90. புதையல்

எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் பெரும்பாலான மனிதர்களால் வெற்றியடைய முடிவதில்லை. ஆனால், ஒரு சிலரோ எளிதாக வெற்றிக்கனியைப் பறித்துவிடுகிறார்கள்.
90. புதையல்

அன்று கேள்வி நேரம். அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டு, அவற்றுக்கான பதில்களை குருவிடமிருந்து தெரிந்துகொள்ளும் ஆவலோடு காத்திருந்தான் சிஷ்யன்.

“ம்.. கேள் உன் சந்தேகங்களை..” என்று பச்சைக் கொடி காட்டினார் குருநாதர்.

சிஷ்யன் முதல் கேள்வியைக் கேட்டான்.. “அதெப்படி குருவே.. எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் பெரும்பாலான மனிதர்களால் வெற்றியடைய முடிவதில்லை. ஆனால், ஒரு சிலரோ எளிதாக வெற்றிக்கனியைப் பறித்துவிடுகிறார்கள். விநோதமாக இருக்கிறதே இது..?” என்றான் சிஷ்யன்.

“நல்ல கேள்வி.. நாட்டில் பெரும்பான்மையானவர்களின் மனதை அரித்துக்கொண்டிருப்பதைத்தான் நீ கேள்வியாகக் கேட்டிருக்கிறாய்" என்றார் குரு.

தனக்குத்தானே சபாஷ் சொல்லிக்கொண்டான் சிஷ்யன். நிறுத்தி, நிதானமாக பதில் கூறத் தொடங்கினார் குரு.

“ஒரு கதை சொல்கிறேன் கேள். இரண்டு சன்னியாசிகள் பிச்சை எடுப்பதற்காக ஊருக்குள் நுழைந்தார்கள். ஊர்க் கிணற்றடியில் ஒருவர் பின்னர் ஒருவராக தங்கள் உடலைக் கழுவிக்கொண்டார்கள். முதலில் தயாரான சன்னியாசி அருகே இருந்த வீட்டின் வாசலுக்குச் சென்று ‘அம்மா.. தாயே..’ எனக் குரல் கொடுத்தார். வீட்டுக்கு உள்ளே இருந்து எவ்வித சலனமும் வரவில்லை. மறுபடியும் குரல் கொடுத்தார். உறங்கிக்கொண்டிருந்த அந்த வீட்டுப் பெண்மணி அப்போதுதான் எழுந்தாள். அது தெரியாத சன்னியாசி மறுபடியும் குரல் கொடுத்தார். தூக்கக் கலக்கத்தில் இருந்த பெண்மணி மெதுவாக அடுக்களைக்குள் சென்றாள். சன்னியாசி மறுபடியும் குரல் கொடுத்தார். தூக்கம் முழுவதும் கலையாத நிலையில் இருந்தாள் அந்தப் பெண். பொறுமையாகத்தான் பாத்திரத்தை எடுத்து, அதில் உணவு நிரப்பினாள். அது வெளியே நின்றிருந்த சன்னியாசிக்குத் தெரியாதல்லவா.. இத்தனை முறை குரல் கொடுத்தும் வீட்டுக்குள்ளிருந்து யாரும் வெளியே வரவில்லை, இந்த வீட்டில் நமக்கு அன்னம் கிடைக்காது என நினைத்துக்கொண்டார். அடுத்த வீட்டை நோக்கிச் சென்றுவிட்டார்..”

சுவாரசியமாக கதை கேட்டுக்கொண்டிருந்தான் சிஷ்யன்.

“இரண்டாவதாக தயாரான சன்னியாசி இப்போது அந்த வீட்டின் வாசலருகே வந்து நின்றார். ‘அம்மா.. தாயே..’ என அவர் குரல் எழுப்புவதற்கும், வீட்டின் கதவுகள் திறப்பதற்கும் சரியாக இருந்தது. உணவுடன் நின்றிருந்தாள் பெண்மணி. அவ்வளவு நேரமாக குரல் கொடுத்தது அந்த சன்னியாசிதான் என நினைத்துக்கொண்டாள். ‘தூக்கம் முழுவதுமாக விலகாததால் சற்று தாமதமாகிவிட்டது அய்யா.. மன்னித்துக்கொள்ளுங்கள்..’ என்றவாறே உணவைக் கொடுத்தாள்..”

கதையைச் சொல்லி முடித்துவிட்டு, சிஷ்யனை ஏறிட்டார் குரு.

“இதிலிருந்து என்ன தெரிகிறது உனக்கு?” என்றார்.

“முதல் சன்னியாசி முயன்றார். ஆனால் அதற்கான பலன் இரண்டாவது சன்னியாசிக்குக் கிடைத்தது..” என்றான் சிஷ்யன்.

“அது மட்டுமில்லை. இன்னொரு கோணமும் இதில் இருக்கிறது. இன்னொரு கதை சொல்லி அதை உனக்கு புரியவைக்க முயற்சிக்கிறேன்..” என்றார் குரு. அடுத்த கதையைச் சொல்லத் தொடங்கினார்.

“தன் அனுபவ அறிவினாலும், மதிநுட்பத்தினாலும் பூமிக்கு அடியில் புதையல் இருக்கும் இடத்தை அறிந்துகொண்டான் ஒருவன். தரையைத் தோண்ட ஆரம்பித்தான். புதையலைப் பகிர்ந்து கொடுத்தாக வேண்டியிருக்குமே என்பதால் துணைக்கு யாரையும் வைத்துக்கொள்ளவில்லை. தனி ஆளாகக் கஷ்டப்பட்டு தோண்டிக்கொண்டிருந்தான். ஐம்பது அடிகள் தோண்டிய பின்பும் புதையலைக் காணோம். அதற்குள் வியர்த்து விறுவிறுத்துவிட்டான் அவன். சில நிமிடம் இளைப்பாறிவிட்டு செயலைத் தொடர்ந்தான். அறுபது அடிகள் குழி பறித்துவிட்டான். அப்போதும் புதையல் தட்டுப்படவில்லை. லேசாக கவலை ஏற்பட்டது அவனுக்கு. சமாளித்துக்கொண்டு மறுபடியும் செயலைத் தொடர்ந்தான். இப்போது எழுபது அடிகள்! கல்லும் மண்ணும்தான் எதிர்ப்பட்டதே ஒழிய புதையலைக் காணோம். நம்பிக்கை இழந்து ஓரமாக உட்கார்ந்துவிட்டான் அவன். ஒருவேளை தன் கணக்கு தப்பாகிவிட்டதோ என ஐயமுற்றான். சரி, இன்னும் கொஞ்சம் தோண்டிப் பார்க்கலாம் என முடிவெடுத்து தொடர்ந்தான். எண்பது அடிகள். புதையல் தட்டுப்படவே இல்லை. இப்போது அவநம்பிக்கை அடைந்திருந்தான் அவன். உடல் வலுவிழந்திருந்தது. மனதிலும் அவநம்பிக்கை. இருந்தாலும் கடைசியாக சில நிமிடங்கள் செயலைத் தொடர முடிவெடுத்தான். செய்தான். தொண்ணூறு அடிகள் தோண்டிவிட்டான். புதையல் தட்டுப்படவே இல்லை. இனி வேலைக்கு ஆகாது என முடிவெடுத்தான். தன் விதியை நொந்துகொண்டு அப்படியே திரும்பிச் சென்றுவிட்டான்..”

குருவின் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் சிஷ்யன். குரு தொடர்ந்தார்.

“தூரத்தில் இருந்து நடந்தது அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தான் வேறொருவன். முதலாவது நபர் அந்த இடத்தை விட்டுச் சென்றதும் ஓடிவந்தான். தோண்டப்பட்டிருந்த குழியைப் பார்த்தான். இதில் ஏதோ இருக்கலாம் என யூகித்தான். அவன் தொடர்ந்து பூமியைத் தோண்ட ஆரம்பித்தான். வெறும் பத்து அடிகள்தான் அவன் தோண்டியிருப்பான். பளிச்சென தலைகாட்டியது புதையல் பானை! திறந்து பார்த்தான். உள்ளே பொன்னும் பொருளுமாக இருந்தது. ஆனந்தக் கண்ணீருடன் புதையல் பானையை அள்ளிக்கொண்டான்..”

குரு கதையை முடித்தார். சிஷ்யனை ஏறிட்டார். “இதிலிருந்து என்ன தெரிகிறது உனக்கு?” என்றார்.

பட்டென பதில் சொன்னான் சிஷ்யன்.. “தொண்ணூறு அடிகள் கஷ்டப்பட்டுத் தோண்டியவனுக்கு விடாமுயற்சியுடன் இன்னும் பத்து அடிகள் தோண்டிப்பார்க்கலாம் என்று தோணவில்லை. ஆனால், அந்த பத்து அடிகளைத் தோண்டிய அடுத்தவனுக்கு புதையல் கிடைத்துவிட்டது. பொறுமையும் விடாமுயற்சியும் இருந்திருந்தால் முதலாவது நபருக்கே அந்தப் புதையல் கிடைத்திருக்கும்..” என்றான்.

“நீ என்னிடம் கேட்ட கேள்விக்கான பதிலை நீயே சொல்லிவிட்டாய்..” என்றார் குரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com