சாவித்ரி - 2. காதல் மந்திரவாதி!

ராயப்பேட்டை. நாராயணன் கம்பெனி. சாவித்ரி மனம் போல் மாங்கல்யம் வசன ஒத்திகையில் தினமும் பங்கேற்றார். ஜெமினி ஸ்டுடியோ தயாரித்திருக்க வேண்டிய

ரா
யப்பேட்டை. நாராயணன் கம்பெனி. சாவித்ரி  மனம் போல் மாங்கல்யம் வசன ஒத்திகையில் தினமும் பங்கேற்றார். ஜெமினி ஸ்டுடியோ தயாரித்திருக்க வேண்டிய சினிமா அது. எஸ்.எஸ்.வாசனுக்கு சப்ஜெக்ட் பிடிக்கவில்லை. கதாசிரியர் கே.வி. சீனிவாசன். ஜெமினியில் வளர்ந்த கே.ஜே.மகாதேவனின் ஒன்று விட்ட தம்பி. சந்திரபாபுவும் அவரும் சிங்கிள் டீயை சேர்ந்து சுவைத்துப் பசி போக்கியவர்கள். தன் எழுத்து திரையில் ஒலிக்காத சோகத்தை, சீனிவாசன் ஜெமினி கணேசனிடம் சொல்லி வருந்தினார்.

வாசனின் படைப்புகளில்  போதிய வாய்ப்பு அமையாமல் ஜெமினியிலிருந்து வெளியேறியவர்  கணேசன். சீனிவாசனின் துயரம் புரிந்தது. நாராயணன் கம்பெனி கணேசனுக்கு அடைக்கலம் அளித்தது.அவர்களின் தாய் உள்ளம் படத்தில் வில்லனாக நடித்து நல்லதோர் அறிமுகம் பெற்றார். அடுத்து அங்கேயே ஹீரோவாக நடிக்கும் சான்ஸ் கிடைத்தது.

நாராயணன் கம்பெனியில் தனக்கு ஏற்பட்ட செல்வாக்கில் சீனிவாசனை  சிபாரிசு செய்தார் கணேசன்.  தோழரின் ஸ்கிரிப்ட்   உடனடியாக ஓகே ஆனது. (’பாக்யலட்சுமி’ புகழ் கே.வி. சீனிவாசன் பின்னாள்களில் மாடர்ன் தியேட்டர்ஸின் டைரக்டர் ஆனார்.)

ஒத்திகையின் ஐந்தாவது நாள். நடந்தவை ஏதும் அறியாத சாவித்ரி, ஜெமினி கணேசனை எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தது. அங்கே ஜெமினி கணேசனின் அட்டகாசத்தைக் கண்டு அதிசயித்தார்.

’ஓர் இளம் ஹீரோவுக்கான அச்சத்தை, அடக்கத்தை அப்புறப்படுத்தி விட்டு, ஏதோ காலேஜ் ஸ்டூடன்ட் கணக்காக அமர்க்களப்படுத்துகிறாரே... ஓர் இடத்தில் நில்லாமல் துறுதுறுவென இங்கும் அங்கும் கன்றுக்குட்டியாட்டமாகத் துள்ளித் திரிகிறாரே...நாற்காலியில் உட்கார்ந்தாலும் நேராக அமராமல், அதைத் திருப்பிப் போட்டுக் குந்திக்கொள்கிறாரே... இவர் என்ன  மிஸ்டர் லூஸோ...  என்று வாய் விட்டு கேட்டே விட்டார்.

வசனங்களை வாசித்துக் கொண்டிருந்த சாவித்ரியைப் பார்த்ததும் ஜெமினிக்கு ஜென்ம ஆச்சரியம்! ’அவளா இவள்! பன்னிரெண்டு வயது பாலகியாகப் பாவாடை தாவணியில் பார்த்த உருவமா...!  திகைப்பின் வீரியம் விரிந்து நெஞ்சமெல்லாம் பூ வாசம் பரப்பியது. கொலைகாரன் பேட்டையில் குற்றால சாரல்! கொஞ்சும் சலங்கைக்கான  தேடல்!

 சாவித்ரியின் அழகான நிழலும் கணேசனை என்னென்னவோ செய்தது. கணேசன் தன்னுடைய மன்மத லீலையை மீண்டும் உயிர்ப்பித்து, வாலிப வில்லில் வசீகரக் கணை தொடுத்து நின்றார். குறும்பு கொப்பளிக்கும் விழிகளால் சாவித்ரியின் யவ்வன நரம்புகளில், மின்சார வீணை மீட்டி முழுதாக மூழ்கடித்தார்.

மோகத்தின் வெப்பத்தில் சாவித்ரிக்கும்  உள்ளக் குருதி சூடாகி வெளியே வியர்த்தது. காகிதங்களில் ஓடிய எழுத்து,சொல்,பேச்சு,சுற்றம், சூழல் எல்லாமும் மறந்து, முற்றும் துறந்து ஜெமினியையே நோக்கினார். நேச அனலின் நிலை கொள்ளாதத் தகிப்பு! இளமை அவிழ்ந்து விடுமோ என்கிற அச்சம். எதிரே நிற்பவன் காதல் மந்திரவாதி!

அதுவரை அறியாத சுகானுபவம்! ஒவ்வொரு நொடியிலும் இன்பப்பிரளயம்!

‘முதலில் அவரது எக்ஸ்ரே பார்வை என்னை ஊடுருவியது. நாள் பட நாள் பட நானும் என்னை அறியாமல் அவரிடம் மனத்தைப் பறி கொடுத்தேன்!’- சாவித்ரி.

பட்டப்பகலில் படப்பிடிப்புத் தளங்களில் அவர்களது காதல் காமிரா ஓடும் சப்தத்தில், ரிஃப்ளெக்டர்களின் கண் கூசச் செய்யும் கந்தர்வ வெளிச்சத்தில் ஜோராக வளர்ந்தது. பீச், பார்க், ஹோட்டல் என்றெல்லாம் சுற்ற அரிதாரத் தொழில் இடம் அளிக்கவில்லை. யாருக்கும் பாக்கு வெற்றிலை தராமல், அனைத்து நொடிகளிலும் அணைப்பில் ஒன்றாகிப் போனார்கள்.

அறிந்தும் அறியாமலும் சாவித்ரி ’மனம் போல்  மாங்கல்யத்தில்’ வாயசைத்துப் பாடிய பாடல் இப்படித் தொடங்கியது.

‘எல்லாருக்கும் வாய்க்குறது தாலி கட்டும் மாப்பிள்ள
 எனக்கு வந்த மாப்பிள்ளயோ ஜாலியான ஆம்பிள’

ஆனால் அதில் இடம் பெற்ற இன்னொரு டூயட் மிக விசேஷமானது. ஏ.எம்.ராஜா-பி.லீலாவின் அபூர்வ காம்பினேஷனில்  சூப்பர் ஹிட்டாகி எல்லாரையும் குஷிப்படுத்தியது.

மாப்பிள்ளை  டோய்  மாப்பிள்ளை  டோய்  மணியான  மதராசு  மாப்பிள்ளை  டோய்
மைலேடி டோய் மைலேடி டோய் மனம் போலே வந்து வாச்ச பெண் ஜோடி டோய்’

1953. நவம்பர் 5. தீபாவளி. முன் கூட்டியே பேசியபடி ஜெமினி ஆசை ஆசையாக நெய்து தந்த வெள்ளை நிறச் சேலையை உடுத்திக்கொண்டு திராவிட தேவதையாக ஒளி வீசினார் சாவித்ரி. காதல் மன்னனின் வரவுக்காக மாடியில் காத்து நின்றார். ’நல்ல நாளும் பொழுதுமா கட்டிக்க வெள்ளைப் புடைவைதானா கிடைச்சிது!’ என்றார் சவுத்ரி.  

மனம் போல் மாங்கல்யத்தின் வெற்றியைக் கொண்டாட, சலிக்காமல் சாவித்ரியின் வீட்டுக்குப் படை எடுத்தார் கோலிவுட் கஜினி முகமது! ஒரு முறை கூட  சாவித்ரியின் முக தரிசனம் கிட்டவில்லை. பெரியப்பா சவுத்ரியின் 144ஐ மீறி அவரைக் காண்பது துர்லபம் என்று புரிந்தது. பாழும் மனது கேட்கிறதா. அலை பாயுதே!

இரவின் மடியில் புது மாப்பிள்ளை கணேசனின் தாபங்கள் தொலைபேசி மூலம் தீர்ந்தன. அலெக்ஸாண்டர் கிரஹாம்பெலின் புகழ் நீடுழி வாழ்க

‘சாவித்ரி!  இப்படித்தான் நம்ம தலை தீபாவளி இருக்கணும்னு ஆண்டவன் எழுதி வெச்சுட்டான் போலிருக்கு. வெள்ளைப் புடைவையில் காலையில் நீ மாடியில் இருந்த போது ஷேக்ஸ்பியர் வர்ணித்த ஜூலியட் மாதிரியே இருந்தாய்!

அதில் வர்ற ரோமியோ எப்படி கீழே இருந்தானோ அப்படி நான் இருந்திட்டேன்.

’ம்...’

சாவித்ரி நீ தீர்க்க சுமங்கலியா இருக்கணும். இது என் தீபாவளி வாழ்த்து.’

எடுத்த எடுப்பில் இரட்டை வேடங்களில்  காமெடி ஹீரோவாக ஜொலி ஜொலித்த, ஜெமினியையும் சாவித்ரியையும் பல நூற்றாண்டு காலத்துக்குத் தமிழர்கள் இன்பக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டனர்.  

மாடர்ன் தியேட்டர்ஸ் சுகம் எங்கே அடுத்து சாவித்ரிக்கு கிரீடம் சூட்டியது. மு.கருணாநிதியின் வசனத்தை சாவித்ரி தெள்ளத் தெளிவாக தெலுங்கு வாடையின்றி பேசி,  தனி இடம் பெற்றார். அதனோடு போட்டி போட்டு உருவான கண்ணதாசனின் அம்மையப்பன் படு தோல்வி அடைந்தது. சுகம் எங்கேயின் ஹீரோ  கே.ஆர்.ராமசாமி-ஜிக்கி இருவரும் பாடிய ’கண்ணில் தோன்றும் காட்சி யாவும்’  வானொலி உங்கள் விருப்பத்தின் நான் ஸ்டாப் பாடல்களில் ஒன்று! 

சாவித்ரிக்கு மீண்டும் ஒரு லைஃப் டைம் கேரக்டர் மிஸ்ஸியம்மாவில் அமைந்தது. தேவதாஸின் பார்வதிக்கு  நேர் விரோதம் மிஸ் மேரி!  பி.பானுமதி நடிக்க வேண்டிய எமகாதக வேஷம்!  விஜயா நிறுவன சக்ரபாணிக்கும் அவருக்கும் சரிப்பட்டு வரவில்லை. சக்ரபாணி பானுமதியின் தங்கையாக நடிக்க வந்த சாவித்ரிக்கு அக்கா மிஸ் மேரியாக பிரமோஷன் அளித்தார்.

சாவித்ரி மிஸ்ஸியம்மாவாகத் தோன்றிய வைபவத்தைத்  தாம்பூலச் சுவையுடன் கூறியுள்ளார்.

‘முதலில் உள்ளூரக் கொஞ்சம் பயம். பெரிய நடிகை ஒருவரை ஏற்பாடு செய்த இடத்தில் எனக்கு வாய்ப்பு கொடுக்கிறார்களே என்ற கலக்கம். டைரக்டர் எல்.வி. பிரசாத். ஆரம்ப நிலையிலிருந்து என்னை நல்ல முறையில் முன்னுக்குக் கொண்டு வர முயன்றவர். அவரது இயக்கத்தில் நடிப்பதில் ஒரு திருப்தி. கதாநாயகன் ஜெமினிகணேஷ். ஆக  இருபுறமும் நல்ல துணை இருந்தது.

பிரசாத்  நுட்பமாக நடிப்பைச் சொல்லிக்கொடுப்பார். மிக நன்றாக எடுக்கும் வரையில் விடமாட்டார். மிஸ்ஸியம்மாவில்  கிருத்தவப் பெண்ணாக நடித்தேன். அதற்கானப் பழக்க வழக்கங்களைக்  கற்றுக் கொண்டேன். அந்த விதத்தில் உதவியவர் காமிரா மேன் மார்க்கஸ் பார்ட்லே. அவருக்கு முன்னால் நின்று இரண்டு தோளிலும், மேலேயும் கீழேயும் சிலுவைக்குறி போட்டுக் காண்பித்து சரிதானா சார் என்று கேட்டுக்கொள்வேன்.

மிஸ்ஸியம்மாவில் நடிக்கும் போது  வெற்றிலைப் பாக்கு போடும் வழக்கம் ஏற்பட்டது. வெற்றிலை பாக்கு போட்டால் படப்பிடிப்பில் பல் தெரியும் போது கிளேர் அடிக்காது என்று சொல்லி டைரக்டர் என்னைப் போட வைத்தார். நாக்கு தடித்தது. சில சமயம் டயலாக் நிரடுகிற அளவுக்கு அது தொற்றி விட்டது.’

பெரியப்பாவின் கட்டுப்பாடுகளை இனியும் சகித்துக் கொள்ள முடியாது என்கிற நிலை. ஏ.டி.எம்’மாக சாவித்ரியை எண்ணிய சவுத்ரியின் சாரம் சரிந்தது. ஓர் அர்த்த ராத்திரி. ஆக்ரோஷமாக மழை பொழிந்த ஜெய வருஷ கார்த்திகை. கணேசனே தனக்கு சகலமும்  என்கிற உறுதியோடு, அவரது வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தார் சாவித்ரி.    

பேச்சு சத்தம் கேட்டு தூக்கம் கலைந்து எழுந்து வந்தவர்  முதல் மனைவி பாப்ஜி! அவருக்கும் ஜெமினிக்கும்  1940 ஜூன் 30ல் கல்யாணமாகி இருந்தது. அப்போது சாவித்ரிக்கு நாலு வயது இருக்கலாம். ஜெமினி -சாவித்ரி இருவருக்கும் அதிகமில்லை ஜென்டில்மென் 16 வருட இடைவெளி.

1955. ஜெமினி-சாவித்ரியின் பொற்காலம் தொடங்கியது. தைத் திருநாளில் வெளியான மிஸ்ஸியம்மா தமிழ் சினிமாவின் மறக்க முடியாத வெற்றிச்சித்திரம். மிக இயல்பான நடிப்பும், வாராயோ வெண்ணிலாவே, பழகத் தெரிய வேணும் உள்ளிட்ட இனிய பாடல்களும், கருப்பு வெள்ளையில் கண்ணுக்குக் குளிர்ச்சியான ஒளிப்பதிவும், சாரங்கபாணியின் மெல்லிய நகைச்சுவையும்...

எல்லாவற்றுக்கும் மேலாக சாவித்ரியின் மழலை ரகக் கோபங்களும், சிடுசிடுப்பும், அப்பாவித்தனமான முகபாவங்களும் எழுதாத கவிதைகள்! அவர் உருக்கமாகப் பாடி நடித்த, ’என்னை ஆளும் மேரி மாதா துணை நீயே மேரி மாதா’ பாடல் மதங்களைக் கடந்து உலகத் தமிழர்களின் வழிபாட்டுத் தோத்திரமானது.   

காதலையும் தும்மலையும் மூடி வைக்க முடியாது என்கிறார் திருவள்ளுவர். எத்தன் ஜெமினி கணேசனுக்கு அதுவும் சாத்தியம். மூன்று வருடங்கள் சாவித்ரியுடனான பிரேம பாசத்தைப் புதையலாகப் பொதுமக்கள் அறியாமல் காக்க முடிந்தது.

1956ல் வாசகர்கள் சினிமா பத்திரிகைகளில் கேள்வி கேட்டனர்.

ஜெமினி-சாவித்ரி காதல் திருமணமாமே... நிஜமா?

அந்தப் பரவச நொடிகளின் பனித் தூறலை சாவித்ரியின் ஐஸ்க்ரீம் வார்த்தைகளில் பார்க்கலாம்.

‘மனம் போல் மாங்கல்யம் படத்தையொட்டி எனக்கும் அவருக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அவருடைய தோற்றம், பழகும் சுபாவம், கலகலப்பான சிரிப்பு எல்லாமே என்னை அவர் பால் மிகுந்த ஈடுபாடு கொள்ளச் செய்தன. எங்கள் திருமணமும் முடிந்தது. நாங்கள் தம்பதிகளானோம். அவர் நான் உனக்கு அடிமை என்றார். அவரிடம் உங்களுக்கு நான் அடிமை என்றேன். என் கல்யாணத்துக்கு அடையாளமாக அவர் என் கையில் மோதிரத்தைப் போட்டார். அவர் கைகளில் என்னையே ஒப்படைத்தேன். அவர் போட்ட மோதிரம் உட்படத்தான்.

ஆனால்  அவரை மணந்து கொண்டது வெகு நாள்களுக்கு ரகசியமாகவே இருந்தது. லக்ஸ் சோப் விளம்பரம் ஒன்றில்  என் கையெழுத்தை முதன் முறையாக சாவித்ரி கணேஷ் என்று போட்டேன். அதுவே  ரசிகர்களுக்கு எங்கள் திருமணம் முடிந்து விட்டதை நான் குறிப்பாக உணர்த்திய முறை.

திரையில் எங்கள் இருவரையும் புகழ் மிகுந்த காதல் ஜோடிகளாகப் பார்த்து மகிழ்ந்த, லட்சக் கணக்கான ரசிகர்களுக்கு அது மிகுந்த உற்சாகத்தை அளித்தது.

எனக்கு நிறையப் படங்கள் வரத்தொடங்கின. காலை 7 மணியிலிருந்து பிற்பகல் 1 மணி,  இரண்டு மணியிலிருந்து இரவு 9 மணி இப்படி எங்கள் இருவருக்கும் தினந்தோறும் ஷூட்டிங் இருக்கும். ஸ்டுடியோவில் போய் மேக் அப் போட்டுக்கொள்ளக் கூட நேரம் இருக்காது. அதனை வீட்டிலேயே செய்த பின்னர்  செட்டுக்கு செல்வேன்.

 நான் என்னுடைய வேலையை முடித்துக் கொண்டு அவர் இருக்கும் இடத்துக்குப் போவேன். அங்கிருந்து இருவரும் ஒன்றாகவே வீட்டுக்குக் கிளம்புவோம். சில நாள்களுக்கு இரவு ஷூட்டிங் கூட இருந்தது. உடம்பு அடித்துப் போட்டது போல சோர்ந்து போகும். ஒரு பிரபல நடிகையின் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது என்பது புரிந்தது.

1956 செப்டம்பர் 9ஆம் தேதி அபிராமபுரத்தில், 400 ரூபாய் வாடகையில்  தனிக்குடித்தனம் வந்தோம். அந்த இரவுதான் நாங்கள் இருவரும் முதன் முறையாக ஓடியன் தியேட்டரில் (இப்ப மெலடி) இங்கிலீஷ் ஃபிலிம் பார்க்கப் போனோம். படத்தைப் பார்க்கவா தோன்றும்!’

மாடர்ன் தியேட்டர்ஸின் ’மகேஸ்வரி’ சாவித்ரிக்காகவே தயாரித்தப் படைப்போ என்கிற பிரமையை ஏற்படுத்தியது. அதில் ஸ்ரீதர், சாவித்ரிக்காக உருவாக்கிய வேடம் திருடர்களின் தலைவி ராணி ரங்கம்மாள்! திரையில் பூலான் தேவியாகவும் சாவித்ரி மக்களின் மனங்களைக் கொள்ளையடித்தார்.

‘வாளெடுத்து வீசுவாள் மானம் காக்க!  ஏழை மக்கள் பக்கம் பேசுவாள் துன்பம் தீர்க்க!’

என்ற மகேஸ்வரி படப் பாடல் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலில் தடம் பதித்தார் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்.

1956 நவம்பர் 22.  தொடர் வண்டியில் வந்தவர்கள், அரியலூர் பாலம் உடைந்து விழுந்ததில் 152 பேர் பலியானார்கள். 120 பேர் படு காயமடைந்தார்கள். அன்றைய ரயில்வே மந்திரி லால்பகதூர் சாஸ்திரி உடனடியாகப் பதவியை ராஜினாமா செய்தார். இந்தியாவெங்கும் பரபரப்பை உண்டாக்கிய  சம்பவம்!

அது சுடச்சுட ’மாதர் குல மாணிக்கம்’ திரைக் கதையின் கருவாக அமைந்தது. அஞ்சலியின் ரசிகை சாவித்ரி! அஞ்சலியோடு இணைந்து நடித்த படம். ஜெமினி நடித்திருந்தும், சாவித்ரியின் நாயகன் நாகேஸ்வரராவ் என்பது மாறுதல். தயாரிக்கப்பட்ட அத்தனை மொழிகளிலும் பெரிய வசூலைக் குவித்தது.

ராஜாராணி - கத்தி சண்டையா, குடும்பச் சித்திரமா, புராண இதிகாசமா, தேவன் படைத்த ’கோமதியின் காதலன்’ போன்ற காமெடியா  எல்லாவற்றிலும் சாவித்ரி ஆல்ரவுண்டர் என நிருபித்துக் காட்டினார்.

அன்றைய ஆந்திரத்தின் சில பகுதிகளும் கொஞ்சம் மலையாள மண்ணும் கூடி, அகலவிரிந்து ஒன்றாகி பரந்து நின்ற மதராஸ் மாகாணத்தில், நவரஸ நடிப்பில் சாவித்ரியை மிஞ்ச ஆளில்லை என்றானது. அவரது ஒவ்வொரு அசைவையும் மீடியா உற்று நோக்கியது.

விளைவு 1957  சாவித்ரியின்  ஆண்டானது. வெளியான 30 தமிழ்ப் படங்களில் மூன்றில் ஒரு பங்கு சாவித்ரி நடித்தவை. தமிழ் சினிமா சரித்திரத்தில் அதுவரை யாராலும் எண்ணிப்பார்க்க முடியாத அரிய சாதனை. அவற்றில் எங்கள் வீட்டு மகாலட்சுமி, மாயாபஜார், வணங்காமுடி, கற்புக்கரசி, யார் பையன், மகாதேவி  எனப் பலவும் சாவித்ரியின் அருமையைச் சொல்லும்  திரை சாசனங்கள். அவை ஒவ்வொன்றின் பின்னாலும் குவிந்து கிடக்கும் சுவாரஸ்யங்கள் நிறைய!

‘சாவித்ரி மகாலட்சுமின்னா மகாலட்சுமிதான். என்ன பொறுமை,  என்ன பெருந்தன்மை, என்ன சாந்தம், என்ன கண்டிப்பு... மருமகள்னா அப்படி இருக்கணும் என ஒவ்வொரு மாமியாரையும் பேச வைத்தது நடிகையர் திலகத்தின் பெர்ஃபாமன்ஸ்!

1957ன் மிகச் சிறந்த குடும்பச் சித்திரமாக கொண்டாடப்பட்டது எங்கள் வீட்டு மகாலட்சுமி. ஏ.நாகேஸ்வரராவின் சொந்தத் தயாரிப்பு. சாவித்ரியின் நடிப்பு இதில் பாட்டிக்குலங்களின் மனத்தில் பசுமையாக இன்றும் நிலைத்து நிற்கிறது.

எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இரட்டை வேடத்தில் யார் முதலில் நடிப்பது என போட்டி போட்ட  காலம். அவர்களுக்கு முன்னோடியாக சாவித்ரி ஒரே படத்தில் அநாயாசமாக மூன்று வேடங்களில் வலம் வந்தார்.

வணங்காமுடியில் சாவித்ரி த்ரீ !  ஒரிஜினலாக இளவரசி. சிற்பி சிவாஜியின் காதலி. சிவாஜியுடைய அம்மா கண்ணாம்பாவைக் கவர்தற்காக மிக சாதாரண குடும்ப யுவதியாகவும் தோன்றுவார்.  கூடுதலாக இன்னொரு சாவித்ரி குறத்தியாக நடித்து திரையைக்  கலக்கினார்.

1957 தமிழ்ப் புத்தாண்டில் வெளியானது மாயாபஜார். போகோ, சுட்டி டிவி போன்ற கார்ட்டூன் சேனல்கள் அறியாத  அக்காலத்து, ஜெயலலிதா உள்ளிட்டக் குழந்தைகளுக்கு, விஜயா புரொடக்ஷன்ஸ் மாயாபஜார் அரிய பொக்கிஷம்!  பிடித்தமான படங்களில் மாயாபஜாருக்கு தனி முக்கியத்துவம் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.

‘நன்றாக இருக்கிறது என்று எது உங்களை உணர வைக்கிறதோ, அதுவே பொழுது போக்கு. மாயாபஜார் நான் சிறு குழந்தையாக இருந்தது முதல் இப்போது வரை கிட்டத்தட்ட 100 தடவைகளுக்கு மேல் பார்த்து விட்டேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் இப்போது தான், முதல் முறை பார்ப்பது போல் மனம் விட்டுச் சிரிக்கிறேன்.’- ஜெயலலிதா. 

யார் பையன்?  இன்றைக்கும் பார்க்கப் பார்க்க சஸ்பென்சும் ஹாஸ்யமும் நிறைந்த  மிக வித்தியாசமான சித்திரம். டெய்சி ராணி என்கிற வடக்கத்திய குழந்தை நட்சத்திரம் யார் பையன்? மூலம் தமிழிலும் சக்கை போடு போட்டது.

தீபாவளி ரிலிசான மகாதேவியில் எம்.ஜி.ஆரும் சாவித்ரியும் முதன் முதலாக இணைந்து நடித்தனர். நிறைய எதிர்பார்ப்புகள். முதலிரவு காட்சியில் எம்.ஜி.ஆரிடம் சாவித்ரி பாடிய பாடல்.

‘சேவை செய்வதே ஆனந்தம் பதி சேவை செய்வதே ஆனந்தம்’ என ஆரம்பித்தது.

எம்.எஸ்.ராஜேஸ்வரி, சாவித்ரிக்காகப் பாடியிருந்தது விசேஷமானது. எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்குப் பரமத் திருப்தி! தங்கள் வாத்தியாரை சாவித்ரியும் போற்றி விட்ட சந்தோஷத்தின் நிறைவு.

வருஷமெல்லாம் வசந்தம் சாவித்ரிக்கு. ஆனந்த விகடன்  சாவித்ரியின் நடிப்பைப் புகழ்வதை பார்ட் டைம் வொர்க் ஆக வைத்துக் கொண்டது. 

மாயாபஜார்- சாவித்ரி வத்சலா பாகத்தை நல்லா சமாளிச்சிருக்குது. வெடுக் வெடுக்குன்னு பேசுது. க்ளுக் க்ளுக்குன்னு சிரிக்குது. அமர்க்களம் பண்ணுது... அதுவும் மாய வத்சலாவாக வரும் போது அசல் ரவுடிப் பொண்ணுதான்.

வணங்காமுடி- ‘சாவித்ரி நடிப்பும், துடிப்பும், பேச்சும், சிரிப்பும் அப்படியே அள்ளிக்கிட்டுப் போயிடுச்சி. எப்படி ஆடியிருக்கிறா!’

கற்புக்கரசி- ’ஜெமினி சாவித்ரி இருவரையும் சேர்ந்தாப்போல கண்டாலே ஆனந்தம்! மூணு மணி நேரமும்  ஒரே குஷிதான்!’.

‘யார் பையன் ? - ‘மிஸ்ஸியம்மாவுக்கு  அப்புறம் இந்தப் படத்தில் தான்  ஜெமினி-சாவித்ரிக்கு தகுந்த ரோல் கிடைச்சிருக்கு. கணேசன் ரொம்ப நேச்சுரலா செய்திருக்காரு...சாவித்ரி ஏழு வயது பையனுக்குத் தாலாட்டுப் பாடறதும் சிரிப்பு சிரிப்பா வருது.’

மக்களின் கவனம் பெற்ற வெற்றிச் சித்திரங்களில் மட்டுமல்ல. அதே வருடத்தில் வெளிவந்து யாரும் அதிகம் கேள்விப்படாத,  தோல்விப் படங்களிலும் சாவித்ரியின் நடிப்பு  பத்திரிகைகளால் மெச்சப்பட்டது.

1957ன்  வெற்றித்திருமகள் நடிகையர்திலகம்! தன் சாதனை அனுபவங்களை இனிமையாகப் பரிமாறிய  நட்சத்திர பந்தி இது:

எப்போதும் கதையைக் கேட்டு அதில் வருகிற கேரக்டர் பிடித்தால் மட்டுமே ஒப்புக் கொள்வேன். பொதுவாக  அமைதியான  குடும்பப் பெண்ணாகவே நடித்திருக்கிறேன். துவக்கத்தில் செல்லப்பிள்ளை போன்ற ஓரிரு படங்களில் மாத்திரம் வில்லியாக வந்திருக்கிறேன்.

நான் மன நிறைவுடன் நடித்த படம் எங்கள் வீட்டு மகாலட்சுமி.  இப்போது வரும் சினிமாக்களில் காதல் சீன்களில் கட்டிப்பிடித்து உருள்கிறார்கள். குறைந்த உடையுடன் மிக நெருக்கமாக நடித்தால் ஜனங்கள் விரும்புவதாகவும் நினைக்கிறார்கள்.  எங்கள் வீட்டு மகாலட்சுமி ஒரு வெற்றிப்படம்! அதில் நானும் நாகேஸ்வரராவும்  காதல் சீனில் நடித்திருக்கிறோம். ஆனால் ஒருவரை ஒருவர் தொட்டது கூட இல்லை.

இன்னொரு விதமான வினோத ரோலிலும் நடித்தேன். அது மாயாபஜாரில் எனக்குக் கிடைத்த மாய வத்சலாவின் பாகம். கடோத்கஜனாக ரங்காராவ் நடித்தார். மகா பாரத கதையில் கடோத்கஜனே மாறி பெண் உருவில் மாய வத்சலாவாக வருகிறான். இந்த வேடத்தையும்  ஏற்று நடிக்க வேண்டி வந்தது. 

உடை, நகைகள்,மேக் அப் எல்லாவற்றிலும் பெண் உருவின் கவர்ச்சியும் இருக்க வேண்டும். ஆனால், நடிப்பில் ஆண் என்பது தெரியுமாறு நடிக்க வேண்டும். மாய வத்சலா உருவத்தில் நிமிர்ந்த நடையும், கம்பீரப் பார்வையுமாக இடுப்பில் கையை வைத்துக் கொண்டு நடித்தேன். அதற்கு  ஒரு தனி முத்திரையே கிடைத்தது. தமிழிலும் தெலுங்கிலும் மாயாபஜார் அமோக வெற்றி பெற்றது.

தஞ்சை ராமையாதாஸ் இயற்றிய கல்யாண சமையல்சாதம்  என்ற பாட்டு ரொம்ப பாபுலர். அநேகமாக எல்லா கல்யாண வீடுகளிலும் இந்த இசைத்தட்டைப் போட்டு விடுவார்கள்! அங்கே போகும் போது எனக்கு எல்லாரையும் பார்க்கவே வெட்கமாக இருக்கும்!

வணங்காமுடியில்  குறத்தி வேஷம். அது எனக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. அந்த நாளில்  கோடம்பாக்கத்தில் மேம்பாலம் கிடையாது.  அதனால் லெவல் கிராசிங்கில் கார் காத்து நிற்க வேண்டியது இருக்கும். அப்போது ஜனங்கள் ஆவலோடு வந்து கவனிப்பார்கள். வணங்காமுடி வெற்றிகரமாக ஓடிய போது, எனக்கென்று ஸ்பெஷலாக ஒரு ரசிகர் கூட்டம் சேர்ந்து நிற்கும். அவர்களெல்லாம் நரிக்குறவர்கள்!

எம்.ஜி.ஆருடன் நான் நடித்த முதல் படம் மகாதேவி. தமிழில் சிருங்காரம், வீரம் இரண்டிலும் ஒரு பெரிய தோற்றத்தை உருவாக்கிய பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு.இந்தப் புதுமையே அவரது படங்களைச் சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பிப் பார்க்கச் செய்தது. மகாதேவி வெற்றிகரமாக ஓடியது. படம் ரிலீஸ் ஆன அன்று சொல்ல முடியாத கூட்டம்!’

                                 ***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com