84. ஊழ்வினை

அறியாமல் செய்யும் பாவங்களுக்கான தண்டனை இப்பிறவியிலேயே கிடைக்கும். அறிந்து செய்யும் பாவங்களுக்கான தண்டனை அத்தனை பிறப்புகளிலும் தொடர்ந்து வரும்..
84. ஊழ்வினை

ஆலயப்பிரவேசம் முடித்து, ஆசிரமத்துக்குள் நுழைய அடியெடுத்து வைக்கும்போது அதைக் கண்ணுற்றார் குருநாதர். துணுக்குற்றார்.

உயர்த்தியிருந்த வலது காலை அப்படியே காற்றில் நிறுத்தி, நிதானித்தார். பின்வாங்கினார்.

குருவின் செயல் புதிராக இருந்தது சிஷ்யனுக்கு. அவரது பார்வை நிலைகுத்தியிருந்த இடத்தை அவனும் உற்று நோக்கினான். அங்கே.. ஒரு கட்டெறும்பு ஆசிரமத்தின் நிலைவாயிலில் இடமிருந்து வலமாக குறுகுறுவென ஊர்ந்துகொண்டிருந்தது.

அந்த எறும்பு ஊர்ந்து சென்று.. வாசலைக் கடந்து.. சுவற்றை ஒட்டி நகர்ந்து.. தூரத்துக்குச் சென்று.. புள்ளியாகி மறையும்வரை அதனைப் பார்த்தபடி காத்திருந்தார் குருநாதர். அதன் பின்னரே ஆசிரமத்துக்குள் அடியெடுத்து வைத்தார்.

‘‘எங்கே அந்த எறும்பை மிதித்துவிடுவோமோ என்ற யோசனையில்தான் உள்ளே நுழையாமல் தாமதம் செய்தீர்களா குருவே?’’ எனக் கேட்டான் சிஷ்யன்.

தன்னைக் கவனித்திருந்த சிஷ்யனை கனிவுடன் நோக்கினார் குருநாதர். “ஆம்” என்றார்.

‘‘என் செயலுக்கு பின்னால் இருக்கும் மறைபொருளை நீ அறிவாயா?’’ எனக் கேட்டார் சிஷ்யனிடம்.

அறியாச் சிறுவனாக, ‘‘இல்லை’’ எனத் தலையாட்டினான் அவன்.

குரு பேச ஆரம்பித்தார். சிஷ்யனுக்கு பாடம் கிடைக்கத் தொடங்கியது.

‘‘ஒருவேளை என்னை அறியாமல் நான் அந்த எறும்பை மிதித்திருந்தால் அது இறந்து போயிருக்கக்கூடும். ஒரு உயிரைக் கொன்ற பாவம் என்னைச் சேர்ந்திருக்கும். அதற்கான தண்டனையை நான் அனுபவித்தே ஆகவேண்டி இருக்கும்’’ என்றார் குரு.

‘‘அதெப்படி குருவே! நீங்கள் அறியாமல் செய்த பிழைக்கு நீங்கள் பொறுப்பாக முடியும்?’’ என்று கேட்டான் சிஷ்யன்.

‘‘நான் அந்த எறும்பைக் கவனிக்காமல் காலடி எடுத்து வைத்திருந்தால்தான் அது அறியாமல் செய்த பிழை. அப்போதும் அதை மிதித்திருப்பேன். அது மரணித்திருக்கலாம். அந்த பாவத்துக்கான பலனை இந்த பிறவியிலேயே நான் அனுபவிக்க நேர்ந்திருக்கும். ஆனால் நான் அந்த எறும்பை கவனித்துவிட்டேன். அதன்பிறகும் அந்த பாதகத்தை நான் செய்திருந்தால்.. அது நான் அறிந்தே செய்த பாவக்கணக்கில் சேர்ந்திருக்கும்..’’ என்றார்.

‘‘அதற்கும் தண்டனை உண்டா குருவே?’’ எனக் கேட்டான் சிஷ்யன்.

‘‘ஆம். அதற்குத்தான் அதிகப்படியான தண்டனை. அறிந்தே நாம் செய்யும் பாவங்கள் நம் ஊழ்வினையாக மாறும். ஜென்மங்களில் சேரும். அதற்கான பலன் எத்தனை பிறப்பெடுத்தாலும் நம்மைத் தொடர்ந்து வரும்’’ என்றார் குரு.

‘‘புரிகிறது குருவே. அறியாமல் செய்யும் பாவங்களுக்கான தண்டனை இப்பிறவியிலேயே கிடைக்கும். அறிந்து செய்யும் பாவங்களுக்கான தண்டனை அத்தனை பிறப்புகளிலும் தொடர்ந்து வரும் என்பது எனக்கு நன்றாக புரிகிறது’’ என்ற சிஷ்யன் இன்னொரு கேள்வியையும் எடுத்து வைத்தான்.

‘‘ஆமாம் குருவே.. நீங்கள் ஆசிரமத்துக்குள் நுழையும் சமயத்தில் மிகச்சரியாக உங்கள் காலடி படும் இடத்தில் அந்த கட்டெறும்பு ஊர்ந்து சென்றதற்கு, ஏதேனும் காரணம் இருக்கக்கூடுமோ?’’ என்று கேட்டான் அவன்.

‘‘சரியான கேள்வியைக் கேட்டாய்..’’ எனக் கூறி அவனை தட்டிக்கொடுத்தார் குருநாதர். தொடர்ந்து சொன்னார்.

‘‘அந்தக் கணத்தில் அந்த எறும்பு என் காலடி படும் இடத்தில் இருந்தாக வேண்டும் என்பது என் ஊழ்வினையின் தொடர்ச்சி. முற்பிறவியில் நானோ, இப்பிறவியில் என் மூதாதையர்களோ செய்த பாவத்துக்கான பலன். அந்த எறும்பை நான் மிதிக்காமல் தவிர்த்ததால் என்னைத் தொடர்ந்து வந்த என் ஊழ்வினை அகன்றது. மிதித்திருந்தால் என் அடுத்தடுத்த பிறவிகளுக்கும் அது தொடர்ந்திருக்கும்..’’ என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com