அத்தியாயம் - 17

20 ஆண்டுகளுக்கு முன்பு அறிவார்ந்த தேசத்தைக் கட்டமைக்க ஆரம்பித்த சீனா, இன்றைக்கு அதன் இலக்கை எட்டி உலக நாடுகளோடு போட்டி போட்டு...
அத்தியாயம் - 17

தொலைநோக்குப் பார்வை.. நாட்டை உயர்த்தும்!

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண் (குறள் 421)

அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும். அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும். எந்த நாடு அறிவால் கட்டமைக்கப்படுகிறதோ, அந்த நாடு அந்த நாட்டு மக்களை எத்தகைய சோதனைகளிலும் இருந்து அரண் போல் காக்கும்.

20 ஆண்டுகளுக்கு முன்பு 2000-ம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த இந்தியாவாக (2020-க்குள்) அறிவில் சிறந்த வல்லரசு இந்தியாவாக அடுத்த 20 ஆண்டுகளுக்குள் கட்டமைக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வைத் திட்டத்தை உருவாக்கி அதன் விதையை விதைத்தவர் டாக்டர் அப்துல் கலாம். அவரோடு இந்தப் பணியில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, இறைவன் கொடுத்த வரம்.

அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவுடன் சீனா வர்த்தகப் போரை ஆரம்பித்திருந்தது. அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே, சீனா ஒரு கொள்கையை முன்னெடுத்தது. அதாவது, உலக நாடுகளின் அறிவுசார் தொழில்நுட்பங்களின் மூலம் உருவாக்கப்பட்ட இயந்திரங்களை சீனாவிற்கு இறக்குமதி செய்வது, அதன்மூலம் மிகப்பெரிய தொழிற்சாலைகளைக் கட்டமைப்பது, அதன்மூலம் மிகப்பெரும் அளவில் உலகிற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் ஏற்றுமதி செய்வது, அதன்மூலம் சீனாவில் அனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துவது, சீனாவின் பொருளாதாரத்தை உயர்த்துவது. இவற்றைக் கடந்த 20 ஆண்டுகளில் சீனா எவ்வித மாற்றமும் இல்லாமல், எவ்வித கவனச்சிதைவும் இல்லாமல் செயல்படுத்துவது என்று முடிவெடுத்தது. விளைவு 1.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனா இன்றைக்கு உலக ஏற்றுமதியில் முதலிடம், உலக அறிவுசார் சொத்தை உருவாக்குவதில் முதலிடம், GDP USD - 13000 பில்லியன், பொருளாதார வளர்ச்சி 6.9 சதவிகிதம். வேலைவாய்ப்பின்மை 2013-இல் 4.1 சதவிகிதமாக இருந்து 2017-இல் 3.9 சதவிகிதமாகக் குறைப்பு. பொதுக்கடன் 16% GDP. அமெரிக்காவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக ஏற்றுமதி - இறக்குமதி சமநிலை, 2013-இல் USD 259 பில்லியனில் இருந்து 2017-இல் USD 419 பில்லியனாக அதிகரிப்பு. அப்படி என்றால் அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி குறைந்துள்ளது; சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி மிகவும் அதிகரித்திருக்கிறது.

இது எப்படி நடந்தது? ஒரு நாளில் நடக்கவில்லை. 30 ஆண்டுகளுக்கு முன் சீனாவின் தொலைநோக்குப் பார்வையின் விளைவாக உருவானது. 90-களில் அமெரிக்கா - சீனா இடையேயான ஏற்றுமதியும் இறக்குமதியும் சமஅளவில் இருந்தது. என்றைக்கு சீனா உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களை வளர்ந்த நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்து, உலகத்தரம் வாய்ந்த பொருள்களை ஏற்றுமதி செய்யும் நிலையை ஏற்படுத்தி, வளர்ந்த நாடுகள் தங்களைச் சார்ந்து இருக்கச் செய்யும் நிலையை ஏற்படுத்தியதோ, அன்றைக்கு உலக நாடுகள் அனைத்தும் சீனாவில் தங்களது உற்பத்தியைத் தொடங்கின. சீனாவைச் சார்ந்து உற்பத்தி பொருளாதாரத்தை உலக நாடுகள் கட்டமைக்கும் நிலையை ஏற்படுத்தியது. அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 2008-இல் சீனா அறிவுசார் தொழில்நுட்பச் சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்து, எந்த நாடும் சீனாவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்றால், அந்த நாடு சீனாவோடு தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொண்டால்தான், தொழில்நுட்பத்தை மாற்றி சீனாவிற்கு அதன் உரிமத்தை கொடுத்தால்தான், சீனாவில் தொழில் செய்ய முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியது. சீனாவிற்கு உலகத்தின் அறிவுசார் தொழில்நுட்பத்தைப் பல நாடுகள் பங்கு போட்டு கொடுக்கவும், அடுத்த அறிவுசார் தளத்திற்கு சீனாவை தயார்படுத்தவும் அதுதான் உதவியாக இருந்தது.

இதை மட்டும் சீனா செய்யவில்லை. 2008-இல் இருந்து 2018-க்குள் சீனா தனது நாட்டில் இருந்து, தனக்கென இருக்கும் நாட்டின் அறிவுசார் சொத்துகளை உருவாக்கும் அறிவியல் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தது. தன் நாட்டின் அறிவுசார் காப்புரிமைக்குப் பாதுகாப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. இன்றைக்கு உலக அறிவுசார் சொத்து நிறுவனத்தில் உலகம் முழுவதிலும் 3.5 மில்லியன் அறிவுசார் சொத்து (Patent) விண்ணப்பத்தில் 40 சதவிகிதம் அதாவது 1.5 மில்லியன் சீனாவில் இருந்து மட்டும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா 6 லட்சம் அறிவுசார் சொத்தைத்தான் (Patent) உருவாக்கியிருக்கிறது. இந்தியாவின் மொத்த அறிவுசார் சொத்து 50 ஆயிரத்துக்கும் குறைவு. 2018-இல் சீனா 53,345, அமெரிக்கா 56,142, ஜப்பான் 49,702, ஜெர்மனி 19,883, கொரியா 17,014, இந்தியா 2013 அறிவுசார் சொத்திற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருக்கின்றன.

இன்றைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவின் மேல் வர்த்தகப் போர் தொடுத்திருக்கிறார். சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் வர்த்தக சமநிலையின் வித்தியாசம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமையை சீனா தட்டிப் பறிக்கிறது. அதை களவாடுகிறது. அதனால் அமெரிக்காவின் அறிவுசார் சொத்துகள் வர்த்தகப் போட்டியாளர்களால் திருடப்படுகின்றன. அறிவுசார் சொத்துரிமை திருடப்படுவதைத் தடுக்க சீனா கடுமையான சட்ட திருத்தங்களை பல்வேறு பிரிவுகளில் கொண்டுவர வேண்டும். அதுமட்டுமல்ல, சீனாவின் நிதித் துறை சார்ந்த சந்தையை அமெரிக்காவிற்கு திறக்க வேண்டும், குறைந்த விலை பொருள்களை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்துக்கொண்டிருக்கிறது. இதை சீனா கேட்டு நடக்காவிட்டால், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் $ 200 பில்லியன் பொருள்களுக்கு 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தவிருப்பதாக 8 மே 2019-இல் அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட் செய்திருக்கிறார்.

அமெரிக்காவும், சீனாவும் அறிவுசார் சொத்துகளைக் கட்டமைப்பதிலும், உருவாக்குவதிலும், பாதுகாப்பதிலும் போட்டி போடுகின்றன.

அமெரிக்கா முதலில் செய்தது அனைத்து நதிகளையும் இணைத்ததே. 375 பில்லியன் கியுபிக் மீட்டர் அளவுகொண்ட தண்ணீரைச் சேமிக்கும் 400 செயற்கை ஏரிகளை உருவாக்கியது. விவசாயத்தை தொழில்நுட்பத்தின் மூலம் பெருக்கியது. அடுத்து தொழில் புரட்சிக்கு வித்திட்டது. மின்னணுத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியது. இன்றைக்கு அனைத்துத் துறைகளிலும் வளர்ந்த நாடாக அமெரிக்கா மாறியிருக்கிறது.

சீனா 30 வருடங்களுக்கு முன்பு விவசாயத்தில் மட்டும் முன்னணியில் இருந்தது. அப்போது அதன் தலைவர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்ததினால் இன்றைக்கு தொழில் துறையில் முன்னேற்றம், ஆராய்ச்சியில் முன்னேற்றம், உற்பத்தித் துறையில் முன்னேற்றம், ஏற்றுமதியில் முன்னேற்றம் கண்டது. 2002-இல் நதி நீர் இணைக்கும் திட்டத்தை முன்னெடுத்தது. 2012-இல் 2000 கி.மீ. அளவுக்கு நதிகளை இணைத்துவிட்டது. விவசாயப் பொருள்கள் உற்பத்தியில் இன்றைக்கு உலகத்தில் முதலிடம், பாலைவனத்தில் விவசாயம் செய்யும் அறிவியல் தொழில்நுட்பம், அறிவியல் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து விவசாய உற்பத்தித் திறனை பன்மடங்கு அதிகப்படுத்தியது. தானியங்கி தொழில்நுட்ப இயந்திரங்களை, (Artificial Intelligence) செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் முறையில் உருவாக்கி, ஆளில்லா விமானங்கள் மூலம் விவசாயத்தைப் பாதுகாத்து, மேலாண்மை செய்து விவசாய உற்பத்தியைப் பெருக்கியது. மண்ணில்லா விவசாயத்தை தொழில்நுட்பத்தின் மூலம் வளர்த்து, குறைந்த தண்ணீரில், பூச்சி மருந்தில்லா, ரசாயன உரம் இல்லா இயற்கை உரங்களால் விவசாயத்தைப் பெருக்குகிறது. தட்பவெப்ப வானிலை தகவலை பிக் டேட்டா மூலம் கண்டறிந்து அதை விவசாயிகளுக்கு கொண்டு சென்று, விதைப்பில் இருந்து அறுவடை வரை, அறுவடையில் இருந்து விற்பனை வரை எல்லாவற்றையும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேம்படுத்தியிருக்கிறது.

இன்றைக்கு தமிழகத்தில் வருடம்தோறும் 8 லட்சம் மாணவர்கள் 12-ஆம் வகுப்பு முடித்து மேல்நிலை பட்டதாரி கல்விக்குத் தகுதி பெறுகிறார்கள்.

1.5 லட்சம் மாணவர்கள் பொறியியல் துறையிலும், 4 லட்சம் மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் பயின்று வருகிறார்கள். மற்றவர்கள் பல்தொழில் திறன் பெறுகிறார்கள். அதில் குறிப்பிட்ட சதவிகிதம் பேர் படிப்பை நிறுத்திவிட்டு இளம் வயதில் வறுமை காரணமாகவோ அல்லது வேறு சூழ்நிலைகள் காரணமாகவோ வேறு தொழில் செய்யச் சென்றுவிடுகிறார்கள். படித்தவர்களுக்கு படிப்புக்கேற்ற வேலைவாய்ப்பில்லை. அதை செய்யும் செயல் திறனும் 80 சதவிகிதம் பேருக்கு இல்லை.

இந்தியா 1.28 பில்லியன் மக்கள் தொகை கொண்ட நாடு. சீனாவைவிட சற்று குறைவு. பொருளாதார வளர்ச்சி சீனாவைப்போல அதே வளர்ச்சி விகிதம் 6.6 சதவிகிதம். படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை சீனாவில் 3.9 சதவிகிதம். இந்தியாவில் 12 சதவிகிதம். படித்த படிப்பிற்கேற்ற வேலையில்லாத் திண்டாட்டம், இதை விட 2 மடங்கு அதிகம்.

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர் (குறள் 427)

அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர். தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்படும் அறிவார்ந்த தலைவர்களால் மட்டுமே, எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னாலேயே எண்ணி மக்களை வழி நடத்த முடியும்.

20 ஆண்டுகளுக்கு முன்பு அறிவார்ந்த தேசத்தைக் கட்டமைக்க ஆரம்பித்த சீனா, இன்றைக்கு அதன் இலக்கை எட்டி உலக நாடுகளோடு போட்டி போட்டு தனது நாட்டு மக்களை வளப்படுத்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து, விவசாயத்தில் வெற்றிபெற்று இன்றைக்கு முன்னேறி இருக்கிறது. இந்தியாவின் இன்றைய நிலை என்ன? 20 ஆண்டுகளுக்கு முன்பே ‘இந்தியா 2020’-ஐ கொடுத்த டாக்டர் அப்துல் கலாமின் கனவுகளை நிறைவேற்றி இருந்தால், இன்றைக்கு நதி நீர் இணைக்கப்பட்டிருக்கும். தொழில்கள் முன்னேறியிருக்கும். உற்பத்தி தொழிற்சாலைகள் 4.0 திறனை எட்டியிருக்கும். படித்த அனைவருக்கும் இந்திய விவசாயிகளின் உற்பத்தி மதிப்பு கூட்டப்பட்டு, பதப்படுத்தப்பட்டு உலகிற்கு உணவளித்திருப்பார்கள். இந்த நாடு வளம் பெற்றிருக்கும். இன்றைக்கு மாணவர்கள் எதைப் படித்தால் வேலை கிடைக்கும்? எந்த படிப்பைத் தேர்ந்தெடுப்பது என்று திண்டாடும் நிலை வந்ததற்குக் காரணம், கடந்த 20 ஆண்டுகளில் நாம் நமது இந்தியா 2020 தொலைநோக்குப் பார்வைக்கு உயிர் கொடுக்காமல் போனதுதான் காரணம்.

அப்துல் கலாமின் கனவு ஒரு நாள் நனவாகும். லட்சிய இந்தியா பிறக்கும். அதுவரை எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து படித்தாலும் அதில் கவனத்தோடு, ஆழ்ந்த புலமையைப் பெறும் விதத்தில், ஆராய்ச்சி எண்ணத்தோடு புது கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நோக்கில் உங்கள் படிப்பை உயர்த்துங்கள். இந்த நாடு உயரும்.

உங்கள் கனவுகளை, லட்சியங்களைப் பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள் - vponraj@gmail.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com