சுடச்சுட

  

  41. தேசிய கொடி கம்பீரத்துடன் மைதானத்தில் பறந்த தினம் அது! சிக்ஸர்களாய் விளாசிய கேப்டன் தோனி!

  By ராம் முரளி.  |   Published on : 08th March 2019 10:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dhoni_world_cup

   

  மும்பை நகரத்தின் புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் 2011-ல் நடைபெற்ற உலக கோப்பை இறுதிப் போட்டியில் தோனி அடித்த சிக்ஸர் எந்தவொரு கிரிக்கெட் ரசிகராலும் எளிதில் மறக்க முடியாதது. தோனியின் மிகச் சிறந்த இன்னிங்க்ஸ்களில் ஒன்றென கருதப்படும் அப்போட்டி, ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. 28 வருடங்களுக்கு பிறகு, உலக சாம்பியனாக இந்திய கிரிக்கெட் அணி மிளிர்ந்த தினம் அது. அந்தப் போட்டியில், வழக்கத்துக்கு மாறாக யுவராஜ் சிங் களமிறங்குவதற்கு முன்னதாக, தோனி தனது இடத்தை ஆட்ட வரிசையில் முன்னகர்த்திக் கொண்டார்.

  அந்த இன்னிங்க்ஸில் இந்தியா வெற்றிப்பெற 275 ரன்கள் தேவையாய் இருந்தது. துவக்க ஆட்டக்காரர்களான சச்சின் மற்றும் சேவாக் எந்தவொரு சலனத்தை உண்டாக்காமல் களமிறங்கிய சுவடுகளின்றி விரைவாக தங்களது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார்கள். அடுத்து இறங்கிய கோலியும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துவிட்டார். ஒரு புறம் கம்பீர் சிறந்த முறையில் பொறுப்புணர்வுடன் ரன்களை சேர்த்துக் கொண்டிருக்க, மறுபுறத்தில் தோனி 22வது ஓவரில் களம்புகுந்தார்.

  பொதுவாகவே, உலக கோப்பை போன்ற உச்சபட்ச புகழ்கொண்ட தொடர்களில் விளையாடும்போது, அணி வீரர்களிடத்தில் பதற்ற உணர்வு மேலோங்கிவிடும் என்பதால், எத்தகைய சூழலையும் லாவகமாக தனது உள்ளுணர்வின்படி கையாளும் திறன்பெற்ற தோனி அன்றைய தினத்தில் முன்னதாகவே மைதானத்தில் இறங்கினார். கம்பீரும், தோனியும் மிகுந்த கூருணர்வுடன் மெல்ல  மெல்ல ரன்களை சேர்த்தனர். இந்தியாவை வெற்றியின் பாதையில் மிக நிதானமாக நகர்த்திச் சென்றார்கள்.

  வெற்றி கிட்டதட்ட ஊர்ஜிதப்படுத்தப்பட்ட நிலையில், கம்பீர் அவசரப்பட்டு இலங்கை அணி வீரர் பெராரா வீசிய பந்தை ஏறி அடிக்க முற்பட்ட போது, போல்ட் ஆகி தனது விக்கெட்டை பறி கொடுத்தார். மீண்டும் மைதானத்தில் எல்லோரிடத்திலும் பதற்றம் தொற்றிக் கொண்டது. கம்பீர் விக்கெட் விழுந்தது 42-வது ஓவரில். இப்போது மீதமிருக்கும் எட்டு ஓவர்களில் இந்திய அணி வெற்றி பெற மேலும் 53 ரன்கள் தேவையாய் இருந்தது.

  தோனியுடன் யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்தார். இவர்களது இணை மேலும் நிதானத்துடன் விளையாடியது. ரன்கள் குவிந்துக் கொண்டே இருந்தன. வரலாற்று முக்கியதுவம் கொண்ட உலக கோப்பை வெற்றிக்கு மிகச் சொற்ப ரன்களே தேவையாய் இருந்தன. 49-வது ஓவரை குலசேகரா வீசுகிறார். ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனமும் தோனியின் மீதே நிலைத்திருக்கிறது. பரவசமும், பரபரப்பும் கலந்த விந்தையானதொரு உணர்வில் கைகளை பிசைந்துக் கொண்டு, மைதானத்திலும், தொலைக்காட்சி முன்பும் இந்திய ரசிகர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். நாடெங்கிலும், இந்த போட்டியை பற்றியே அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சி இல்லாதவர்கள், வானொலியிலும், பயணங்களில் இருப்பவர் எஃப் எம்களிலும் இந்த போட்டியின் நிலவரத்தை தொடர்ந்து பின் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

  குலசேகரா வியர்வையில் நனைந்த உடலுடன், தோனியை நோக்கி ஓடி வருகிறார். அவரது விரல்களில் அந்த பந்து அழுத்தமாக பொதிந்திருக்கிறது. விரைந்து வந்து தோனியின் திசையில் வீசுகிறார். அவ்வளவுதான், தோனி தனது பிரத்யேகமான ஷாட்களில் ஒன்றான ஹெலிகாப்டர் ஷாட்டை விளாச, பந்து வானத்தை நோக்கி பறக்கிறது. மைதானம் முழுக்க பலமாக ஆரவாரம் பெருக, இந்தியா தனது இரண்டாவது உலக கோப்பையை வென்றெடுத்தது. மைதானத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் பெரும் நெகிழ்வுடன் ஓடி வந்து தோனியை கட்டியணைத்துக் கொண்டிருக்கிறார்கள். தேசிய கொடி மிகுதியான கம்பீரத்துடன் மைதானத்தில் பறக்கிறது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உணர்ச்சி மேலிட அந்த அற்புத தருணத்தின் பரவசம் தாளாமல் கண்ணீர் சிந்துகிறார்கள்.

  பன்னெடுங்காலமாக இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் சச்சின் முதல் முறையாக தனது பெரும் கனவுகளில் ஒன்றான உலக கோப்பை வெற்றி அணியில் நிலைபெற்றிருப்பது என்பது அன்றைய தினத்தில்தான் சாத்தியமாகியிருக்கிறது. இத்தனைக்கும், உலக கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்திருக்கும் வீரர் சச்சின் டெண்டுல்கர்தான். அவரது பங்களிப்பை போற்றும் வகையில், அணி வீரர்கள் சச்சினை தோள்களின் மீதேற்றி மைதானம் முழுக்க வலம் வருகிறார்கள். எங்கும் உற்சாகம் பெருகியிருக்கிறது. எனினும், தோனி எந்தவொரு சலனத்தையும் பெரிதளவில் காண்பித்துக் கொள்ளவில்லை. வெற்றியை அணி வீரர்களிடத்தில் பகிர்ந்தளித்துவிட்டு, ஒதுங்கியே நின்றிருந்தார்.  

  நெடிய வரலாறு கொண்ட உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணி இரண்டாவது முறையாக வெற்றியடைந்திருக்கிறது. கபில் தேவ் தலைமையில் 1983-ல் உலக கோப்பை வெற்றிக்குப் பிறகு, 2011-ல் தோனியின் தலைமையில் மீண்டுமொரு வெற்றி. பெரும் நினைவுத் தொகுப்பாக, இப்போட்டி நமது தலைமுறை கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் என்றென்றைக்குமாக படிந்திருக்கிறது. நினைவில் ததும்பும் போதெல்லாம் சிலிர்ப்பை உண்டாக்கிவிடும் மகத்தான பெரு வெற்றி அது. சுனில் கவாஸ்கர், 'நான் இறக்கும் தருவாயில், உலக கோப்பை இறுதிப் போட்டியில் தோனி விலாசிய சிக்ஸரை பார்த்துக் கொண்டே இறக்க வேண்டும் என்று விரும்புகிறேன்' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

  மிக எளிய குடும்பத்தில் பிறந்து பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வளர்ந்த தோனி, அன்றைய போட்டிக்கு பின்பாக, கிரிக்கெட் வரலாற்றில் நிலைத்ததொரு பிம்பமாக ஆழப் பதிந்துவிட்டார். அவரது இடம் எவரொருவராலும் அழிக்க முடியாத வகையில், நிரந்தரமாக வேர் கொண்டுவிட்டது. மிகச் சிறந்த தலைமை பண்புகளும், வெற்றிக்கான சாதுர்யமும் ஒருங்கே பெற்றிருக்கும் தோனி இந்திய அணியின் தலைசிறந்த கேப்டனாக அன்றைய போட்டிக்கு பின்பாக, உருவெடுத்திருந்தார்.

  'எனது அசாத்தியமான துணிச்சல் கடந்த கால அனுபவங்களில் இருந்துதான் எனக்கு கிடைத்தது. எனது வாழ்க்கையில்  நான் விளையாடியுள்ள பல்வேறு கிரிக்கெட் போட்டிகளும், நான் சந்தித்திருக்கின்ற சவால் மிகுந்த தருணங்களும்தான் என்னை உருவாக்கியிருக்கின்றன' என்று சொல்லும் தோனி, இன்றைக்கு சிறந்த தலைமை பண்பாளருக்கான எடுத்துக்காட்டாக திகழ்கிறார். அணி வீரர்களின் சாதக பாதக அம்சங்களை நன்கு உணர்ந்திருப்பது, தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறன், அனைத்து வீரர்களுக்கும் இடையிலான லயத்தை பாதுகாப்பாது, தனித் திறன்களை நன்கு செறிவூட்டிக் கொள்ள தொடர்ச்சியாக வாய்ப்புகளை வழங்குவது, சூழலுக்கு பொருத்தமான முடிவுகள் எடுப்பது என தோனியின் சீரிய அணுகுமுறை இந்திய அணி ஒரு பலம் மிகுந்த சர்வதேச அணியாக உருதிரண்டதற்கு காரணங்களாக திகழ்கின்றன.

  துவக்க காலத்தில் பல்வேறு மூத்த விளையாட்டு வீரர்களுடன் இணைந்து விளையாடிய அனுபவம் தோனிக்கு இருக்கிறது. அவர்களுடன் தொடர்ச்சியான உரையாடல்களில் தோனி பங்கெடுத்துக் கொள்வார். குறிப்பாக, ஸ்டம்புகளின் பின்னால் நின்றிருக்கும் தோனி, தனதருகில் ஸ்லிப் பகுதியில் இருக்கும் சச்சின், டிராவிட், லஷ்மண் போன்றவர்களுடன் அதிகளவில் உரையாடிக் கொண்டிருப்பார். போட்டியின் ஒவ்வொரு அங்கத்திலும், தனது அபிப்ராயங்களை முன்மொழிய அவர் தவறியதே இல்லை. அதேப்போல, அவர்கள் தெரிவிக்கின்ற கருத்துக்களையும் முழுமையாக உள்வாங்கிக்கொள்வார். இது போன்ற விவாதங்கள்தான், தோனியின் கிரிக்கெட் அறிவு பற்றிய புரிதலை மூத்த வீரர்களிடம் உருவாக்கியிருக்கிறது.

  அதே போல, சச்சின் தான் பந்து வீசுகின்ற தருணங்களில், தோனியின் கருத்துகளை கேட்பார். மைதானத்தின் தன்மை மற்றும் களத்தில் நின்றிருக்கும் பேட்ஸ்மேனின் அப்போதைய மனநிலை முதலியவற்றை கணக்கில் கொண்டு, சச்சினுக்கு தன்னால் இயன்ற வகையிலான ஆலோசனையை வழங்குவார் தோனி. பிற்காலத்தில், டிராவிட் இந்திய அணியின் தலைமையில் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்த போது, உடனடியாக அடுத்த தேர்வாக இருந்த ஒரு விளையாட்டாளர் சச்சின் மட்டும்தான். ஏனெனில், அவரளவுக்கு அனுபவம் வாய்ந்த வீரர்கள் வேறு யாரும் அணியில் இல்லை. ஆனால், சச்சின் தனது ஆட்டத்தின் போக்கை கேப்டன் பொறுப்பு பாதிக்கிறது என்று சொல்லி, தோனியின் பெயரை சிபாரிசு செய்தார். எந்தவொரு கிரிக்கெட் வீரரின் மீது சிறு வயதில் தோனி பெரும் வியப்பு கொண்டிருந்தாரோ அதே சச்சின் இன்றைக்கு தோனியை இந்திய அணியின் கேட்பன் பொறுப்புக்கு முன்மொழிகின்றவராக மாறியிருந்தார்.

  தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாயம் அந்த தருணத்தில் இருந்து தொடங்கியது. 2007-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மூத்த வீரர்களுக்கு தலைமை தாங்கி அணியை வழிநடத்திச் சென்றதிலிருந்து, 2016-ல் இளைய துடிப்பு மிக்க அணியை உருவாக்கி வளர்த்தெடுத்தது வரையில் அவர் உண்டாக்கியிருப்பது பல பெரும் சாதனைகளை. இந்திய அணிக்கு அவர் சேர்த்திருக்கும் பெருமைகள் மட்டுமே பல பக்கங்களுக்கு நீளக் கூடியது. டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணியை நம்பர் 1 இடத்துக்கு உயர்த்தியது, ஐசிசி நடத்துகின்ற மூன்று முக்கியத் தொடர்களான – 2007-ல் இருபது ஓவர் உலக கோப்பை, 2011-ல் சர்வதேச ஒருநாள் உலக கோப்பை, 2013-ல் சாம்பியன்ஸ் கோப்பை என மூன்றையும் வென்றெடுத்த ஒரே கேப்டன், 27 டெஸ்ட் வெற்றிகள், கேப்டனாக அதிக சிக்ஸர் அடித்திருக்கும் வீரர் என சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் அதிர்வுகளை குறுகிய காலத்தில் உருவாக்கிய தோனி போல வேறொரு வீரர் எவருமில்லை.

  தனது இந்த அதிவேக வளர்ச்சியை தோனி ஒருபோதும் தலையில் ஏற்றிக் கொண்டதில்லை. தொடர்ந்து அவர் களத்தில் நின்றிருக்கும் போது சூழலையும், அணி வீரர்களை ஒன்று குவிப்பத்திலும் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்திய அணியின் வெற்றி ஒன்றே அவரது இலக்காக இருந்து வருகிறது.  'நான் கிரிக்கெட் விளையாடும் போதும், எனது ஆழ்மனம்தான் அதிகளவில் செயலாற்றுகிறது. தெளிவான திட்டமிடல்களை கொண்ட அணித் தலைவரின் வழி நடத்தலாக மட்டுமே அல்லாமல், ஒட்டுமொத்த சக அணி வீரர்களையும் உள்ளூணர்வால் அறிந்து அணியின் கூட்டுழைப்பை பயன்படுத்திக் கொள்வதையே எனது தலைமை பின்பற்றுகிறது. எனது துவக்க தினங்களில் பல சீனியர் விளையாட்டாளர்களுடன் எனக்கு கிடைத்த அனுபவங்கள் மிக முக்கியமானவை. அவர்களிடம் இருந்து எப்படி நிதானமாகவும், என்னையே சீராக வழிநடத்திச் செல்ல வேண்டுமென்றும், அதோடு, எத்தகையதொரு கடின சூழலையும் நமக்கு ஏற்ற வகையில் எப்படி வளைத்துக் கொள்வது என்பதையும் கற்றுக் கொண்டேன். கேப்டன் என்பது மிகச் சிறிய விஷயம் மட்டுமே. ஆனால், அந்த மூத்த வீரர்கள் என் மீது உண்டாக்கிய தாக்கம் மிக மிக பெரியது. என் வாழ்க்கைக்கே அவை பெரியளவில் உதவுகின்றன' என்று தனது வெற்றியின் படிநிலை பற்றி பகிர்ந்து கொள்கிறார் தோனி.

  தோனி போன்ற ஒரு வீரர் காலத்தில் உருவாவது மிக அரிதாக மட்டுமே நிகழக் கூடியது. தற்போது தோனி இந்திய அணியின் கேப்டனாக இல்லையென்றாலும், ஸ்டம்புகளின் பின்னால் நின்று கொண்டு, ஒவ்வொரு வீரரையும் மிகச் சிறந்த முறையில் வழிநடத்தி வருகிறார். அவருடன் விளையாட கிடைத்த தருணங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக, பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மூன்று வகையிலான கிரிக்கெட் வடிவத்திலும் தோனி பெரும் சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறார். எனினும், இப்போது அவரது ஓய்வு குறித்து பலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. வரும் உலக கோப்பையுடன் அவர் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவார் என்று கருதப்படுகிறது. தோனி நம் காலத்தில் உண்டாக்கியிருக்கும் தாக்கம் அத்தனை எளிதில் மறைந்து விடக் கூடியதில்லை. சச்சினுக்கு பிறகான இந்திய அணியில் தோனியே பெரு மையம். சச்சின் எப்படி ஒரு சிறந்த ஆட்டக்காரருக்கான முன்மாதிரியாக தொடர்ந்து முன்னிறுத்தபடுகிறாரோ, அதே வகையில் ஒரு தலைசிறந்த தலைமை பண்பாளருக்கான எடுத்துக்காட்டாக, தோனி எக்காலத்திலும் கொண்டாடப்படுவார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

  (சிக்ஸர் பறக்கும்…)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai