அத்தியாயம் - 33

உலக நாடுகளோடு போட்டிபோடும் வல்லமையோடு இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு மனித வளத்தை உருவாக்கக் கூடியதாக தேசிய கல்விக் கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும்.
அத்தியாயம் - 33

தொழில்கல்விக்கு தொலைநோக்குப் பார்வை முக்கியம்!

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நணிய துடைத்து. (குறள் 353)

ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக்கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும். ஆழமான தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிகளை நடத்திவரும் இக்காலத்தில், இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுக்கு அடுத்து ஒவ்வொரு துறையிலும் எப்படிப்பட்ட மாற்றங்கள் வரும் என்று சிந்தித்து அதற்கேற்ப தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை இப்போது உலகம் முழுவதும் முன்னெடுத்துச் செய்துகொண்டிருக்கிறார்கள். அதாவது Advanced Materials, Artificial Intelligence, Biotechnology, Block Chain, Drones & Robotics, Photonics & Electronics, Quantum Computing போன்ற 7 துறைகளில் ஆரம்ப நிலை ஆராய்ச்சியிலிருந்து, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வர்த்தகம் வரை முழுமையான ஒரு வளர்ச்சியை நோக்கி இந்த உலகம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த ஆராய்ச்சிகளின் நோக்கம், மாறிவருகின்ற தட்பவெட்ப நிலையின் தாக்கத்தை எப்படிச் சமாளிப்பது, 900 கோடி மக்களுக்கு எப்படி உணவளிப்பது, வயதானவர்களை எப்படி ஆரோக்கியமாக வைத்திருப்பது என்ற அடிப்படை இலட்சியங்களைக் கொண்டு இந்த ஆழ்ந்த தொழில்நுட்பங்களின் உதவிகளோடு இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதுதான்.

இந்த ஆழமான தொழில்நுட்பங்களைத் தீர்மானிக்கக்கூடிய 3 காரணிகள் என்னவென்றால், 1. இந்த தொழில்நுட்பத்தின் தாக்கம், 2. இந்த தொழில்நுட்பம் வர்த்தகத்துக்கு ஏற்றவகையில் உருவாவதற்கான காலஅளவு, 3. இதை முழுமையாகச் செயல்பாட்டுக்கு கொண்டுவரக்கூடிய முதலீடு. இந்த மூன்று காரணிகளை அடிப்படையாகக்கொண்டு உலகத்தில் வளர்ந்த நாடுகள், அந்த நாடுகளில் இருக்கக்கூடிய அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்கள், நிறுவனங்கள் இதற்கு ஏற்ற ஆராய்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்து, இதற்கேற்ற முதலீட்டைக் கொண்டுவந்து, இதற்கு ஏற்ற மனிதவளத்தை பள்ளியில் இருந்து, STEAM (Science, Technology, Engineering, Arts and Maths) கல்வி முறையின் மூலமாக உருவாக்கி, Science Olympiad, Maths Olympiad முறையில் அந்த மாணவர்களைப் போட்டித் தேர்விற்கு தகுதிப்படுத்தி, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மனிதவளத்தைக் கட்டமைத்து, அந்த மனிதவளத்தின் மூலமாக அடுத்த 30 ஆண்டுகளில் இந்த ஆராய்ச்சி இந்த உலகத்தை எவ்வாறு வளர்ச்சியடையச் செய்து செழிக்க வைக்கப் போகிறது, இந்த உலகத்தில் இன்றைக்கு இருக்கக் கூடிய பல்வேறு பிரச்னைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்ற நிலையிலே உலகம் உழைத்துக்கொண்டிருக்கிறது.

இந்த ஆழமான தொழில்நுட்பத்தின் மூலமாக உருவாக்கப்படும் புது கண்டுபிடிப்புகள் மிகப்பெரிய பொருளாதார மதிப்பைக் கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல், நிதி சார்ந்த பொருளாதாரத்தைத் தாண்டி, நமது அன்றாட வாழ்க்கையில் இந்த ஆழமான தொழில்நுட்பம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இந்த ஆழ்ந்த தொழில்நுட்ப புரட்சி இன்றைக்கு ஆரம்பமாகியிருக்கிறது. இதன் விளைவு அடுத்த 20 ஆண்டுகளில் நம் வாழ்வைச் செம்மைப்படுத்தும்.

இந்தத் துறையில் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் ஈடுபடக்கூடிய புது நிறுவனங்களை 4 தகுதிகளை வைத்து நிர்ணயம் செய்கிறார்கள். அதாவது தொழில்நுட்பத்தில் புதுமை, இதை வியாபாரமாக்கும் யுக்தி, இந்த குழுவின் தனித்திறன், இதன்மூலம் மனித வாழ்வில் உருவாகக்கூடிய தாக்கம் இதுதான் ஐக்கிய நாடுகள் சபை வளரும் நாடுகளை வளப்படுத்த உருவாக்கிய இந்த நூற்றாண்டிற்கான நிலைத்த வளர்ச்சிக்கான லட்சியங்களை (Millenium Sustainable Development Goals) அடைவதற்கு தகுதி என்று நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இந்த லட்சியத்தில் முதலிடம் பிடிப்பது தரமான மருத்துவம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை. இதில் 51% புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் தங்கள் ஆராய்ச்சியில் கவனத்தைச் செலுத்துகின்றனர். இதைப்போன்று ஆழ்ந்த தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் தொழிற்சாலை மேம்பாட்டிற்கு 2.0 முதல் 5.0 வரை புதுமையான கண்டுபிடிப்புகள், கட்டமைப்பு துறைகளில், சுற்றுச்சூழலில் மனித தாக்கத்தின் விளைவாக ஏற்படும் அவலங்களை முறியடிக்கக்கூடிய வகையில், நீடித்த வளங்களைக்கொண்ட நகரங்கள் மற்றும் சமூகங்களை உருவாக்குவதில் உள்ள சவால்கள், பொறுப்புள்ள உபயோகிப்பாளர்கள் உருவாக்கம் மற்றும் உற்பத்தித்துறை, தட்பவெட்ப நிலை மாறுபாடு சவால்களைச் சமாளிக்க, குறைந்த விலையில் சுத்தமான எரிசக்தியை உருவாக்க, சுத்தமான குடிநீர், துப்புரவு மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் இந்த ஆழ்ந்த தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், நிறுவனங்கள் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப உருவாக்கத்தில் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சி அடிப்படையிலிருந்து தொழில்நுட்பத்தை உருவாக்கி அதை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு கால அளவு, அது எந்தத் துறையைச் சேர்ந்தது என்பதைப் பொருத்து வேறுபடும். ஆராய்ச்சியிலிருந்து விளைந்த தொழில்நுட்பம், அதைச் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு வளர்ந்த நாடுகளில் ஐந்து வருடம் ஆகும் என்றால் வளர்கின்ற நாடுகள் - இதை இப்போது முன்னெடுத்தாலே பத்து வருடங்கள் ஆகிவிடும்.

இப்போது தொழில்நுட்பத்தால் இந்த உலகமே ஒரு கிராமம் என்ற நிலையிலே மாறிவிட்ட போது, அறிவியலுக்கு எல்லைகள் கிடையாது. ஆனால் தொழில்நுட்பத்திற்கு எல்லைகள் உண்டு. அறிவியல் ஆராய்ச்சி தொடர்ச்சியாக தன்னைக் கட்டமைத்துக் கொண்டு செல்லும், இதில் அனைவரும் பங்கு பெறலாம். ஆனால் அறிவியல் சார்ந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்குப் பல புதுக் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு அறிவுசார் சொத்துரிமையை உருவாக்க வேண்டும். அதற்கு அந்தந்த நாடுகள் தனக்கான மனிதவளத்தை பள்ளியில் இருந்து கட்டமைக்க வேண்டும், அதற்கான ஆராய்ச்சிக்கு நிதியுதவி செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த ஆராய்ச்சியைக் கட்டமைக்கக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்கமுடியும். அப்போதுதான் நாம் உலகத்தோடு போட்டிபோட்டு வளரமுடியும்.

ஐக்கிய நாடுகள் சபை வளரும் நாடுகளுக்காக உருவாக்கக் கூடிய நூற்றாண்டிற்கான நீடித்த வளர்ச்சிக்கான இலட்சியங்கள் என்ற அடிப்படையில் பார்த்தோம் என்றால் தண்ணீர், எரிசக்தி, சுற்றுச்சூழல், விவசாயம், உணவு, கல்வி, மருத்துவம் ஆகியவை அடங்கும். இதற்கான அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலமாக வளர்கின்ற நாடுகள் நீடித்த நிலைத்த வளர்ச்சியை அடைவதற்கு, வளர்ச்சியடைந்த உலகம் இரவும் பகலும் உழைத்துக்கொண்டிருக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட புதுமைகள், புதுக்கண்டுபிடிப்புகளான சிலிகான் சிப், கணினி தொழில்நுட்பம், இணையதளம் மற்றும் மொபைல் போன்ற தொழில்நுட்பங்கள் போன்றவைதான் இன்றைய நவீன தொழில் நுட்ப உலகத்தைக் கட்டமைத்து இருக்கின்றன. இதைப்போல இன்றைக்கு உருவாகக்கூடிய - இன்றைக்கு ஆராய்ச்சி நிலையிலே இருக்கக்கூடிய - பல புது தொழில்நுட்பங்கள்தாம் அடுத்த 30 ஆண்டுகளில் இந்த உலகத்தின் வாழ்க்கை முறையை நிர்ணயிக்கப்போகின்றன. மென்பொருள் துறையில் மெஷின் லேர்னிங், ஹார்டுவேர் துறையில் குவாண்டம் கம்ப்யூட்டிங், பயோடெக்னாலஜி துறையில் ஜெனடிக் வரிசை மற்றும் மரபணுவை வெட்டி ஒட்டி மரபணு சார்ந்த வியாதிகளுக்கு தீர்வைக் கொடுக்கும் CRISPR/Cas9 தொழில்நுட்பம் ஆகியவற்றில் தொழில்நுட்பப் புரட்சியை இன்றைய ஆராய்ச்சி உலகம் முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது.

அட்வான்ஸ்டு மெட்டீரியல் துறையில் 38 நாடுகளும், செயற்கை நுண்ணறிவு துறையில் 48 நாடுகளும், உயிரி தொழில்நுட்ப துறையில் 42 நாடுகளும், பிளாக் செயின் துறையில் 20 நாடுகளும், ஆளில்லா விமானம் மற்றும் ரோபாட்டிக்ஸ் துறையில் 40 நாடுகளும், போட்டோனிக்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் 51 நாடுகளும், குவாண்ட்டம் கம்ப்யூட்டிங் துறையில் 4 நாடுகளும் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் தொழில்நுட்பத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவிடமும், ஐரோப்பாவிடமும் போட்டிபோட்டு சீனா கடந்த 20 ஆண்டுகளைக் காட்டிலும் இப்பொழுது 400 % முதலீட்டை அதிகரித்து வருடத்திற்கு 400 பில்லியன் டாலர் அளவில் ஆராய்ச்சிக்கான முதலீடாகச் செய்கிறது. யுனெஸ்கோவின் சர்வே படி, அமெரிக்கா 2.7 % ஜிடிபி, சீனா 2.1 % ஜிடிபி, ஐரோப்பிய யூனியன் 2 % ஜிடிபி ஆராய்ச்சியில் முதலீடு செய்கின்றன. இதில் இந்தியா ஆராய்ச்சியை 0.8 % ஜி.டி.பியில் இருந்து 0.69 % ஜிடிபியாக குறைத்து விட்டு 0.1 % உயர்த்துவோம் என்று சொல்கிறது. இது எப்படி மேற்கண்ட நாடுகளோடு போட்டிபோட்டு வளர வழி வகுக்கும்?

வளர்ந்த நாடுகள் வளர்கின்ற நாடுகளுக்கு தனது ஆராய்ச்சியின் மூலமாக, தொழில்நுட்பத்தின் மூலமாக தீர்வுகளைக் கண்டுகொண்டு இருக்கிறது. இதில் இந்தியா எங்கு இருக்கிறது?

இப்படிப்பட்ட தொழில்நுட்பப் புரட்சியை செய்ய வேண்டும் என்று சொன்னால், அதற்கு அடிப்படை பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்கள், அவற்றிலிருந்து தோன்றும் ஆராய்ச்சி, அந்த ஆராய்ச்சியின் விளைவாக உருவாக்கப்படும் புது கண்டுபிடிப்புகள், அந்த கண்டுபிடிப்புகளை தொழில்நுட்ப கருவிகளாக, இயந்திரங்களாக மாற்றும் வர்த்தக கம்பெனிகள் உருவாக்கப்பட்டு இதை செயலாக்கத்திற்கு கொண்டுவரக்கூடிய பெரிய நிறுவனங்கள், இதற்கு உதவியாக அரசு உருவாக்கும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான கொள்கைகள், அந்தக் கொள்கையின் விளைவாக இந்த தொழில்நுட்ப ஆராய்ச்சிக்குத் தேவைப்படக்கூடிய முதலீடுகள் ஈர்க்கும் இணக்கமான சூழ்நிலைகள், போட்டி போடக்கூடிய வாய்ப்புகள், ஏற்றுமதிக்கான சலுகைகள், இதற்கு முதலீடு செய்யக்கூடிய முதலீட்டாளர்கள், இதை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லக்கூடிய வர்த்தகர்கள், விற்பனையாளர்கள், இதன்மூலமாக பயன்படக்கூடிய மக்கள். இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்தால்தான் ஆழ்ந்த தொழில்நுட்ப புரட்சியில் இந்தியா இணைய முடியும். இல்லையென்றால் வெளிநாட்டினர் நம் பிரச்னைகளுக்கு தொழில்நுட்பரீதியாகக் கொடுக்கும் தீர்வுகளுக்கு நாம் மிகப்பெரிய விலையை கொடுக்கவேண்டி இருக்கும்.

மூன்று வயதிலிருந்து 13 வயது வரை மண்பாண்டம் செய்தல், எலக்ட்ரீசியன், பிட்டர், பிளம்பர், மெக்கானிக், தச்சு வேலை போன்ற வேலைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தேசியக் கல்வி கொள்கை 2019 சொல்கிறது என்று சொன்னால் அது எவ்வளவு பிற்போக்குத்தனமாக இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இன்னும் 5 வருடத்தில் இந்த வேலைகளே இருக்காது என்ற நிலையில் உலகம் போய்க்கொண்டிருக்கிறது. உலகம் எங்கு சென்று கொண்டிருக்கிறது? இந்தியா எந்த தொழிற் கல்வியை நமது மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறது என்ற கேள்விக்கு பதிலைத் தேடினால் இந்தியாவிற்கென்று ஒரு தொலைநோக்குப் பார்வை இல்லை என்பது புரிகிறது. இந்தியாவிற்கு என்று எப்படிப்பட்ட மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாக வைத்து இந்த தேசிய கல்விக் கொள்கையில் தொழில் கல்விக்கான வரைவு உருவாக்கப்படவில்லை என்பது அப்பட்டமாக விளங்குகிறது.

குறைந்தபட்சம் அப்துல் கலாம் கொடுத்த ‘‘வளர்ந்த இந்தியா 2020’’ என்ற இலக்கை அடைவதற்கான அடுத்த பத்தாண்டுகளில் இப்படிப்பட்ட மனிதவளத்தை நாங்கள் உருவாக்குவோம் என்று சொல்லி இருந்தார்கள் என்று சொன்னால் அது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. ஆனால் தேசிய திறன் வளர்ச்சிக் கழகத்தின் கொள்கைக்கு ஏற்றவாறு மனித வளத்தை உருவாக்குவோம் என்று சொல்லி, கடந்த 15 ஆண்டுகளாக 150 மில்லியன் தனித்திறன் பயிற்சி பெற்றவர்களை உருவாக்க வேண்டும் என்று சொல்லி, இந்தியா உழைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரை இந்த முயற்சி வெற்றிபெறவில்லை.

கடந்த 10 ஆண்டுகளாக வெற்றிபெறாத ஒரு தனித் திறன் பயிற்சி மூலமாக ஏற்படுத்தக்கூடிய மனிதவளத்தை வைத்துக்கொண்டு உலகம் உருவாக்கக்கூடிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ற மனிதவளத்தை எப்படி உருவாக்குவது? ஒட்டுமொத்த தேசிய திறன் வளர்ச்சி கழகம் மாற்றியமைக்கப்பட வேண்டும். மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி, இப்படி பல்வேறு திட்டங்களில் வெளிநாட்டு இறக்குமதியைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

இந்த திட்டங்களை உருவாக்கக்கூடிய தொழில்நுட்பத்தை இந்தியா உருவாக்க வேண்டுமென்று சொன்னால் தேசிய கல்வி கொள்கையில் இடம் பெற்றிருக்கக் கூடிய மூன்று வயதில் இருந்து 13 வயது வரை உருவாக்கப்பட்ட தேவையில்லாத தொழில் பயிற்சி முறை கைவிடப்பட வேண்டும்.

ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு வரை தேசிய திறன் வளர்ச்சிக் கழகத்தின் பாடத்திட்டத்தின்படி மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையை மாற்றியமைத்து இந்தியா எதிர் நோக்கி இருக்கக்கூடிய சவால்கள் ஆன தண்ணீர் பிரச்னை, விவசாய பிரச்னை, உணவு உற்பத்தி பிரச்னை, சுற்றுச்சூழல் பிரச்னை, எரிசக்தி பிரச்னை, தட்பவெட்ப மாறுபாட்டை எதிர்கொள்ளக்கூடிய சவால்கள், மருத்துவம், கல்வி, உற்பத்தித்துறை, இண்டஸ்ட்ரி 2.0 முதல் 5.0-க்கு தேவையான இயந்திரங்கள் என்று 7 ஆழ்ந்த தொழில்நுட்பங்களின் மூலமாக பல்வேறு பிரச்னைகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்கவும், உருவாக்கவும், அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக்கூடிய மனித வளத்தையும், அந்த தொழில்நுட்பத்தின் மூலமாக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மனிதவளத்தையும், சேவைத் துறையையும் கட்டமைக்கக்கூடிய தொழில் பயிற்சிகளை நாம் முற்றிலுமாக மாற்றியமைத்து உருவாக்கி கொடுப்பதாக தேசிய கல்விக் கொள்கை அமைய வேண்டும்.

எனவே இன்றைய தேசியக் கல்விக் கொள்கையில் தொழில்நுட்பம் படிக்கும் அனைவரும் டிப்ளமோ முதல் இன்ஜினீயரிங் வரை தொழிற்சாலைகளில் ஓராண்டு பயிற்சியை கட்டாயமாக்கி கடைசி ஆண்டில் தொழில்துறைக்கு தேவையான அத்துனை பயிற்சிகளையும் அளித்து, வேலை கேட்பவரைக் காட்டிலும், வேலை கொடுப்போரை உருவாக்க வேண்டும். இந்தியா 2030-இல் எப்படி உலக நாடுகளோடு போட்டிபோடும் வல்லமையோடு இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு மனித வளத்தை உருவாக்கக் கூடியதாக தேசிய கல்விக் கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும். செய்வார்களா?

உங்கள் கனவுகளை, லட்சியங்களை பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள்: vponraj@gmail.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com