அத்தியாயம் - 38

உலகளாவிய அளவில் வருமான விகிதம் உயரும்போது, உணவுத் தேவையையும் அதிகரிக்கிறது. குறிப்பாக வளரும் நாடுகளில் இது அதிகரிக்கிறது.
அத்தியாயம் - 38

விவசாயத்தால் மட்டுமே வளர்ச்சி நிச்சயம்!

இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் ரூ.20,000 கோடியில் இருந்து (ONGC, Reliance, HDFC Bank, TCS, IOC Tata Steel, ITC, Infosys, BPCL, L&T, JSW, Kotal Mahindra, HPCL, GAIL, Maruthi, etc) ரூ.300 கோடி வரை அதிகமாக வரி கட்டும் 400 கார்ப்பரேட் கம்பெனிகளின் வளர்ச்சியை மட்டுமே அடிப்படையாக வைத்து மதிப்பீடு செய்யப்படுகிறது என்ற பரவலான குற்றச்சாட்டு பொருளாதார வல்லுநர்களால் வைக்கப்படுகிறது. இன்றையச் சூழலில் உண்மையான பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகச் சரிந்திருக்கிறது என்று சொல்லப்பட்டாலும் 2.5 சதவீதம் அளவில் சரிந்துவிட்டது என்பதுதான் நிஜம். மக்களுக்கு வாங்கும் சக்தியையும், சேமிப்பதில் நம்பிக்கையையும் அதிகரிக்க வழிவகை செய்யாத எந்தவிதப் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளும் பலனளிக்காது. இந்தியாவின் 90 சதவிகித மக்கள் முறைசாராத் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் அதில் விவசாயமும், விவசாயம் சார்ந்த தொழிலும், விவசாயம் சாராத முறைசாராத தொழிலும் அடக்கம். அவர்கள் கையில் பணப்புழக்கம் வராமல் பொருளாதாரச் சரிவை மீட்டெடுக்க முடியாது என்ற உண்மையைப் பொருளாதார வல்லுநர்கள் மத்திய அரசிற்குச் சொன்னாலும் அதை எப்படிச் செய்வது என்பது அவர்களுக்குப் புரியாத வரை மீட்சிக்கு வழியில்லை.

உலகளாவிய அளவில் உணவுத் தேவை அதிகரித்துக்கொண்டு வருகிறது. உணவுத் தேவைக்கான இரண்டு பெரிய காரணிகள் (மக்கள் தொகை மற்றும் வருமானம்) அதிகரித்து வருகின்றன. 2050-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 9.1 பில்லியனாக உயரும்போது பெரிய அளவிலான மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய 2007-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது உலக அளவில் விவசாயிகள் உணவு உற்பத்தியை 70 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று உணவு மற்றும் வேளாண்மையின் (Food and Agriculture Organisation) அறிக்கை கூறுகிறது ஐக்கிய நாடுகளின் அமைப்பு.

உலகளாவிய அளவில் வருமான விகிதம் உயரும்போது, உணவுத் தேவையையும் அதிகரிக்கிறது. குறிப்பாக வளரும் நாடுகளில் இது அதிகரிக்கிறது. இதன் விளைவாக, இந்த வளரும் நாடுகளில் அதிக புரதத்துடன் கூடிய உணவுகளை உற்பத்தி செய்து விரிவாக்க வேண்டும். ‘வருமானம் அதிகரிக்கும்போது, உணவு நுகர்வோரின் விருப்பம் கோதுமை மற்றும் தானியங்களிலிருந்து பருப்பு வகைகள், பின்னர் கோழி, பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி உள்ளிட்ட இறைச்சிக்கு மாறுகிறது’ என்கிறார் பர்ட்யூ பல்கலைக் கழகத்தின் பொருளாதார நிபுணர் டேவிட் விட்மார் கூறுகிறார்.

அதிக ஆரோக்கியமான நாடுகளில் அதிக வளர்ச்சியடைந்த நாடுகளின் உணவு பழக்க வழக்கங்களில் இருந்து வேறுபட்ட போக்கு உருவாகி வருகிறது. சோளம் போன்ற ஸ்டார்ச் அடிப்படையிலான பயிர்களில் கவனம் செலுத்துவதில் இருந்து சோயாபீன்ஸ் மற்றும் பிற பருப்பு வகைகள் போன்ற தாவர அடிப்படையிலான புரதங்களுக்கு மாறும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

2012-ஆம் ஆண்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் எடுத்த ஆய்வில் விவசாயிகளின் வயதில் ஒரு பெரிய மாற்றத்தை வெளிப்படுத்தியது. இது எதிர்காலத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். முதன்முறையாக, 65 வயதிற்கும் மேற்பட்ட விவசாயிகள் 45 வயதிற்கு குறைவான விவசாயிகளைவிட அதிகமாக உள்ளனர். வித்தியாசம் கணிசமானது, 45.2-க்கும் குறைவான ஒவ்வொரு விவசாயிக்கும் 2.1 விவசாயிகள் உள்ளனர் என்று கணக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

பழைய விவசாயிகள் விவசாயம் சார்ந்த வணிகத்திலிருந்து வெளியேறும்போது, அவற்றை மாற்றுவதற்கு இளைய விவசாயிகள் குறைவாகவே உள்ளனர். இதன் விளைவாக, விவசாயப்பண்ணை ஒருங்கிணைப்பு குறிப்பிடத்தக்கதாகவும் விரைவாகவும் இருக்கும் என்று விட்மார் கூறுகிறார். எனவே விவசாயப் பண்ணை ஒருங்கிணைப்புகள் விவசாயத்தின் தன்மையை - அதனால் ஏற்படும் பல்வேறு விளைவுகளை - பெரிய நிர்வாகச் சிக்கல்களுக்கு வித்திடும் வகையில் அமையும். ஒரு மனிதனால் விவசாயம் நடக்கும் என்ற நிலை மாறி, விவசாயம் கூட்டுபண்ணையாக மாறி நடுத்தரம் முதல் பெரிய அளவிலான வணிகத்தை ஒத்திருக்கும் நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு விவசாயி என்ற வகையில், இது மிகவும் சிக்கலானதாக இருக்கும். இதில் பல குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் இந்த பண்ணை விவசாயத்தில் ஈடுபடுவார்கள்.

பண்ணை ஒருங்கிணைப்பு அதிகமாக வெளிப்புறத்தில் இருந்து விவசாய தொழிலாளர்களின் உழைப்பின் தேவையை உண்டாக்கும். இன்றைக்கு விவசாயம் செய்வதற்கு ஆளில்லை என்ற நிலைமையை ரோபாட்டிக்ஸ் ஓரளவு தீர்த்துவைக்கும். ஏற்கெனவே, பால் விவசாயிகள் ரோபோ பால் உற்பத்தியாளர்களை மனித உழைப்புக்கு மாற்றாகப் பயன்படுத்துகின்றனர். பண்ணை உபகரண உற்பத்தியாளர்கள் மனித ஓட்டுநர்கள் இல்லாமல் களப்பணியைக் கையாள ரோபோ டிராக்டர்கள் மற்றும் தெளிப்பான்களின் முன்மாதிரிகளைச் சோதித்து வருகின்றனர்.

ஒவ்வொரு துறையிலும் ரோபோ இயந்திரங்கள் முன் மாதிரி மாடல் என்ற நிலையில் இருந்து வணிக செயல்பாட்டிற்கு வரும் நேரம் சுருங்கிவிட்டது. பல புதிய இயந்திரங்களை தற்போது மனிதர்கள் இயக்கும் நிலை குறைக்கப்பட்டு, அதன் செயல்பாடுகளை மின்னணுவியல் மூலம் கட்டுப்படுத்தும் நிலை அதிகரித்திருக்கிறது. இருப்பினும், ரோபோக்களைச் சுற்றியுள்ள சட்ட மற்றும் ஒழுங்குமுறைச் சிக்கல்களை முதலில் சரி செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் ட்ரோன்கள் உபயோகத்தின் விதிமுறைகள் ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதால், ட்ரோன் தொழில்நுட்பம் பண்ணை விவசாயப் பயன்பாட்டில் ஏற்றம் பெறத் தயாராக உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில், விவசாய ட்ரோன் தொழில் யு.எஸ். அமெரிக்காவில் 100,000 வேலைவாய்ப்புகளையும் 82 பில்லியன் டாலர் பொருளாதார நடவடிக்கைகளையும் உருவாக்கும் என்று பாங்க் ஆப் அமெரிக்கா ‘மெரில் லிஞ்ச் குளோபல் ரிசர்ச்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2050-ஆம் ஆண்டளவில் பண்ணை ட்ரோன்களின் சாத்தியமான பயன்பாடு மிகப்பெரியது. நிலத்தின் தன்மை பற்றிய ஆய்வு, பயிரிடப்படும் பயிர்களின் வளர்ச்சி, சத்தான நீர் மற்றும் பூச்சிமருந்து தெளிப்பு, மருந்தில்லா முறையில் பூச்சிகளை சில அதிர்வுகளை ஒரு குறிப்பிட்ட அளவில் வெளியிடும்போது பூச்சிகளை ஓடும் வகையில் விரட்டுவது, நீர் நிலைகள் ஆய்வு, வறட்சியின் தாக்கம் பற்றிய ஆய்வு, பயிர் காப்பீட்டுக்குத் தேவையான தகவல்களை மேலிருந்து பறந்து படமெடுத்து ஆய்வு செய்வதற்கும் மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கு ஏற்ப தேவையான உபகரணங்கள் முதல் இன்னும் கற்பனை செய்யப்படாத பொருட்கள் மற்றும் பல்வேறு வேலைகளைச் செய்வது வரை ஏராளமான எலக்ட்ரானிக்ஸ் மூலம் செய்யப்படும் பொருள்களைக் கொண்ட சிக்கலான உபகரணங்களை வேளாண்மை அதிகம் நம்பியுள்ளதால், தரவு சேகரிப்பு பண்ணை நிர்வாகத்தில் பெருகிய முறையில் பெரிய பங்கை வகிக்கும். எதிர்காலத்தில், விவசாயப் பண்ணைகள் தொடர்பான தரவு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களின் தேவை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

2050 வாக்கில், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் இருக்கும். மேலும் இது பலவகையான பயிர்களை வளர்க்கத் தூண்டும் நிலை வரும். இந்த புதிய தொழில்நுட்பம் விஞ்ஞானிகள் ஒரு சிறந்த பயிர் வகையை உருவாக்கும் குறிக்கோளுடன் டி.என்.ஏ.வில் உள்ள மரபணுக்களைத் துல்லியமாக திருத்த அனுமதிக்கிறது. எதிர்காலத்தில், மரபணு எடிட்டிங் பல்வேறு நோய்களுக்கு எதிர்ப்பு, வறட்சி சகிப்புத்தன்மை அல்லது அதிக விரும்பத்தக்க எண்ணெய் உள்ளடக்கம் போன்ற அம்சங்களைக் கொண்ட குறிப்பிட்ட பயிர் வகைகளைத் தேர்ந்தெடுக்க விவசாயிகளுக்கு உதவும். பரவலான உற்பத்திக்கு இடையூறு விளைவிக்கும் பண்புகளைத் திருத்துவதன் மூலம் மரபணு எடிட்டிங் பலவகையான பயிர்களை வளர்க்கும்.

நீர் கிடைப்பது, சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் மண்ணின் ஆரோக்கியம் ஆகியவை எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு தொடர்ந்து சவால் விடுபவையாக இருக்கும். ஆனால் புதிய தொழில்நுட்பங்கள் மட்டும்தான் இந்தச் சிக்கல்களை மிகவும் திறமையாகக் கையாள உதவும். எடுத்துக்காட்டாக, இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி தாவர-வளர்ச்சி சென்சார்கள், மண்-ஈரப்பதம் சென்சார்கள் மற்றும் ஒரு மைக்ரோ க்ளைமேட் அலகு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் ஒரு கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. தேவைப்பட்டால், உடனடி நடவடிக்கைக்குத் தேவையான கண்காணிப்புத் தகவல்களை மொபைல் சாதனங்கள் மற்றும் கணினிகள் மூலம் கண்காணிக்கும் முறை நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது.

மண்ணின் ஆரோக்கியத்தை அளவிடுவதற்கான தொழில்நுட்பமும், பயிர் வளர்ச்சியைக் கண்காணிப்பதற்கான செயற்கைக்கோள் மற்றும் வான்வழிப் படங்களும் பிரதானமாக உருவாகிக்கொண்டிருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு துல்லியமான-ஸ்மார்ட் செயலாக்கத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் கேமராக்கள், செயலிகள், கணினிகள் மற்றும் தெளிப்பான்களை வயல்களில் மெல்லிய கீரைச் செடிகளுக்குப் பயன்படுத்துகிறது. இந்த வகை தொழில்நுட்பம் குறைந்த இரசாயன பயன்பாடு மற்றும் குறைந்த சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இது 2050-இல் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

இத்தகைய கணிப்புகள் எதிர்காலத்தைப் பற்றி வெளிச்சம் போடக்கூடும் என்றாலும், இன்னும் 2050-ஐ அடைவதற்கு 33 ஆண்டுகள் இருந்தாலும், அமெரிக்கா, சீனா, இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் விவசாயத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றங்களைக் கொண்டுவந்து அதன்மூலம் உலக மக்கள் அனைவருக்கும் அரோக்கியமான உணவைக் கொடுக்கும் போட்டியில் முன்னெடுத்து சென்றுகொண்டிருக்கிறார்கள்.

கடந்த காலம் எதிர்காலத்திற்கான ஒரு துருப்புச் சீட்டு என்றால், வளர்ந்த நாட்டு விவசாயிகள் புதுமைகளைத் தழுவி பயிர்களை உற்பத்தி செய்வதற்கான சிறந்த வழிகளைத் உலகம் தேடும்போது, பொருளாதார வீழ்ச்சியின் உச்சத்தில் இந்தியா இருக்கும் இந்த நேரத்திலாவது மத்திய அரசு விவசாயத்தை முதல்கட்டமாக மேம்படுத்துவதற்கு தேவையான வழிமுறைகளை கொள்கைரீதியாக முடிவு செய்து அமுல்படுத்தினால் தவிர வேறு நல்வழிகள் இல்லை.

விவசாயம் மற்றும் வேளாண் உணவு பதப்படுத்தும் தொழிற் துறையைப் புதுப்பித்தல்-ஏற்றுமதியை நோக்கி கவனம் செலுத்துதல் என்ற கொள்கை இலக்கோடு பயணிக்க நாம் நமது இலக்கை வரையறுக்க வேண்டும். அதற்கு இந்தியா என்ன செய்ய வேண்டும்? விவசாயம் சார்ந்த தொழில் கொள்கை, விவசாயம் சார்ந்த உற்பத்திக் கொள்கை, விவசாயம் சார்ந்த சேவை கொள்கை வடிவமைக்கப்பட வேண்டும். இயற்கை சார்ந்த அறிவியல் வேளாண்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ் மற்றும் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்குப் போதுமான நிதி ஒதுக்கி அதை அனைத்து ஆராய்ச்சி நிறுவனங்களும், பல்கலைக் கழகங்களும் முன்னெடுக்க உடனடி வழிவகை செய்ய வேண்டும். தொழில்நுட்பத்தை இறக்குமதி மட்டும் செய்யாமல், இந்தியாவும், தொழில்நுட்ப நாடுகளும் இணைந்து தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திடும் கொள்கைகளை இயற்ற வேண்டும்.

தற்போது இருக்கும் அதிகபட்ச விற்பனை விலை விவசாயிகளுக்கு பலன் அளிக்கவில்லை. அதிகபட்ச விற்பனை விலைக்கு டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனின் அசல் பரிந்துரையை கூட்டி நடைமுறைப்படுத்தினால்தான், அதாவது இடுபொருளுக்கு ஆகும் செலவுகளைத் தாண்டி செய்யப்படும் மற்ற செலவுகளையும் கணக்கில் எடுத்து, இடுபொருள்களோடு 100 சதவிகிதம் அதிகம் கூட்டி கொடுத்தால்தான் கட்டுபடியாகும் என்ற நிலைமை இருக்கிறது. எனவே இந்த நடவடிக்கையை அரசு எடுத்தால்தான் விவசாயம் கட்டுபடியாகும்.

அரிசி உற்பத்தித் திறனை அதிகப்படுத்த SRI முறையையும், கரும்பு உற்பத்தி திறனை அதிகப்படுத்த SSI முறையையும் நாடு முழுவதும் உண்மையாகச் செயல்படுத்தினால் மட்டுமே விவசாயம் செழிக்கும். விவசாயப் பொருளாதாரம் உயரும். கீரைகள், காய்கறிகள், பழங்கள், மீன் உற்பத்தி மற்றும் மற்ற பணப்பயிர்களை விளைவிப்பதற்கு ஹைட்ரோபோனிக்ஸ், ஏரோபோனிக்ஸ் மற்றும் அக்வாபோனிக்ஸ் போன்ற அறிவியல் சார்ந்த நீடித்த நிலையான அதிக விளைச்சல் கொடுக்கும் விவசாயத்தை அறிமுகப்படுத்த வேண்டும். இது இளைஞர்களை, மாணவர்களை விவசாயத்தில் ஈடுபட ஊக்குவிக்கும். உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைக்கு வசதியாக நிலத்திலிருந்து உணவு மேசை வரை செயல்படும் இணைப்பை ஏற்படுத்தி வேளாண்மை உற்பத்தியைப் பன்மடங்கு அதிகரித்து உலகிற்கு உணவளிக்கும் தேசம் என்ற நிலைக்கு இந்த நாட்டை உயர்த்தும் கொள்கைகள் உருவாக்கப்பட்டு செயல்படுத்த வேண்டும்.

ஆடை மற்றும் நெசவு தொழில்கள் உலக வர்த்தகப் போட்டியைச் சமாளித்து இன்றைக்கு சீனா-அமெரிக்கா வர்த்தகப்போரால் உருவாகியிருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்த மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு விதிக்கப்பட்ட தடைகளை விலக்கி, பூச்சி மருந்து, ரசாயன உரங்களின் தாக்கத்தில் இருந்து விவசாயிகளை விடுவித்து பருத்தி, எண்ணைய் மற்றும் காய்கறிகள் உற்பத்தியை மரபணு மாற்றிய பயிர்கள் மூலம் உயர்த்தினால் மட்டுமே விவசாயமும் செழிக்கும். விவசாயிகள் வளர்ச்சியடைவார்கள்.

ஆடை ஆபரண தொழிலும் வர்த்தகப் போட்டியில் நிலைக்கும். இந்திய விவசாயிகள் மற்றும் முறைசாராத துறையில் இருக்கும் மக்களின் கைகளில் பணப்புழக்கம் வரும். இதை உடனடியாகச் செயல்படுத்த ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெற்ற ரூ.1.76 லட்சம் கோடியில் இருந்து ஒரு குறிப்பிட்ட பணத்தை ஒதுக்கி செயல்படுத்த வேண்டும். இதை செய்வார்களா? தொடர்ந்து பார்ப்போம்.

உங்கள் கனவுகளை, லட்சியங்களை பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள்: vponraj@gmail.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com