அத்தியாயம் - 36

நம்பகமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை இந்தியாவில் பெறுவது மிகவும் கடினம். குறிப்பாக, முறைசாராத் துறைக்கு இது முற்றிலும் உண்மை.
அத்தியாயம் - 36

சிறப்பான வாழ்க்கைத்தரத்தின் குறியீடு.. முறைசாராத் துறையின் மேம்பாடு!

இந்தியாவின் முறைசாராத் துறைதான் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும். இது பெரும்பாலும் வரிகட்டமைப்பில் வராது. ஆனால் இது பெரும்பான்மையான பணியாளர்களைப் பயன்படுத்துகிறது. முறையான துறை அதன் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பொறுத்து அமைகிறது. இது வரி கட்டமைப்பின் கீழ் வருகிறது. முறைசாராப் பொருளாதாரத்தின் பங்களிப்பை முழுமையாக மதிப்பிடுவதற்கு முறைசாராப் பொருளாதாரத்தின் மறைமுக பங்களிப்புகளைப் புரிந்துகொள்வதும் அளவிடுவதும் அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாக, முறைசாராப் பொருளாதாரம் முறையான மற்றும் முறைசாரா நிறுவனங்களுக்கு குறைந்த விலை உழைப்பு, உள்ளீடுகள், பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குகிறது. மேலும் பொது மக்களுக்கு, குறிப்பாக ஏழ்மையான குடும்பங்களுக்கு குறைந்த விலை பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குகிறது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது. உண்மையில், முறைசாராப் பணியாளர்களின் பங்களிப்பு, நேரடி மற்றும் மறைமுகமாக, சில துறைகளில் மிகவும் அதிகமாக உள்ளது.

முறைசாராப் பொருளாதாரம் என்பது குறைந்த உற்பத்தித்திறனைக் கொண்டுள்ளது. எனவே, இது குறைந்த வளர்ச்சிக்கு பங்களிக்கிறது என்று பரவலான கருத்து உள்ளது. உற்பத்தித்திறன் பிரச்னை நாடுகளுக்கும் தனிப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் முக்கியமானது. ஏனெனில் அவர்கள் எதிர்பார்க்கக்கூடிய வாழ்க்கைத்தரங்களுக்கு இது ஒரு வரம்பை நிர்ணயிக்கிறது. பல சூழல்களில், முறைசாரா நிறுவனங்கள், முறையான நிறுவனங்களைக் காட்டிலும் குறைவான உற்பத்தி திறன் கொண்டவையாக இருக்கின்றன. ஆனால் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்த விரும்பினால், முறைசாராப் பொருளாதாரத்தில் "உற்பத்தித்திறன்" மற்றும் "உற்பத்தி வளர்ச்சி" என்பதன் பொருள் என்ன என்பதை ஆராய வேண்டிய அவசியம் உள்ளது.

முதலாவதாக, உழைப்பு மட்டுமல்ல, உற்பத்தியின் அனைத்து காரணிகளையும் கருத்தில் கொள்வது அவசியம். முறையான தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, முறைசாராத் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் சொந்த உழைப்பைத் தவிர உற்பத்தி காரணிகளைக் குறைவாகவே கொண்டிருக்கின்றன. உற்பத்திக் காரணிகள் மூலதனம், நிலம் மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றைச் சார்ந்தது. இரண்டாவதாக, வர்த்தகத்தில் அவர்களின் உழைப்பால் மதிப்பு கூட்டப்பட்ட பங்கைக் கோருவதற்கு அவர்களுக்கு பேரம் பேசும் சக்தி கிடையாது. அவற்றின் உற்பத்தியின் மதிப்பு பெரும்பாலும் முதலாளிகளாலும், விநியோகச் சங்கிலியில் உள்ள இடைத்தரகர்கள் மற்றும் குறிப்பாக விநியோகச் சங்கிலியின் மேற்புறத்தில் உள்ள முன்னணி நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. மூன்றாவதாக, உற்பத்தித்திறனின் வரையறைகள் மற்றும் நடவடிக்கைகள் துறைக்குத் துறை வேறுபடுகின்றன. முறைசாராப் பொருளாதாரத்தின் உற்பத்தித்திறனைத் தீர்மானிக்க, உற்பத்தித்திறனின் வரையறைகள் மற்றும் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பெரும்பாலான நாடுகளில் விவசாயம் சாரா முறைசாராப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் முறைசாராச் சேவைகளின் மதிப்பு என்ன? ஒரு தெரு வணிகரின் உற்பத்தித்திறனைக் கவனியுங்கள். அவர் ஒரு குறிப்பிட்ட காலத்தில் எவ்வளவு விற்கிறார் என்பதைப் பொறுத்தது. இது அவரது உழைப்பு, மூலதனம், உபகரணங்கள் அல்லது தொழில்நுட்பத்துடன் சிறிதும் சம்பந்தமில்லை. இது சந்தை அணுகல், மொத்த தேவை, வாங்கும் திறன் மற்றும் போட்டியின் தீவிரம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. அவரது "உற்பத்தித்திறனை" அளவிடுவது ஒரு விவசாயி தனது ஏக்கர் நிலத்தில் உற்பத்தி செய்யும் விவசாய பொருள்களின் அளவையோ அல்லது ஒரு தொழில்துறை தொழிலாளி தனது வீட்டில் உற்பத்தி செய்யும் ஆடைகளின் எண்ணிக்கையையோ அளவிடுவதிலிருந்து தர ரீதியாக வேறுபட்டது.

முறைசாராப் பொருளாதாரம் குறைந்த உற்பத்தித்திறன் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுடன் தொடர்புடையது என்றாலும், இது வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. மேலும் அதிக வருவாய் உள்ள நாடுகளில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் முறைசாராப் பொருளாதாரத்தின் பங்களிப்பை அளவிடுவதற்கான கருத்துகள், நடவடிக்கைகள் மற்றும் வழிமுறைகளை மேம்படுத்துவதற்கு அதிக வேலை செய்ய வேண்டும்.

1990-களின் முறைசாராத் துறை மற்றும் வர்த்தகம் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வர்த்தகத்தின் பங்கு ஆப்பிரிக்காவில் சராசரியாக மொத்த வர்த்தகத்தின் மூலம் வேலைவாய்ப்பில் 95 சதவிகிதமும், மொத்த மதிப்பு கூட்டப்பட்ட வர்த்தகத்தின் பங்கு சராசரியாக 59 சதவிகிதமும் ஆகும். ஆசியாவில் இந்தியா 96 சதவிகிதம் மொத்த வர்த்தக வேலைவாய்ப்பிலும், 90 சதவிகிதம் மொத்த மதிப்பு கூட்டப்பட்ட வர்த்தகத்திலும் முறைசாராத் துறை பங்கு வகிக்கிறது. இது இந்தோனேசியாவில் முறையே 93, 77 என்றும், பிலிப்பைன்ஸில் 73, 52 என்றும் இருக்கிறது.

பொருளாதாரக் கணக்கெடுப்பு ஒரு முக்கிய விஷயத்தை மிகவும் எளிமையான சொற்களில் கூறியது: இந்தியாவில் ‘நல்ல வேலைகளை’ உருவாக்குவதற்கான சவால் என்பதை இன்னும் முறையான துறை வேலைகளை அதிகமாக உருவாக்குவதற்கான சவாலாகக் காணலாம். இது தொழிலாளர் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கிறது. உண்மையில், இந்தியாவின் மக்களுக்கு வாழ்வாதாரத்தை செம்மைப்படுத்துவதற்கான முறையான மதிப்புக்கூட்டப்பட்ட வேலை வாய்ப்புகள் தேவை.

முறையான துறை உரிமம் பெற்ற நிறுவனங்களைக் கொண்டுள்ளது. அவை வரி செலுத்துகின்றன. தொழிலாளர் சட்டங்களுக்கு அவை கீழ்ப்படிய வேண்டும். இது ‘ஒழுங்கமைக்கப்பட்ட’ துறை என்றும் அழைக்கப்படுகிறது. இது நல்ல ஊதியம் மற்றும் விடுமுறைகள், நோய்வாய்ப்பட்ட விடுப்பு மற்றும் சுகாதார காப்பீடு மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் போன்ற சமூக பாதுகாப்பு போன்ற சலுகைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்ற பொருளில் நல்ல வேலைவாய்ப்பை வழங்குகிறது.

இருப்பினும், கசப்பான உண்மை என்னவென்றால், இந்தியாவின் முறையான துறை இதுபோன்ற வேலைகளை வழங்குவதில் நாட்டின் பணியாளர்களில் சுமார் 10 சதவீதத்தினருக்கு மட்டுமே வழங்குகிறது. முறைசாராத் துறைதான் 90% பேருக்கு பணி வழங்குகிறது. இந்தியாவின் பொருளாதாரரீதியாக சுறுசுறுப்பான 49 கோடி மக்களில் சுமார் 4.5 கோடிப்பேர்தான் முறையான துறையில் பணியாற்றுகிறார்கள். ஆனால் மீதம் பெரும்பான்மையானவர்கள் முறைசாராத் துறையில் கடுமையான சூழ்நிலைகளில் அடிமைப்படுத்தப்பட்டனர். இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில், முறையான துறை வேலைகளின் பங்கு அதிகரித்துள்ளது என்பதையும் காட்டுகிறது. இருப்பினும், முழுமையான எண்ணிக்கையில், முறைசாராத் துறையின் வளர்ச்சி இன்னும் முறையான வளர்ச்சியை மீறியதுதான். அப்படி என்றால் முறைசாராத்துறை பாதிக்கப்பட்டால் இந்தியாவின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். முறைசாராத் துறையை ஒட்டுமொத்தமாகப் பாதித்தது பணமதிப்பிழப்பு நடவடிக்கை, முறைசார்ந்த துறையை இப்போது பாதித்திருப்பது ஜி.எஸ்.டி. வரி விதிப்பும், அதன் தகவல் தொழில்நுட்ப கணினி மென்பொருளும், அதனை அமுல்படுத்திய வரி நடவடிக்கைகளும்தான்.

நம்பகமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை இந்தியாவில் பெறுவது மிகவும் கடினம். குறிப்பாக, முறைசாராத் துறைக்கு இது முற்றிலும் உண்மை. இது அரசாங்க நிறுவனங்களால் நெருக்கமாக ஆராயப்படவில்லை. விவசாயம் பெரும்பாலும் முறைசாராததாகும். எடுத்துக்காட்டாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் நிறைய விவசாய வேலைகளைச் செய்தாலும், அவர்களின் முயற்சிகள் கணக்கிடப்படுவதில்லை. எனவே பண்ணைகளில் பொருளாதாரரீதியாக சுறுசுறுப்பான நபர்களின் எண்ணிக்கை சுட்டிக்காட்டப்பட்டதைவிட பெரியதாக இருக்கும். விஷயங்களை இன்னும் குழப்பமடையச் செய்வது, முறையான துறைக்கான தரவு முற்றிலும் நம்பகமானதல்ல. சிலர் பகுதி நேர வேலைக்கு மட்டுமே வேலை செய்கிறார்கள். மற்றவர்களுக்கு பல்வேறு காரணங்களுக்காக அவர்களுக்கு வழங்கப்பட வேண்டியவற்றின் ஒரு பகுதியை மட்டுமே வழங்குகிறார்கள். பல நபர்கள் தங்கள் திறமைகளை முழுமையாகப் பயன்படுத்த அனுமதிக்காத தாழ்ந்த பதவிகளில் பணிபுரியும் பொருளில் வேலையில்லாமல் உள்ளனர். பல பல்கலைக் கழக பட்டதாரிகளுக்கு இது உண்மை.

உண்மையில், முறையான துறை படிப்படியாக முறைசாராததாக மாறி வருகிறது. இந்தப் போக்கு தொழிலாளர் உறவுகளின் உலகளாவிய அரிப்பைப் பிரதிபலிக்கிறது. உதாரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இது தெளிவாகத் தெரிகிறது. ஐ.எல்.ஓ.வின் இந்தியா தொழிலாளர் சந்தை அறிக்கை 2016-ன்படி, "முறையான துறையில் உருவாக்கப்படும் புதிய வேலைகள் பெரும்பாலானவை முறைசாராதவை. ஏனெனில் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புச் சலுகைகள் அல்லது சமூகப் பாதுகாப்பு கிடைப்பதில்லை". ஆண்கள் மற்றும் பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு விகிதங்களில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கின்றன' என்றும் அது எச்சரித்தது.

உண்மை என்னவென்றால், இந்தியாவின் சிக்கலான தொழிலாளர் சட்டம் தண்டனையின்றி மீறப்படுகிறது. நிச்சயமாக, கொள்கை வகுப்பாளர்கள் தொழிலாளர் சட்டத்தை தடுப்பதில் அக்கறை கொண்டுள்ளனர். அவை தடையற்ற நிறுவனத்தைத் தடுத்து நிறுத்துவதாகவும் பொருளாதார வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதாகவும் இருக்கின்றது. உழைப்புக்கான கூலி இந்தியாவில் குறைவாக இருப்பது சர்வதேச அளவில் ஓர் ஒப்பீட்டு நன்மையாகப் பார்க்கப்படுகிறது. சீன அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஒரு செய்தித்தாள் ‘குளோபல் டைம்ஸ்’ குறிப்பிட்டதுபோல், "இந்திய மாநிலங்களில் பெரும்பான்மையானவற்றில் தரப்படும் தொழிலாளர்களுக்கான கூலியானது, சீனாவில் தொழிலாளர்களுக்குத் தரப்படும் கூலியைவிட குறைவாகத்தான் இருக்கிறது".

2020-ம் ஆண்டில், மக்களின் சராசரி வயது இந்தியாவில் 29 ஆண்டுகள் ஆகும். இது சீனாவிலும் அமெரிக்காவிலும் 37 ஆண்டுகள், ஐரோப்பிய ஒன்றியத்தில் 45 ஆண்டுகள் மற்றும் ஜப்பானில் 48 ஆண்டுகள். ஒரு முக்கியமான உட்குறிப்பு என்னவென்றால், தொழிலாளர் சந்தையில் நுழையும் இளைஞர்களின் பங்கு இந்தியாவில் பெரியது. பெரும்பாலும், அவர்களில் பெரும்பாலோரின் வேலைவாய்ப்பு நம்பிக்கை சிதைக்கப்பட்டு ஏமாற்றமடைவார்கள். இந்தியாவின் வளரும் இளைய தலைமுறைக்கு, அவர்களின் கனவுகளுக்கு, இலட்சியங்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளை இந்திய அரசு உருவாக்கி கொடுக்கவில்லை என்பது 2019-ல் தெளிவாக விளங்குகிறது. சிக்கல்களை ஒருங்கிணைத்து, இதுவரை இளைஞர்களுக்கு தனித்திறன் பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு ஏற்றவர்களாக உருவாக்குவதில் இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் நிர்ணயித்த இலக்கை இதுவரை எட்டவில்லை.

அரசாங்கம் சவால்களை அறிந்திருக்கிறது. ஆனால் இதுவரை சவால்களைச் சந்தித்து வெற்றிபெறக்கூடிய வகையில் அறிவிக்கப்பட்ட எந்த பெரிய திட்டமும் வெற்றி பெறவில்லை; இலக்குகளை அடையவில்லை என்பதை கடந்த 6 ஆண்டுகால ஆட்சிமுறை நிர்வாகம் நிரூபித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதச் சட்டம் (MGNREGS) என்ற இத்திட்டம் ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திலும் ஒரு வயது வந்த உறுப்பினருக்கு உள்கட்டமைப்பு தொடர்பான பகுதிகளில் குறைந்தபட்ச ஊதியத்தில், குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கும் என்ற உறுதிமொழி. இருப்பினும், 2014-15-ல் 166 கோடி, 2015-16-ல் 235 கோடி, 2016-17-ல் 235 கோடியாக உயர்த்தப்பட்ட மனித வேலைநாட்கள், 2018-19-ம் ஆண்டில் 100 நாள் வேலை திட்டத்தில் வீட்டுக்கு ஒரு நபருக்கு சராசரியாக 49.61 நாட்கள் வேலைகளை மட்டுமே உருவாக்கி, 257 கோடி மனித நாட்கள் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இது 2009-10-ல் உருவாக்கப்பட்ட 283.6 கோடி மனித வேலைவாய்ப்பு நாட்களை காட்டிலும் குறைவுதான் அந்த இலக்கை இன்னும் அடையவில்லை.

MGNREGS 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வேண்டும். விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு ‘வாழும் கலை’ அமைப்பும் வேலூர் மாவட்ட நிர்வாகமும் அமைத்து உள்ளது போல உயரமான இடங்களிலிருந்து அல்லது மலைகளிலிருந்து நீரோடைகள் வழியாக நிலத்தடி நீர்மட்டங்களுக்கு தண்ணீரை கொண்டு சேர்ப்பதற்கும் அதற்கிடையில் மழைநீர் மீள்நிரப்பு ஆழ்துளை கிணறுகள் (Recharge Injection Borewells) அமைப்பதற்கும் அதைத்தொடர்ந்து நீர் வழி ஏற்படுத்தி BOULDER CHECK DAMS-ஐ தடுப்பணைகள் உருவாக்குபவர்களுக்கும் ஒரு நபருக்கு ரூ.300 ஆக உயர்த்தி தர வேண்டும். அதை மட்டுமல்லாமல், தெருக்களிலும், வார்டுகளிலும், மழை நீர் வடிகால் கால்வாய் வழிகளில் மழைநீர் சேமிப்பு மீள்நிரப்பு ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்த ஒவ்வொரு மாநிலத்திற்கும் ரூ.5000 கோடி ஒதுக்க வேண்டும்.

இதன்மூலம் நிச்சயமாக இந்தியாவின் நிலத்தடி நீரின் அளவை மேம்படுத்த முடியும், அதே நேரத்தில் இந்த இக்கட்டான பொருளாதார வீழ்ச்சியில் இருந்து முறைசாரா துறையில் ஈடுபடும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த இது ஓர் ஊக்கம் கொடுக்கும் நடவடிக்கையாக இருக்கும். குறைந்தபட்ச ஊதியத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பு பெருக மிகவும் உதவியாக இருக்கும். பணப்புழக்கம் சாதாரண மக்களிடம் அதிகரிக்கும். ஆனாலும் இது மட்டும் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலாளர் சந்தை சவால்களைத் தீர்த்து வைக்காது, அப்படித் தீர்த்துவைக்க வேண்டும் என்றால் விவசாயத் துறையிலும், விவசாயம் சார்ந்த தொழில் துறையிலும், உற்பத்தி துறையிலும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

உங்கள் கனவுகளை, லட்சியங்களை பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள். vponraj@gmail.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com