30. கிரிக்கெட் விளையாட லாயக்கற்றவர்! விமரிசனம் தாண்டி இமாலய வெற்றி பெற்றவர்!

ஜோஸ் பட்லர்… சமீப கால இங்கிலாந்து அணியில் நிறைந்திருக்கும் துடிப்புமிக்க இளைய ஆட்டக்காரர்களில் அதிகம் கவனிக்கப்படுபவர்.
30. கிரிக்கெட் விளையாட லாயக்கற்றவர்! விமரிசனம் தாண்டி இமாலய வெற்றி பெற்றவர்!

எட்டாம் நாயகன்: ஜோஸ் பட்லர்

ஜோஸ் பட்லர்… சமீப கால இங்கிலாந்து அணியில் நிறைந்திருக்கும் துடிப்புமிக்க இளைய ஆட்டக்காரர்களில் அதிகம் கவனிக்கப்படுபவர். ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக மட்டுமல்லாது சர்வதேச அளவில் மிகத் திறன் வாய்ந்த விக்கெட் கீப்பராகவும் திகழ்ந்து வருபவர். வெறும் 28 வயது மட்டுமே பூர்த்தியாகியிருக்கும் ஜோஸ் பட்லர் அதற்குள் இங்கிலாந்து அணியின் நம்பிக்கை மிகுந்த ஆட்டக்காரர்களில் ஒருவராக உருவெடுத்திருக்கிறார். பல முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் இவரது ஆட்டத்திறன் இங்கிலாந்து அணிக்கு கை கொடுத்திருக்கிறது.

கிரிக்கெட் விளையாட்டை அதற்குரிய முழு இயல்புடன் கட்டுக்கோப்பாக்கவும், நிதானமாகவும் விளையாடுகின்ற அணிகளில் ஒன்றான இங்கிலாந்தில் அதிரடியாக ரன்களை சேர்க்கக் கூடிய விளையாட்டாளர்கள் இல்லை என்கின்ற சமீபகால குறையை பூர்த்தி  செய்யும் முகமாக திகழ்கிறார் ஜோஸ் பட்லர். முன்காலங்களில் தனது முரட்டுத்தனமான ஆட்ட வெளிப்பாட்டின் மூலமாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் சலனத்தை உண்டாக்கியிருந்த இங்கிலாந்து வீரரான கெவின் பீட்டர்சனுக்கு பிறகு, அனைத்து வகையிலான கிரிக்கெட் வகைமையிலும் விரைவாக ரன்களை சேர்க்கக் கூடிய விளையாட்டாளராக ஜோஸ் பட்லர் இருக்கிறார். எனினும், அணியில் அவரது திறன் அனுமானிக்கப்பட்டது வெகு சமீபத்தில்தான்.

நெடுந்துயர்ந்த உறுதியான உடலமைப்பை பெற்றிருக்கும், நீல நிற கண்களையுடைய ஜோஸ் பட்லர், அதிகம் தனது உணர்வுகளை வெளி காண்பித்துக் கொள்ளாதவர். அவரது ஆட்டத்தில் வெளிப்படும் தீவிர நிலைகளுக்கு முற்றிலும் நேர்மாறாக அமைதியாகவே எப்போதும் களத்தில் இருந்துக் கொண்டிருக்கிறார். எனினும், எந்தவொரு பந்து வீச்சாளரையும் எளிதில் நிதானமிழக்க செய்யும் வகையிலான ஆட்ட வெளிப்பாடு அவருடையது.

‘ஜோஸ் பட்லர் அதீத திறன்களை பெற்றிருக்கும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன். பந்துகளை விளாசும் அவரது ஆற்றலும், ஷாட் தேர்வுகளும் பெரும் வியப்பளிக்கிறது. மிக புகழ்மிக்க சிறந்த பந்து வீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்வதில் ஒரு சில தருணங்களில் அவர் தடுமாறியிருக்கிறார் என்றாலும், அவரது உறுதிமிக்க நிதான விளாசல்களால் எந்தவொரு பந்து வீச்சாளரையும் கூட அவரால் எளிதில் வெற்றி கொண்டுவிட முடியும்’ என்கிறார் ஆங்கில எழுத்தாளரான ஜியார்ஜ் டூபெல்.

ஜோஸ் பட்லர் சர்வதேச அளவிலான இங்கிலாந்து அணியில் இடம்பெறும் முன்பாக பல உள்ளூர் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அவரது கல்லூரியில் இயங்கி வந்த கிரிக்கெட் அணிக்கும் அவர்தான் கேப்டனாக இருந்திருக்கிறார். அவரது தலைமையிலான அணி தொடர்ந்து கல்லூரி அளவில் பல வெற்றிகளை குவித்திருக்கிறது. கிட்டதட்ட அவரது தலைமையில் விளையாடிய பதினேழு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே அவரது கல்லூரி தோல்வியுற்றிருக்கிறது. அந்த அளவிற்கு அக்காலத்தில் இருந்தே அணியை கட்டுக்கோப்புடன் வழிநடத்திச் செல்லும் தலைமை பண்பும், சிறந்த ஆட்டத்திறனும் ஜோஸ் பட்லருக்கு கைகூடியிருக்கிறது. 2010-ம் ஆண்டின் கல்லூரி அளவிலான விஸ்டம் சிறந்த இங்கிலாந்து கிரிக்கெட்டர் எனும் விருது ஜோஸ் பட்லருக்கே வழங்கப்பட்டிருக்கிறது. தற்காலத்தில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக இருந்து வரும் பட்லர், தனது 21 வயதில் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றார். எனினும், சர்வதேச அளவில் அவர் தனது திறன்களை கட்டியெழுப்ப சில காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.    

துவக்கத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு பட்லர் மீதான வெளிச்சம் ஏற்பட்ட போட்டிகளில் ஒன்று உள்ளூர் அளவிலான இருபது ஓவர் கிரிக்கெட். ஜோஸ் பட்லருக்கு அப்போது 20 வயது. உள்ளூர் அணியான சோமர்செட்டில் அப்போது அவர் இடம்பெற்றிருந்தார். டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சோமர்செட் அணி 14 ஓவர்களில் 107 ரன்களை எடுத்திருந்த போது, பட்லர் களத்திற்கு வந்தார்.

வெறும் ஆறு ஓவர்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் பட்லர் பொறுமையுடன் பந்துகளை கணித்துக் கொண்டிருப்பதற்கு அவகாசம் எதுவும் இருக்கவில்லை. அதனால், களத்தில் இறங்கிய முதல் பந்தில் இருந்தே, தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தத் துவங்கினார். எந்தவொரு பந்து வீச்சாளரையும் அவர் விடுவதாக இல்லை. பந்துகள் மைதானத்தின் நாற்புறமும் சிதறியோடியது. போட்டியின் முடிவில், வெறும் இருபத்தி மூன்றே பந்துகளில் பட்லர் விளாசியிருந்தது மொத்தமாக 55 ரன்கள். ஆறு பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அதில் அடக்கம். பட்லரின் அன்றைய அதிரடி ஆட்டமே அவ்வணி அரையிறுதியான அன்றைய போட்டியில் வெற்றிப் பெற காரணமாக அமைந்திருந்தது. ஆட்ட நாயகன் விருதையும் பெற்று சர்வதேச அளவில் மெல்ல மெல்ல தனக்கான பாதையை நோக்கி நெருங்கத் துவங்கியிருந்தார் பட்லர்.

பல முதல் தர போட்டிகளில் அவரது அதிரடி ஆட்டம் அவர் சார்ந்திருக்கின்ற அணிக்கு வெற்றியை பெற்று தந்திருக்கிறது. அதே போல அக்காலத்திலேயே அதிக எண்ணிக்கையிலான அரை சதங்களையும், வெகு சில போட்டிகளில் சதத்தையும் விளாசியிருக்கிறார் பட்லர். மெல்ல மெல்ல அவர் மீதான கவனம் வலுபெறுகிறது. அண்டர் 17 இங்கிலாந்து அணியில் இடம்பெற்ற பட்லர், நியூசிலாந்து அணிக்கு எதிரான வார்ம் அப் போட்டியில் 49 பந்துகளில் 77 ரன்கள் குவித்து அனைவரின் பார்வையையும் தனது பக்கம் திருப்பினார். துளி பயமும் அற்ற துணிச்சல் மிகுந்த ஒரு பதினேழு வயது இளைஞன் பந்துகளை அத்தனை உறுதியுடன் வீரியமிக்க ஷாட்டுகளால் பவுண்டரிகளாக பரிணமிக்க செய்தது கண்டு எல்லோருக்கும் அவர் மீதான நம்பிக்கை பெருகியபடியே இருந்தது. ஜோஸ் பட்லர் சர்வதேச அணியில் இடம்பெறும் காலம் வெகு அண்மையில்தான் இருந்தது.

தொடர்ந்து அண்டர் 19 அணியிலும் நல்லதொரு முத்திரை இன்னிங்க்ஸ்களை பதித்த ஜோஸ் பட்லர், தனது 21-வது வயதில் இந்திய அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்து அணியின் சார்பில் களமிறங்கினார்.  எனினும், உள்ளூர் அனுபவம் சர்வதேச அணியில் இடம்பெற்றிருக்கும் போது கைக்கொடுக்கவில்லை. தொடர்ச்சியாக ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட வேண்டுமென்று போராடியபடியே இருந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக 2012-ன் துவக்கத்தில் அறிமுகமான ஒருநாள் போட்டியிலும் ரன் எதுவும் எடுக்காமல் இரண்டாவது பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அசாத்தியமான பல ஷாட்டுகளை விளாசும் திறன் கொண்ட ஆட்டாக்காரர் என தற்காலத்தில் பெயரெடுத்திருக்கும் பட்லர் துவக்கத்தில் பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருந்தது.

கிட்டதட்ட இரண்டு மூன்று ஆண்டுகள் கடந்திருந்த நிலையில்தான், பட்லருக்கு முதல் சதம் விளாசும் சந்தர்ப்பம் கிட்டியது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியான அதில், வெறும் 61 பந்துகளில் 121 ரன்களை குவித்திருந்தார். ஒன்பது பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களுமாக பட்லர் அன்றைக்கு தனக்கு கிடைத்த வாய்ப்பினை வெகுவாக பயன்படுத்திக்கொண்டார். பட்லர் இந்த ஆட்டம்தான், இங்கிலாந்து வீரர் ஒருவரால் மிக குறைவான பந்துகளில் குவிக்கப்பட்ட சதம் எனும் சாதனையை நிகழ்த்தியிருந்தது. கிட்டதட்ட பட்லர் வாழ்க்கையில் மட்டுமல்லாது இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வரலாற்றில் நிகழ்ந்த குறிப்பிடத்தகுந்த தருணம்தான் அது என்றாலும், பட்லர் அதன்பிறகும் மீண்டும் தனது இடத்தை அணியில் உறுதிப்படுத்திக்கொள்ள பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருந்தது.

அது நாள்வரையிலும் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பராக நிலைத்திருந்த மாட் பிரயர், தனது ஓய்வு முடிவை எடுத்து அணியில் இருந்து விலகியிருந்ததால், பட்லருக்கு அணியில் ஓரிடம் இருந்துக் கொண்டிருந்தது என்றாலும், அது எந்த தருணத்திலும் வேறொரு சிறந்த விக்கெட் கீப்பர் -  பேட்ஸ்மேனால் கைக்கொள்ளப்படலாம் எனும் சூழலே நிலவியிருந்தது. சரியான அந்த தருணத்தில் நிகழ்ந்த ஆஷஸ் கோப்பை போட்டித் தொடரிலும் பட்லரின் ஆட்டம் சிறப்பானதாக அமையவில்லை.

முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட்டரான ஜுயப்ரி பாய்காட் பட்லரை வெகுவாக எதிர்மறையாக விமர்சனம் செய்தார். ‘ஆஷஸ் கிரிக்கெட்டில் சிக்கிக் கொண்டுள்ள முயல்தான் ஜோஸ் பட்லர். ஒரு ஏழு வயது சிறுவன் பட்லரை விட சிறப்பாக விளையாடி இருப்பான். முழு தொடரில் அவர் ரன் எதுவும் எடுக்கவில்லை. துளி நம்பிக்கையையும் அவரது ஆட்டத்திறன் ஏற்படுத்தவில்லை. என்னைப் பொருத்தளவில் அவரது நம்பிக்கையும், மனக்கட்டுப்பாடும் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரையில் பூஜ்யம் என்றே கருதுகிறேன்’ என மிகக் காட்டமாக தனது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தியிருந்தார். பெரும் ரணத்தை பட்லரின் மனதில் பாய்காட்டின் இச்சொற்கள் உண்டாக்கியிருந்தது என்றாலும், வழக்கம் போல எந்தவொரு சலனத்தையும் பட்லர் காண்பித்துக் கொள்ளவில்லை. இன்னமும் தனது ஆட்டத்திறனை செறிவுப்படுத்த வேண்டும் என்று மட்டும் தனக்குள்ளாக நினைத்துக் கொண்டார்.

அத்தொடருக்கு பின்பாக நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 77 பந்துகளில் 129 ரன்களை குவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும் விமரிசனங்களை கடந்து, ஒருநாள் போட்டியில் அவரது சிறப்புமிக்க ஆட்டம் தொடர்ந்தபடியே தானிருக்கிறது.

சமீப காலங்களில் அவரது ஆட்டத்திறன் மிக அதிகமாகவே மேம்பட்டிருக்கிறது. 2018-ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டித் தொடரில், இரண்டு அரை சதங்கள் அடித்ததோடு, அத்தொடரின் அதிகபட்ச ரன்கள் குவித்த வீரர் எனும் சாதனையையும் நிகழ்த்தினார். ஒரு போட்டியில் அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது. அதே போல ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஐந்து போட்டிகளில் கொண்ட தொடரில் இரண்டு அரைச் சதங்களையும், ஒரு சதத்தையும் பூர்த்தி செய்தார். இந்த தொடரின் ஐந்தாவது போட்டியில் பட்லர் 110 ரன்களை குவித்திருந்தார். அதில் மிகவும் வேடிக்கையான தகவல் என்னவென்றால், வேறு எந்தவொரு இங்கிலாந்து வீரரும் அன்றைய போட்டியில் 20 ரன்களை கடக்கவில்லை. பட்லர் ஒற்றைய நாயகனாக அன்றைய போட்டியில் நிலைத்து நின்று விளையாடினார். ஆட்ட நாயகன் விருது மட்டுமல்லாது, தொடர் நாயகன் விருதும் இப்போட்டியின் பின்பாக அவருக்கு வழங்கப்பட்டது. பல பத்திரிகைகள் அவரைப் பாராட்டி, ‘மிகச் சிறந்த வெண்ணிற பந்தில் விளையாடக் கூடிய விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன்’ என்று புகழாரம் சூட்டின.

கூடுதலாக, சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இருபது ஓவர் போட்டியில் 22 பந்துகளில் அரை சதம் விளாசி இங்கிலாந்து வீரர் ஒருவரால் குறைந்த பந்துகளில் விளாசப்பட்ட அரை சதம் எனும் சாதனையை நிகழ்த்தினார். அதோடு, டெஸ்ட் போட்டியிலும் தனது முதல் சதத்தை இந்தியாவுக்கு எதிராக குவித்திருக்கிறார் பட்லர். எந்தவொரு கிரிக்கெட் வீரர் பள்ளி சிறுவனுடன் ஒப்பிடப்பட்டு, கிரிக்கெட் விளையாட லாயக்கற்றவர் என்று பழிக்கப்பட்டாரோ அவரைத்தான் இன்று இங்கிலாந்து அணியின் மிகச் சிறந்த வீரர் என்று பத்திரிகைகளும் கிரிக்கெட் ஆர்வலர்களும் புகழாரம் சூட்டுகின்றனர். அவருக்குத்தான் இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக பதவி உயர்வு வழங்கியிருக்கிறார்கள் அவரைத்தான் வருங்கால இங்கிலாந்து அணியை வழிநடத்திச் செல்ல தகுதி வாய்ந்த விளையாட்டாளராக கருதுகின்றனர்.  

(சிக்ஸர் பறக்கும்…)  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com