Enable Javscript for better performance
24. பெங் ‘குளுரு’- Dinamani

சுடச்சுட

  
  jews_-_sivasami

   

  பெங்களூரின் புறநகர்ப் பகுதியான காடுகோடிக்கு வந்திருந்த பஞ்சாமி அணிந்திருந்த ஆடைகளின் பட்டியல் பின்வருமாறு -

  பனியன். திக்கான துணியில் தயாரித்த முழுக்கைச் சட்டை. உல்லன் ஸ்வெட்டர். கழுத்தைச் சுற்றி சர்ப்பமாக கம்பளி மஃப்ளர். நேப்பாளி கூர்காக்கள் அணியும் குரங்குக் குல்லாய். அமிதாப் பச்சன் ஸ்டைலில் மேலாக்காகப் போர்த்திக்கொண்ட ஷால். காலில் டெம்ப்பிள் சாக்ஸ்.

  ‘அடேய் சிவசாமி, குளிர்ரதுடா’ என்றார், இரண்டு உள்ளங் கைகளையும் சிக்கிமுக்கிக் கல்லாகத் தேய்த்துக்கொண்டு.

  ‘வெறும் நாலு முழ வேட்டி, பனியனில் இருந்த சிவசாமி, ‘ஆமாம் அண்ணா குளிர்ரது’ என்றான்.

  ‘உனக்கு?’

  ‘எனக்குக் குளிரலே அண்ணா.’

  ‘அப்போ ஏண்டா குளிர்ரதுன்னே.’

  ‘குளிர்ரது. ஆனா எனக்குக் குளிரலே’ என்று சிவசாமி விளக்கினான்.

  ‘அடேய் சிவசாமி, நீ பூர்வ ஜென்மத்திலே துந்துருவப் பிரதேசக் கரடியா இருந்திருப்பியாடா? இப்படி குளிர் தாங்கறயே?’

  ‘அண்ணா, புல்லாகி, பூடாய், புழுவாய் மரமாகி, பல்விருகமாகி, பறவையாய், பாம்பாகி, கல்லாய், மனிதராகி’ன்னு திருவாசகத்திலே மாணிக்கவாசகர் அருளி இருக்கிறார். ஆகையினாலே, அண்ணாவின் கணிப்புப்படி நான் கரடியா இருந்திருக்கலாம். அதுவும் வெள்ளைக் கரடியாய்.’

  ‘சிவசாமி, இந்த தனுர் மாசக் குளிர்லே திருப்பாவைதானேடா ஸ்மரணையிலே இருக்கணும். ஆனா நீ திருவாசகத்தை வெச்சிருக்கியே? தீவிர சிவபக்தன்டா நீ!. பேரே சிவசாமி ஆச்சே! அடேய், சிவசாமி! கைலாசத்திலே எப்பவும் குளிர்தானே? அங்கே போகணும்னு எப்பவான யோசிச்சு இருக்கியா?’

  ‘இல்லேண்ணா. அதான் மயிலாப்பூர் போயிருக்கேனே. ‘கயிலயே மயிலை. மயிலையே கயிலை’ன்னு சொல்றதுண்டே.’

  ‘எமகாதகன்டா நீ. சரி வந்த விஷயத்தைக் கவனிப்போம். மேட்டரை எங்கேருந்து ஆரம்பிக்கிறதுடா?’

  ‘புரியலே அண்ணா. தெரியலே அண்ணா. பிடிபடலே அண்ணா.’

  ‘என்னடா கதை வசனமா எழுதறே? இப்படி அலங்காரமா பேச? யோசிடா யோசி.’

  *

  இந்த பெங்களூரு குளிரில் பஞ்சாமியும் சிவசாமியும் கிளம்பி வந்ததன் காரணம் ஒரு கடிதம். அதுவும் ஒரு இளம் பெண்ணிடமிருந்து வந்த கடிதம். அந்தக் கடிதத்தின் வாசகம் பின்வருமாறு அமைந்திருந்தது.

  மதிப்புக்குரிய பஞ்சாமி சார் அவர்களுக்கு,

  ‘நான்தான் ஜானகி. ஞாபகம் இருக்கா? நந்தகோபாலின் மகள். பெங்களூரில் இருக்கிறேன். உரிமை எடுத்துக்கொண்டு உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுவதற்கு மன்னிக்க வேண்டும். எனக்கு வேறு வழி தெரியவில்லை. கல்யாணமாகி ஒரு வருஷம்தான் ஆச்சு. என்னுடைய கல்யாணத்துக்கு நீங்கள் சிவசாமி சாரோடு வந்திருந்தது நினைவிருக்கலாம். என் கணவர் குமார் நல்லவர்தான். ஆனால், சமீபகாலமாக அவரிடம் சில மாற்றங்கள் தெரிகின்றன. சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். அவருக்கு லில்லி என்கிற ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது. அவளுடன் பெங்களூரைவிட்டு விட்டு விரைவில் ஓடிவிட திட்டமிடுவதாக அறிகிறேன். என் அப்பாவும் இப்போது உயிரோடு இல்லை. அம்மா போய் பத்து வருஷங்கள் ஆயிடுத்து. ஒரே ஒரு அண்ணன்தான். அவனை நம்பிப் பிரயோஜனம் இல்லை. ஆகவே, எனக்கு உதவ உங்களை விட்டால் வேற வழி இல்லை. உங்கள் டெலிபோன் நம்பர் தெரியாது. ஆனால், விலாசம் இருக்கிறது. ஆகவே, இந்த மொபைல் போன், எஸ்.எம்.எஸ், காலத்தில் லெட்டர் எழுதுகிறேன். குமார் இல்லாத வாழ்க்கை எனக்கு சூன்யம் ஆகிவிடும். உடனே வந்து என்னைக் காப்பாற்றவும். கட்டாயம் சிவசாமி சாரையும் உடன் அழைத்துவரவும்.

  இப்படிக்கு

  ஜானகி.

  *

  சிவசாமியோடு பஞ்சாமி மந்திராலோசனையைத் தொடர்ந்தார்.

  ‘ஜானகியைப் பார்க்கணுமேடா? எப்போ பார்க்கிறது? எங்கே பார்க்கிறது?

  ‘இன்னிக்கு மூணு மணிக்கு ராம்மூர்த்தி நகர்லே பிக் பஸார் கடையிலே.’

  ‘எ..ன்..ன..து? எப்படிடா அரேஞ்சு பண்ணினே?’

  ‘அண்ணா! ஜானகியோட லெட்டரிலே போன் நம்பர் இருக்கே. அரை மணிக்கு முன்னாலே போன் பண்ணினேன். நல்லவேளை, குமார் வீட்டில் இல்லே. ஜானகிகிட்ட சுருக்கமா பேசி, எங்கே பாத்துப் பேசறதுன்னு முடிவு பண்ணிண்டோம்.’

  ‘எமகாதகன்டா நீ.’

  ‘நான் என்ன பிரமாதமா செஞ்சுட்டேன். அண்ணா குளிச்சிட்டு வந்தா டிபன் சாப்பிடலாம். கார்ன் பிளேக்ஸ், டோஸ்ட், ஜாம், பட்டர், காபி.’

  ‘குளியலா? இந்த வெடவெட குளிரிலா? யானை பூனை எல்லாம் தினமும் குளிக்கிறதான? போடா போ. டிரஸ்ஸை மாத்திரம் மாத்திக்கறேன் டிபனைக் கொண்டா.’

  *

  ஜானகி பளிச்சென்று உடை அணிந்து வந்தாள். இந்தக் குளிரிலும் கம்பளி ஸ்வெட்டர் சகாயம் இல்லாமல் வெடவெட என்று நடுங்காமல் இருந்தாள். பஞ்சாமி, முன் பக்கம் லோடு ஏற்றும் வாஷிங் மெஷின் மாதிரி உதறிக்கொண்டு இருந்தார்.

  ‘பஞ்சாமி, சிவசாமி சார்ஸ்! நான் குமாருக்கு ஒரு குறையும் வெக்கலே. அவரை நான் ஃப்ரீயா விடுகிறேன். நெனச்சபோது எழுந்திருப்பார். சாப்பிட்டுவிட்டுக் குளிப்பார். வீட்டிலே அரதப் பழைய நலுங்கிய லுங்கியிலேதான் எப்போவும் இருப்பார். மேலே ஒரு ஹைதர் அலி கால டீ ஷர்ட். அதைப் பாத்தாலே அன்னிக்கு சமையல் என்னன்னு தெரியும். சாம்பார், ரசம், கூட்டு, ஊறுகாய் கரை எல்லாம் ஒட்டிண்டு, அப்படியே TTK MAP மாதிரி கலர் கலரா இருக்கும். தலை ஒரு புதர். சீப்பு வீட்டிலே தேடினா கிடைக்காது. தலையிலேயே புதைஞ்சு இருக்கும். ஆனா அங்கிள், ஷாக்கிங்கா, கொஞ்ச நாளா ரெண்டு தடவை குளிக்கிறார். போன வாரம் முடி வெட்டிண்டார். தினம் ஷேவ் பண்ணிக்கிறார். புஸ்-புஸ்னு ஸ்ப்ரே அடிச்சிக்கிறார். நீட்டா டிரஸ் பண்ணிக்கிறார். பாத்ரூம் சப்பல் போட்டுண்டு நடக்காம, பாட்டாலேருந்து 3999 ரூபா குடுத்து வாங்கின ஹஷ் பப்பீஸ் ஷூவை மேட்சிங் சாக்ஸோட போட்டுண்டு போறார். இதெல்லாம் எதனாலே தெரியுமா அங்கிள்ஸ்?’

  ‘லில்லி எஃபெக்ட் தானே?’ என்றான் சிவசாமி.

  ‘அதென்னடா லில்லி எஃபெக்ட்? பெங்களூரிலே ராமன் எஃபெக்ட்தானடா பேமஸ்?’ அவர்தானேடா நோபல் பரிசுப் பணத்தை பாடாவதி பேங்க்கில் போட்டு கோட்டை விட்டார்?’

  ‘அண்ணா, அது அந்த ராமனோட எஃபெக்ட் இல்லே. அந்த மேதையோட டிஃபெக்ட். ஹீரோ இப்படி மாறினது லில்லியோட சகவாசத்தினாலேன்னு ஜானகி சொல்றா?’

  ‘ஆமாம், அங்கிள்ஸ். குமார் நீட்டா இப்படி மாறினாலும், அவர் முகத்திலே ஒரு சோகம் அப்பிண்டு வரது. அதிலே அடிப்படை பக்தி இல்லாம, சபரிமலைக்குப் போகணும்னு வேஷம் போட்டுண்டு போன பெண்கள் மாதிரி ஒரு போலித்தனம் தெரியறது. எனக்கு என்னோட பழைய குமார் வேணும். என்ன செய்யறது அங்கிள்ஸ்?’

  ஜானகி, அங்கிள்ஸ் என்று பன்மையில் விளித்து இரண்டு பேரிடமும் கேள்வியை முன் வைத்தாலும், சிவசாமி அங்கிள்தான் பதிலளித்தான்.

  ‘ஜானகி, யோசிம்மா. உன் ப்ராப்ளத்தை நீயே சால்வ் செய்யலாம்.’

  *

  பெங்களூரில் ஒரு வாரம் தங்கியிருந்து, சுப்பண்ணாவை ஹாஸ்கோட்டில் வைத்துப் பார்த்துவிட்டு, இருவரும் மைசூர் சதாப்தியில் சென்னை திரும்பிக்கொண்டிருந்தார்கள். முதல் வகுப்பு சேர் கார். பஞ்சாமிக்கு பரமசந்தோஷமாக இருந்தது.

  ‘அடேய் சிவசாமி, சுப்பண்ணா நம்ம பிளாட்டை வாங்க ஒத்துண்டது அதிசயம். தை பிறந்த உடனே ரெஜிஸ்ட்ரேஷன் வெச்சுக்கலாம்னு அட்வான்ஸ் குடுத்துட்டார். ஜானகி சமாசாரம் என்ன ஆச்சுன்னு தெரியலியே? பாவம் அந்தப் பொண்ணு.’

  ‘அதுவும் அல்சூர் கெம்ப்பம்மா தேவி அருளாலே சால்வ் ஆயிடுத்து அண்ணா?’

  ‘கெம்ப்பம்மா தேவியா? எனக்குத் தெரியாதேடா. எனக்கு சரோஜா தேவியைத்தான் தெரியும்.’

  ‘சக்தி வாய்ந்த அம்மன் அண்ணா. ரெஜிஸ்ட்ரேஷனுக்கு வரும்போது தரிசனம் பண்ணலாம் அண்ணா. ஜானகி மேட்டர் என்ன ஆச்சு தெரியுமா?’

  ‘இதென்னடா கேள்வி? சொல்லு. நீதான் ஏதான பண்ணி இருப்பே. தெரியும். அடேய்! டீ வந்தா கூப்பிடு. என்னாலே இந்தக் குளிரைத் தாங்க முடியலேடா.’

  பஞ்சாமி, கரம் சாய் வருவதை எதிர்பார்த்து ஆவலுடன் செவிமடுத்தார்.

  ‘அண்ணா! கணவன் மனைவி நடுவே ஆரம்பிக்கிற முக்கால்வாசிப் ப்ராப்ளங்களை ஒன்-டு-ஒன்னா உக்காந்து பேசித் தீர்த்தாலே சால்வ் ஆகிடும். குமார்கிட்டே ஜானகி மனம் விட்டுப் பேசினா. ‘நீ லில்லியோட வாழணும்னா தாராளமா போ. உன் இஷ்டம் அதுன்னா நான் குறுக்கே நிக்கமாட்டேன். ஆனா, அப்புறம் உன்னோட சுதந்தரம் பறி போயிடும். நம்ம வீட்டிலே இருந்தா நீ இஷ்டத்துக்கு எழுந்துக்கலாம். குளிக்காம சாப்பிடலாம். ஈரக் கை, வாயை லுங்கியில் துடைச்சிக்கலாம். ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒருமுறை முடி வெட்டிக்கலாம். வெட்டாமயும் இருக்கலாம். மசாலா தோசையை ஸ்பூனாலே தட்டுத் தடுமாறி சாப்பிட வேண்டாம். காபியை உர்உர்னு சாஸரிலே விட்டுண்டு உறிஞ்சிக் குடிக்கலாம். தட்டிலே குளமா இருக்கிற ரசம் சாதத்தையும் உறியலாம். கை விரல்களை நக்கலாம். தலை, முழங்கால் அரிச்சா வறுக்வறுக்குன்னு சொறிஞ்சிக்கலாம். நீ சாப்ட்வேர் டெக்கிதானே? ஆபீஸுக்கு டி ஷர்ட்டிலே போகலாம். கை வெச்ச சட்டையை பார்மலா இன் பண்ணிண்டு, சார்ட்டர்டு பேங்க் எக்ஸிகியூட்டிவ் மாதிரி போக வேணாம். வெறுங்காலோட காரை ஓட்டிண்டு போகலாம். உன்னோட லைஃபை ரெண்டு பகுதியா பிரிச்சுக்கோ. கிமு கிபிங்கிறா மாதிரி, ஜாமு ஜாபின்னு, அதாவது ஜானகிக்கு முன், ஜானகிக்குப் பின்னு பிரிச்சுக்கோ. ஆனா, ஜானகிக்குப் பின் காலகட்டத்திலே ரொம்ப அவஸ்தைப்படுவே. தெரிஞ்சுக்கோ. புரிஞ்சுக்கோ.’

  பஞ்சாமி ஓணானாக விழித்தார். ‘இது ஒர்க்அவுட் ஆயிடுத்தா?’

  ‘ஆயிடுத்து அண்ணா. குமார், லில்லியை அவாய்டு பண்ணினானாம். அவ கூப்பிட்ட முக்கிய பார்ட்டிக்கு ஷேவ் பண்ணிக்காம பாத்ரூம் ஸ்லிப்பரோட போனானாம். என்ன குமார் இதுன்னு கேட்டவ கிட்டே, ‘போடி, பொக்கே’ன்னு டாட்டா காமிச்சுட்டானாம்.

  ‘அடேய் சிவசாமி, இது உன்னோட பிளாட்டாடா?

  முழுக்க முழுக்க இல்லேண்ணா. உட்ஹவுஸ் கதை ஒண்ணுலே இது மாதிரி ஒரு சினோரியா வரது. அதை யூஸ் பண்ணின்டுட்டேன். இதோ டீ வந்தாச்சு.’

  ‘சிவசாமி உறியாம குடிக்கணுமா? இல்லே உறிஞ்சு குடிக்கலாமா?’

  ‘ஸ்வெட்டர் மேலே சிந்தாம குடிங்க அண்ணா. அது போறும். சாஸர்லே விட்டுண்டுகூடக் குடிக்கலாம். ஆனா அதை லில்லி அப்ரூவ் பண்ணமாட்டா.’

  ‘போடா உன் லில்லியும் வில்லியும்’ என்றார் பஞ்சாமி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai