அத்தியாயம் - 32

இந்தியா முழுமைக்கும் 2016-ல் 5-ம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்கள் 50 சதவிகிதம் பேர்தான் எழுத்து கூட்டிப் படிக்கமுடியும், 25 சதவிகிதம் மாணவர்கள்தான்  கூட்டல், கழித்தல் கணக்குகளைப் போட முடியும்
அத்தியாயம் - 32

பொதுத் தேர்வும்.. நுழைவுத் தேர்வும்.. சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்!

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து. (குறள் 398)

ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல், அவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது. கல்வி என்பது ஒரு மனிதனை அந்த அளவிற்கு உயர்த்தும் என்றார் திருவள்ளுவர். இன்றைய கல்வி முறை அப்படி இருக்கிறதா?

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்ப தறிவு. (குறள் 422)

மனம் போகும் வழியெல்லாம் போகவிடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும். அப்படிப்பட்ட அறிவுடைமையை நமது கல்வி கொடுக்கிறதா?

இன்றைய சமுதாயம்தான் கல்வியின் கண்ணாடி. சமுதாயத்தில் நடைபெறும் சம்பவங்கள் நாம் கற்ற கல்வியின் பிரதிபலிப்பாக இருக்கின்றன. பெற்றோரும், ஆசிரியரும்தான் ஒரு நல்ல மனிதன் உருவாகக் காரணமாக அமைகிறார்கள். ஒருவேளை பெற்றோர்களால் அத்தகைய கல்வியை பல்வேறு சமூகச் சூழலின் காரணமாகக் கொடுக்க இயலவில்லை என்றால், பள்ளிதான் ஏழு பிறப்பிற்கல்ல; இந்த பிறப்பிற்காவது நல்வழியில் தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள மாணவர்களுக்கு உதவ வேண்டும்.

வருடம்தோறும் சென்னையில் கல்லூரி மாணவர்கள் ‘பஸ் டே’ கொண்டாடுகிறோம். ‘ரயில் டே’ கொண்டாடுகிறோம். அதற்கு ‘ஒரு ரூட் தலை’ என்று பிரிந்து, கையில் கத்தியும், அரிவாளும் கொண்டு சக மாணவர்களைத் தாக்குவதும், பொதுமக்களை மிரட்டுவதும், சாதிரீதியாகப் பிரிந்து மாணவர்களுக்குள் அடித்துக்கொள்வதும் தொடர்ந்து வழக்கமாக நடக்கிறது. இது கல்லூரி மட்டத்தில். பள்ளியில் என்ன நடக்கிறது? எட்டாம் வகுப்பு வரை தேர்வுக்கு அர்த்தம் இல்லாத தேர்ச்சி கட்டாயம் என்ற கல்விக்கொள்கையால், ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கும் மிகப்பெரிய இடைவெளி.

எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்கள் மாணவர்களைக் கேள்விகூட கேட்கமுடியாத நிலைமையை என்றைக்கு அரசு ஏற்படுத்தியதோ, அன்றைக்கே சீரழிவு ஆரம்பித்துவிட்டது. ஆசிரியர்களை மாணவர்கள் மிரட்டும் நிலையையும், தாக்கும் நிலையையும், கத்தியால் குத்தும் நிலையையும், பள்ளியிலேயே போதைப் பொருட்களை விற்கும் நிலையையும், மாணவ, மாணவிகள் பள்ளியில் சாராயம் குடித்து கும்மாளமிடும் நிலையையும் இன்றைக்கு சர்வ சாதரணமாக நாம் பார்க்கிறோம்.

பள்ளியில் சாதிக்கொரு கயிறு கட்டி வித்தியாசங்களை வெளிப்படுத்தி சண்டை சச்சரவுகளை தோற்றுவிக்கும் நிலையும் இங்கு காணப்படுகிறது, இந்த நிலை 30 வருடங்களுக்கு முன்பு இருந்ததில்லை. இதைக் கண்டிக்கக்கூட வழியில்லாமல் அரசு உத்தரவு போடும் நிலைக்கு ஆளாகியிருக்கிறது. இவையெல்லாம் நம் கண்முன்னே காட்சியாக வருவது இந்த சமுதாயத்திற்கும் நேர்ந்த அவலம் ஆக கருதி நாம் வெட்கித் தலைகுனியக்கூடிய நிலை காணப்படுகிறது.

இதற்கு அடிப்படை, ஆசிரியர்களை மாணவர்கள் மதிப்பதில்லை; பெற்றோர்கள் ஆசிரியர்களை தங்கள் கடமையைச் செய்ய விடுவதில்லை. பெற்றோர்களும், மாணவர்களும் ஆசிரியர்களை குருவாக மதித்த நிலை போய்விட்டது. ஏன் என் பிள்ளையைக் கண்டித்தாய் என்று ஆசிரியர்களைக் கேள்விகேட்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆசிரியர்களை அடிமைகளாக்கிவிட்டு, அவர்களால் உருவாக்கப்படும் சமுதாயம் மட்டும் எழுந்து நிற்கும் என்று நம்புவது எப்படி அறிவுடமையாகும்? அரசுத் தேர்வின் தேர்ச்சி சதவீதத்தை அதிகமாக்கிக் காண்பிக்க வேண்டும்; நாங்கள் கல்விப்பணியில் மேன்மையானவர்கள் என்று சட்டசபையில் கணக்கு காண்பிக்கும் விதத்தில் ஆசிரியர்களை மிரட்டி 53 வகையான ஆவணங்களைத் தயார் செய்ய கல்வித் துறை நிர்பந்தம் கொடுத்தால், ஆசிரியர்கள் தங்கள் பணியான பாடங்களை எப்படி நடத்த முடியும்? இதில் மேலும் 25 ஆவணங்களை மாணவர்கள் திறனுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தினமும் பதிவு செய்ய வேண்டும். ஆசிரியர்கள் இதைச் செய்வார்களா? மாணவர்களுக்குப் பாடம் நடத்துவார்களா? இன்றைய சூழலில் மின்னணு ஆளுமையில் செய்ய வேண்டிய வேலையை, ஆசிரியர்களிடம் செய்யச் சொல்வது எப்படி சரியாகும்? கற்பித்தல் பணியைவிட ஆவணங்களை தயாரித்து ஒப்படைக்கவே அதிகாரிகள் கெடுபிடி காட்டும் சூழல் நிலவுகிறது. அவர்களுக்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி அதிகரிப்பு என்ற புள்ளிவிவரம் இருந்தால் போதும். இத்தகைய பணிச்சுமையால் ஆசிரியர்கள் கடும் மனஉளைச்சலில் தவிக்கின்றனர்.

இப்படிப்பட்ட சீரழிவில்தான் பள்ளிக்கல்வி இருக்கிறது என்பதற்கு உதாரணம் எட்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் படிப்பதற்கும், எழுதுவதற்கும், சின்ன கணக்குகளைப் போடுவதற்கும்கூட திறன் இல்லாதவர்களாக இருப்பதே.

Annual Status of Education Report 2018 (ASER) ரிப்போர்ட்டின்படி, உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் 60 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே பள்ளிக்கு வருகிறார்கள். 15 முதல் 16 வயதில், மாணவியர்கள் இடைநிற்றல் 2008-ல் 20 சதவீதத்தில் இருந்து 2018-ல் 13.5 சதவீதமாக குறைந்திருக்கிறது. 2008-ல் மாணவர்களது இடைநிற்றல் 17.3 சதவீதத்திலிருந்து 12.6 சதவீதமாக குறைந்திருக்கிறது. 6 முதல் 14 வயது வரையிலான மாணவ, மாணவிகள் தனியார் பள்ளியில் சேரும் சதவீதம் 2006-ல் 18.7 சதவீதமாக இருந்தது, அது 2018-ல் அதிகரித்து 30.9 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. ASER 2018 சர்வேயின்படி, மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 25 சதவீதம்தான் மூன்றாம் வகுப்பிற்குரிய கல்வியைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்கள். அப்படி என்றால் அடிப்படை கணக்கிலும், கற்றலிலும் 75 சதவீத மாணவர்களுக்கு இன்னும் தீவிரப் பயிற்சி தேவைப்படுகிறது. இந்தியா முழுமைக்கும் 20 சதவீதம் பேர்தான் மூன்றாம் வகுப்பில் சிறு கணக்கைக்கூட செய்ய முடிகிறது. உத்தரப் பிரதேசத்தில் மூன்றாம் வகுப்பில் 60 சதவீத மாணவர்கள் வார்த்தைகளை எழுத்து கூட்டிக்கூட படிக்கமுடியாத நிலையில் இருக்கிறார்கள்.

இந்தியா முழுமைக்கும் 2016-ல் 5-ம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்கள் 50 சதவிகிதம் பேர்தான் எழுத்து கூட்டிப் படிக்கமுடியும், 25 சதவிகிதம் மாணவர்கள்தான் சின்னச்சின்ன கூட்டல், கழித்தல் கணக்குகளைப் போட முடியும் என்ற நிலைமை காணப்படுகிறது. 2018-ல் வகுத்தல் கணக்கை செய்யக்கூடிய 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் மாணவர்களது சதவிகிதம் முறையே 34.7, 39, 44.1 சதவீதமாகத்தான் இருக்கிறது.

அதாவது அடிப்படை கணக்கில் எட்டாம் வகுப்பில் கிட்டதட்ட 50 சதவீதத்திற்கும் மேல் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்று தெரியவருகிறது. இப்படிப்பட்ட அடிப்படை திறன்கள் கணக்கிலும், படிப்பிலும் ஆரம்ப மற்றும் நடுநிலை கல்வியிலும் குறைவாக இருந்தால், மேல்நிலைக் கல்வியில் அவர்களால் சமாளிக்க இயலாது. அவர்களுக்குத் தேவையான கூடுதல் கற்றல் மற்றும் புரிந்து படிக்கக்கூடிய, வாய்ப்புகளையும் நாம் வழங்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அடிப்படை கணித வகுத்தலை 14 வயது முதல் 16 வயதுள்ள 50.1 சதவீத மாணவர்களும் 44.1 சதவீத மாணவிகளும்தான் சரியாகச் செய்ய முடிகிறது.

பொதுவாக, 50% மாணவர்களால் வாசித்து படிக்கவே முடியாத நிலையில் இருக்கும்போது பேனாவையும் பேப்பரையும் வைத்து நடத்தப்படக்கூடிய தேர்வுகளுக்கு இங்கு மதிப்பில்லை எனும்போது, அடிப்படைக் கல்வியை மேம்படுத்தாமல் தரமற்ற கல்வியைத்தான் மாநில அரசுகள் கொடுக்கின்றன என்று காரணம் சொல்லி மத்திய அரசு உயர்கல்விக்கு நுழைவுத் தேர்வைப் புகுத்துகிறது.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல். (குறள் 948)

நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும்படியாகச் செய்ய வேண்டும். நோயைத் தீர்க்கும் வழிமுறையைப்போல், இன்றைய பள்ளிக்கல்வி முறையின் அடிப்படை பிரச்னைகளைக் களைவதற்கு தேசிய கல்விக்கொள்கை 2019-ல் 5+3+3+4 என்று பள்ளிக்கல்வி முறையை மாற்றியமைத்துவிட்டு, 3,5,7-ல் கணக்கீட்டு தேர்வையும், 9-12-ம் வகுப்பில் செமஸ்டர் தேர்வையும் வைத்துவிட்டு, பள்ளிப்படிப்பு தேர்வு முடிந்த பின் உயர்கல்விக்கு நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்று சொல்கிறது. இது நோயைக் குணப்படுத்த மருத்துவம் செய்துவிட்டு, இந்த முறையில் மருத்துவம் செய்தால் நோய் குணமாகும் என்பதை உறுதிப்படுத்திவிட்டு, நோய் குணமானபின் மீண்டும் MRI TEST எடுத்தால்தான் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்புவேன் என்று சொல்வதைப்போல் நகைப்பிற்கு இடமாக இருக்கிறது. அதாவது, அரசு எந்தத் தேர்வையும் முறையாக, சரியாக செய்யாது; ஆனால் மாணவர்கள் தொடர்ந்து தேர்வு எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதைப்போல இருக்கிறது.

இன்றைய மாணவர்களது கற்றல் திறன் அடிப்படையில் பார்த்தோம் என்றால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த மாணவர்களது ஒட்டுமொத்த கற்றல் திறனை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து, அவர்களது தனித்திறன் மேம்பாட்டை அவர்களது Intellectual Quotient (IQ), Emotional Quotient (EQ), Cognitive Abilities (CA) இந்த மூன்றையும் மேம்பாடு செய்யக்கூடிய கொள்கைக் திட்டமாக இந்த பள்ளிக்கல்வி (5+3+3+4) அமைய வேண்டும். இந்த நிலையில் கணக்கீட்டு தேர்வுகள் 3,5,8-ல் அவர்களது தனித்திறன்களை கணக்கீடு செய்ய வேண்டுமே ஒழிய, அந்த கணக்கீட்டின் அடிப்படையில் அவர்களை தோல்வி அடையச் செய்யக் கூடாது.

தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களது தனித்திறன் சதவீதத்தை மதிப்பீடு செய்து தனித்திறனை 70 சதவீதத்திற்கு மேலாக உயர்த்தும் வகையில் தொடர்ந்து கண்காணித்து, தனித்திறன் பயிற்சி கொடுத்து, எந்த இடத்திலும் அவர்கள் இடைநிற்றலுக்கு அது காரணமாகிவிடாமல், கல்விமுறையை மாற்றி அமைத்து அவர்களைத் தோல்வியடையச் செய்யாமல், தொடர்ந்து அவர்களது தனித்திறனை மதிப்பீடு செய்து, எட்டாம் வகுப்பில் ஒவ்வொருவரும் தனித்திறனில் எவ்வாறு மேம்பட்டிருக்கிறார்கள் என்பதை பள்ளி அளவில் மதிப்பீடு செய்யக்கூடிய முறையில்தான் இந்த கணக்கீடு தேர்வுகள் அமைய வேண்டுமே தவிர, மாணவர்களைத் தோல்வி அடையச்செய்து அவர்களை அந்தந்த வகுப்பிலேயே தங்கச் செய்யக்கூடிய நிலையில் இருக்கக் கூடாது. இதை எப்படிச் செய்வது?

இந்த கணக்கீட்டின்படி அவர்களது மேல்நிலை கல்விக்கான தேர்வு கலை, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், வர்த்தகம் போன்ற பல்வேறு பிரிவுகளை எடுத்துப் படிக்கக்கூடிய அளவில் 9, 10, 11, 12-ம் வகுப்பில் பாடத்திட்டங்கள் அமையப்பெற வேண்டும். இந்த தேசிய கல்விக்கொள்கையின்படி 40 பாடங்களை நான்கு வருடத்தில் அவர்கள் படிப்பதற்கு ஏற்ற வகையில் 24 பாடங்களில் செமஸ்டர் தேர்வு மற்ற பாடங்களில் விருப்பப் பாடங்கள் பள்ளியில் நடத்தப்படக்கூடிய தேர்வும் பொருந்தும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வகையில், இந்த பள்ளிக்கல்வியை முடிக்கும்பொழுது உயர்கல்விக்கு பல்வேறு நிலைகளில் மாணவர்களின் தனித்திறனைப் பொறுத்து உயர்கல்வியைத் தேர்ந்தெடுத்து செல்லக்கூடிய அளவிலே அந்த செமஸ்டர் தேர்வு முறைகள் அமைக்கப்பட வேண்டும்.

அரசு நடத்தும் பொதுத்தேர்வில் அரசுக்கு நம்பிக்கை இருந்தால் ஒன்று அரசு நடத்தும் பள்ளிக்கல்விக்கான பொதுத்தேர்வை உயர்கல்விக்கு தகுதி என்று கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லை என்று சொன்னால் பள்ளிக்கல்விக்கான தேர்வு பள்ளி அளவிலேயே நடத்தப்பட்டு உயர்கல்விக்கு நுழைவுத்தேர்வு மட்டும் என்று முடிவெடுக்க வேண்டும். பள்ளிக் கல்வியிலும் அரசு நடத்தும் பொதுத்தேர்வு மற்றும் உயர்கல்விக்குப் போக அரசு நடத்தும் நுழைவுத் தேர்வு என்று சொன்னால் 2 தேர்வு முறையிலும் அரசுக்கு நம்பிக்கையில்லை என்றுதான் முடிவாகும்.

மத்திய அரசு நடத்தும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு நுழைவுத்தேர்வு வைப்பது என்பது முற்றிலும் சரி என்று சொன்னால், பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு மாணவர்கள் பல்வேறு சூழலில் இருந்து கல்வித்தரம், கற்றல் முறை வேறுபாடு இருப்பதின் காரணமாக மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நுழைவுத் தேர்வு என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால் அந்தந்த மாநில அரசுகள் நடத்தும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் நுழைவுத்தேர்வு வேண்டுமா? நேர்முகத்தேர்வு வேண்டுமா? அல்லது நுழைவுத்தேர்வும், பள்ளிக்கல்வியில் எடுக்கக்கூடிய தேர்வும், இரண்டும் கலந்து ஒரு மதிப்பீட்டை செய்ய வேண்டுமா? என்பதை முடிவு செய்யக்கூடிய அதிகாரம் மாநில அரசுக்கும் இருக்க வேண்டும். அதுதான் மாநில சுயாட்சியின் தத்துவம். அதை மத்திய அரசு மீறக் கூடாது என்பதை ஒவ்வொரு மாநில அரசுகளும் உறுதிசெய்ய போராட வேண்டும்.

இந்த தேசிய கல்விக் கொள்கையில் மூன்றாம் வகுப்பில் இருந்து மாணவர்கள் சில தொழில்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ‘இது தேவை இல்லாத ஒன்று; இது குலக்கல்விக்கு வழி வகுக்கும்’ என்ற வாதத்தில் வலு இருக்கிறது. எனவே இது வேண்டுமா? வேண்டாமா? தொழில் கல்வியை எப்படி மாற்றியமைக்க வேண்டும்? ஏன் மாற்றியமைக்க வேண்டும்? என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

உங்கள் கனவுகளை, லட்சியங்களை பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள்: vponraj@gmail.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com