அத்தியாயம் - 30

வளர்ந்த இந்தியாவை, அறிவில் சிறந்த வல்லரசு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றால், இன்றைய கல்விமுறையில் அடிப்படை மாற்றம் கொண்டு வர வேண்டும்.
அத்தியாயம் - 30

அறிவால் உருவாகும் ஆரோக்கிய சமுதாயம்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான். (குறள் 972)

எல்லா உயிர்க்கும் பிறப்பு என்பது ஒரு தன்மையானதே. ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு, தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை என்கிறது திருக்குறள்.

‘‘பிறப்பினால் ஏற்றத்தாழ்வு இல்லை; செய்யும் செயலினால்தான் ஏற்றத்தாழ்வு’’ என்பதுதான் நமது திருவள்ளுவர் தந்த உலகப் பொதுமறை. பிறப்பினால் ஏற்றத்தாழ்வு இல்லை என்றால், பிறப்பினால் அடையாளப்படுத்தப்படும் சாதி வேற்றுமை தவறு என்பதுதான் சரி. செய்யும் தொழிலை வைத்து காலப்போக்கில் ஒருவன் தாழ்ந்த சாதி என்றும், இன்னொருவனை உயர்ந்த சாதி என்றும் அழைக்கப்படும் நிலை உருவாகிவிட்டது. செய்யும் செயல் தொழிலாகி, அதுவே அவர்களது சாதியாகி, அவர்களை அந்த சாதிரீதியான ஏற்றத்தாழ்வுகள், அதனால் ஏற்படும் பெருமை மற்றும் சிறுமைகள், வேறுபாடுகள் இவை யாவும் அரசியல்ரீதியான வாய்ப்புகளாக மாற்றப்பட்டு இன்றைக்கு புரையோடிய பழமைவாதங்களுக்கு அடிமைப்பட்டு, பழம்பெருமை பேசி, அதை வைத்து அரசியல் நடத்தும் நிலைக்கு நாம் பின்தள்ளப்பட்டுவிட்டோம்.

‘‘சாதி ஒரு நாளும் நம்மைச் சாதனையாளனாக்கவில்லை; மதம் நம்மை மனிதனாக்குவதற்கு தானே ஒழிய, மதம் பிடித்து அலைவதற்காக அல்ல; அறிவு ஒன்றுதான் நம்மை மகானாக்கும்’’ என்பதை நாம் உணர வேண்டிய தருணம் இது. இதை உணராவிட்டால், நாம் நம்மை நாமே சாதி, மத, இன வேறுபாடு என்ற குழிக்குள் தள்ளி, அறிவால் உயர்ந்த உலக நாடுகளுக்கு நாம் அடிமையாவதைத் தவிர, வேறொன்றும் செய்ய இயலாது.

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர். (குறள் 395)

அறிவுடையார் முன் அறிவில்லாதவர்போல் தாழ்ந்து நின்று - மேலும் கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக்கொள்ளாதவர்கள் - கடைநிலை மாந்தராகக் கருதப்படுவார்கள். கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.

உயர்ந்தவர்கள் யார் என்பது, அவர்களது செயலில் தெரியும். அதாவது கல்வி கற்றலினால் கிடைத்த அறிவையும், அதனால் வெளிப்படும் தன்னம்பிக்கையையும், தன்னம்பிக்கையால் வெளிப்படும் தைரியத்தையும், அந்த தைரியத்தால் இந்த சமுதாயத்துக்கு விளையும் நன்மையையும் பொருத்து, அவர்கள் உயர்ந்தவர்களாவார்கள். பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை, செய்யும் செயலால்தான் உயர்வு தாழ்வு உருவாகிறது எனும்போது பிறப்பால் ஒருவனை உயர்ந்தவன் என்றும், தாழ்ந்தவன் என்றும் பிரிப்பது அறிவற்ற செயல் என்பதைத் தவிர வேறில்லை.

இதை நாம் உணர்ந்துகொண்டால், பரம்பரை பரம்பரையாகப் பிறப்பால் உயர்ந்த சாதி, பரம்பரை பரம்பரையாக ஆதிக்க சாதி, பரம்பரை பரம்பரையாக பிறப்பால் தாழ்ந்த சாதி என்று சொல்லித் திரிவதெல்லாம் சுத்தமான மடமை என்பது புரியும்.

ஒரே சாதி என்று ஒன்றுவிட்ட சொந்தத்திற்குள்ளேயே திருமணம் செய்து நாங்களெல்லாம் கலப்பற்ற ஒரே மரபணு என்று சொல்லி அதைக் கடைப்பிடிப்பவர்கள், தொடர்ந்து வியாதிகளால் தொடர் அழிவை சந்தித்திருக்கிறார்கள் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

ஆணும் பெண்ணும் இணையும்போது மரபணு பரிமாற்றம் தானாகவே நடைபெறுகிறது. ஒரு சில மரபணுக்களால் ஒரு சில வியாதிகளும், குணாதிசயங்களும், பழக்க வழக்கங்களும், ஒரு சில செயல்களும், ஒரு சில உருவ ஒற்றுமைகளும், அந்த பரம்பரையில் வழிவழியாக வந்த மரபணுக்களின் வெளிப்பாடாக விளையும். அடுத்த தலைமுறையில் அல்ல; அடுத்தடுத்து வரும் ஏதோ ஒரு தலைமுறையில் அதன் வெளிப்பாடு தெரியவரும். அதனால்தான் திருமணம் என்றால் அதற்கென்று ஒரு வரைமுறையையும், உறவு முறைகளையும், பழக்கவழக்கங்களையும் நம் முன்னோர்கள் ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள். நெருங்கிய சொந்தத்தில் தொடர்ந்து திருமணம் செய்யக் கூடாது, அவ்வப்போது அந்நியத்தில் மாற்றித் திருமணம் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவது, குறைபாடுடைய மரபணுவால் ஏற்படும் ஒரு சில குறைபாடுகளைத் தவிர்ப்பதற்குத்தான்.

இன்றைக்குக் குறைபாடுள்ள மரபணுக்களைக் கண்டறிந்து அதை மாற்றி பரம்பரை வியாதிகளைத் தவிர்ப்பதற்கும், ஒரு மனிதனை அனைத்து விதங்களிலும் ஆரோக்கியமானவனாக மாற்றி அமைக்கும் மரபணு பொறியியல் CRISPR/Cas9 (Clustered Regularly Interspaced Short Palindromic Repeats) என்ற தொழில்நுட்பம் மரபணு ஆராய்ச்சியின் விளைவாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் Cas9 புரோட்டினும், Guide RNA-யும் இருக்கின்றன. இந்த Cas9 புரோட்டின் DNA-வை வெட்டுவதற்கும், Guide RNA எந்த மரபணு வரிசையை மாற்றுவது என்பதைக் கண்டறிவதற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. விஞ்ஞானிகள் வியாதியை உருவாக்கும் மரபணு வரிசையை ஹீமன் ஜினோமில் இருந்து முதலில் கண்டறிவார்கள்.

பின்பு அந்த குறிப்பிட்ட மரபணுவை உணரக்கூடிய Guide RNA - வை உருவாக்கி, டி.என்.ஏ.வில் இருக்கும் A’s, T’s, G’s, C’s வரிசையைக் கண்டறிந்து, Guide RNA, டி.என்.ஏ.வை வெட்டும் என்சைம் Cas9 உடன் இணையும். உருவாக்கப்பட்ட இந்த இணைப்பை, பின்பு எந்த டார்கெட் செல்லில் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்துவார்கள். இந்த இணைப்பு எந்த மரபணு வரிசையை மாற்ற வேண்டுமோ, அதைக் கண்டறிந்து அந்த டி.என்.ஏ.வை வெட்டும். அப்போது ஹியூமன் ஜினோமில் இருந்து நல்ல மரபணுவை எடுத்து வெட்டப்பட்ட பகுதியில் ஒட்டிவிடுவார்கள். 2012-ல் உருவாக்கப்பட்ட இந்த மரபணுவை மாற்ற, வெட்ட, ஒட்ட, இணைக்கப் பயன்படும் CRISPR/Cas9 தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் இனிமேல் பரம்பரை வியாதிகளைக் குணப்படுத்தவும், நோயாளிகளை பெரும் வியாதிகளில் இருந்து குணப்படுத்தவும் சாத்தியமாகிறது. இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆராய்ச்சியில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 7 மிகப்பெரிய வியாதிகளைக் குணப்படுத்தக்கூடிய ஆராய்ச்சிகளில் இந்த உலகம் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த CRISPR/Cas9 தொழில்நுட்பத்தின் மூலம் ஈஸோபேகஸ் கேன்சரைக் குணப்படுத்த சீனா மருத்துவ சோதனையில் ஈடுபட்டிருக்கிறது. இதுவரை கேன்சரால் பாதிக்கப்பட்ட 86 பேரைக் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஏப்ரல் 2019-ல் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் கேன்சரை உருவாக்கும் PD1 புரோட்டினை வெட்டி எடுத்து கேன்சரைக் குணப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ரத்தத்தில் பிராண வாயு கலந்து செல்லத் தடையாக இருக்கும் ரத்த குறைபாட்டு நோயை உருவாக்கும் பீட்டா-தலசீமீயா மற்றும் சிக்கில் செல் வியாதியைக் குணப்படுத்த முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

பரம்பரை மரபணு பிறழ்வினால் உருவாகும் கண் தெரியாமல் போய்விடும் இந்த நோயை இதுவரை குணப்படுத்த வழியில்லாமல் இருந்தது. எனக்குத் தெரிந்து எத்தனையோ பேர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கண் மருத்துவமனைக்கு அனுப்பி இதைக் குணப்படுத்த இப்போது வழியில்லை என்று திருப்பி அனுப்பப்பட்ட பல பேரை எனக்குத் தெரியும். அவர்களுக்கு இப்போது CRISPR/Cas9 தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்த நோய்க்கு காரணமான மரபணுப் பிறழ்வைக் குறிவைத்து குழந்தைகள் முழுவதுமாகப் பார்வைத் திறனை இழக்கும் முன்பு, ஒளி உணரும் செல்களை மீட்டுருவாக்கம் செய்ய முயற்சிக்கிறார்கள்.

இதேபோல் எய்ட்ஸ், சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ், மஸ்குலர் டிஸ்ரோபி, ஹின்டிங்க்டன் வியாதி போன்ற வியாதிகளைக் குணப்படுத்தும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. கூடிய சீக்கிரம் அனைத்து பரிசோதனைகளும் முடிக்கப்பட்டு இது முழுவதுமாக செயல்பாட்டுக்கு மருத்துவத்துக்கு வரும்போது, ஆரோக்கியமான ஒரு சமுதாயம் உருவாக்கப்படும்.

அறிவு ஆரோக்கியத்தை உருவாக்குகிறது. சாதி ஆரோக்கியத்தை ஒழிக்கிறது. அறிவியல் ஆராய்ச்சி மூலம் பரம்பரை வியாதியைக் குணப்படுத்தி ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க இந்த உலகம் பாடுபட்டுக்கொண்டிருக்கிறது.

பிறப்பால் வரும் பரம்பரை நோயில் இருந்து உடல் நலம் பெற அறிவியல் ஆராய்ச்சி வித்திடுகிறது. வியாதிக்குக் காரணமான மரபணுவை மாற்றி உடல் நோயற்ற உலகத்தை உருவாக்க உலகில் அறிவியல் ஆராய்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிக்கின்றன.

சாதி என்ற மனநோயை விரட்ட கல்வி என்ற அருமருந்து அனைவருக்கும் தரமாகக் கிடைக்க வேண்டும். நம் சமுதாயம் அறிவில் முன்னேற வேண்டும். சாதி, மதம், இனம் என்ற இன்றைய குறுகிய பார்வையிலிருந்து மீண்டு ஓர் அறிவார்ந்த சமுதாயத்தைப் படைக்க என்ன செய்ய வேண்டும்? என்று சிந்தித்ததில் பிறந்ததுதான் டாக்டர் அப்துல் கலாமும், நானும் இணைந்து எழுதி 2014-ல் வெளியிடப்பட்ட Manifesto for Change என்ற புத்தகம்.

பள்ளிக்கல்வி, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிகளை எப்படி மாற்றி அமைத்தால் இன்றைய மாணவர்கள் ஓர் அறிவார்ந்த மாற்றத்தை அடைய முடியும் என்று சிந்தித்தோம். 40 நாடுகளிலும், இந்தியாவிலும், தமிழகத்திலும் பல்வேறு பள்ளிகளில், கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் எங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கொண்டு, வளர்ந்த இந்தியாவை, அறிவில் சிறந்த வல்லரசு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றால், இன்றைய கல்விமுறையில் அடிப்படை மாற்றம் கொண்டு வர வேண்டும். அடுத்த 20 அல்லது 30 ஆண்டுகளில் எப்படிப்பட்ட மாற்றத்தை இந்த நாடு அடைய வேண்டுமோ, அந்த மாற்றத்தைக் கல்வி முறை மாற்றத்தில் இருந்து தொடங்கினால்தான் அடைய முடியும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்ததின் விளைவுதான், நாங்கள் இருவரும் இணைந்து தயாரித்த கல்விக்கொள்கை. 2016-ல் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை தேசிய கல்விக் கொள்கை 2016-ன் வரைவை வெளியிட்டு மக்கள் கருத்தைக் கேட்டபோது 30 செப்டம்பர் 2018-ல் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாமும், நானும் இணைந்து உருவாக்கிய கல்விக் கொள்கையைச் சமர்ப்பித்தேன்.

2019-ல் வெளியிடப்பட்ட வரைவு தேசிய கல்விக் கொள்கை - 2019 எங்களது பரிந்துரையில் 75 சதவிகிதத்தை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறது. மகிழ்ச்சி. அதே சமயத்தில், இந்த வரைவு கல்விக் கொள்கையில் ஆங்காங்கே பல்வேறு முரண்பாடுகள், சில திணிப்புகள், வேறுபாடு கொண்ட சித்தாந்தங்கள், மாநில உரிமை மறுப்புகள் போன்ற பல்வேறு மாற்றப்பட வேண்டிய கொள்கைகளும் காணப்படுகின்றன. அவற்றைக் களைந்து சரி செய்தால், இந்த ‘‘தேசிய கல்விக் கொள்கை 2019’’ ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அறிவார்ந்த இந்திய சமுதாயத்தை உருவாக்கும். அடுத்த அடுத்த தொடர்களில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கல்வியின் கொள்கைகளைப் பற்றி பார்ப்போம்.

உங்கள் கனவுகளை, லட்சியங்களை பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள்: vponraj@gmail.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com