேவையான பயிற்சிகள் தாமாகவே கிடைக்கும். ஒவ்வொரு நாளும்.. ஒவ்வொரு நிமிடமும்.. உன் திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தி, கவனமாகக் கற்றுக்கொள். திறமைகளைப் பயன்படுத்தும் தகுதியை அடைவாய். அதன்பின்னர், மறுபடியும் உன் விடாமுயற்சிகளைச் செய். நிச்சயம் பலன் கிடைக்கும்..” என்றார் குரு.

ஆர்வ மிகுதியால் அனுபவங்களைச் சேர்ப்பதற்கு முன்னரே, சொந்தத் தொழில் ஆரம்பித்துவிட்ட தன் தவறு அந்த இளைஞனுக்குப் புரிந்தது. குருவை வணங்கி, விடைபெற்றான்.. வெற்றிகளை விரட்டிப் பிடிக்க.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com