உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

முடிவில்லாத தொடர்கதை!

அடுத்த தீ விபத்து "எப்போது',"எங்கு' என்பதுதான் கேள்வியே தவிர, நடக்குமா, நடக்காதா என்கிற கேள்விக்கே இடமேயில்லை.

 ICU in the state government-run SCB Medical College and Hospital, in Cuttack, Odisha

கடந்த திங்கள்கிழமை ஒடிஸா மாநிலம் கட்டக் நகரில் உள்ள எஸ்.சி.பி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து. - PTI

Published On :

மருத்துவமனை தீ விபத்துகள் இப்போதெல்லாம் எந்தவித அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதில்லை; மக்களின் மனசாட்சியை உலுக்குவதில்லை; நாடு தழுவிய அளவில் அனுதாப அலையை உருவாக்குவதில்லை; ஏனெனில், மருத்துவமனைகளில் அடிக்கடி தீ விபத்து நிகழ்வதும், சில-பல உயிர்கள் பலியாவதும் வழக்கமான ஒன்றாகவே மாறிவிட்டிருக்கிறது. அந்த வரிசையில் இணைகிறது கடந்த திங்கள்கிழமை ஒடிஸா மாநிலம் கட்டக் நகரில் உள்ள எஸ்.சி.பி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து.

ஒடிஸா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மிகவும் மோசமான நிலையில் அவசர சிகிச்சைக்காக விபத்தில் காயமடைந்த பலர் கட்டக் எஸ்.சி.பி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த 12 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 14-க்கும் அதிகமானோர் பலமான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதிகாலை 2.30 மணிக்கு அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து புகை பரவத் தொடங்கியபோதுதான் பரபரப்புத் தொடங்கியது. தீயணைப்புப் படையினர் உடனடியாகத் தொடர்பு கொள்ளப்பட்டனர் என்றாலும், அவர்கள் வந்து சேருவதற்கு அரை மணி நேரத்துக்கும் மேலாகி விட்டது. அதற்குள், மருத்துவமனை ஊழியர்களும், நோயாளிகளின் உறவினர்களும் தீயை அணைப்பதிலும், சிகிச்சையில் இருந்த நோயாளிகளை வேறு இடத்துக்கு மாற்றுவதிலும் ஈடுபட்டதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

புகை மண்டலம் மருத்துவமனையின் எல்லா அறைகளையும் சூழ்ந்த நிலையில், நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும், ஊழியர்களும் எதிர்கொண்ட சிரமங்களும், பாதிப்புகளும் வார்த்தையில் வடிக்க முடியாதவை. நோயாளிகளைப் பாதுகாப்பாக இடமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்ட 11 மருத்துவமனை ஊழியர்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

வழக்கம்போல முதல்வர் மோகன் சரண் மாஜி நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட்டு, உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு அறிவித்திருக்கிறார். அந்தத் தீ விபத்து குறித்து தீர விசாரித்து, அதற்குக் காரணமானவர்கள் அனைவரும் சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள் என்றும் எப்போதும்போலத் தெரிவித்திருக்கிறார்.

1944-இல் நிறுவப்பட்ட ஒடிஸô மாநிலத்தின் மிகப் பழைமையான மருத்துவமனையில் இப்படியொரு விபத்து நிகழ்வது என்பது எதிர்பாராதது அல்ல. எப்போதோ நிகழ்ந்திருக்க வேண்டும். தீ விபத்து மட்டுமல்ல, கட்டடம் இடிந்து விழுந்தும்கூட விபத்து நேர்ந்திருக்க வேண்டும். மிக மோசமாகப் பராமரிக்கப்படுவதுடன் மட்டுமல்லாமல், நவீன பாதுகாப்பு அம்சங்களுக்கு ஏதுவாக நவீன கட்டமைப்பு இல்லாமல் இருக்கும் மருத்துவமனையில் விபத்து நேர்ந்ததில் வியப்பொன்றுமில்லை.

2019-இல் உலகத் தரத்திலான "எய்ம்ஸ் ப்ளஸ்' வசதிகளுடன் எஸ்.சி.பி. மருத்துவமனையைத் தரம் உயர்த்துவது என்கிற இலக்கு காகிதத்தில்தான் இருக்கிறது. அதற்கான முயற்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. ரூ. 4,400 கோடி திட்டம் தொடர்ந்து தள்ளிப்போடப்பட்டது. ஜூலை 2024, டிசம்பர் 2025 என்று இலக்குகள் நீட்டிக்கப்பட்டு இப்போது ஜூலை 2026}இல் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது. அதை ஒடிஸா உயர்நீதிமன்றம் கண்டித்தும்கூட, நிர்வாகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

சிதைந்து கொண்டிருக்கும் அந்தப் பழைய மருத்துவமனைக் கட்டடத்தின் பாதுகாப்பு என்பது முன்னுரிமை பெறாமல் இருப்பதன் விளைவுதான் இப்போது ஏற்பட்டிருக்கும் தீ விபத்தும், உயிரிழப்புகளும். ஓராண்டுக்கு முன்பு நடத்தப்பட்ட தீயணைப்பு தொடர்பான பாதுகாப்புத் தணிக்கை அறிக்கையிலும் பல நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டன; அவை எதுவுமே சட்டை செய்யப்படவில்லை.

தீ பிடித்தால் எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி செயலிழந்துபோய் பல மாதங்களாகி இருந்தன. தானியங்கி தண்ணீர் பீய்ச்சும் குழாய்களின் கட்டுப்பாட்டு வால்வு அடைத்து வைக்கப்பட்டிருந்தது. சட்டென்று தீ பிடிக்கும் பொருள்களை மின்கசிவு ஏற்படும் ஏ.சி. போன்ற உபகரணங்களின் அருகில் வைக்கக் கூடாது என்கிற அடிப்படை முன்னெச்சரிக்கைகூட இல்லாமல் இருந்தது, இப்போது விபத்துக்குப் பிறகுதான் உறைக்கிறது.

எச்சரிக்கை ஒலிப்பான்கள் செயல்படாமல் இருப்பது, தீயணைப்பு உபகரணங்கள் இல்லாமல் இருப்பது அல்லது பயன்படாதவையாக இருப்பது, அவசர காலங்களில் வெளியேறுவதற்கான கதவுகள் பூட்டி வைக்கப்பட்டிருப்பது, வேலைப் பளு அதிகமாக இருப்பதால் விபத்தின் முன்னோட்ட எச்சரிக்கைகளை கவனிக்காமல் இருக்கும் மருத்துவமனை ஊழியர்கள், பாதுகாப்பு குறித்த தொடர் கண்காணிப்பில் மருத்துவமனைகள் கவனம் செலுத்தாமல் இருப்பது- இவையெல்லாமேதான் இது போன்ற தீ விபத்துக்குக் காரணிகள்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்த எல்லா தீ விபத்துகளிலும் தொடர்புடைய அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டு, முடிவில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால், அடுத்த தீ விபத்து "எப்போது',"எங்கு' என்பதுதான் கேள்வியே தவிர, நடக்குமா, நடக்காதா என்கிற கேள்விக்கே இடமேயில்லை.

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைவதாக...!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.