Enable Javscript for better performance
33. என் கண்ணே!- Dinamani

சுடச்சுட

  

   

  அது ஃப்ளாரன்ஸ் நகரத்தில் இருந்த ஒரு தேவாலயத்தோடு இணைந்த இடுகாடு. அதில் ஒருவரின் சமாதியில் கீழ்க்கண்ட வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன:

  ‘மூக்குக் கண்ணாடியை உருவாக்கிய சால்வினோ டெக்லி அர்மாட்டி இங்கே உறங்குகிறார். அவருடைய பாவங்களை இறைவன் மன்னிக்கட்டும்’!

  அவர் என்ன பாவம் செய்தார் என்ற கேள்வியில் உங்களுக்கு மூக்குக்கு மேல் வியர்க்கிறதா? ஆம், அதேதான். அவர் செய்த பாவம் மூக்குக் கண்ணாடிதான்! அது ஏன் பாவம்? அது மனிதகுலத்துக்கு செய்யப்பட்ட மிகப்பெரும் நன்மையல்லவா என்று கேட்கத் தோன்றுகிறதா?

  பதில்: ஆம் நன்மைதான். ஆனால் இல்லை. என்ன, வரும் ஆனால் வராதுபோல குழப்பமாக உள்ளதா? மூ.க. (மூக்குக் கண்ணாடி) போட்டால் பார்ப்பதெல்லாம் சரியாகத் தெரியும்தான். ஆனால் கண்ணின் பார்வைத் திறன் குறைந்துகொண்டே போகும். மூ.க. ஒரு தாற்காலிக ஏற்பாடுதான். ஆனால் அதுவே இன்று நிரந்தரமாகிவிட்டது. மூ.க. இல்லாமல் எல்கேஜி படிக்கும் குழந்தைகூட இல்லை என்னுமளவுக்கு மூ.க. பெருகிவிட்டது.

  கண்பார்வை சரியாக இருக்கும்வரை நாம் எதைப்பற்றியும் யோசிப்பதில்லை. ஆனால் பார்வையில் ஏதாவது ஒரு சின்ன பிரச்னை வந்துவிட்டால் போதும், உடனே மூ.க.வின் உதவியை நாடுகிறோம். அதை மிகச்சரியானதாக, மிக உயர்ந்த தரமுள்ளதாகக் கொடுக்கும் மருத்துவமனை எது என்று சிந்தித்து அங்கே செல்கிறோம். இரண்டாயிரம், மூவாயிரம் ரூபாய்க்கு மூ.க. கிடைக்கிறதென்றால் நமக்கு அதன் மீது நம்பிக்கை வருவதில்லை! புகழ்பெற்ற மருத்துவமனையின் கண் மருத்துவர் பரிசோதித்துவிட்டு, அவர் எழுதிக்கொடுத்த ‘ப்ராண்ட்’ கண்ணாடியை ‘ப்ராக்ரஸிவ் லென்ஸ்’ என்று பெருமையுடன் சொல்லிக்கொண்டு பதினைந்தாயிரம் கொடுத்து கண்ணில் மாட்டிக்கொண்ட பிறகுதான் நிம்மதியும் பெருமையும்! இப்படித்தானே போகிறது நம் காலம்?! சின்ன அரிப்பு ஏற்பட்டால்கூட பெரிய அப்பல்லோவுக்குத்தான் நான் போவேன் என்று சொல்வதில்தானே நமக்குப் பெருமையாக உள்ளது! காலத்தின் கோலம் என்பது இதுதான்! நோய்நொடி இல்லாமல் நான் இருக்கிறேன் என்று பெருமைப்பட வேண்டிய மனிதன் மருத்துவமனை, மருத்துவர்களின் பெயர்களில் பெருமை கொள்ளும்படி காலம் நம்மை மாற்றிவிட்டது!

  ஆனால் நீங்கள் தங்க ஃப்ரேம் போட்டு மூ.க. போட்டுக்கொண்டாலும் ஆண்டுகள் செல்லச் செல்ல, மூ.க.வின் ‘பாய்ன்ட்’கள் கூடிக்கொண்டே போகும். அப்படீன்னா, கண்களின் திறன் குறைந்துகொண்டே போகிறது என்று அர்த்தம்! கொஞ்சம் கொஞ்சமாக நம்மைக் குருடர்களாக்கும் முயற்சிதான் மூ.க. அணிவதும், அணியச் சொல்வதும் என்று நான் சொன்னால், அது உங்களுக்கு அதிகப்பிரசங்கித்தனமாகத் தெரியலாம். ஆனாலும் உண்மை அதுதான்! போகட்டும், இந்த விஷயத்துக்கு கொஞ்ச நேரம் கழித்து வரலாம். கொஞ்சம் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு உங்களைத் தயார் செய்யவேண்டி உள்ளது!

  மூ.க. போடாத மனிதர்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு கண்ணாடி அல்லது கண்ணுக்கு உள்ளே பொருத்திக்கொள்ளும் லென்ஸ்களின் சாம்ராஜ்ஜியம் இன்று கோலோச்சுகிறது. சின்னப் பிள்ளைகளும் இளைஞர்களும், இளைஞிகளும் தடித்த சோடாபுட்டிகளுடன்தான் பள்ளிக்கூடம், கல்லூரி என்று போய்க்கொண்டுள்ளார்கள். கண்ணாடியைக் கொஞ்ச நேரம் கழட்டிவிட்டால் அவ்வளவுதான். உலகமே ‘ப்ளர்’ ஆகிவிடுகிறது அவர்களுக்கு. இதுதான் நடப்பு நிஜமாகும். ‘கண்களுக்கான முடவனின் ஊன்றுகோல்’ (optical crutches) என்று மூ.க.வை வர்ணிக்கிறார் உலகப்புகழ் பெற்ற ஒரு கண் மருத்துவர்! அவர் பெயரை அப்புறம் சொல்கிறேன், ஏனெனில் அவர்தான் இக்கட்டுரைகளின் கதாநாயகரே!

  பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நூலகங்கள், பத்திரிகைகள், புத்தகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், ஆண்ட்ராய்டுகள், ஆப்பிள்கள் எல்லாம் வருவதற்கு முன், மனிதன் வேட்டைக்காரனாக, விவசாயியாக, மேய்ப்பனாக, போர்வீரனாக – இப்படியெல்லாம்தான் இருந்தான். அந்த வேலைகளுக்கெல்லாம் அவனுக்கு தூரப்பார்வையே போதுமானதாக இருந்தது. தூரத்தில் உள்ளதைப் பார்க்க கண்கள் சிரமப்பட வேண்டியதில்லை. ஓய்வாக கண்களைப் போட்டுவைத்தாலே போதும். வானத்தையும் மேகத்தையும், நிலவையும் பார்க்க நம் கண்கள் சிரமப்படுமா என்ன? ஆனால், இந்தக் காலத்தில்தான் ‘எல்லாவற்றையும்’ ரொம்ப கிட்டப் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் அதற்கான அவசியமும் வந்துவிட்டது! இது ‘க்ளோஸப்’புகளின் காலம். எழுத்து வந்த பிறகு கண்களுக்கு புதியதொரு வேலை வந்துவிட்டது.

  சரி, நான் இப்போது கேட்கிறேன். மனசாட்சியோடு பதில் சொல்லுங்கள். மூ.க. போடாமலே உங்களுக்குப் பார்வை பிரமாதமாகத் தெரியும் என்று நான் சொன்னால் நம்புவீர்களா? மூ.க. அணியாமலே, அல்லது அணிந்ததை கழற்றி வைத்துவிட்டு வெறும் கண்களுடனேயே சில பயிற்சிகளை மேற்கொண்டால் இழந்த பிரகாசமான பார்வையை மீண்டும் பெறமுடியும் என்றால் நம்புவீர்களா? நீங்கள் நம்பாவிட்டாலும் உண்மை அதுதான். ஆனால் அந்த உண்மையை உணர்ந்துகொள்வதற்கு உங்கள் கண்களைப் பற்றி இதுவரை தெரியாமல் இருந்த சில அடிப்படைகளைத் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. பார்க்கலாமா? வாருங்கள்.

  கண்ணின் சரீர சாஸ்திரம்

  கண்ணின் அமைப்பு பற்றியும் அதன் முக்கிய வெளி மற்றும் உள்ளுறுப்புகள் பற்றியும் நாம் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. கொஞ்சம்தான். ஏனெனில், எல்லா உறுப்புகளின் பெயர்களையும் சொல்லி பாடம் எடுக்க ஆரம்பித்தால், போங்கப்பா, நான் மூ.க.வே போட்டுக்கொள்கிறேன் என்ற முடிவுக்கு நீங்கள் வந்துவிடலாம்! எனவே மிக முக்கியமான விஷயம் என்று நான் நினைப்பதை மட்டும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

  நம் கண்கள் கோள வடிவமானவை. அப்படியா என்று கேட்கக்கூடாது. சதுரமாகவோ, செவ்வகமாகவோ இல்லை. பரிபூரண வட்ட வடிவம் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஏறத்தாழ அப்படி என்று வைத்துக்கொள்ளலாம். இரண்டு பகுதிகள் சேர்ந்ததாக கண் உள்ளது. முன்னால் ஒரு பகுதியும் பின்னால் ஒரு பகுதியும். முன்னால் உள்ள பகுதியில் கார்னியா (cornea), ஐரிஸ் (iris), லென்ஸ் ஆகிய உறுப்புகள் உள்ளன. தமிழில் இந்தப் பாகங்களுக்கு குழப்பமான பெயர்கள் கொடுத்திருப்பதால், நான் ஆங்கில சொற்களையே பயன்படுத்துகிறேன்.

  கண் கோளத்தின் முன்பகுதி கார்னியா. உள்ளே இருக்கும் ஐரிஸ், கண்ணின் பாவை ஆகியவற்றை பாதுகாக்க இது உதவுகிறது. கார்னியா ஒளி ஊடுருவக்கூடியதாகவும் வளைவாகவும் இருக்கிறது. கார்னியா என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டாலும், அதற்குள் ஐந்து அடுக்குகள் உள்ளன! மனித உடலின் பெரும்பாலான பகுதிகள் அடுக்குகளால்தான் ஆக்கப்பட்டுள்ளன. எதுவுமே ‘சிம்பிளா’ன விஷயமில்லை. மிகமிகச் சிக்கலான சமாசாரம்தான் நம் உடல். செய்தது யார் இறைவனல்லவா! அப்படித்தான் இருக்கும்!

  ஸ்க்ளீரா என்பது கார்னியாவின் பின்பகுதி முழுவதும் என்று சொல்லலாம். அது வெள்ளை நிறத்தில் உள்ள புறத்தோலாகும். அதோடு கார்னியா இணைந்திருக்கும். ஒரு வட்டம் வரைந்த பிறகு வலது பக்கமாக அவ்வட்டத்தில் கொஞ்சம் கூடுதலாக ஒரு பிதுக்கம் மாதிரி வரைந்தால், அந்தப் பிதுக்கம்தான் கார்னியா, மீதிப்பகுதி ஸ்க்ளீரா. கண்ணின் உள் பகுதியில் விழித்திரை எனப்படும் ரெட்டினா இருக்கும். மிக முக்கியமான பகுதிகளைப் பற்றி மட்டும்தான் நான் பேசுகிறேன் (ஏனெனில் எனக்கு அவ்வளவுதான் தெரியும்)!

  கண்ணைத் திறந்து நிலைக்கண்ணாடியில் நம் கண்களையே பார்த்தால் இந்தப் பாகங்களை எளிதில் புரிந்துகொள்ளலாம். வெள்ளையாகத் தெரியும் பகுதிதான் ஸ்க்ளீரா. ஸ்க்ளீராவின் முன்பகுதியாக இருப்பதுதான் கார்னியா. பாவைக்குப் பின்னால் லென்ஸ் இருப்பதால் அது தெரிவதில்லை.

  கார்னியாவும் ஸ்க்ளீராவும் சேர்ந்து ஆறு பகுதிகள் என்று வைத்துக்கொண்டால் கார்னியா மட்டுமே ஒரு பகுதியாக இருக்கும். மீதி ஆறில் ஐந்து பகுதிகள் கண்ணின் பின்பக்கத்துக்குப் போய்விடுகின்றன, புரிகிறதா? இரண்டும் சேர்ந்து கிட்டத்தட்ட 24 மி.மீ. குறுக்களவு கொண்டது என்று ஒரு கணக்கு உண்டு. ஆனால் நமக்கு அதெல்லாம் தேவையில்லை. நமக்கு வாத்து முட்டைக் கண்ணாக இருந்தால் என்ன, சீனக்கண்ணாக இருந்தாலென்ன, ஊனக்கண்ணாக இல்லாமலிருந்தால் போதாதா?!

  கார்னியாவை ஊடுருவி, கண்ணின் பாவை வழியாகச் சென்று பின் லென்ஸை கடந்து ஒளிக்கதிர்கள் செல்லும். பார்க்கப்படும் பொருள் எவ்வளவு அருகில் அல்லது தூரத்தில் இருக்கிறது என்பதற்குத் தகுந்தவாறு லென்ஸ் தன் அளவை ‘அட்ஜஸ்ட்’ செய்துகொள்ளும். இதை கண்ணின் ‘அக்காமடேஷன்’ என்று சொல்கின்றனர். இதுபற்றி கொஞ்சம் விரிவாக பின்னர் பார்க்க இருக்கிறோம்.

  கார்னியா, பாவை, லென்ஸ் வழியாகச் செல்லும் ஒளிக்கதிர்கள் கடைசியில் போய் ரெட்டினா மீது விழும். அங்கே அவை மின்சாரக் குறிப்புகளாக மாற்றப்பட்டு மூளைக்கு அனுப்பப்படும். அங்கே உள்ள பார்வை மையம் அதை உள்வாங்கிக்கொண்டு, ஹலோ நீ இப்போது ஒரு யானைக்குப் பின்னால் நின்றுகொண்டிருக்கிறாய் என்று நமக்குச் சொல்லும். நாமும் யானையைப் பார்ப்போம்!

  கண்ணின் முன்பக்கத்தில் தெரியும் வட்டம்தான் ஐரிஸ் எனப்படும். அகராதியில் இதற்கு ‘கருவிழி’ என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது சரியான தமிழாக்கமல்ல. ஏனெனில், ஐரிஸின் நடுவில் இருக்கும் வட்ட வடிவ திறப்பை வேண்டுமானால் கருவிழி என்று சொல்லலாம். ஆனால் அது பாவை எனப்படுகிறது. எனவே, நான் ஐரிஸ் என்றே சொல்லிவிடுகிறேன்.

  சாதாரணமாக நம் கண்ணைப் பார்த்தாலே ஐரிஸ் தெரியும். ஐரிஸை சுற்றி இருக்கும் வட்ட வடிவமான திறப்பு அல்லது ஐரிஸின் நடுவில் இருக்கும் சிறு வட்டம்தான் பாவை (pupil). ஐரிஸின் நிறம் பொதுவாக நீலமாகவோ பழுப்பாகவோ இருக்கும். உங்கள் கண்களின் நிறம் என்னவென்பதை ஐரிஸை வைத்துதான் முடிவு செய்வார்கள்.

  பாவையின் குறுக்களவை ஐரிஸ்தான் நீட்டவோ சுருக்கவோ செய்யும். அப்படிச் செய்யும்போதுதான் ரெட்டினா எனப்படும் விழித்திரையின் மீது, தேவைக்கேற்றவாறு அதிகமாகவோ குறைவாகவோ ஒளி பாயும். அதாவது, ரெட்டினா மீது எவ்வளவு ஒளி பட வேண்டும் என்பதை ஐரிஸ் கட்டுப்படுத்துகிறது என்றும் சொல்லலாம். வெளிச்சம் அதிகமாக இருந்தால் பாவை சுருங்கிக்கொள்ளும். குறைவாக இருந்தால் விரிந்துகொள்ளும்.

  கண்ணின் வெளிப்பக்கத்தில் ஆறு தசைகள் இணைந்துள்ளன. மேலே, கீழே, பக்கவாட்டில் என நான்கு தசைகள். அவற்றுக்கு ரெக்டி (recti) என்று பெயர். கண்களை எந்தத் திசையில் வேண்டுமானாலும் திருப்ப இத்தசைகளே உதவுகின்றன. மேலும் இரண்டு சாய்வு தசைகள் (oblique muscles), கண்களுக்கு உள்ளே உள்ள குழியில் பெல்ட் போட்ட மாதிரி கண்களைப் பாதுகாக்கின்றன.

  இத்தசைகள் யாவும் சமமாகச் சுருங்கினால், கண்ணின் தோற்றமே தட்டையாக மாறிப்போகும். அப்போது முன்பக்கம் பின்பக்கத்துக்கு இடையே உள்ள இடைவெளி மிகவும் குறைந்திருக்கும். அந்நிலையைத்தான் தூரப்பார்வை என்கின்றனர். தூரப்பார்வை உள்ளவர் தூரத்தில் உள்ள பொருள்களைத் தெளிவாகப் பார்க்க முடியும். அருகில் உள்ள பொருள்கள் தெளிவாகத் தெரியாது. இதற்கு நேர் மாறானது கிட்டப்பார்வை.

  மேலே குறிப்பிட்ட இரண்டு சாய்வு தசைகளும் கண்ணின் மையப்பகுதியைச் சுருக்கித் தட்டையாக்கும்போது, நீளவாக்கில் அப்பகுதி நீண்டுவிடுகிறது. அப்போது கண்ணின் முன்பக்கச் சுவர்களுக்கும் பின்பக்கச் சுவர்களுக்கும் இடையே உள்ள தூரம் அதிகமாகிறது. அருகில் உள்ளவற்றைப் பார்க்க இந்நிலை தேவைப்படுகிறது.

  கண்ணின் உட்புறம் இரண்டு அறைகளாக உள்ளது. விழியின் முன்பக்கச் சுவர் போன்ற அமைப்பின் பின்புறமாக ஒரு சின்ன அறை போன்ற அமைப்பு உள்ளது. அதில் ஒரு மெல்லிய திரவம் நிரப்பப்பட்டுள்ளது. விழியின் முன்பக்கத்தையும் லென்ஸையும் அதுதான் பிரித்துவைத்துள்ளது. விழியின் உள்சுவர்களோடு இணைக்கப்பட்டுள்ளது விழியின் லென்ஸ். அந்த லென்ஸுக்கு பின்பக்கமும் ஜெல்லி போன்ற ஒரு திரவம் உள்ளது. முன் பின் இருக்கும் இந்தத் திரவங்கள் கொடுக்கும் அழுத்தத்தால்தான், கண்ணின் கோள வடிவம் குலையாமல் காப்பாற்றப்படுகிறது என்றும் சொல்லலாம். கண்ணின் லென்ஸுக்குள்ளும் திரவ சமாசாரங்களே உள்ளன.

  விழியின் சுவர்கள் ஒளி ஊடுருவ முடியாதவை (opaque). லென்ஸ் வழியாகத்தான் ஒளி உள்ளே செல்ல முடியும்.

  ரெட்டினாவில் பத்து அடுக்குகள் உள்ளன என்றால் நம்ப முடியுமா? ஆனால் அதுதான் உண்மை. ரெட்டினாவின் முடிவில் தண்டுகளும் கூம்புகளுமாய் (rods and cones) இருக்கும். நாம் பார்க்கும் பொருளின் நிறம் என்ன, வடிவம் என்ன என்றெல்லாம் தெரிந்துகொள்ள அவை உதவுகின்றன. உள்ளே போகும் ஒளி எனப்படும் மின்காந்த அலைகளை மின்வேதிப்பொருள் அலைகளாக மாற்ற அவை உதவுகின்றன. ‘ரேடியன்ட் எனர்ஜி’ எனப்படும் ஆற்றலை வேறுவகையான ஆற்றலாக மாற்றுகின்றன. எல்லாம் முடிந்து, மூளையில் இருக்கும் பார்வை மையம் (visual center) என்ற பகுதிக்குச் செல்கின்றன. கடைசியாக, மூளையின் அந்த மையம்தான் நாம் பார்ப்பது பெண்ணா அல்லது பொம்மையா என்பதைப் புரியவைக்கிறது!

  ஒரு பெண்ணைப் பார்த்து நாம் ஜொள் விடுவதற்கு முன் ஆயிரக்கணக்கான மின்காந்த வேதியியல் மாற்றங்களை நம் விழி நிகழ்த்திவிடுகிறது! கண்மூடிக் கண் திறக்கும் நேரத்துக்குள் அவையெல்லாம் நிகழ்ந்துவிடுவதால் நமக்கு அவளுடைய அழகு, நிறம், உயரம் இன்ன பிறவெல்லாம் சட்டென்று மூளைக்குள் பதிவாக, நாம் ‘மெர்சலாகி’விடுகிறோம்! ஆனால் இதற்கெல்லாம் நாம் மேலே பார்த்த ரெட்டினா, பாவை, ஐரிஸ் போன்ற எல்லா உள் உறுப்புகளும் தத்தம் வேலையை சரியாகச் செய்யவேண்டி உள்ளது!

  எல்லாமே தலைகீழ்

  ரெட்டினாவில் விழும் பிம்பம் எப்போதுமே செங்குத்தாகவும், பக்கவாட்டிலும் தலைகீழாகத்தான் விழும். பார்க்கப்படும் ஒரு பொருளின் மேல் பகுதியில் இருந்து விழும் ஒளி விழித்திரையின் கீழ்ப்பகுதியில் விழும். அதேபோல பார்க்கப்படும் ஒரு பொருளின் கீழ்ப்பகுதியில் இருந்து வரும் ஒளி விழித்திரையின் மேல் பகுதியில் விழும். ஏனெனில், அப்பகுதிகள்தான் அந்த பிம்பத்தை வாங்கிக்கொள்ளும் மெல்லுறை அல்லது திரையாகும். அதேபோல, வலது பக்கத்தில் உள்ளது இடது பக்கத்திலும், இடது பக்கத்திலுள்ளது வலது பக்கத்திலும் விழும். நாம் நம்மைக் நிலைக்கண்ணாடியில் பார்த்தால் தெரிவதுபோல. இதுதான் பார்வையில் பிம்பங்கள் விழும் அடிப்படை. இதைப் புரிந்துகொள்வது அவசியம்.

  கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இறைவன் கொடுத்த பார்வை என்பது எவ்வளவு பெரிய அற்புதம் என்பது விளங்கும். வலது பக்கம் உள்ள பொருள் விழித்திரையின் இடது பக்கமும், இடது பக்கம் உள்ளது வலது பக்கமும், மேலே உள்ளது கீழேயும், கீழே உள்ளது மேலேயும், அப்படி உள்ளது இப்படியும், இப்படி உள்ளது அப்படியும் – இப்படி கண்ணா பின்னாவென்று குழப்பிய காட்சியை ஒவ்வொரு முறையும் நேராக்கி நாம் புரிந்துகொள்கிறோம். வாழ்வின் ஒவ்வொரு கணமும் இந்தக் குழப்பங்களும் நேராக்குதலும் நிகழ்ந்துகொண்டே உள்ளன. ஒவ்வொரு கணமும் அது மிகச்சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டு பார்க்கப்படுகிறது! இந்த இமாலய வேலை எப்படி எந்நேரமும் சாத்தியப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ளவோ விளக்கவோ இன்னும் மனிதனால் முடியவில்லை!

  ஆனால், கண்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான இன்னொரு விஷயம் உள்ளது. ஒரு பொருளை அல்லது மனிதனைப் பார்ப்பதற்குக் கண்ணும் அதைச் சார்ந்த உறுப்புகளும் என்னவெல்லாம் செய்யும் என்று சுருக்கமாகப் பார்த்தோம். ஆனால், கடைசியில் மூளையில் உள்ள பார்வை மையத்துக்குச் (Visual Centre) சென்ற பிறகுதான் நாம் பார்த்தது திரிஷாவையா அல்லது அமித்ஷாவையா என்ற முடிவு கிடைக்கிறது! அது ஒளிப்படம் அல்ல, திரிஷாவேதான் என்று மூளை புரிந்துகொள்கிறது. அது புரிந்துகொண்ட பிறகுதான் நம்மால் திரிஷாவைப் பார்க்க முடியும்! அதாவது, நாம் கண்களால் பார்க்கவில்லை, மூளையால்தான் பார்க்கிறோம்! எப்போதுமே!

  நம் மூளையில் உள்ள பார்வை மையத்தை ‘ஆஃப்’ செய்துவைக்க முடிந்தால், நமக்குக் கண்கள் இருந்தாலும் நம்மால் பார்க்க முடியாது! பிறகு தடவிப் பார்த்து, தொட்டுப் பார்த்துதான் தெரிந்துகொள்ள முடியும்!

  இன்னும் பார்க்கலாம்…

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai