78. விடா முயற்சி

அனுபவ அறிவின் துணை இல்லாமல் அடுத்தடுத்து முயற்சிகள் செய்வது, துடுப்பில்லாமல் படகுச் சவாரி செய்வதற்கே சமம்.
78. விடா முயற்சி

திறமை, தகுதி, முயற்சி, அதனைத் தொடர்ந்த வெற்றி.. இவற்றைப் பற்றிய தெளிவான விளக்கத்தை குருவின் வார்த்தைகளில் இருந்து தெரிந்துகொண்ட சிஷ்யன், அது குறித்து அவரிடம் மேலும் கேட்டுக் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டான்.

“முயற்சிகளுக்கும் விடாமுயற்சிக்கும் என்ன வித்தியாசம் குருவே?” என்றான்.

தனக்கான இன்றைய பாடத்தை அவனே தேர்ந்தெடுத்துக்கொண்டான் என்பதில் குருவுக்கு மகிழ்ச்சி. பாடத்தை ஆரம்பித்தார்.

“அனுபவம் என்பது கடந்துவந்த பாதை அல்ல; அதில் நாம் கற்றுக்கொண்ட பாடங்களே ஆகும். என்னவெல்லாம் தவறுகள் செய்திருக்கிறோமோ.. அவற்றையெல்லாம் திரும்பவும் செய்யக் கூடாது என்பதைக் கற்றுக்கொள்வதே அனுபவம் என்ற ஆழமான சொல்லின் முழுப்பொருளாகும்..” என்றார் குரு.

அனுபவத்துக்கும் முயற்சிகளுக்கும் என்ன சம்பந்தம் என அறியாமல் அமைதியாக அமர்ந்திருந்தான் சிஷ்யன். அவன் முகத்தில் கேள்வி ரேகைகள்.

“உன் குழப்பம் புரிகிறது.. நாம் ஒன்றைக் கேட்க, இவர் ஒன்றைக் கூறுகிறாரே என்றுதானே யோசிக்கிறாய்?” என்று கூறிச் சிரித்தார் குரு.

சிஷ்யனும் சிரித்துக்கொண்டான்.

நிதானமாக தன் விளக்கத்தைத் தெரிவிக்கத் தொடங்கினார் குரு.

“முன்னதாகச் செய்த முயற்சி தோல்வியடைந்துவிட்டால், அதையே நினைத்துக் கலக்கம் கொள்ளாமல் அடுத்த முயற்சியைச் செய்வது நல்ல குணம்தான். ஆனால், பழைய முயற்சியில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு ஆராய வேண்டும். அதில் என்னவெல்லாம் தவறுகள் செய்தோம், ஏன் தோற்றுப்போனோம் என்பதை அறிந்து உணரும் திறன் வேண்டும். அடுத்த முயற்சியை முன்னெடுக்கும்போது, பழைய தவறுகள் எதையும் செய்துவிடாமல் கவனமாகச் செயல்பட வேண்டும். அதுவே விடாமுயற்சி. மாறாக, அதே தவறுகளை மறுபடி மறுபடி செய்துகொண்டிருப்பது அடுத்தடுத்துச் செய்யும் மறு முயற்சிகள் மட்டுமே. அதனால் பலனேதும் கிடைக்காது..” என்றார்.

குழப்பம் தீர்ந்தது சிஷ்யனுக்கு. ஆனால், அடுத்த வினா தோன்றியது.

“வெற்றிகள் வசமானாலும் ஆகாவிட்டாலும்.. அடுத்தடுத்து முயற்சிகள் செய்வது பாராட்டுக்குரிய செயல்தானே குருநாதா..” என்றான்.

“ஆம். அதிலென்ன சந்தேகம். நிச்சயம் பாராட்டுக்குரியதுதான். அந்தக் கோணத்தில் இருந்து பார்த்தால்.. முயற்சிகளும் விடாமுயற்சிகளும் ஒன்றுபோலத்தான். நம்மை நாமே அளவிட்டுக்கொள்வதற்கான தராசு போலத்தான் நமது முயற்சிகள் ஒவ்வொன்றுமே. விழுந்தவன் எழுகிறான், மீண்டும் முயற்சிக்கிறான் என மற்றவர்கள் நம்மைப் பாராட்டினாலும், பரிசு கொடுக்கமாட்டார்கள். நாம் செய்யும் காரியத்தை மட்டும் வைத்துக்கொண்டு இந்த உலகம் நம்மை அளவிடுவதில்லை. அதில் கிடைக்கும் பலனை வைத்தே அளவிடுவார்கள். வெறும் பாராட்டுகள் நம்மை உற்சாகப்படுத்துமே ஒழிய, வெற்றிகளை அடைந்தால்தான் சிகரங்கள் நிரந்தரமாகும். அனுபவ அறிவின் துணை இல்லாமல் அடுத்தடுத்து முயற்சிகள் செய்வது, துடுப்பில்லாமல் படகுச் சவாரி செய்வதற்கே சமம்..” என்று முடித்தார் குரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com