அத்தியாயம் - 6

ஒரு கனவு உன்னை உறங்கவிடாமல் செய்யும், அதுதான் உனக்கு இலட்சியத்தை கொடுக்கும், அதை பிடித்துக்கொள். கனவுகளின் ஊடே பயணப்படு, ஆனால் இலட்சியத்தை வென்றெடுக்க முடிவெடு.
அத்தியாயம் - 6

முடங்கினால் சிலந்தியும் உன்னைச் சிறை பிடிக்கும்!

‘நாம் தனித்துவமானவன், தனித்துவமானவள் என்று நீ உன்னை நம்பிய அடுத்த விநாடி, வரலாற்றில் உனக்காக ஒரு பக்கம் உருவாக்கப்பட்டுவிடும். ஆனால் அந்த பக்கத்தை வருங்கால சந்ததி திரும்பத் திரும்ப படிக்க வைப்பது உனது கனவை கண்டறிவதிலும், அதை இலட்சியமாக மாற்றி, தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து வெற்றி பெற்று, இலட்சிய சிகரத்தை அடைய செய்யும் உனது வல்லமையில் இருக்கிறது' என்றார் டாக்டர் அப்துல் கலாம்.

பல நண்பர்கள் மின்னஞ்சல் மூலமாக தங்களுடைய கனவுகளை, இலட்சியங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டதன் வெளிப்பாடாக இந்த தொடர் பதிலாக அமையும் என்று நம்புகிறேன்.

சில கனவுகள் வெல்லப்பட்டும், பல கனவுகள் கொல்லப்பட்டும் வாழ்வதுதான் இன்றைய நிலையாகிவிட்டது. குழந்தைகளிடம் உன் கனவு என்னவென்று கேட்டால், அதற்கான பதிலை அவர்களால் கூற இயலாது. இதே கேள்வியை இளைஞர்களிடம் கேட்டால், தன் கனவை அவர்கள் வயதுக்கேற்ற விதத்தில், தான் அறிந்துகொண்ட, தெரிந்து கொண்ட அளவில் தன் கனவு இதுவே என்று தெளிவாக சொல்வார்கள். வளர, வளர கனவுகளும் மாறும், இலட்சியங்களும் மாறும், மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் ஒரு கனவு உன்னை உறங்கவிடாமல் செய்யும், அதுதான் உனக்கு இலட்சியத்தை கொடுக்கும், அதை பிடித்துக்கொள். கனவுகளின் ஊடே பயணப்படு, ஆனால் இலட்சியத்தை வென்றெடுக்க முடிவெடு. வெற்றி என்பது இறுதிப்புள்ளி; தோல்விகள் என்பது இடைப்புள்ளிகள். வெற்றி அனைவருக்கும் வரும்; ஆனால் வெற்றியில் தொடர்ந்து பயணப்பட வேண்டுமா, தோல்வியை ஆரம்பத்திலேயே ருசித்துப் பார், அனுபவித்துப் பார்.

இந்த நூற்றாண்டில் இருவகையான பெண்களைப் பார்க்கிறோம். அவர்களது கனவுகளுக்கும், இலட்சியங்களுக்குமான இடைவெளி எவ்வித தாக்கத்தை அவர்களது வாழ்வில் மட்டுமல்ல, இந்த சமுதாயத்திலும், நாட்டிலும் ஏற்படுத்துகிறது என்பதை நம்மில் எத்துணை பேர் உணர்ந்திருக்கிறோம். ஆம். பல பெண்களின் கனவுகள், இங்கே பொசுங்கிக் கிடப்பதை எவர் அறிவார்? பாடுகள் பல பட்டு பொறுப்புணர்வுடன் வாழ்பவர்களின் விழிகளுக்குப் பின், வழிந்திடும் கண்ணீரை எவர் அறிவார்? பெற்றோர்களுக்காக, உடன் பிறப்புக்களுக்காக, கணவனுக்காக, பிள்ளைகளுக்காக கனவுகளைக் கரைத்திடும் கண்ணிய உணர்வினை இங்கே எவர் அறிவார்? தனக்கான ஆசைகளை அடகு வைத்து தன் குடும்ப ஆசைகளை நிறைவேற்றும் அர்ப்பணிப்பின் தியாகத்தை இங்கே எவர் அறிவார்? ஓய்வின்றி ஓயாமல் உழைத்திடும் பெண்களின் மட்டற்ற மாளிகையாம் அடுப்பங்கரையில் எரிவது அடுப்பு மட்டுமல்ல; அவளின் கனவுகளும்தான் என்பதை எவர் அறிவார்? தன் அருகில் இருக்கும் தியாக உருவான பெண்கள் ஒவ்வொருவரிடமும் இந்த வாழ்வு வாழ நீ எதைத் தொலைத்தாய்? என்று கேள்வி எழுப்பினால், பல பெண்களின் பதில் இதுதான்: ‘நான் என்னைத் தொலைத்தேன்; என் கனவினைத் தொலைத்தேன்' என்பதாகத்தான் இருக்கும்.

ஆம். வேலைக்கு போகும் பெண்களால், எல்லாப் பொருளாதாரத் தேவைகளும் பூரணமாய் சந்திக்கப்படும். வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்யும் பெண்களின் தியாகம், வேலைப்பளு மற்றும் தலைமைப்பண்பை உணர்பவர்கள் அரிது. பெண்களை மட்டுமே பெற்ற எத்தனை பெற்றோர்களின் மகள்கள், கணவன், குழந்தைகள், அவர்தம் குடும்பத்தாரை தனது அனைத்து வேலைகளுக்கும் மத்தியில், உடம்பிற்கு சரியில்லாத நிலையிலும் கவனித்தபோதிலும், தனது பெற்றோர்களைக் கவனிக்க இயலவில்லையே என்ற சோகத்தை உணர்ந்து அறியும் கணவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். அந்த பெண்களின் மனநிலையை எவர் அறிவார்? இவர்களின் கனவிற்கும், வெற்றிக்குமான தூரம் எவ்வளவு என்று அவர்களால் கண்டறிய முடியுமா?

அதே நேரத்தில், இப்போது படிப்பின் மூலமும், வேலைவாய்ப்பின் மூலமும் நிதி சுதந்திரத்தின் மூலமும் பல பெண்கள் சின்ன, சின்ன காரணங்களுக்காகவும், தனது எண்ணங்களுக்கு ஒத்துவரவில்லை என்றாலும், இன்றைக்கு கணவனைப் பிடிக்கவில்லை; மாமனார், மாமியாரைப் பிடிக்கவில்லை; குடும்ப கட்டமைப்பைப் பிடிக்கவில்லை என்று ஒரு சில அற்ப காரியங்களுக்கு அடிமைப்பட்டு, சில அடிப்படை புரிதல்களின்றி சிந்திக்க மறுத்து, சிறிய மனத்தாங்கல்களுக்கு கூட, விவாகரத்து, வேறு வாழ்க்கை என்று தேர்ந்தெடுத்துச் செல்லும் நிலை அதிகரித்து காணப்படுகிறது.

அதே நேரத்தில் இன்றைய நிச்சயமற்ற பொருளாதார சூழ்நிலை, அடுத்து அமையும் வாழ்க்கையின் எதிர்பார்ப்பு, ஏமாற்றமாகும்போது அந்த தோல்வியைத் தாங்கிகொள்ள முடியாமல் தற்கொலை முடிவெடுக்கும் பெண்கள் மற்றும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதற்கு காரணம், வாழ்க்கைக்கான கல்வியை அவர்கள் கற்றுக்கொள்ளவில்லை என்பதையும், தோல்வியைத் தாங்கி கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தை அவர்களது இளம் பருவத்தில் வீட்டிலும், பள்ளியிலும் கற்றுக்கொள்ள வாய்ப்பில்லாமல் போகும் சூழ்நிலையும் காரணமாக அமைகிறது. இதையும் தாண்டி நிற்கும் பெண்கள் தனித்து வாழும் சூழ்நிலை நிலவுகிறது, அவர்களுக்கு வாழ்க்கையின் பிடிப்பையும், விட்டுக்கொடுத்தலின் வலிமையையும், அந்த தனிமைதான் உணர்த்துகிறது. எல்லாவற்றையும் இழந்தபின் குடும்பத்தின் மகத்துவம் தெரிந்தும் தன்னை பக்குவப்படுத்தி மாற்றிகொள்ளத் தெரியாத ஈகோ அவர்களது வாழ்க்கையைத் தொலைக்கிறது. இதுவும் இந்த 21-ஆம் நூற்றாண்டில் நடக்கிறது.

ஆனால், 18-ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் ஒரு பெண் எப்படி வளர்க்கப்பட்டாள் என்பதைப் படித்தால் நமக்கு ஒன்று புரியும். சகல கலையும், பல மொழிகளையும் தன் பெற்றோர் வீட்டில் கற்று அறிந்து, புகுந்த வீட்டில் கணவனுக்கு அன்பான மனைவியாக நடந்து, குழந்தைகளை நல்லபடியாக வளர்ந்து அடுத்த தலைமுறையை நம்பிக்கையோடு உருவாக்கும் தலைமைப் பண்போடு குடும்பத்தை உருவாக்கிக்கொண்டு அமைதியாக வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கும்போது, அந்த பெண்ணின் வாழ்வில் சூறாவளி அடிக்கிறது. திடீரென்று, எதிர்பாராமல் நடந்த போரில் கணவனை இழக்கிறாள். தான் கற்றறிந்த கலைகளை உபயோகித்து, தனது பன்மொழித் திறத்தால் அண்டை நாட்டு மன்னனிடம் சமயோசிதமாக படை உதவியை பெற்று, தனது சாணக்கியத்தனத்தால், தனது உடன் இருந்த அமைச்சர்கள், ஆண் தளபதிகள், தியாகம் செய்யத் தயாராக இருந்த பெண்களைக் கொண்ட படையை உருவாக்குகிறாள். போர் தொடுத்து, எதிரிகளை ஒழித்து, சூரியன் உதிக்காத சாம்ராஜ்ஜியத்தையே ஓட ஓட விரட்டி வெற்றிபெறுகிறாள். அவ்வாறு சரித்திர சாதனை படைத்தது நம் தமிழ்ப் பெண் வீரமங்கை வேலு நாச்சியார்.

இவர்தான் 18-ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி வேலு நாச்சியார். பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி இவரே. கணவன் சிவகங்கைச் சீமை மன்னர் முத்துவடுகநாதத் தேவரை கொன்ற பிரிட்டானிய கம்பெனியாரை, இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதல் முறையாக 1780-இல் வென்று ஆட்சியை மீட்டெடுத்து, நல்லாட்சி கொடுத்த முதல் இந்திய சுதந்திரப் போராட்ட பெண்மணி தான் வீரமங்கை வேலு நாச்சியார்.

1730-ஆம் ஆண்டில் பிறந்த வேலுநாச்சியார் என்ற அந்தப் பெண்ணிற்கு போர்க் கலைகளையும், பன்மொழிக் கலைகளையும், தனித்திறன்களையும், அவரது பெற்றோர் இராமநாதபுரம் மன்னர் செம்மநாட்டு மறவர் செல்ல முத்து விஜயரகுநாத சேதுபதி, சக்கந்தி முத்தாத்தாள் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு பின் வந்த சமுதாயம் பெண்ணடிமைத்தனத்தை எப்படி உருவாக்கியது, மிகப்பெரிய கேள்விக்குறி? சாணக்கியத்தனத்தை அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையிடம் பெற்றார். அவரது முயற்சியினால் கம்பெனி எதிர்ப்புப் படையை உருவாக்கினார், எப்போது? எதிரியிடம் மறைவாக வாழ்ந்தபோது. ஹைதர் அலியிடம் தனது பன்மொழிப் பேச்சாற்றலால் 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப் படை ஒன்றையும் பெற்றார். எப்போது? பெண்தானே என்று ஏளனமாக நினைத்த மன்னனிடம், தன்னிடம் தன்னம்பிக்கையை தவிர ஒன்றும் இல்லாதபோது பெற்றிருக்கிறார். இவருக்கு உதவியாக இருந்து வெற்றியைக் காணிக்கையாக்கிய வீர தளபதிகள் மருது சகோதரர்கள் சின்ன மருது, பெரிய மருதை பெற்றார். எப்போது? மன்னன் மரணமடைந்த பின்பும், வீரத்தையும் விசுவாசத்தையும் ஒரு சேர தன்னிடம் கொண்டு வாழ்ந்த சமுதாயத்தில். தலையே போனாலும் காட்டிக்கொடுக்காத மாவீரம் பெற்ற பெண்மணியான வெட்டுடையாளைப் பெற்றார். எப்போது? மன்னர் தன்னை காக்க வரமாட்டார் என்ற நிலையிலும். இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்ன மருது, பெரிய மருது மற்றும் குயிலி தலைமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மனையில் வெள்ளையரின் ஆயுதக்கிடங்கு இருந்ததால் அப்பகுதிக்குள் யாரும் செல்ல அனுமதி இல்லை. சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவிற்காக விஜயதசமி அன்று கொலு தரிசனத்திற்கு பெண்களுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. இதைப் பயன்படுத்தி தனது வீரச்செயலால் வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளரான குயிலி தன் உடம்பில் எரி நெய்யை ஊற்றி தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக்கிடங்கில் குதித்து தற்கொலை தாக்குதல் நடத்தி ஆயுதங்களை அழித்தாள். இந்தியாவின் முதல் தற்கொலைப்படை போராளி குயிலிதான். குயிலியை எப்படி பெற்றார் வேலு நாச்சியார்? சமூக அநீதியின் கொடும் கரங்கள், தியாக வேள்வியில் உருவாக்கம் பெற்ற விசுவாசத்தின் வீரத்திருமகள் குயிலின் மேல் படாமல் காத்து நின்ற பண்புநலன்களை சிறுவயதில் வேலுநாச்சியார் பெற்றதால், வெற்றியைத் தனதாக்கி தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார் வேலு நாச்சியார்.

வீரம், விவேகம், பன்கலை, பன்மொழித் திறமை, தியாகம், விசுவாசம் அனைத்தையும் ஒருங்கே பெற்ற பெண்களையும், ஆண்களையும், சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி தோல்விக்கு தோல்வி கொடுத்து வெற்றியை தனதாக்கிய வீர பெண்களையும், வீர ஆண்களையும் 18-ஆம் நூற்றாண்டிலேய நமக்கு தெரிந்த சுதந்திரப் போராட்ட வரலாற்றால் பெற்ற நாடுதான் நம் தமிழ்நாடு. 18-ஆம் நூற்றாண்டிற்கும் 21-ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் இரண்டுவிதமான குணங்களைக் கொண்ட ஆண்களையும், பெண்களையும் நாம் பார்க்கிறோம். இவர்களை வேறுபடுத்தி அடையாளம் காட்டுவது எது?

இதில் தன்னை உணர்ந்தவர்கள். தனது தனித்திறனை கண்டு அறிந்து, கர்வமில்லாமல், பண்போடு இருப்பவர்கள், எத்தகைய சோதனைகளையும் வாழ்வில் தாங்கி, தனது முயற்சியில் தோல்வி கண்டாலும், முயற்சி செய்வதில் தோல்வியடையாமல் இருப்பவர்கள் சாதனை படைக்கிறார்கள்.

கல்வியால், வேலையால், பண சுதந்திரத்தால் கர்வமும், ஆணவமும், அலட்சியமும், அகங்காரமும் கண்ணை மறைக்க இடம் கொடுத்தவர்கள், வாழ்வில் நீர்த்துப்போயிருக்கிறார்கள். தன்னை இழந்தவர்கள், தனது தனித்தன்மையை இழந்து அற்பமான காரியங்களுக்கு அடிமையாகி அழிந்துபோயிருக்கிறார்கள்.

கனவினை தளமாக்கி, இலக்கை ஏணியாக்கி, வெற்றியின் உச்சத்தை - எட்டும்போது உலகம் உனக்கென்று ஒரு வரலாற்று பக்கத்தை எழுதத் தயாராகிடும்.

இளைஞனே, இளம்பெண்ணே, எழு! முடங்கினால் சிலந்தியும் உன்னை சிறை பிடிக்கும். எழுந்து நடந்தால் எரிமலையும் வழிவிடும்.

உன்னை நீ அறிந்துகொள்! வாழ்க்கை பாடத்தைக் கற்று உணர்!

உன் இலட்சியம், உன்னை அற்பத்திற்கு அடிமையாக்காமல் காக்கட்டும் இமைப்பொழுதும் தாமதமின்றி!

தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து, எழும்பி ஜொலித்திடு!

இந்த உலகமே உனக்காக!

உங்கள் கனவுகளை, இலட்சியங்களைப் பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள்: vponraj@gmail.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com