அத்தியாயம் - 26

மரபணு மாற்றுப் பயிர்களைப் பொருத்தவரை நன்மைகளும் உண்டு, தீமைகள் விளைவதற்கான வாய்ப்பும் உண்டு.
அத்தியாயம் - 26

மரபணு மாற்றுப் பயிர்கள்.. கடக்க வேண்டிய வேலிகள்!

அறிவியல் வளர்ச்சியை அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தி வளர்ச்சியைக் கொண்டுவர வேண்டும். அறிவியல் வளர்ச்சியினால் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்குமானால் அதன் குறுக்கே நிற்கக் கூடாது. எந்த அறிவியல் ஆராய்ச்சி ஆனாலும் அதில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. அறிவியல் என்பது இரண்டு பக்கம் கூர்மையான தீட்டப்பட்ட கத்தி; அதை யார் பயன்படுத்துகிறார்களோ, அதற்கு ஏற்ப நன்மையும் விளையும், தீமையும் விளையும். அறிவியல் ஆராய்ச்சியின் விளைவாக உருவாகும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் ஏற்படும் நன்மைகளையும், தீமைகளையும், சீர்தூக்கிப் பார்த்து அதைப் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டியது அரசின் கடமை.

மரபணு மாற்றுப் பயிர்களைப் பொருத்தவரை நன்மைகளும் உண்டு, தீமைகள் விளைவதற்கான வாய்ப்பும் உண்டு. அதனால்தான் மரபணு மாற்றம் பற்றிய ஆராய்ச்சியை இந்தியாவில் செய்ய வேண்டும் என்றால், மரபணு ஆராய்ச்சி செய்யும் பல்கலைக் கழகங்கள், நிறுவனங்களில் Institutional Biosafety Committee (IBS) என்று ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில் பயோடெக்னாலஜி துறை வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், விற்பன்னர்கள், பேராசிரியர்கள், மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறையின் விஞ்ஞானிகள், மற்றும் பொது பிரதிநிதிகள் உள்ள IBS கமிட்டி ஆறு மாதத்திற்கு ஒருமுறை கூடி இந்த மரபணு மாற்றுப் பயிர் ஆராய்ச்சி திட்டங்களை ஆய்வு செய்யும். மரபணு மாற்ற ஆராய்ச்சி திட்ட ஆராய்ச்சியாளர், இதனால் ஏற்படும் நன்மை, தீமைகளைப் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் தெளிவாக அந்த ஆய்வு கூட்டத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும். அதை பற்றிய விவாதம் நடக்கும். இந்த விவாதத்தின் முடிவில் IBS கமிட்டி இந்த மரபணு மாற்ற பயிர் பற்றிய ஆராய்ச்சியைத் தொடர அனுமதிப்பதா வேண்டாமா என்ற முடிவை எடுக்கும்.

சில நேரங்களில் மரபணு மாற்று விதை பற்றிய சில ஆராய்ச்சிகள், சாதாரணமான ஆராய்ச்சிகள் ஆக இருந்தால், இதனால் பக்கவிளைவுகள் இல்லை; சுற்றுச்சூழலுக்கு கெடுதல் இல்லை என்ற முடிவை இன்ஸ்டிடியூஷன் பயோ சேஃப்டி கமிட்டி எடுத்தால் இதன் ஆராய்ச்சியை தொடரலாம் என்று ஐபிஎஸ் அனுமதி கொடுத்துவிடலாம்.

மரபணு மாற்றுப் பயிர்கள் ஆராய்ச்சியில் கேட்டகிரி 2-ஐ சேர்ந்த ஆராய்ச்சித் திட்டம் வந்தால், அதன் மூலமாக ஒரு சில தீய விளைவுகள் ஏற்படலாம் என்ற எண்ணம் வந்தாலோ, அதைக் கவனத்துடன் ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும் என்று IBS கமிட்டி கருதினால், இந்த ஆராய்ச்சித் திட்டத்தை மரபணு மாற்றம் பற்றிய (Review Committee of Genetic Manipulation (RCGM)/DBT) மறுஆய்வு கமிட்டியின் ஆய்வுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். இந்தக் கமிட்டிக்கு இதை ஆய்வு செய்ய அனுப்பலாம். இந்தக் கமிட்டியில் ICAR (Indian Council of Agriculture Research), ICMR (Indian Council of Medical Research), Food Safety Authority of India, மற்றும் பயோடெக்னாலஜி ஆராய்ச்சியாளர்கள் இருப்பார்கள். இவர்கள் மாதம் ஒருமுறை கூடி IBS கமிட்டி அனுப்பும் மரபணு மாற்ற ஆராய்ச்சித் திட்டங்களை மறு ஆய்வு செய்து, இந்த ஆராய்ச்சியினால் குறிப்பிட்ட பயிர்களுக்கு ஏற்படும் நன்மைகள் எவை, இந்த மரபணுமாற்ற ஆராய்ச்சியினால் ஏதேனும் பக்கவிளைவுகள், சுற்றுச்சூழலுக்குக் கெடுதல் ஏதும் இருக்குமா என்பதைப் பற்றி தீர்க்கமாக ஆராய்ந்து, இந்த ஆய்வை அனுமதிக்கலாம் அல்லது வேண்டாம் அல்லது சிறு மாறுதல்களோடு அனுமதிக்கலாம் என்பதைப் போன்ற ஏதாவது ஒரு முடிவு எடுப்பார்கள்.

பயோடெக்னாலஜி ஆய்வகத்திலோ அல்லது பசுமை குடில்களில் நடக்கக்கூடிய மரபணு மாற்றுப் பயிர்களைப் பற்றிய ஆய்வை நடத்துவதற்கு ஐபிஎஸ் அனுமதியே போதும். அதற்குப் பிறகு மரபணு மாற்று தாவரங்களை களஆய்வுக்கு அனுப்பி அதன் பூச்சிக்கொல்லித் திறன் எப்படி இருக்கிறது, பூஞ்சையைத் தாங்கி வளரும் திறன் எப்படி இருக்கிறது, களைக்கொல்லி திறன்களைப் பற்றி சோதிப்பதற்கு விவசாய நிலத்தில் பரிசோதனைகள் செய்வதற்கு, ஐபிஎஸ் அனுமதிக்கு பின், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன துறையின் கீழ் இயங்கும், Genetic Engineering Appraisal Committee (GEAC) மரபணு பொறியியல் அப்ரைசல் கமிட்டிக்கு அனுப்பி அதன் அனுமதியையும் பெற வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்று பார்ப்பது மரபணு பொறியியல் அப்ரைசல் கமிட்டி (GEAC) யின் பொறுப்பு. இதை உறுதிப்படுத்திவிட்டுத்தான், விவசாய நில களஆய்வுக்கு அனுமதிக்கலாமா, வேண்டாமா என்று அந்த கமிட்டி முடிவு எடுக்கும். அதாவது ஒரு மரபணு மாற்றம் பற்றிய ஆராய்ச்சிக்கு இந்தியாவில் மூன்று நிலைகளில் அனுமதி வாங்கிய பின்புதான் அந்த ஆராய்ச்சியை முன்னெடுக்க முடியும். முதலில் IBS, அதைத் தாண்டி ஆர்.சி.ஜி.எம். அதற்கு அடுத்து ஜெனிடிக் இன்ஜினீயரிங் அப்ரைசல் கமிட்டி. இதில் இந்தியாவில் இருக்கக்கூடிய பயோடெக்னாலஜி ஆராய்ச்சித் துறையில் வல்லுநர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், ICAR (Indian Council of Agriculture Research), ICMR (Indian Council of Medical Research), Food Safety Authority of India, கால்நடை ஆராய்ச்சி பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், இவர்களைக் கொண்ட மூன்று நிலை பரிசோதனைகளை, ஆய்வுகளை தாண்டிய பின்புதான் Constrained Field Trail (CFT) அதாவது கட்டுப்பாடு கொண்ட விவசாய களஆய்வு என்ற நிலைக்கு மரபணு மாற்றுப் பயிர்களின் ஆராய்ச்சி வரும்.

இந்த மூன்று நிலைகளில் ஏதாவது ஒரு நிலையில், மரபணு மாற்றுப் பயிரில் ஏதேனும் நச்சுத் தன்மையோ, ஒவ்வாமையோ இருக்கிறது என்று தெரியவந்தால் கொடுத்த அனுமதியை திரும்பப் பெற்று மரபணு மாற்றுப் பயிர் ஆராய்ச்சிக்குத் தடை விதிக்கப்படும். இந்த 3 நிலை ஆராய்ச்சிக்கான தெளிவான வரையறைகள், சட்டதிட்டங்கள், மத்திய அரசின் டிபார்ட்மெண்ட் ஆஃப் டெக்னாலஜியில் மிக தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன.

Constrained Field Trail (CFT), அதாவது கட்டுப்பாடு கொண்ட விவசாய களஆய்வுக்கு மரபணு மாற்றுப் பயிரை ஈடுபடுத்தும்போது, Monitoring and Evaluvation கமிட்டியை GEAC உருவாக்கி, அவர்கள் கட்டுப்படுத்தப்பட்ட விவசாய களஆய்வு எங்கு நடக்கிறதோ அங்கு மூன்று முறை சென்று தொடர் ஆய்வு செய்து, இந்த களஆய்வு அனைத்து வரைமுறைகளையும், சட்டதிட்டங்களையும் கடைப்பிடித்து நடக்கிறதா, இல்லையா என்பதை ஆய்வு செய்யும். மரபணு மாற்று ஆய்வின் மூலம் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்று உரிமை கோருகிறார்களோ, அந்த நன்மைகள் இந்த பரிசோதனையில் கிடைக்கிறதா என்பதை இந்த மேற்பார்வை மற்றும் சோதனை கமிட்டி பரிசோதித்து அதன் முடிவை GEAC-க்கு அனுப்புவார்கள். குறிப்பாக பூச்சிகளை எதிர்த்து தாங்கி வளரும் திறன் இருக்கிறது என்று சொன்னால் அது உண்மையாகவே இருக்கிறதா? இல்லையா? இதைத் தவிர, மற்ற நல்ல பூச்சிகளை இது தாக்குகிறதா? இல்லையா? என்று monitoring and evaluation கமிட்டி தெளிவாக ஆராய்ந்து அவர்களது பரிந்துரையை RCGM-க்கு அனுப்பிவிடுவார்கள்.

உலக அளவில் மரபணு மாற்ற ஆராய்ச்சியை முன்னெடுப்பதற்கு, கனடா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளில் கட்டுப்பாடுகளும், சட்டதிட்டங்களும், வரைமுறைகளும் மிகவும் கடினமானவையாக இருக்கின்றன. அமெரிக்காவில் கொஞ்சம் தாராளமாக இருக்கும். இந்தியாவில் மரபணு மாற்றுப் பயிர்களின் ஆராய்ச்சி செய்வது கடுமையான வரைமுறைகளுக்கு உட்பட்டது. இவற்றையெல்லாம் கடந்து ஜெனிடிக் இன்ஜினீயரிங் அப்ரைசல் கமிட்டி மரபணு மாற்றுப் பயிரை சுற்றுச்சூழல் ஆய்விற்கு வெளியிடலாம் என்று பரிந்துரை செய்வார்கள். இதுவரைக்கும் இந்தியாவில் மூன்று பரிந்துரைகளை ஜெனிடிக் இன்ஜினீயரிங் அப்ரைசல் கமிட்டி செய்திருக்கிறது.

மான்சாண்டோ கம்பெனி உருவாக்கிய பி.டி. காட்டன் மரபணுவை இந்தியாவின் மூன்று நிலைகளில், நமது விஞ்ஞானிகள் கடுமையான சோதனை செய்து அது சுற்றுச்சூழலுக்கும் நச்சுத்தன்மையும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை ஆராய்ச்சி முடிவுகள் மூலம் உறுதி செய்திருக்கிறார்கள். பி.டி. காட்டன்போல் கார்டு-1, கார்டு-2 ஆகிய மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதித்திருக்கிறது. மத்திய இந்தியாவிற்கு, வட இந்தியாவிற்கு, தென் இந்தியாவிற்கு, மேற்கு இந்தியாவிற்கு எந்தெந்த பி.டி. காட்டன் மரபணு ரகங்களை அனுமதிக்கலாம் என்பதை முடிவு செய்துவிட்டு, அனுமதிக்கப்பட்ட பி.டி. காட்டன் மரபணுவின் மூலம் கலப்பினத் தாவரங்களை உருவாக்கி அதில் எந்த எந்த ரகங்களில், அதிகமான விளைச்சல் கிடைக்கிறதோ அதை ஹைபிரிட் முறையில் பெருக்குகிறார்கள். இதன்மூலம் பி.டி. காட்டன் மரபணு மூலம் கிட்டத்தட்ட 900 பருத்தி வகைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் 90 சதவீதத்திற்கு மேல் பருத்தி உற்பத்தி பி.டி. காட்டன் மரபணுவின் மூலம் நடைபெறுகிறது. விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருப்பதால் 90 சதவீதத்திற்கும் அதிகமான விவசாயிகள் இதை இந்தியாவில் பயிரிட்டு வருகிறார்கள். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞானிகள் என்று சொல்லும் சில பேர் பி.டி. காட்டன் மூலமாக உருவாகும் பருத்தியில் பருத்திப் பால் சாப்பிட்டால் கேன்சர் வரும்; மலட்டுத் தன்மை வரும் என்ற பொய்யுரையைத் தொடர்ந்து பரப்பிக்கொண்டு வருகிறார்கள். விஞ்ஞானிகள் என்று சொல்லும் சில பேர் ஒன்றைப் புரிந்துகொண்டார்களா? இல்லையா? என்பது தெரியாது. அனிமல் டெஸ்ட் என்று சொல்லும் ஓர் ஆராய்ச்சியின் விளைவாக இந்த மரபணுவை மிருகங்களுக்குச் செலுத்தி அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கின்றன, நல்லவையாக இருக்கின்றனவா? தீயவையாக இருக்கின்றனவா என்பதை ஆராய்ந்து அறிவது, ஒரு மருந்து கண்டுபிடிக்கக்கூடிய நிலையிலும் சரி, ஓர் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியிலும் சரி அதை மனிதர்களுக்குக் கொண்டுவருவதற்கு முன்பாக மிருகங்களுக்குச் செலுத்தி அதன் விளைவுகளைப் பற்றி ஆராய்வது என்பது வழக்கமான நடைமுறை.

உங்கள் கனவுகளை, லட்சியங்களைப் பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள் - vponraj@gmail.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com