Enable Javscript for better performance
5. டபுள் டெக்கர்- Dinamani

சுடச்சுட

  

  5. டபுள் டெக்கர்

  By ஜே.எஸ். ராகவன்.  |   Published on : 20th September 2018 10:00 AM  |   அ+அ அ-   |    |  

  jews_-_sivasami

   

  ‘அண்ணா, உங்களுக்கு முதல்லே நல்ல செய்தி வேணுமா? கெட்ட செய்தி வேணுமா?’

  ‘சிவசாமி, நல்ல செய்தின்னா முத்து மாலை! கெட்ட செய்தின்னா வெட்டு காலை!’ன்னு அந்தக் கால அவசரக் குடுக்கை ராஜாக்கள் மாதிரி செய்ய முடியாம, நல்லதையும் கெட்டதையும் காம்போவா கொண்டு வந்திருக்கிறதினாலே..’

  சிவசாமி பதறினான். ‘முத்து மாலையைக் கழுத்திலே போட்டுட்டு கழுத்தை பலிகடாவா வெட்டிடாதீங்கோ அண்ணா. நல்ல செய்திங்கிறது பெங்களூருக்கு டபுள் டெக்கரிலே டிக்கெட் கிடைச்சிடுத்து. கெட்ட செய்தி, டிக்கெட் கிடைச்சது அப்பர் டெக்கிலே’.

  சிவசாமியும், பஞ்சாமியும் பெங்களூர் போகவேண்டி இருந்ததன் காரணம் என்ன? டபுள் டெக்கரை சிவசாமி தேர்ந்தெடுத்தது ஏன்? என்பதை அறிய மேலே படிக்கவும்.

  நந்திதா கிருஷ்ணாவின் ‘இந்தியாவின் புனிதமான விலங்குகள்’ என்கிற ஆங்கிலக் கட்டுரைத் தொகுப்பில் உடும்பைப் பற்றி பஞ்சாமி படித்துக்கொண்டிருந்தபோதுதான், அதிதியை சிவசாமி உள்ளே அழைத்து வந்தான்.

  டைம் மெஷினில் ஏறி 40 வருடங்கள் பஞ்சாமி பின்நோக்கிப் போய்ப் பார்க்க நேர்ந்திருந்தால், அழகுச் சிலை அதிதியை தங்க மீனாக அரை டஜன் முறை வாயைத் திறந்து மூடிப் பார்த்திருப்பார். சீரான லப்-டப் இதயத் துடிப்பு டாக்கிகார்டியாவாக மாறி இருக்கும். வயதானதன் காரணமாக, வாஞ்சையுடன் செல்ல மகளைப்போலப் பார்த்தார். உச்சி முகர்ந்தார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், செய்ய வயதிருந்தாலும் தைரியம் இல்லை.

  அதிதியின் அதிரூப லாவண்யத்தின் தாக்கத்திலிருந்து மீளும்முன், தொடர்ந்து உள்ளே வந்த அனந்துவைப் பார்த்து பஞ்சாமி வியந்தார். ‘யார் இவர்கள்?’ என்று கண்களாலேயே சிவசாமியைக் கேட்டார்.

  அதிதியும், அனந்துவும் சந்தித்தவுடன், தற்போதைய ‘பிக்பாய்ஸ்’ சம்பிரதாயத்துடன் ஒருவரை ஒருவர் நெஞ்சார ஆலிங்கனம் செய்து சிவ=பஞ் சாமிகளின் முகங்களைச் சுளிக்க வைக்கவில்லை. ஆச்சார சுத்தியுடன் ஹாய் மாத்திரம் சொல்லிக்கொண்டார்கள். சிவசாமி தொண்டையைக் கனைத்துக்கொண்டு, பஞ்சாமிக்கு காட்சியின் விரிதலை விவரித்தான்.

  ‘அண்ணா! நான் சொன்ன அதிதியும், அனந்துவும் இவங்கதான். கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறாங்க. ஆனா தடங்கல்கள். வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ன சொல்லியிருக்கார்னு உங்களுக்குத்தான் தெரியுமே…’

  ‘அதிதியும் அனந்துவும் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னா? இவங்களை அவருக்குத் தெரிஞ்சிருக்காதே! ஷேக்ஸ்பியரே அசல் ஷேக்ஸ்பியரா? அல்லது ஆள் வெச்சு எழுதின ஷேக்ஸ்பியரான்னு தெரியாதேன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்வாங்க இல்லே?’

  ‘விளையாடாதேங்கோ அண்ணா. காதலர் பாதை கரடு முரடானதுன்னு அவர் சொல்லி இருக்கார். அதாவது, கார்ப்பரேஷன் காண்ட்ராக்டர் போட்ட சாலை மாதிரி குண்டும் குழியுமா இருக்கும்னு. அதிதியை அவளுக்குப் பிடிக்காத ரவிக்குக் கல்யாணம் செஞ்சுடணும்னு அதிதியோட அப்பா ராமநாதன் பிடிவாதமா இருக்கார். சின்ன வயசிலே ரவியோட அப்பா சாமிநாதன் கிட்டே வாக்கு கொடுத்திருக்காராம்’.

  ‘புல்ஷிட்! இந்த லிவிங் டுகெதர் காலத்திலே இந்தக் கண்ணறாவி எல்லாம் உண்டான? இந்தப் பழைய பஞ்சாங்கமெல்லாம் பாடாவதியான மெகா சீரியல்லேதானே வரும்? ‘யாருக்கு மாப்பிள்ளை யாரோ?’ன்னு ஒரு பாட்டு உண்டு. ஆனா இப்போ வர சீரியல்களிலே யாருக்கு அப்பா யாரோ?ன்னு தெரிய சிண்டைப் பிச்சிக்கவேண்டி இருக்கு’.

  ‘சரியாச் சொன்னீங்க அண்ணா. நாமதான் இவங்களைச் சேர்த்துவைக்க ஏதான செய்யணும்’.

  சிவசாமியுடன் அதிதியும் அனந்துவும் சிறிது நேரம் பேசிவிட்டுக் கிளம்பிவிட்டனர்.

  *

  டபுள் டெக்கரில் முதன் முதலாக வலது காலை வைத்து ஏறின பஞ்சாமி, மிரண்டார். ‘இதென்ன கூத்துடா. நம்ம சீட் எங்கேடா? பூலோகத்திலேயா, பாதாள லோகத்திலேயா? இல்லே, மேல் லோகத்திலேயா?’

  ‘மேல் லோகத்திலே அண்ணா. மெரினா ஸ்விம்மிங் பூல்லே இருக்கிற மாதிரி அந்தக் கைப்பிடியைப் பிடிச்சிண்டு ஏறணும். வண்டி நிக்கறச்சே அவ்வளவு கஷ்டமா இருக்காது. ஆனா, வண்டி டாப் ஸ்பீடிலே ஓடும்போது வடக்கு, தெற்கா ஃப்ரண்ட் லோடிங் வாஷிங் மெஷின் மாதிரி தீவிரமா சாமி ஆடும். படு ஜாக்கிரதையா இருக்கணும். இல்லாட்டி சைடுலே தள்ளிடும். முரட்டுக் குதிரையா குப்புறத் தள்ளிடும். ஆனா குழியைப் பறிக்காது. பறிக்கவும் முடியாது. அதோட, விழுந்ததாலே மீசையிலே மண்ணும் ஒட்டாது’.

  ‘அடேய் சிவசாமி, இந்த சீட்லே விம்பிள்டன் டென்னிஸ் நெட் அம்பயர்தான் வசதியா உக்கார முடியும். நீயும் நானும் ஏதோ ட்வின்ஸ்னு சொல்வாங்களே யாரது?’

  ‘சயாமீஸ் ட்வின்ஸ் அண்ணா’.

  ‘அது மாதிரிதான் ஒட்டிண்டு உக்காரவேண்டி இருக்கும்’.

  வண்டி குப்பத்தைத் தாண்டினவுடன், சிவசாமியின் உதவியுடன் பூலோகத்தில் இருக்கும் கழிப்பறைக்குச் சென்று ஆயாசத்துடன் திரும்பி வந்தார் பஞ்சாமி. தீம் பார்க்கில் ரோலர் கோஸ்டரில் போய் வந்தவர் மாதிரி நிலைகுலைந்து உட்கார்ந்தார். வரிசையாக வந்த இட்லி, வடை, தோசை, பிரெட் ஆம்லெட், க்ரீம் பிஸ்கெட், கடலை உருண்டை, கட்லெட், சமோசா, மதுர் வடா, சூடான போளி ஆகியவற்றை இந்த ஆட்டத்தில் வாங்கிச் சாப்பிட முயன்றால், தன் கையிலிருந்து பக்கத்தில் இருக்கிற சிவசாமி வாய்க்குத் தானே போயிடும் என்று பயந்தவர், கடைசி வரை உண்ணாவிரதம் இருந்தார்.

  கிருஷ்ணராஜபுரத்தில் இறங்கிய பஞ்சாமியை சில்லென்று பெங்களூரு அக்மார்க் குளிர் தாக்கியது. மயிலுக்கு கடைஎழு வள்ளல்களில் ஒருவரான பேகன் போர்த்தியதுபோல, சிவசாமி அளித்த உல்லன் முழுக்கை ஸ்வெட்டரை அணிந்து, மஃப்ளரை சர்வேஸ்வரனின் சர்ப்பமாகக் கழுத்தில் சுற்றிக்கொண்டார். பிளாட்பாரத்தில் சந்தித்த அதிதியின் அப்பா ராமநாதனை சிவசாமி அறிமுகப்படுத்தி வைத்தான். மிரண்ட நிலையில் இருந்த ராமநாதன், பேசும் நிலைக்கு வர சில நிமிடங்கள் ஆகின.

  வந்தவுடன், சிவசாமியைப் பார்த்து ராமநாதன் பொரிந்து தள்ளினார். ‘ச்சீ! என்ன மனுஷன்டா அந்த சாமிநாதன்! சதாப்தியில் புக் பண்ணுன்னா, இந்த டபுள் டெக்கர் த்ரீ ரிங் சர்க்கஸிலே புக் பண்ணி இருக்கான். கஞ்சப் பிசினாறி. சின்ன வயசிலே இருந்த மாதிரியே இருக்கான். ஆரஞ்சு மிட்டாயை காக்கா கடி கடிச்சுட்டு தரேன்னு சொல்லிட்டு முழுசா முழுங்கிடுவான். அல்பன். அதே மாதிரிதான் இன்னும் இருக்கான். இவன் பையன் ரகு எப்படி இருப்பானோ? தெரியாது. விதை ஒண்ணு போட சொரை ஒண்ணா மொளைக்கும்? கல்யாண மாலைகள் கூட எங்கயான வாடகைக்குக் கிடைக்குமான்னு யோசிப்பான். நீ அதிதிக்கு அனந்துவை ரெகமென்டு பண்றே. டேய், நீ அப்ரூவ் பண்ணின வரன்னா ‘க்ரைஸில்’ கிரெடிட் ரேட்டிங் மாதிரி சாலிடா நம்பலாம். கண்ணை மூடிண்டு தாம்பூலத் தட்டை மாத்திக்கலாம். ஆனா சாமிநாதன் செலவிலே வந்துட்டு ராமநாதன் பையனுக்கு முடிக்கிறது தப்பு. கருட புராண செக்ஷனிலே தகுந்த தண்டனை இருக்கும். புக் பண்ணின பிசாத்து அமௌன்ட்டை அவனுக்கு அனுப்பிவெச்சுடு. வண்டிலே உக்காண்டா பரவாயில்லை. நின்னாதான் உடம்பு சோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவிலுக்கு சிகிச்சைக்கு வந்த பெண்ணாட்டமா ஆடிண்டு இருக்கு. டாக்டர் பஞ்சாமி சார், உங்க சிவசாமி தங்கம்’.

  பஞ்சாமி சகஜ நிலைக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார்.

  ‘ராமநாதன் சார், சிவசாமியா? கொக்கான்னு சொல்றது. அது என்ன கொக்கும் கௌதாரியும்னு தெரியலே. எனக்கும் இந்த டபுள் டெக்கராலே சர்வாங்கமும் இன்னும் மானாட-மயிலாடவா ஆடிண்டு இருக்கு. சார், அதிதிக்கு ரகு வேணாம். அனந்துவையே முடிச்சுடுங்கோ. வரட்டுமா? சிவசாமி கையைப் பிடிச்சுக்கோடா’.

  அடுத்த வாரம் சென்னையில், அதிதி, அனந்து, சிவசாமி கலந்துகொண்ட உச்சி மகாநாடு நடந்தது. பஞ்சாமி கிளப்புக்குப் போயிருந்தார்.

  ‘சிவசாமி ஸார், மில்லியன் தேங்க்ஸ். நீங்க மாத்திரம் வேணும்னு, டபுள் டெக்கரில புக் பண்ணாம இருந்திருந்தா, எங்க நிச்சயதார்த்தம் கட்டாயம் நடந்திருக்காது. அதுக்காக உங்களுக்கு ஒரு பாக்ஸ் ஸ்பெஷல் ஸ்வீட் கொண்டுவந்திருக்கோம். என்ன ஸ்வீட்டா இருக்கும்னு சொல்ல முடியுமா?’

  உள்ளே வந்த பஞ்சாமி, ‘என்ன டபுள் டெக்கர் பர்ஃபியா இருக்கும்’ என்றார்.

  ‘டாக்டர் சார், உங்க பஞ்ச லைன் சூப்பர்!’ என்றாள் அதிதி.

  ‘பஞ்ச் லைன் இல்லே அதிதி, ‘பஞ்ச்’சாமி லைன்’ என்றான் சிவசாமி, டைமிங்குடன்.

  *

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai