87. பள்ளிப்பாடம்

முதலில் கடினமான பாடங்களை எடுத்துப் படிக்க வேண்டும். எளிதில் படித்து முடித்துவிடுவார்கள். நேரம் செல்ல செல்ல உற்சாகம் குறையும். அப்போது எளிதான பாடங்களை எடுத்து சிரமமில்லாமல் படித்து முடிக்கலாம்.
87. பள்ளிப்பாடம்

செய்து முடிக்காமல் விட்டது, இன்றே செய்து முடிக்க வேண்டியது என நிறைய கடமைகள் காத்திருந்தன. அத்தனை பணிகளையும் இன்று இரவுக்குள் செய்து முடித்தாக வேண்டும். மலைப்போடு உட்கார்ந்தான் சிஷ்யன்.

எதை முதலில் எடுப்பது, எதை முதலில் முடிப்பது என அவனால் தீர்மானிக்க இயலவில்லை. எழுத்தாணியையும் குறிப்பேட்டையும் கையில் எடுத்துக்கொண்டான். செய்ய வேண்டிய பணிகள் ஒவ்வொன்றையும் சின்னச் சின்ன வார்த்தைகளால் வரிசையாக எழுத ஆரம்பித்தான்.

தூரத்தில் இருந்து சிஷ்யனின் செயலைக் கவனித்த குருநாதர் அவன் அருகே வந்தார். அவனுக்கு இணையாக அவரும் தரையில் அமர்ந்துகொண்டார்.

‘‘என்ன செய்துகொண்டிருக்கிறாய்?’’ எனக் கேட்டார்.

‘‘முடிக்க வேண்டிய பணிகளை வரிசைப்படி எழுதிவைத்துப் பார்க்கிறேன் குருவே..’’ என்றான் சிஷ்யன்.

அவன் கையிலிருந்த குறிப்பேட்டை வாங்கி படித்துப் பார்த்தார் குருநாதர். அவருக்கும் ஒருகணம் மலைப்பாகத்தான் இருந்தது. மலைப்பை மறைத்துக்கொண்டு வியப்புடன் கேட்டார்.

‘‘மகிழ்ச்சி. இத்தனை பணிகளையும் இன்று ஒரே நாளில் செய்து முடிக்கப்போகிறாயா? மிகவும் மகிழ்ச்சி. உன் திறமை என்னவென இவை அனைத்தையும் செய்து முடிக்கும்போது நீயே உணர்ந்திருப்பாய்..’’ என உற்சாகப்படுத்தினார்.

‘‘ஆனால் குருவே..’’ என பேச ஆரம்பித்து, நிறுத்தினான் சிஷ்யன்.

‘‘என்ன விஷயம் கேள்’’ என்றார் குரு.

‘‘இவற்றில் எதை முதலில் மேற்கொள்வது, அடுத்தடுத்து எவற்றை எடுத்துக்கொள்வது என்பதில் எனக்கு குழப்பமாக இருக்கிறது. உங்களால் உதவமுடியுமா நான் திட்டமிடுவதற்கு?’’ எனக் கேட்டான் சிஷ்யன்.

அவன் சிந்திக்கும் விதத்தை வெகுவாக ரசித்தார் குருநாதர். அவனுக்கு உதவுவதற்காக தன் ஆலோசனைகளைத் தெரிவிக்கத் தொடங்கினார்.

‘‘எத்தனை பணிகள் நம் முன்னே இருந்தாலும் அனைத்தையும் திட்டமிட்டபடி செய்து முடிப்பதற்கு ஒரு சுலபமான வழிமுறை சொல்லித் தருகிறேன்’’ என்றார். ஆவலுடன் குருவின் அறிவுரையை கேட்கத் தயாரானான் சிஷ்யன்.

குரு தொடர்ந்தார்.. ‘‘ஒவ்வொரு நாளும்.. நாளின் துவக்கத்தில் நாம் மிகவும் உற்சாகமாக இருப்போம். உடலும் மனதும் எந்த வேலையைக் கொடுத்தாலும் செய்து முடிப்பதற்குத் தயாராகக் காத்திருக்கும். இப்போது நீ செய்திருப்பது மிகச் சரியான செயல். காத்திருக்கும் பணிகளை வரிசையாக ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்துக்கொள்வதே சிறப்பானதாகும். அதன் பின்னர் எந்தப் பணியை முதலில் எடுப்பது எந்தப் பணியை அடுத்தடுத்து தொடர்வது என முடிவெடுக்க வேண்டும்..’’ என்றார்.

தன் கையிலிருந்த குறிப்பேட்டை ஒருமுறை பருந்துப் பார்வையில் பார்த்துக்கொண்டான் சிஷ்யன். குருவை எதிர் நோக்கினான்.

‘‘உடலும் மனதும் உற்சாகத்துடன் இருக்கும்போது மிகவும் கடினமான பணியை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாகவே பலரும் ஆரம்பத்தில் மிகவும் எளிதான பணியை எடுத்துக்கொள்ளவே ஒவ்வொருவரும் விரும்புவார்கள். அது தவறு. சுறுசுறுப்புடன் இருக்கும்போது கடினமான பணியை மேற்கொண்டால் அதனை சுலபமாக முடித்துவிடலாம். உடல் உழைப்பும் அதிக கவனமும் தேவைப்படும் கடினமான பணிகளை முதலில் எடுத்துக்கொண்டு ஒவ்வொன்றாக செய்து முடிக்க வேண்டும். நேரம் செல்ல செல்ல உடல் சோர்வடையும். மனம் உற்சாகத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும். அந்த நேரத்தில் செய்வதற்கு எளிதான பணிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மிச்சம் வைக்காமல் அன்றன்றைய பணிகளை அன்றன்றே முடிப்பதற்கு இதுவே சரியான இலக்கணம்’’ என்றார் குரு.

மகிழ்ச்சியுடன் மறுபடியும் ஒருமுறை தன் குறிப்பேட்டை பார்த்துக்கொண்டான் சிஷ்யன். குரு மேலும் தொடர்ந்தார்.

‘‘ஒவ்வொரு நாளுக்குமான பணிகளை செய்து முடிப்பதற்கு மட்டுமல்ல, பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் அன்றன்று படித்து முடிக்க வேண்டிய பாடங்களுக்கும் இதே இலக்கணம் பொருந்தும். முதலில் கடினமான பாடங்களை எடுத்துப் படிக்க வேண்டும். எளிதில் படித்து முடித்துவிடுவார்கள். நேரம் செல்ல செல்ல உற்சாகம் குறையும். அப்போது எளிதான பாடங்களை எடுத்து சிரமமில்லாமல் படித்து முடிக்கலாம்..’’ என்றார்.

புன்னகையுடன் தலையாட்டிவிட்டு, தன் முதல் பணியை செய்து முடிக்க ஓடினான் சிஷ்யன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com