தேவிகா 7.நடிகர் திலகத்துடன்...!

1961 மே 27. பத்மினியின்  திருமணம் நடைபெற்றது. அவர் சினிமாவிலிருந்து விலகிச் சென்றார்.
தேவிகா 7.நடிகர் திலகத்துடன்...!

1961 மே 27. பத்மினியின்  திருமணம் நடைபெற்றது. அவர் சினிமாவிலிருந்து விலகிச் சென்றார். சிவாஜியும்-- தேவிகாவும் முதன் முதலாக இணை சேர்ந்த  பாவமன்னிப்பு வெள்ளிவிழா கொண்டாடியது. 

பத்மினி மீண்டும் சிவாஜியுடன் சினிமாவில் டூயட் பாட சில வருடங்கள் பிடித்தது. இடைப்பட்ட ஐந்து ஆண்டுகள் நடிகர் திலகத்துக்குப் பொருத்தமான  ஜோடியாக வெற்றிகரமாக வலம் வரும் அதிர்ஷ்டம் தேவிகாவுக்கு அமைந்தது.

மாபெரும் பிரம்மப் பிரயத்தனங்களுக்குப் பிறகே பத்மினியால் சிவாஜி- தேவிகா ஜோடியைப் பிரிக்க முடிந்தது. அந்த அளவுக்குத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், ரசிகர்கள் ஆகிய மூன்று தரப்பினராலும் சிவாஜி- தேவிகா ஜோடிக்கு அற்புத வரவேற்பு கிட்டியது.

1961 முதல் 1965 வரை எம்.ஜி.ஆர்.-சரோ, சிவாஜி -தேவிகா, ஜெமினி -சாவித்ரி இணைகள் தமிழ் டாக்கியை ஆண்டன.

சிவாஜியுடன் தேவிகா இணைந்து நடித்த ஆண்டவன் கட்டளை, பி.எஸ். வீரப்பாவின் தயாரிப்பு. ஆலயமணி வெற்றிக்குப் பிறகு கே. சங்கர் இயக்கத்தில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்தது.

ஆலயமணியைப் போலவே சென்னையில் நாலு தியேட்டர்களில் நூறு நாள்களைக் கடந்து சாதனை படைக்கும் என எண்ணினார் வீரப்பா. ஆனால் ஐம்பது நாட்களைத் தாண்டி ஓடியதே தவிர வெற்றி விழா கொண்டாடவில்லை.

கணேசனின்  மிகையான நடிப்பு மீதான மீடியாவின் கடுமையான விமரிசனங்கள், படத்தின் ஓட்டத்தையும் வசூலையும் பாதித்தன.

சிவாஜியின் ஓவர் ஆக்டிங்கால் சிதைந்த படங்களில் ஒன்றாக ஆண்டவன் கட்டளை ஆகிப் போனது.

பேராசிரியர் கிருஷ்ணன் மதிப்பிற்குரிய மேதை என்பதைக் காட்டிலும், படித்த கோமாளியாகத் தெரிய காரணம் சிவாஜியின் மிகையான நடிப்பு.  என்று குமுதம் தன் விமரிசனத்தில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியது.

தேவிகா நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்த படங்களில் ஆண்டவன் கட்டளைக்குத் தனி மகுடம் சூட்டலாம்.

விவேகானந்தர் போல் பரம புருஷராக வாழத் துடிக்கும் பேராசிரியர் கிருஷ்ணனை, வலியச் சென்று காதலிக்க வைக்கும் துணிச்சல் மிக்க கல்லூரி மாணவி ராதாவாக தேவிகா வாழ்ந்து காட்டியிருந்தார்.

‘அழகே வா அருகே வா‘ பாடலில் கவர்ச்சிக்கும் விரசத்துக்குமான மெல்லிய வேற்றுமையை-  ஒற்றைக் குழல் ஈர முகத்தில் விழும் எழிலிலும்,  நீரில் நனைந்த வாளிப்பான தோற்றத்திலும், மிக நுண்ணிய சிருங்கார பாவனைகளிலும் தேவிகா அற்புதமாக வெளிப்படுத்தினார்.

தேவிகாவின் பெர்ஃபாமன்ஸை ஆனந்த விகடன், குமுதம் உள்ளிட்ட முன்னணி வார இதழ்கள் மனமாரப் பாராட்டின.

‘குறை சொல்ல முடியாமல் நடித்திருக்கிறார் தேவிகா. அதுவும் கடைசியில் பழைய நினைவுகளை மறந்த நிலையில் கண்களை உருட்டி, மிரட்சியுடன், நீ யாரு? நீ என்ன சொல்றே’ என்று நடிகர் திலகத்திடம் கேட்கும் இடங்கள்  மெய் சிலிர்க்க வைக்கின்றன. ' என்று போற்றி எழுதியது ஆனந்த விகடன்.

தேவிகாவின் சிறந்த நடிப்பை அத்தனைச் சீக்கிரத்தில் மறக்க முடியாமல், அதைக் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்து முரடன் முத்து விமர்சனத்திலும் எதிரொலித்தது.

மீனாட்சி- ‘தேவிகா பத்தி ஒண்ணும் சொல்லலையே? '

சண்முகம் பிள்ளை- ‘என்ன இருக்கு சொல்றதுக்கு. ஆண்டவன் கட்டளைல அவங்களுக்குச் சிறப்பான ரோல்.  அதைவிடப் பிரமாதமா இதுல என்ன பண்ணிட முடியும். கொடுத்த சந்தர்ப்பத்தை நல்லா பண்ணி இருக்காங்க. '

தேவிகாவின் பிசிறு இல்லாத நடிப்பு நிறைவு. புன்னகை செய்தே பேராசிரியரைக் கவரும் பாணியும், பழைய நினைவு மறந்த அரைப் பைத்தியமாக உலவும் முறையும் நிறைவைத் தருகின்றன. ' என்றது குமுதம்.

நீலவானம் பட விமர்சனத்தில் ஆனந்த விகடன் தேவிகாவை கை கொடுத்த தெய்வம் சாவித்ரி ரேஞ்சுக்கு  உயர்த்தி எழுதியது. தேவிகாவின் நடிப்பால் காப்பாற்றப்பட்டது நீலவானம் என்று அதிரடியாக அறிவித்தது. 

அன்புக் கரங்கள்- அன்னம் கதாபாத்திரமும், நீலவானமும் கௌரி கேரக்டரும் 1965ல் பேசும் படம் இதழால் தேவிகாவின்  சிறந்த நடிப்புக்காகப் பெரிதும் பாரட்டப்பட்டன.

சிவாஜியிடமிருந்து சிறந்த நடிப்பைக் கற்றுக் கொண்ட அனுபவம் குறித்து தேவிகா உங்களுடன் -

‘நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் மட்டுமல்ல, தன்னோடு நடிப்பவர்களின் திறமையும் வெளிப்பட வேண்டும் என்று நினைக்கிற பண்பிலும் அவர் திலகம்!

பாவமன்னிப்பு படத்தில் ரஹீமாக வாழ்ந்து காட்டியிருப்பார். அதில் சிவாஜியுடன் நாயகியாக நடித்த முதல் சீனை என்னால் என்றும் மறக்கவே முடியாது. காரணம் அது ரஹீமை நான் ஜெயிலில் சந்திக்கும் சோகமயமான கட்டம்.

உள்ளேயிருந்து சிவாஜி கதற, வெளியே நிற்கும் நான் புலம்ப... அதனை க்ளைமாக்ஸ் காட்சிக்குக் கொடுக்கிற  முக்கியத்துவத்துடன், அதிக அக்கறையோடு முதலில் படமாக்கினார் டைரக்டர் ஏ. பீம்சிங்.

சிறைக் கம்பிகளைப் பிடித்தவாறு அதில் முகம் புதைத்து நான் அழ வேண்டும். புதிதாக பெயிண்ட் அடித்திருப்பார்கள் போல. அது என் கைகளில் ஒட்டிக்கொண்டு விட்டது.

சிவாஜிக்கு அதைப் பார்த்ததும் பயங்கர கோபம் ஏற்பட்டது. என் படபடப்பு மேலும் கூடியது. 

‘ கம்பிகளைப் பிடித்துக் கொண்டு பலம் கொண்ட  மட்டும் அதை ஆட்டி விட்டால் போதுமா...? கண்ணீர் விட்டுக் கதறும் நடிப்பு வந்து விடுமா உனக்கு? இந்தக் கம்பிகள் போலியானவை. நிஜக்கம்பிகள் போல் இவற்றை  உலுக்கினால் இவை என்ன ஆகும்? எப்பவும்  சுய நினைவோடு நடிக்கணும்.

அப்பத்தான் நீ நடிப்பில் உச்சம் தொட முடியும். இப்ப நான் மேரியாக நடிப்பதை நீ பார்... ' என்ற சிவாஜி,

கம்பிகளுக்குப் பூசப்பட்ட புது சாயம் கொஞ்சமும்  கைகளில் படாமல், உணர்ச்சி வசப்பட்டு அழகாக நடித்துக் காட்டினார்.

அன்புக்கரங்கள் படத்தில் நான் மணிமாலாவைச் செல்லமாகக் கடிந்து கொள்ள வேண்டிய ஒரு கட்டம். விளையாட்டுக் கோபம் காட்ட வேண்டிய இடத்தில், அதை உணராமல் நான் நிஜமாகவே கோபித்துக் கொள்வது போல  நடித்தேன்.

அதைப் பார்த்த சிவாஜி, ‘இந்த சீன்ல இப்பிடித்தான் நடிப்பீங்களா..? கொஞ்சம் தள்ளுங்க நான் நடிச்சிக் காட்டறேன்.

நடிக்கறதே பொய்யான சமாசாரம். நீ போலியா கோவிச்சிக்கிட்டுப் பாசாங்கு பண்ணணும். அதை விட்டுட்டு முகத்துல இவ்வளவு கடுப்பைக் காமிச்சா காட்சி எப்படி சரியா வரும்?

நீ அவளுக்கு புத்தி சொல்றதுல உள்ளூற அன்பும் பாசமும் எதிரொலிக்கணும். அது உன் ஆதங்கமா வெளிப்படணுமே தவிர ஆத்திரமா மாறிப்போயிடக் கூடாது.

டூரிங் டாக்கீஸுல படம் பார்க்கறவனுக்கும் நீ பொய்யாத்தான் கோவிச்சிக்கிறன்னு புரியறாப்பல நடிக்கணும். என்ன நான் சொல்றது விளங்குதான்னு’ கேட்டுட்டு  நான் எப்படிப்பட்ட பாவத்தோடு பேசணும்னு நடிச்சிக் காமிச்சார்.

போலியான கோபத்தில் கூட இவ்வளவு நுணுக்கங்களா...! என்று வியந்தேன்.

அவரோட நடிச்சதாலதான்  நான் ஒரு ஆர்ட்டிஸ்ட்டா  நிக்கிறேன்னு கூடச் சொல்லலாம். செட்ல எனக்கு சீன் இல்லாத நேரத்துல லைட் பாய் கிட்ட பேசிட்டிருப்பேன். உடனே சிவாஜி என்னிடம்,

‘ஹீரோ கிட்டப் பேசறது தேவையில்லன்னு நினைக்கிற’ என்று நையாண்டியாகக் கேட்டிருக்கிறார். எனக்கு பேசக் கூடாது என்றெல்லாம் இல்லை. ஒரு வித அச்சத்தினால்  பெரியவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன்.

ஷாட்ல எப்படி நடிக்கணும்னு எனக்குச் சொல்லிக் கொடுத்துட்டு கம்மியா பண்ணுவார். கூட நடிக்கிறவங்களுக்கும் பேர் வரணும்னு நினைப்பார்... அவர் தான் சிவாஜி.

அதுக்குச் சரியான எடுத்துக்காட்டு வேணும்னா  ‘நீல வானம்’  படத்தைச் சொல்லலாம். ‘அதுல கதாநாயகிக்கு முக்கியத்துவம் கிடைக்கிற கேரக்டர். ஹீரோவுக்கு அதிக வேலை கிடையாது.’

அந்த விஷயம் சிவாஜிக்குத் தெரிவிக்கப்பட்டும் அவர் பிடிவாதமா  நடித்தார். என் கேரக்டர் ஓங்கி நிற்க வேண்டிய கட்டங்கள் அத்தனையிலும் எனக்காக விட்டுக் கொடுத்து நடிச்சிருக்கார்.

நான் எந்த சீன்லயாவது நடிப்பை கோட்டை விட்டுட்டேன்னா, ‘மண்டு மண்டு’ ன்னுச் செல்லமா கோவிச்சுக்குவார். அப்புறம் அந்தக் காட்சியில் என் நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார்.

நான் கர்ப்பிணியா நடிக்க வேண்டிய காட்சி. தாய்மை அடைந்த பெண்ணின் ஒவ்வொரு அசைவையும் செய்து காட்டி என் நடிப்பை மேம்படுத்தினார்.

அந்த மாதிரி யார் நன்றாக நடித்தாலும் காட்சி முடிந்த பிறகு பாராட்டி விடுவார். அது அவருக்கு மட்டுமே உரிய பெருந்தண்மைக் குணம்!

(தேவிகாவின் கூற்று அத்தனையும் நிஜம். 1970களில்  தனது சினிமாக்களைப் பற்றி சுய விமர்சனம் செய்த நடிகர் திலகம், நீல வானம் பற்றிக் குறிப்பிடுகையில்,

‘திருமதி தேவிகாவின் சிறந்த நடிப்பைக் கொண்ட படம்! ' என்று வெளிப்படையாகவே தேவிகாவுக்கு நற்சான்றிதழ் அளித்திருக்கிறார்.

சிவாஜி படப்பட்டியலில் நாயகிகள் குறித்த கணேசனின் பாராட்டு மிக மிக அபூர்வம்!)

‘சிவாஜி எப்பப் பார்த்தாலும், ‘சவுக்கியமா... நல்லா இருக்கியா? 'ன்னு ரெண்டே வார்த்தைகள் தான் கேட்பார். அதில் ஓர் ஆழமான அன்பு ஒளிந்திருக்கும். எனக்கு ஆதரவாக இருந்த அவரது அன்பில் நான்  ஒரு போதும் அதிகம் உரிமை எடுத்துக் கொண்டது கிடையாது.

என் மகள் கனகாவுக்கு அப்ப 4 வயது. சிவாஜி தச்சோளி அம்பு மலையாள சினிமாவில் நடிக்கும் போது கை உடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

அவரைப் பார்த்து நலம் விசாரிக்கப் போயிருந்தேன். கனகாவும் என்னுடன் அழைத்துச் சென்றேன். வலியைச் சற்றே மறந்து ஜாலியாக உரையாடியவர், கனகாவைப் பார்த்து ‘உன் பேர் என்னடா’...ன்னு கேட்டார்.

கனகா பதில் பேசாமல் நின்றாள். சிவாஜி மறுபடியும் செல்லமாக அதையே வினவினார். கனகா வாயை இறுக்க மூடிக்கிட்டா. பேசவே இல்லை.

சிவாஜி என்னைப் பார்த்தார்.

‘என்ன பிள்ளை வளர்த்துருக்கே. ' என்றார் இலேசான கோபத்துடன்.

‘என் பொண்ணு என்ன மாதிரியே வளர்ந்திருக்கா... ' என்று சொல்லி சமாளித்தேன். அது நிஜமே. நானும் ஆரம்பத்தில் அறிமுகம் இல்லாதவங்க கிட்டே பேசவே மாட்டேன். ' தேவிகா.

சிவாஜி கணேசனும்-தேவிகாவும் உச்ச நட்சத்திர ஜோடிகளாக ஜொலித்த 1964. தேவிகா பற்றி  நடிகர்திலகம் கூறியவை-

‘நல்ல பெண். திறமை உள்ளவர். மேலும் முன்னுக்கு வரக் கூடியவர். சொன்னதைச் சட்டென்று புரிந்து கொள்வதுடன் அப்படியே சிரமப்பட்டு நடிப்பில் கொண்டு வந்து விடுவார்.

ஷூட்டிங்குக்கு வருவதில் ரொம்ப கரெக்ட்.  சின்ன உதாரணம்- ‘ஆண்டவன் கட்டளை’ படப்பிடிப்பு.

‘அழகே வா அருகே வா

அலையே வா தலைவா வா... ’

பாடல் காட்சியில் தேவிகாவை அலை அடித்துக் கொண்டு போய் விட்டது. அந்த விபத்தில் தேவிகா பிழைத்ததே பகவான் புண்ணியம். உயிர் பயத்தால் தொடர்ந்து அவர் நடிக்க வரமாட்டார் என்று எண்ணினேன்.

மறு நாளே அவர் வழக்கம் போல் வேலைக்கு வந்து எங்களைத் திகைக்க வைத்தார்.

தொழிலில் எத்தனை ஈடுபாடோ அதே சமயம் விளையாட்டுப் பேச்சிலும் சமர்த்து. ஷூட்டிங் சமயத்தில் நிருபர்கள் யாராவது வந்தால் போச்சு. தேவிகாவுக்கு நேரம் போவதே தெரியாது. ’- வி.சி. கணேசன்.

சிவாஜியும் தேவிகாவும் ஜோடி சேர்ந்த படங்களில் சிகரம் ‘கர்ணன்’ அதைப் பற்றி எழுதாமல் தேவிகாவின் திரையுலக அனுபவங்களைப் பூர்த்தி செய்திட முடியாது.

தமிழில் அதிசயிக்கத் தக்க வகையில் நாற்பது லட்சம் பொருட்செலவில் ஈஸ்ட்மென் கலரில் உருவான முதல் பிரம்மாண்ட புராணச் சித்திரம்.

விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் பாடல்கள் இடம் பெற்ற முதல் இதிகாசப் படம்!

காற்றுள்ளவரை காதுகளில் தேனைப் பாய்ச்சும் கந்தர்வ கானங்கள் கர்ணன் படப் பாடல்கள். பெங்களூர் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் கண்ணதாசனால் மூன்றே நாள்களில் முழுமையாக எழுதப்பட்டவை.

1962-1963ல் தயாராகி 1964 தைத் திருநாளில் வெளியானது கர்ணன். தேவிகா கர்ணனின் மனைவி சுபாங்கி.

 பணத்தைத் தண்ணீராக வாரி இறைத்து ஒவ்வொரு அரங்கமும் போடப்பட்டது. சுபாங்கியின் வளைகாப்பு மஹாலுக்கு மட்டும் லட்சக்கணக்கில் செலவு செய்து, விஜயா ஸ்டுடியோவில் மாபெரும் செட் அமைக்கப் பட்டது.

துரியோதனன் மனைவி பானுமதியாக நடித்தவர் நடிகையர் திலகம் சாவித்ரி. அவர் சுபாங்கியைத் தாய் வீட்டுக்கு வழி அனுப்பிப் பாடுவதாக வந்த, ‘மஞ்சள் பூசி மலர்கள் தூவி’ என்று தொடங்கும் வளைகாப்புப் பாடலில் தேவிகாவை வாழ்த்தி 45 நடனப் பெண்கள் ஆடினார்கள்.

ஒவ்வொரு காட்சியிலும் தேவிகாவின் அழகிய தோற்றமும், தலை அலங்காரமும், உடலெங்கும் ஜொலி ஜொலிக்கும் விலை மதிப்பற்ற ஆடை அணிகலன்களும் பிரமிக்க வைக்கும்.

அன்றைய தேதியில் வேறு எந்த பிரபல நடிகைக்கும் கிடைத்திராத அரிய வாய்ப்பு! தேவிகாவை மாத்திரம் தேடி வர மிக முக்கிய காரணம் எஸ். வி. சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்.

 பி.எஸ். இராமையா எழுதிய ‘தேரோட்டி மகன்’ நாடகத்தை அப்போது சேவா ஸ்டேஜ் வெற்றிகரமாக நடத்தி வந்தது.

அதில் தேவிகா துரியோதனன் மனைவி பானுமதியாக, மேடையில்  இதிகாச வசனங்களைப் பேசிச் சிறந்த அனுபவம் பெற்றிருந்தார்.

தேரோட்டி மகன் கதையில் சுபாங்கியை, கர்ணனை அவன் தேரோட்டி மகன் என்பதற்காக வெறுத்து ஒதுக்கும் வில்லியாகக் காட்டினார்கள்.

போருக்குச் செல்லும் கர்ணனை சுபாங்கி வழியனுப்ப மறுப்பாள். பானுமதியாக நடிக்கும் தேவிகாவிடம் கர்ணன் வீரத்திலகம் இட்டுச் செல்லும் கட்டம் கைத்தட்டலைப் பெறும்.

பந்துலு வியாசர் எழுதிய மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு கர்ணன் படத்தை உருவாக்கினார்.

அதன் படி கர்ணனுக்கு விருஷசேனன் என்ற வாரிசு உண்டு. அவன் போரில் மடிவதாகக் காட்டப்பட்டது. அதனால் கர்ணன் படத்தில் சுபாங்கி கதாபாத்திரம் உன்னதமாக அமைந்தது. தேவிகாவின் ஸ்டார் இமேஜ் மேலும் உயர்ந்தது.

யூ ட்யூபில் பதிவேற்றப்பட்டு பார் முழுவதும் நிற மொழி பேதங்களைக் கடந்து அனிருத்தின் கொலவெறி பாடல் பரவி புயலைக் கிளப்பிய  2012.  மார்ச் மாதம்- 16 ஆம் தேதி  நவீன தொழில் நுட்பத்தில் கர்ணன் மீண்டும் தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.

எல்லாரும் ‘கொல வெறி’யில் லயித்திருக்க  யாரும் எதிர்பாராத வகையில், எளிதாக இருபத்தைந்து வாரங்களைக் கடந்தது  கர்ணன்.

அதே மார்ச் 30ல் மாபெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான தனுஷின் 3  உள்ளிட்டப் புதிய சினிமாக்களை விட, கோடிக்கணக்கில் வசூலித்து அரிய சாதனை படைத்தது கர்ணன்.

-பா. தீனதயாளன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com