Enable Javscript for better performance
25. வெடுக்! வெடுக்!- Dinamani

சுடச்சுட

  
  jews_-_sivasami

   

  நீள அகல பர்மா தேக்குக் கட்டிலில் உட்கார்ந்த நிலையிலேயே கவாலி பாடகர் மாதிரி எம்பிக் குதித்துக்கொண்டிருந்த பஞ்சாமி, கைகளை சைலண்ட் மோடில், கருப்பு பெல்ட் கராத்தேகாரனாக, இட வல புறமாகவும், வல இட புறமாகவும் மாறி மாறி வீசிக்கொண்டிருந்தார். சட்டென்று வலது கையால் இடது கன்னத்தில் சீரியல் மாமியார் மருமகளை பளார் என்று அறைவதுபோல, தனக்குத்தானே அறைந்துகொண்டவர், அடுத்து இடது காது மடலுக்கு மேலே கையை விருட்டென்று வீசினார். விலுக்கென்று தலையை இடது பக்கம் சாய்த்தவர், உடனே மூக்கைத் தீவிரமாகச் சொறிந்துகொண்டு, புது ஐந்து ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுவனை மீட்புப் பணியாக அடிப்பதுபோல பிடரியில் பட் பட் என்று அடித்துக்கொண்டார். அவரை இவ்வாறு முனைப்புடன் ஆட்டுவித்தவை கொசுக்களே என்று நீங்கள் இத்தனை நேரம் ஊகித்து இருப்பீர்கள்.

  எதிரிகளின் இவ்வகை நேரடித் தாக்குதல்களுக்கெல்லாம் பழகிய கொசுக்கள், தம்முடைய படைகளுக்கு சேதம் ஏதும் இல்லை என்றுணர்ந்து, பஞ்சாமியைத் தொடர்ந்து தாக்கத் தொடங்கின. கொசுக்களின் ‘ரொய்ங்-ரொய்ங்’ சத்தத்துடன் கூடிய வான்வழி அத்துமீறல்களை சமாளிக்க முடியாத பஞ்சாமி, ‘ஆதிமூலமே!’ என்று கஜேந்திரன் பிளிறினதுக்கு ஒப்ப, ‘அடேய் சிவசாமி’ என்று அபயக் குரல் கொடுத்தார்.

  ‘இதோ வந்தேன் அண்ணா’ என்று ஓடிவந்தான் சிவசாமி.

  ‘அடேய் சிவசாமி, ஒன் டே மேட்ச்சிலேகூட டக்-டக்குனு விக்கெட்டுகள் விழுந்து, டீம் சட்டு-புட்டுனு ஆல் அவுட் ஆயிடும். ஆனா இந்தக் கொசுக்கள் ‘ஆல் அவுட் ஆகமாட்டேங்கிறதே’ என்று புலம்பினார்.

  ‘அண்ணா, நீங்க ஆல் அவுட்டை சொருகினீங்களே தவிர, ஆன் பண்ணலே. அதான்..’ என்று சுட்டிக் காட்டினான்.

  ‘அடேய், ஊரிலே இருந்த மானாவாரியான எலிகளை எல்லாம் சப்ஜாடா மந்திர பைப்பை ஊதி மயக்கி, ஒரு ஆள் தலைமை தாங்கி மாபெரும் பேரணியா அழைச்சுண்டு போய் ஆற்றிலே விட்டுடுட்டான்னு ஏதோ கதை உண்டு இல்லே. ஆனா, அவனோட போட்டிருந்த வாய் வழிக் கான்ட்ராக்ட்படி ஊர்க்காரங்க பணம் குடுக்காததனாலே, அவன் ஊர்க் குழந்தைகளையும் அதே மாதிரி ஊதி மயக்கி, ஆற்றங்கரையை நோக்கி அழைச்சிண்டு போனபோதுதான், செஞ்ச தப்பை உணர்ந்து பேமென்ட்டை கட்டினாங்கன்னு கதை முடியும் இல்லேடா?’

  ‘கரெக்ட்டா சொன்னேள், அண்ணா. PIED PIPER OF HAMELIN-ங்கிற கதை அது. ராபர்ட் ப்ரௌனிங் எழுதின சின்னப் பசங்க கவிதை. அது மாதிரி யாரான மந்திர பைப்பை ஊதி கொசுக்களை அழைச்சிண்டு நம்மூரிலே கொண்டு விட, நுங்கும் நுரையுமா சுழிச்சுண்டு ஓடற ஆறு இல்லே. கூவம்தான் இருக்கு. அதில் எல்லாக் கொசுக்களையும் அப்படி ஒண்ணு சேர விட்டால் பயங்கர ஆபத்தாச்சே? கூவத்தோட மகிமையாலே கொசுக்கள் விருத்தி ஆகி, சென்னையைக் கையில் எடுத்திண்டுடுமே. பெரிய அறிஞர்களெல்லாம்கூட உலகத்திலேயே மிகவும் கஷ்டமானது ஒரு கொசு இருக்கும் அறையில் படுத்துத் தூங்கறதுதான்னு, கையையும், காலையும் சொறிஞ்சிண்டே சொல்லி இருக்காங்க.’

  ‘சிவசாமி, கொசு வலை ஒண்ணை வாங்கிக் கட்டேண்டா? நாம உள்ளே இருப்போம். கொசு எல்லாம் வெளியிலே இருந்து நம்மைப் பார்க்கும். நாம அதுக்கு பாத்தியான்னு அழகு காட்டலாம். லயன் சஃபாரி பிரின்ஸிபிள் அதானேடா.’

  ‘செஞ்சிருப்பேன் அண்ணா. ஆனா நீங்க சுவத்திலே ஒரு ஆணிகூட அடிக்கக் கூடாதுன்னு உத்தரவு போட்டிருக்கிறதாலே, அதை எப்படி கும்பமேளா கூடாரம் மாதிரி நிக்க வைக்கிறது? பேசாம கொசுவலையைப் போத்திண்டு படுத்திண்டுடுங்கோ. அண்ணா சொல்ல மறந்துட்டேன். சியாட்டலிலேருந்து உங்க அக்கா பையன் ரமணி வரப்போறாராம். அவருக்கு நம்ம ஊர்ப் பொண்ணுதான் வேணுமாம். பொண்ணு எப்படி இருக்கணும்னு விலாவாரியா எழுதி இருக்கார். படிக்கட்டுமா?’

  ‘வேண்டாண்டா. நாம என்ன கல்யாணமாலை மாதிரி ஏதான நடத்தறமான? என்ன சொல்றான் அவன்?’

  ‘அழகு, படிப்பு, உயரம், வயசு, குலம், கோத்திரக் கண்டிஷன்களோட, பொண்ணோட உடம்பு கொசு எதிர்ப்பு சக்தி உள்ளதா இருக்கணுமாம்.’

  ‘கொசு எதிர்ப்பு சக்தியா? இதென்ன கூத்துடா?

  ‘ஆமாண்ணா. கொசுக்களிலே பெண் கொசுக்கள்தான் வெடுக் வெடுக்குனு கடிக்குமாம். அதுங்ககிட்டேதான் புரபோஸிஸ்னு உறுப்பு இருக்காம். அதுகள் சினை தரிக்க புரோட்டீன் அவசியமாம். அது மனுஷ ரத்தத்திலே O குரூப் இருக்கிறவங்ககிட்டேதான் நிறைய இருக்காம். இதை ஏதோ ஒரு ஆதிகால கொசுவமூர்த்திங்கிற கொசு விஞ்ஞானி கண்டுபிடிச்சு சொல்லி இருக்கார் போலிருக்கு. அவங்களைத்தான் வெடுக் வெடுக்குனு கடிக்குமாம். அதனாலே, பெண்ணோட ரத்தம் O குரூப்பா இருக்கக் கூடாதாம்.’

  ‘கிழிஞ்சுது போ. அப்போ, ஜாதகத்தோட பிளட் குரூப் ரிப்போர்ட் அட்டாச் பண்ணனுமா?’

  ‘ஆமாண்ணா. மனுஷங்க வாயாலும் மூக்காலேயும் வெளியே விடற கரியமில வாயு, அதான் கார்பன்-டை-ஆக்ஸைடுன்னா கொசுங்களுக்கு குஷியாம். ஆகையினாலே, பொண்ணு ஜலதோஷம், பிராங்க்கைடிஸ், சைனசைட்டிஸ் மாதிரி மூக்கடைப்பு கேஸா இல்லைன்னு ஒரு E.N.T. வல்லுநர்கிட்டேர்ந்து சர்ட்டிபிகேட் வாங்கித் தரணும்.’

  ‘அம்மாடியோவ்! அப்புறம்?’

  ‘எப்பவுமே வியர்த்து விறுவிறுக்கிற பொண்ணா அவள் இருக்கக் கூடாது. வியர்வையிலே இருக்கிற லாக்டிக் ஆஸிட், யூரிக் ஆஸிட், அம்மோனியா எல்லாம் கொசுக்களுக்கு அல்வாவாம். அதனாலே, வியர்த்துக் கொட்டாத பொண்ணுதான் வேணுமாம்.’

  ‘ஏதான சொல்லிடப் போறேன்டா.’

  ‘சொல்லாதீங்க அண்ணா. கருப்பு கலர், சிவப்புக் கலர் டிரஸ் போட்டுண்டு இருக்குறவங்களுக்கு கொசுக்கள் முன்னுரிமை கொடுத்துக் கடிக்குமாம். அதனாலே, ‘கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலர்’னு பாடற பெண்களுக்கு ஸாரி! அதே மாதிரி, மேல்மருவத்தூர் பாணியா சிவப்பு சேலையும் கட்டாம இருந்தா நல்லது. அப்புறம்..’

  ‘அட! நிறுத்துடா. இன்னும் கொசுவம் வெச்சுக்கூட புடவையைக் கட்டிக்கக் கூடாதுங்கிற கிறுக்குத்தனமான கண்டிஷன் இருக்கா?’

  ‘இல்லேண்ணா. ஆனா இந்த மாதிரி பொண்ணை ஒரு ஏஜன்ஸி வெச்சுதான் தேடிக் கண்டுபிடிக்கணும். ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் அமெரிக்கா அழைச்சிண்டு போகப்போகிறாரா இல்லையாங்கிற விவரத்தை எழுதலே.’

  ‘அடேய், அது நம்ப டிரம்ப் கைலேதானே இருக்கு. ரூல்ஸை மாத்திண்டே இருக்காரே”

  ‘ரமணி இந்தியா வரப்போறாராம். எப்போன்னு எழுதலே. அதுக்குள்ளே இந்த மாதிரி ஒரு பொண்ணைத் தேடிப் பிடிச்சா நல்லது. இந்த மேட்டரை சிவசாமி அங்கிள்கிட்டே விட்டுடணும்னும் எழுதி இருக்கார்.’

  ‘ஏண்டா? என்னாலே கண்டுபிடிக்க முடியாதா?’

  சிவசாமி பதறினான்.

  ‘அண்ணா, அண்ணா! சிவசாமிகிட்டே விட்டுடணும்னு ரமணிதான் சொல்லி இருக்கார். நான் இல்லே அண்ணா.’

  ‘ஹும்’ என்று சொல்லிவிட்டு, பஞ்சாமி குளிக்கப்போனார்.

  *

  கும்பகோணத்துக்கு காரில் போய்க்கொண்டிருந்தார்கள். சிவசாமி டிரைவிங். பஞ்சாமி, முதல் அமைச்சர் மாதிரி பக்கத்து சீட்டில் கெத்தாக உட்கார்ந்திருந்தார். பின்னால் கருப்புப் பூனை ஏதும் இல்லை.

  ‘அடேய் சிவசாமி, அந்த ரமணி மேட்டர் என்னடா ஆச்சு? அவன் வந்தானா?’

  ‘அதெல்லாம் வந்து முடிஞ்சுபோச்சுண்ணா. நீங்க பெங்களூரு போயிருந்தபோது வந்தார். நீங்க இல்லை. ஆனாலும் அதிகப்பிரசங்கித்தனமா, நானா ரமணியோட எதிர்பார்ப்புகளுக்கு ஒட்டி வந்தா மாதிரி ஒரு பொண்ணைப் பார்த்தேன். அவ பேரு ரம்யா. பிளட் க்ரூப் A POSITIVE.

  சஹாராலே ஹுசேன் போல்ட் மாதிரி ஓடினாலும் வியர்க்காதாம். அவ அம்மா சொன்னா. மூக்கு, தொண்டை, நுரையீரல் எல்லாம் ஏர்போர்ட் மெயின் ரன்வே மாதிரி தடை இல்லாமல் நீட்டா இருக்காம். அவளோட டாக்டர் (மிஸஸ்) தேன்மொழி உலகநாயகம் சொன்னார். எல்லா கண்டிஷன்களும் பூர்த்தி ஆச்சு. ஆனா ஒரு தடங்கல் வந்தது?’

  ‘என்னடா? கொசுவம் வெச்சு புடவை கட்டறதுன்னா அவளுக்கு இஷ்டமா?

  ‘அண்ணா! விளையாடாதேங்கோ. அவளுக்கு மாம்பலத்தை விட்டு அமெரிக்காவுக்கோ, ஆப்பிரிக்காவுக்கோ, ஆஸ்திரேலியாவுக்கோ, அண்டார்ட்டிகாவுக்கோ எல்லாம் போக இஷ்டம் இல்லையாம். மாம்பலம் இல்லாட்டி சைதாப்பேட்டை. இந்த இரண்டு இடங்கள்தான் அவளுக்கு சொர்க்கமாம்.’

  ‘என்னடா இது? இவ்வளவு மெனக்கெட்டு அந்தப் பொண்ணைச் சல்லடை போட்டு சலிச்சு கண்டுபிடிச்சே. ஆனா அவ அமெரிக்கா போகமாட்டேன்னு சொல்லிட்டாளே. விழலுக்கு இறைத்த நீர்னு கவி பாடி இருக்கார் இல்லே?’

  ‘ஆனா ரமணி கேஸ்லே அப்படி ஆகலே. அங்கேதான் ரஜினியோட ’பேட்ட’ படம் மாதிரி கடைசியிலே ஒரு டுவிஸ்ட்.’

  ‘என்ன டுவிஸ்ட்டா? சின்ன வயசிலே ரமணியை விட்டுப் பிரிஞ்ச தங்கைதான் ரம்யான்னு ஏதான ஏடாகூடமா குண்டைத் தூக்கிப் போடப்போறியா?’

  ‘இல்லேண்ணா. ரமணிதான் அமெரிக்காலேருந்து மெட்ராஸுக்கு வந்து செட்டில் ஆகப்போறானாம். அதுவும், ஏதோ ஒரு அமெரிக்க யூனிவர்சிட்டியோட கொழுத்த கிரான்ட்டோட மாம்பலம், இல்லாட்டி சைதாப்பேட்டையிலே தங்கி, கொசுக்களை அழியோடு அழிக்க ஆராய்ச்சி பண்ணப்போறானாம். ரம்யா, ரமணி கல்யாணம் பிப்ரவரியிலே வித்தியாசமா நடக்கப்போறதாம்?’

  ‘எப்படிடா? ஆகாசத்திலே பறந்துண்டா? இல்லாட்டி தண்ணிக்கு அடியிலேயா?’

  ‘ரெண்டும் இல்லேண்ணா. தரையிலேதான். கல்யாண மேடையிலே பெரிசா கொசுவலையைக் கட்டி அதுக்குள்ளே உக்காந்து தாலி கட்டப்போறானாம். அண்ணா! தும்பிக்கையைப் பாத்தாலே நம்பிக்கையைத் தரும் கணபதி அருளாலே எல்லாம் மங்களகரமா முடிஞ்சுது’.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai