அத்தியாயம் - 39

2020-ல் 20 சதவீதம் எத்தனாலை பெட்ரோலுடன் கலப்பது என்ற இலக்கு; அது படிப்படியாக உயர்ந்து 2050-க்குள் 100 சதவீதம் என்ற இலக்கை எட்ட வேண்டும் என்று டாக்டர் கலாம் நிர்ணயித்து இருந்தார்.
அத்தியாயம் - 39

எரிசக்தி விவசாயம் பொருளாதாரத்தை உயர்த்தும்!

பொருளாதார மந்தநிலை எப்போது ஏற்பட்டாலும் அந்நியச் செலாவணி இருப்பு இந்தியாவுக்கான முதல் பாதுகாப்பாகச் செயல்படுகிறது. 2014-15-ல், இந்தியாவின் பொருளாதார ஆய்வில், அமெரிக்க டாலர் 750 பில்லியன் முதல் ஒரு டிரில்லியன் டாலர் வரை அந்நியச் செலாவணி இருப்பை இலக்காகக் கொள்ளலாம் என்று கூறியது. இந்தியாவின் மொத்த அந்நியச் செலாவணி இருப்பு 2019 ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவரப்படி 429 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. 2014-15-ல் குறிப்பிட்ட இலக்கை நாம் எட்டவில்லை என்றால், நமது ஏற்றுமதி கீழே விழுந்துவிட்டது மற்றும் இறக்குமதி அதிகமாகிவிட்டது என்றுதான் அர்த்தம்.

ஏப்ரல்-செப்டம்பர் 2018-19-ல் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதிகள் (வணிக மற்றும் சேவைகள் இணைந்து) 265.39 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல்-செப்டம்பர் 2018-19-ல் ஒட்டுமொத்த இறக்குமதி 321.40 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகளை ஒன்றாக எடுத்துக்கொண்டால், ஏப்ரல்-செப்டம்பர் 2018-19-க்கான ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறை 2017-18 ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் 43.07 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடும்போது 56.01 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 2018 நிலவரப்படி, இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்புகள் முக்கியமாக அமெரிக்க டாலர்களால் அமெரிக்க அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் நிறுவன பத்திரங்களின் வடிவங்களில் உள்ளன. அந்நியச் செலாவணி இருப்புகளில் கிட்டத்தட்ட 5% தங்கத்தில் உள்ளது. சீனக் குடியரசு (தைவான்) மற்றும் ஹாங்காங்கிற்கு சற்று கீழே, அந்நிய செலாவணி இருப்புகளின் நாடுகளின் பட்டியலில் இந்தியா 8-வது இடத்தில் (மார்ச் 2019) உள்ளது.

பிபிஏசி - [Petroleum Planning & Analysis Cell (PPAC)], இந்தியா 2018-19-ம் ஆண்டில் எண்ணெய் இறக்குமதிக்காக 111.9 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவிட்டது. இது முந்தைய நிதியாண்டில் 87.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இறக்குமதி செலவு 2015-16-ல் 64 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. நடப்பு நிதியாண்டில், கச்சா எண்ணெய் இறக்குமதி 233 மில்லியன் டன்களாக உயரும் என்றும், அந்நிய செலாவணி செலவினம் 112.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக ஓரளவு அதிகரிக்கும் என்றும் அது கணித்துள்ளது. ஒட்டுமொத்த அந்நியச் செலவாணியின் கையிருப்பில் 26 சதவிகிதம் எண்ணெய் இறக்குமதிக்கு மட்டும் செலவிடப்படுகிறது.

இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி சார்புநிலையை 10 சதவீதம் குறைக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்திருக்கலாம். ஆனால், இந்தியாவின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வெளிநாட்டு எண்ணெய்யை நம்பியிருப்பது அதிகபட்சமாக 84 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று சமீபத்திய அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 2015-ல் நடந்த ‘உர்ஜா சங்கம்’ மாநாட்டில் பேசிய பிரதமர், ‘இந்தியா தனது 75-வது ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது, 2013-14-ம் ஆண்டில் இந்தியா தனது எண்ணெய் இறக்குமதி சார்புநிலையை 77 சதவீதத்திலிருந்து 2022-க்குள் 67 சதவீதமாகக் குறைக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். மேலும், ‘2030-க்குள் சார்புநிலை பாதியாகக் குறைக்கப்படலாம்’ என்றும் அவர் கூறினார்.

ஆனால் நுகர்வு விறுவிறுப்பான வேகத்தில் வளர்ந்து வருவதோடு, உள்நாட்டு உற்பத்தி தேக்கநிலையில் இருப்பதால், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி சார்புநிலை 2017-18-ம் ஆண்டில் 82.9 சதவீதத்திலிருந்து 2018-19-ம் ஆண்டில் 83.7 சதவீதமாக உயர்ந்துள்ளதாக எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவு (பிபிஏசி) தெரிவித்துள்ளது. 2015-16-ம் ஆண்டில் இறக்குமதி சார்பு 80.6 சதவீதமாக இருந்தது. இது அடுத்த ஆண்டில் 81.7 சதவீதமாக உயர்ந்தது என்று பிபிஏசி தெரிவித்துள்ளது.

நாட்டின் எண்ணெய் நுகர்வு 2015-16-ல் 184.7 மில்லியன் டன்னிலிருந்து 2018-19-ம் ஆண்டில், தேவை 2.6 சதவீதம் அதிகரித்து, 211.6 மில்லியன் டன்னாக இருந்தது. இதற்கு மாறாக, உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து வீழ்ச்சியடைகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி 2015-16-ல் 36.9 மில்லியன் டன்னிலிருந்து மார்ச் 31, 2019 உடன் முடிவடைந்த நிதியாண்டில் 34.2 மில்லியன் டன்னாகச் சரிந்தது என்று பிபிஏசி-யின் தரவு காட்டுகிறது.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யைச் சார்ந்திருப்பதைக் குறைக்க உயிரி எரிபொருளின் பயன்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகளில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. ஆனால் எரிசக்தி பாதுகாப்பு என்ற கொள்கையை மாற்றி 2005-ல் டாக்டர் அப்துல் கலாம் கொடுத்த ‘2030-க்குள் எரிசக்தி சுதந்திரம்’ என்ற கொள்கையை 2010-ல் தொடங்கியிருந்தால்கூட இன்றைக்கு நாம் ஓரளவு அந்த இலக்கை நோக்கி முன்னேறியிருப்போம். நமது எண்ணெய் இறக்குமதி தேவையை குறைத்து, வீணாகும் அந்நியச் செலவாணியை அதிகரித்திருக்க முடிந்திருக்கும்.

இந்தியா, மழுப்பலான தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீட்டைப் பெற இது கடந்த ஐந்து ஆண்டுகளில் பலமுறை ஆய்வு விதிகளை மாற்றியது. முந்தைய புதிய ஆய்வு உரிமக் கொள்கை (New Exploration Licensing Policy - NELP)-யில் இருந்து, விலை மற்றும் சந்தைப்படுத்தல் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உரிமக் கொள்கை (Hydrocarbon Exploration and Licensing Policy - HELP) என மாற்றப்பட்டது. இந்த உரிமக்கொள்கை மூலம், இது நிறுவனங்களுக்கு அவர்கள் ஆராய விரும்பும் பகுதிகளைத் தேர்வுசெய்ய சுதந்திரம் அளித்தது. கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகள், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களிலிருந்து பறிக்கப்பட்டவை, ஏலம் விடப்பட்டன. ஆனால் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்தியில் முதலீடு செய்ய பெரிய நிறுவனங்கள் முன்வரவில்லை.

இந்தியாவுக்குத் தேவையான ஹைட்ரோகார்பன் வாயுக்கள் அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஒரு நாளைக்கு 540 மில்லியன் கன அடி தேவை. இதை ஆழ்கடலில் இருக்கும் ஹைட்ரோ கார்பன் இருப்பிடத்தில் எடுத்தாலே, ஒரு நாளைக்கு 450 மில்லியன் கன அடி அடுத்த 20 ஆண்டுகளுக்குக் கிடைக்கும். இதைவிடுத்து, விளைநிலங்களான டெல்டா மாவட்டத்தில் எடுக்க முயற்சித்து, மக்கள் எதிர்ப்பைச் சம்பாதித்து எடுக்கமுடியாமல், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கியதாலும், சரியான கொள்கை வகுத்து திட்டமிடல் இல்லாததன் காரணமாகவும் இன்றைக்கு இதிலும் பின்னடைவு. அதனால் நாம் இன்னும் அதிகமாக இறக்குமதியைச் சார்ந்துதான் இருக்க வேண்டிய நிலை. அதோடு அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி.) உற்பத்தி முந்தைய ஆண்டில் 20.8 மில்லியன் டன்னிலிருந்து 2018-19-ல் 19.6 மில்லியன் டன்னாகச் சரிந்தது. ஓ.என்.ஜி.சி.யின் எண்ணெய் உற்பத்தி 2016-17-ல் 20.9 மில்லியன் டன்னாகவும், 2015-16-ல் 21.1 மில்லியன் டன்னாகவும் இருந்தது. தனியார் நிறுவனங்களால் இயக்கப்படும் துறைகளின் வெளியீடு 2015-16-ல் 11.2 மில்லியன் டன்னிலிருந்து 2018-19-ல் 9.6 மில்லியன் டன்னாகவும் குறைந்துள்ளது.

இதில் 2030-க்குள் இரண்டு கொள்கைகளை அப்துல் கலாம் 2005-ம் ஆண்டு கொடுத்திருந்தார். அதாவது ஜெட்ரோபா போன்ற உயிரி எரிபொருள் தாவரங்கள் மூலம் வருடத்துக்கு 60 மில்லியன் டன் பயோ-டீஸல் உற்பத்தி என்ற ஓர் இலக்கு. இந்த இலக்கு, முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. பயோ-டீஸல் தாவர விவசாயத்தை ஆரம்பித்துவிட்டு மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இல்லை என்பதால் நட்டப்பட்டவர்கள், ஆயிரக்கணக்கான விவசாயிகள்.

2020-ல் 20 சதவீதம் எத்தனாலை பெட்ரோலுடன் கலப்பது என்ற இலக்கு; அது படிப்படியாக உயர்ந்து 2050-க்குள் 100 சதவீதம் என்ற இலக்கை எட்ட வேண்டும் என்று டாக்டர் கலாம் நிர்ணயித்து இருந்தார். ஆனால் 2019-ல் 7 சதவீதம் எத்தனால் இலக்கைத்தான் இந்தியா எட்டியிருக்கிறது என்று சொன்னால், அது லட்சிய உத்வேகத்தோடு நடக்கவில்லை என்பதாகத்தான் அர்த்தம். ஆனால், குறைந்தபட்சம் இந்த இரண்டு இலக்கும் 2014-ல்தான் ஏதோ உயிர்பெற்றிருக்கிறது, ஆனாலும் இந்த வேகம் போதாது என்பதைத்தான் இறக்குமதியால் வீணாகும் நமது அந்நியச் செலாவணி இழப்பும், எரிசக்தி சுதந்திரக் கொள்கை - 2030-ஐ கடைப்பிடிக்காததால் பயோ-டீஸல் உற்பத்திக் குறைவும், வேலைவாய்ப்பு இழப்பும் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. இது நமது பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது புலனாகிறது.

உயிரி எரிபொருள்கள்-2018 தொடர்பான தேசியக் கொள்கையை 2018 ஜூன் மாதத்தில்தான் அரசாங்கம் அங்கீகரித்தது. 2030-ம் ஆண்டளவில் 20% எத்தனால் கலத்தல் மற்றும் 5% பயோ-டீஸல் கலத்தல் ஆகியவற்றை எட்டுவதற்கான நோக்கத்தை இந்தக் கொள்கை கொண்டுள்ளது. எத்தனாலுக்கான தீவனங்களின் அளவை விரிவுபடுத்துகிறது. உற்பத்தி மற்றும் மேம்பட்ட உயிரி எரிபொருட்களின் உற்பத்திக்கான சலுகைகளை இந்தக் கொள்கை வழங்கியுள்ளது.

தற்போது, இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 850 கோடி லிட்டர் டீசல் நுகரப்படுகிறது. 2030-க்குள் 5 சதவீத பயோ-டீஸலை டீசலில் கலக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. ஆகவே, ஒரு வருடத்தில் 500 கோடி லிட்டர் பயோ-டீஸல் தேவைப்படுகிறது. இந்தியாவில், 2,700 கோடி லிட்டர் சமையல் எண்ணெய் (UCO) பயன்படுத்தப்படுகிறது. இதில் 140 கோடி யூகோவை மொத்த நுகர்வோர்களான ஹோட்டல், ரெஸ்டாரன்ட்கள் மற்றும் கேன்டீன்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்க முடியும். இது ஒவ்வோர் ஆண்டும் 110 கோடி லிட்டர் பயோ-டீஸலைக் கொடுக்கும். இதன்மூலம் வியாதிகளை உருவாக்கும் உபயோகிக்கப்பட்ட எண்ணெய்களை பஜ்ஜி, வடை செய்வதற்கு மீண்டும், மீண்டும் உபயோகிப்பது தடுக்கப்படும். தற்போது, யுகோவுக்கு என்று ஏற்படுத்தப்பட்ட எண்ணெய்ச் சேகரிப்பு வர்த்தகச் சங்கிலி என்று எதுவும் இல்லை. இது ஒரு மிகப்பெரிய வர்த்தக வேலை வாய்ப்பை மக்களுக்கு வழங்கும். ஆரம்பத்தில், பயோ-டீஸலை லிட்டருக்கு ரூ.51 என்ற விகிதத்தில் ஓ.எம்.சி.க்கள் கொள்முதல் செய்யும். இது இரண்டாம் ஆண்டில் ரூ.52.7 ஆகவும், மூன்றாம் ஆண்டில் லிட்டருக்கு ரூ.54.5 ஆகவும் அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவிக்கிறது.

தற்போது, இந்தியாவில் பயோ-டீஸல் மற்றும் எத்தனால் தொழில் மதிப்பு, ரூ.6,000 கோடியாக இருக்கிறது. நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் தேவையின் அடிப்படையில் 2022-ம் ஆண்டில் இந்தியாவில் உயிரி எரிபொருள் வர்த்தகம் ரூ.50,000 கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயோ-டீஸல் கொள்முதல் 2014-ல் தொடங்கியது மற்றும் ஒரு பைலட் திட்டம் ஆகஸ்ட் 2015-ல் தொடங்கியது. இது இப்போது ஆறு மாநிலங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சர்வதேச எரிசக்தி அமைப்பின் கண்ணோட்டத்தின்படி பெட்ரோல் மற்றும் டீசல் தேவை அதிகரித்தால், 2040-ம் ஆண்டில் உயிரி எரிபொருள் துறையின் அளவு ரூ.1.25 லட்சம் கோடியாக உயரும் என கணக்கிடப்பட்டிருக்கிறது.

பெட்ரோலில் கலப்பதற்காக எத்தனால் கொள்முதல் செய்வதற்கு 2014 டிசம்பரில் அரசாங்கம் லிட்டருக்கு ரூ.48.50 முதல் ரூ.49.50 வரை நிர்ணயித்தது. பெட்ரோல் உற்பத்தி செய்வதற்கான விலையைவிட இதன் விலை அதிகம். எனவே இதனால் இறக்குமதி குறைந்து, கிடைக்கும் அந்நியச் செலாவணி சேமிப்பில் வரும் நன்மையை எத்தனால் வரிகுறைப்பில் காட்டினால் அது பொருளாதாரத்தை, உற்பத்தியை, வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும்.

கச்சா எண்ணெய், தூய்மையான சூழல், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் மற்றும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு ஆகியவற்றை - இறக்குமதி செய்வதைக் குறைப்பதால் ஏற்படும் நன்மைகளை உயிரி எரிபொருள்கள் விவசாய உற்பத்தி கொண்டுள்ளது. மேக் இன் இந்தியா, ஸ்வச் பாரத் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கான இந்திய அரசு முயற்சிகளுடன் உயிரி எரிபொருள் உற்பத்தி திட்டம் சேர்ந்தால், அதிகப்படியான பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதிச் சார்பைக் குறைக்க எரிசக்தி தாவரங்கள் பயிரிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

2005-ல் டாக்டர் அப்துல் கலாம் முன்னெடுத்த பயோஃபியூயல் - உயிரி எரிபொருள் கொள்கைக்கு - ஆதரவளிக்காத அரசுகள் இன்றைக்காவது ஜெட்ரோபா போன்ற எரிசக்தி தாவரங்களைச் சாகுபடி செய்ய ஊக்குவிக்கவும், வருடத்திற்கு 60 மில்லியன் டன் உயிரி எரிபொருள் மற்றும் ஜெட் உயிரி எரிபொருளை உருவாக்கவும், அவற்றை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விமான எரிபொருளாகப் பயன்படுத்தவும் இலக்கு உருவாக்க வேண்டும். இன்றைக்கு உலகம் முழுவதும் விமான நிறுவனங்கள், பயோபியூயல் உயிரி எரிபொருள் தேவையை உணர்ந்து, பில்லியன் டாலர்கள் கணக்கில் செலவழித்து உருவாக்குகிறார்கள். இன்றைக்கு ரிலையன்ஸ் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் ஜெட்ரோபா உயிரி எரிபொருள், எத்தனால் உற்பத்தி துறையில் கால் பதித்து இலக்கு நிர்ணயித்து செயல்பட ஆரம்பித்திருக்கிறது. உயிரி எரிபொருள் உருவாக்கும் நொதித்தல் தொழிற்சாலைகள் உருவாக்குவதற்கான முதலீட்டு சூழல் அமைப்பை உருவாக்குதல், மற்றும் உயிரி எரிபொருளை வாங்கி வாகனங்களை இயக்குவதற்கு கட்டாய தேவையாக்க, விற்பதற்குமான கொள்கைகளைச் சட்டங்களை இயற்ற வேண்டும். வாகனங்களில் உயிரி எரிபொருளைப் பயன்படுத்தவும், உற்பத்தித் துறையில் அதற்கான மாற்றத்தை ஏற்படுத்தும் கொள்கைகளையும் செயல்படுத்த வேண்டும். கரும்பு மற்றும் இனிப்பு சோளம் உற்பத்தியை எத்தனால் உற்பத்திக்காக ஊக்குவித்தல் மற்றும் 2020-ம் ஆண்டில் 20% எத்தனால் பயன்பாட்டை கட்டாயமாகச் செயல்படுத்துதல் மற்றும் எத்தனால் பயன்பாட்டை 2030-ல் 30 சதவீதமாக உயர்த்தி 2050-ல் 100 சதவீதமாக எத்தனால் பயன்பாட்டை எட்டவும் கொள்கைத் திட்டம் வகுத்து இதைச் செயல்படுத்த ஆரம்பத் தொகையாக ரூ.40,000 கோடி பட்ஜெட் ஒதுக்கினால் நாம் எரிசக்தி சுதந்திரத்தின் ஒரு பகுதியை முழுமையாக எட்டுவோம்.

உங்கள் கனவுகளை, லட்சியங்களை பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள் vponraj@gmail.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com