Enable Javscript for better performance
45. எஹ்ரட் டயட் - 4- Dinamani

சுடச்சுட

  

  45. எஹ்ரட் டயட் - 4

  By நாகூர் ரூமி  |   Published on : 20th March 2017 12:00 AM  |   அ+அ அ-   |    |  

   

  விரதம் இருந்த பிறகுதான் ஒருவருடைய மனம் தெளிவாகிறது - எஹ்ரட்

   

  தவறாக உண்ணுவதால் நோய் உண்டாகிறது எனில், கொஞ்ச நாளைக்கு எதுவும் உண்ணாமல், குடிக்காமல் இருந்தால் நோய் தீர்கிறது என்ற உண்மையை உலகுக்கு எஹ்ரட் எடுத்துச் சொன்னதைப் பற்றிக் கொஞ்சம் பார்த்தோம். அதுபற்றி விரிவாகப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில், நோன்பு என்றும் விரதம் என்றும் சொல்லப்படும் ஒரு அற்புதச் செயல், நாம் நினைப்பதுபோல அவ்வளவு எளிதானது இல்லை. எனவே, அதுபற்றிப் பார்க்கும் முன், சில குறிப்பிட்ட நோய்களைப் பற்றி எஹ்ரட் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

  சளி

  தலை, தொண்டை மற்றும் நுரையீரல் தொடர்பான குழாய்களிலும் பள்ளங்களிலும் தங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்ற செய்யப்படும் முயற்சிதான் சளியாகும்.

  நிமோனியா

  சளி தீவிரமாகி ஸ்பாஞ்ச் போன்ற நம் மிக முக்கிய உள்ளுறுப்பான நுரையீரலில் உள்ள கோழையையெல்லாம் வெளியேற்றுகிறது. அப்போது, வெளியேற்றுதலுக்கு உதவும் வகையில் ரத்தக்கசிவும் ஏற்படுகிறது. முழு உடம்பும் இந்த நிகழ்வுக்கு ஒத்துழைக்கிறது. அதன்காரணமாக, உடல் உஷ்ணம் பல மடங்கு அதிகரிக்கிறது. அது நம்மை அச்சப்படுத்தும் விதத்தில் இருக்கும். இதைத்தான் நிமோனியா என்று கூறுகின்றனர்.

  காசநோய்

  மருந்து மூலமாகவும், தாங்கள் சிபாரிசு செய்யும் டயட் மூலமாகவும், நோய் அறிகுறிகளை டாக்டர்கள் உள்ளேயே அமுக்கிவைக்கின்றனர். ஆனால், அப்படிச் செய்வதன் மூலமாக இயற்கையின் சுத்தப்படுத்தும் செயலைத் தடுத்துவிடுகின்றனர். நோயாளி இறக்காவிட்டால், கழிவு வெளியேற்றம் ‘க்ரானிக்’ ஆகிவிடுகிறது. சளியை அதிகமாக்கும் உணவுகளை டாக்டர்கள் தவறாக சிபாரிசு செய்ய, அதை உண்டதன் காரணமாக நோயாளி தொடர்ந்து, தன் சளிக்கோழையை தன் நுரையீரல் வழியாகவே வெளியேற்ற வேண்டியதாகிறது. அதனால், நுரையீரல் பழுதுபடுகிறது. இந்த நிலையைத்தான் காசநோய் என்று கூறுகின்றனர்.

  பல்வலி

  இது இயற்கையின் எச்சரிக்கை மணியாகும். “சாப்பிடாதே, நான் பழுது பார்த்துக்கொண்டிருக்கிறேன். உள்ளே கழிவுகளும் சீழும் உள்ளன. நீ எலுமிச்சம் பழச் சத்துக் குறைவான உணவையும் இறைச்சியையும் அதிகமாக உண்டுள்ளாய்” என்று பல் சொல்கிறது.

  வாதநோய்கள்

  மியூகஸ், யூரிக் அமிலம் போன்றவை மூட்டுகள் இணையும் இடங்களில் தேங்குகின்றன. எப்போதுமே இறைச்சி உணவை எடுத்துக்கொள்பவர்களுக்கு இப்படி ஏற்படுவது இயற்கை.

  வயிற்று வலித் தொல்லைகள்

  நோய் கொடுக்கும் சமாசாரங்களை உள்வாங்கும் முக்கிய உறுப்பு வயிறுதான். தன்னுள்ளே வந்த சமாசாரங்களையெல்லாம் செரிக்கவும், செரித்தபின் தன்னைக் காலி செய்துகொள்ளவும், வயிற்றுக்கென்று ஒரு எல்லை உள்ளது. அதற்குள்தான் அது இயங்க முடியும். எவ்வளவு சிறப்பான உணவாக இருந்தாலும், அதிலும் மியூகஸ், அமிலம் கலந்துதான் இருக்கும். எல்லார் வயிற்றிலும் இந்தக் கழிவுகள் இருக்கும். எவ்வளவு நாளைக்கு ஒருவர் இவற்றை தாங்கமுடியும் என்பதைப் பொறுத்தே, வயிற்றுப் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கும்.

  கழுத்து வீக்கம் (GOITRE)

  அபரிமிதமான கழிவுகள் ரத்த ஓட்டத்தில் கலந்துவிடாமல் கழுத்திலேயே தேக்கிவைக்கும் இயற்கையின் அறிவார்ந்த செயலாகும்.

  கொப்பளம்

  இதுவும் கழுத்து வீக்கம் போன்றதுதான். ஆனால், இங்கே கழிவுகள் வெளியில், கண்ணால் பார்க்க முடிகிற மாதிரி தேங்கிவிடுகின்றன.

  திக்குவாய்

  தொண்டையில் தேங்கும் சிறப்புக் கழிவுகள் இவை. எனவே, குரல்வளை நாளங்களின் செயல்பாட்டினைத் தடுக்கும் வகையில் இவை இருப்பதால் வாய் திக்குகிறது. பல திக்குவாய்க்காரர்களை நான் குணப்படுத்தியுள்ளேன் என்கிறார் எஹ்ரட்.

  கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்கள்

  இந்த உள்ளுறுப்புகளும் நுரையீரலைப்போல நீரை உறிஞ்சிக்கொள்ளும் ஸ்பாஞ்ச் போன்றவை. ஒரு வடிதட்டைப்போல செயல்படுபவை. எனவே, ஒட்டிகொள்ளக்கூடிய சளிக்கோழைக் கழிவுகள் மூலமாக இவை மிக எளிதாக அடைப்புக்குள்ளாகும்.

  பாலுறவு நோய்கள்

  இவை, பாலுறவு உறுப்புகள் மூலமாக மியூகஸ் வெளியேற்றம் நடைபெறுவதால் தோன்றும் தொந்தரவுகளே ஆகும். இவற்றை எளிதில் குணப்படுத்த முடியும். ஆஹா, நல்ல செய்தியாயிற்றே என்று யோசிக்கிறீர்களா? ஆனால், மருந்து மாத்திரைகள் கொடுப்பதாலேயே சிஃபிலிஸ் இருப்பதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன என்றும், மெர்க்குரி போன்ற மருந்துகள் கொடுக்கப்படுவதால், இவ்வகை நோயாளிகளுக்கு மிகவும் கவனமாக சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் எஹ்ரட் எச்சரிக்கிறார்.

  கண் மற்றும் காது நோய்கள்

  கண்களிலும் காதுகளிலும் ஏற்படும் கழிவு அடைப்புதான் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, காது கேளாமை போன்ற பிரச்னைகளுக்குக் காரணம் என்று கூறுகிறார். பேட்ஸ் சொல்லும் ரிலாக்சேஷனோடு இதைப் பொருத்திப் பார்க்கலாம். ரிலாக்சேஷன் கெட்டுப்போகும்போது, ‘கஞ்சக்ஷன்’ அதிகமாகும் வாய்ப்பு உண்டு. பல பேருடைய பார்வைக் கோளாறுகளையும், செவிட்டுத்தன்மையையும் தான் குணப்படுத்தியிருப்பதாக எஹ்ரட் கூறுகிறார்.

  மன நோய்கள்

  உடம்பிலிருந்து இப்போது மனதுக்கு வந்துவிட்டோம். மனநோய்க்கு ஆளானவர்களின் உடலிலும், குறிப்பாக மூளையிலும் கழிவுகள் தேங்கி அடைத்துக்கொண்டு இருக்கும் என்கிறார் எஹ்ரட். கிட்டத்தட்ட பைத்தியமாகும் நிலையில் இருந்த ஒருவர், நான்கே வாரங்கள் விரதம் இருந்த பிறகு சரியானார் என்றும், மனநிலை சரியில்லாதவர்களை விரதம் மூலம் வெகு எளிதாகக் குணப்படுத்த முடியும் என்று அடித்துக் கூறுகிறார். நான் அடிக்கடி நோன்பிருப்பது எனக்கு நல்லது என்று தோன்றுகிறது!

  விரதமே புரதம்

  நோன்பு மூன்று வகைப்படும்.

  1. குறிப்பிட்ட நேரம் முதல் இன்னொரு குறிப்பிட்ட நேரம் வரை உண்ணாமலும் குடிக்காமலும் இருப்பது.
  2. திட உணவுகளை மட்டும் தவிர்த்துவிட்டு பழச்சாறுகள், தண்ணீர் இப்படி திரவ உணவுகளை மட்டு எடுத்துக்கொள்வது.
  3. சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்வது. ஆமாம், இதுகூட ஒருவகையில் விரதம்தான்! காலையில் ஐந்து இட்லிகள் சாப்பிடுபவர், இரண்டு மட்டும் சாப்பிடுவது. இப்படி…

  முதல் இரண்டு வகைகளையும் எஹ்ரட் சிபாரிசு செய்கிறார். அதிலும், அவர் குறுகியகால நோன்பு, நீண்டகால நோன்பு என்று இரண்டு வகையாகப் பிரிக்கிறார். விரதம் என்பது கத்தியின்றி இயற்கை செய்யும் அறுவை சிக்கிசையாகும்! ஏனெனில், தூய்மைப்படுத்தும் வேலை உடனேயே தொடங்கிவிடுகிறது என்கிறார்!

  உடம்பு முடியாமல் இருக்கும்போது, காலையிலோ பகலிலோ நாம் சாப்பிடாமல் இருந்தால், என்ன பைத்தியக்காரன் இவன், இப்படி சாப்பிடாமல் இருந்தால் எப்படி தெம்பு கிடைக்கும் என்று அட்வைஸ் செய்வார்கள். ‘டேய், இப்படியே சாப்பிடாம இருந்தா செத்துப்போயிடுவே’ என்று அன்பாக எச்சரிப்பதும் உண்டு. ஆனால், நீங்கள் விரதம் இருக்கும்போதுதான் குணம் அடைந்துகொண்டிருக்கிறீர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது! விரதத்துக்கும் பட்டினிக்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரிவதில்லை!

  எல்லா நோய்களும் உண்பதனாலேயே வருகின்றன! அப்படியானால், அதற்கு நேரெதிராக உண்ணாமல் இருப்பதுதான் அந்நோய்க்கான தீர்வாக இருக்கமுடியும். உடம்பு சரியில்லாதபோது ஏன் பசிப்பதில்லை என்று என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா என்று கேட்கிறார் எஹ்ரட். (அட போப்பா, உடம்புக்கு முடியாமல் இருக்கும்போதுதான் எனக்கு ‘பயங்கரமாக’ பசிக்கிறது என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது)! இந்த உலகிலேயே மியூகஸ் இல்லாத உணவுடன் விரதம் இருப்பதற்கான ஒரு நிலையத்தைக் கட்டியவன் நான்தான் என்று பெருமைப்படுகிறார் எஹ்ரட். பொதுமக்கள் முன்னிலையில் தொடர்ந்து அவர் உண்ணாமல் இருந்ததைப் பற்றி ஏற்கெனவே பார்த்தோம்.

  நம்முடைய ரத்தமானது மியூகஸ் போன்ற கழிவுகளையும் நச்சுகளையும் கரைத்து, தன்னுடன் எடுத்துக்கொண்டு விரைவாகப் பயணிக்க வேண்டும். பின்னர் அந்த கழிவுகளை சிறுநீரகங்களுக்கு அனுப்பி அவற்றை வெளியேற்ற வேண்டும். இது நாம் விரதம் இருக்கும்போதுதான் தங்குதடையின்றி நடக்கிறது!

  தவறான உணவுப் பழக்கத்தினாலும், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதாலும் ஏற்படும் பிரதான தடைகள், நோன்பு இருக்கும்போது முதலில் வெளியேறிவிடுகின்றன. இதனால், சாப்பிட்டால் கிடைக்கும் சக்தியைவிட அதிகமான ஆற்றலுடன் இருப்பதை உணர்வீர்கள். ஆனால், இரண்டாம் நிலையில் உள்ள கழிவுகளால் மறுபடியும் பலவீனமாகிவிடுவீர்கள். அந்த நிலையில் நம்மைப் பார்க்கும் யாரும், சாப்பிடாததால்தான் பலவீனமாக இருப்பதாக தவறாக நினைப்பார்கள்.

  ஆனால், அடுத்த நாள் உங்கள் சிறுநீரில் மியூகஸ் இருப்பதைக் காண முடியும். அதன்பிறகு, முன்பு இருந்ததைவிட உறுதியாக உணர்வீர்கள். எனவே, நோன்பு இருக்கும் ஒருவர், ஐந்தாம் ஆறாம் நாள் இருந்ததைவிட இருபதாம் நாள் தெம்பாக இருப்பதாக உணர்வார். உடலின் ஆற்றல் என்பது பிரதானமாக உணவிலிருந்து கிடைப்பதல்ல. தங்கு தடையற்று ரத்தமும் மற்ற பொருள்களும் உடலைச் சுற்றிவர முடியும்போதுதான் ஆற்றல் கிடைக்கிறது என்ற உண்மையை விரதம் இருக்கும் ஒருவர் உணர்ந்துகொள்ள முடியும்.

  எஹ்ரட்டிடம் விரதம் இருப்பதைக் கற்றுக்கொண்ட ஒரு சைவ உணவுக்காரர், விரதம் இருந்த 24-ம் நாள் 45 மைல்கள் மலையேறி நடந்துசென்றார். பத்து நாட்கள் விரதத்துக்குப் பிறகு எஹ்ரட்டும் அவரது நண்பர் ஒருவரும் 56 மணி நேரம் விடாமல் நடந்து சென்றதையும் ஏற்கெனவே சொன்னோம்.

  ஒரு அழுக்கான ஸ்பாஞ்சை பிழிந்து அதிலிருந்து அசிங்கத்தையெல்லாம் வெளியே எடுப்பதுபோல், விரதம் இருக்கும்போது தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டிருந்தால், உடல் தன்னைத்தானே சுத்தம் செய்துகொள்கிறது. சல்லடை மாதிரி சிறுநீரகங்கள் கழிவுகளை வெளியேற்றுகின்றன.

  தன் சொல்படி விரதம் இருந்தவர்களுக்கெல்லாம் கொஞ்சம் தேன் கலந்து எலுமிச்சம் பழச்சாறு கொடுத்தார் எஹ்ரட். அது மியூகஸை சன்னமாக ஆக்குவதற்கும், இலகுவாக ரத்த ஓட்டத்தோடு கலந்து ஓடி வெளியாவதற்கும் அது வசதி செய்து கொடுத்தது.

  ஆனால், அலோபதி மருந்துகள் உட்கொண்ட ஒருவர் முதன்முறையாக விரதம் இருந்தால் ஆபத்தாக முடியலாம் என்று எஹ்ரட் எச்சரிப்பதிலிருந்து, அலோபதி மருந்துகளின் தீமையைப் புரிந்துகொள்ள முடியும்.

  மந்திரக் கண்ணாடி

  நோய் என்பது உங்களுக்கு மட்டுமல்ல, மருத்துவர்களுக்கும் மர்மமாகவே இருக்கிறது. ஆனால், மந்திரக் கண்ணாடி ஒன்று நம் உடலில் உள்ளது. அதன் வழியாகப் பார்த்தால், மர்மம் கலைந்து எல்லாம் தெரிந்துவிடும். அதுதான் நம் நாக்கு என்கிறார் எஹ்ரட்!

  நாக்கின் மேல் பகுதியில் ஏதோ தடவியதுபோல் தடித்திருக்குமானால், அது நம் உடல் சீர்கெட்டுள்ளது என்பதற்காக அத்தாட்சியாகும். நாக்கென்பது வயிற்றை மட்டுமல்ல, முழு உடலின் நிலையையும் தெளிவாகப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும்.

  நாக்கில் தெரியும் தடிப்பை, ‘கோட்டிங்’கை, நாக்குத்தேய்ப்பான் வைத்துத் தேய்த்து எடுத்துவிட்டாலும், தடிப்பு மீண்டும் திரும்பிவிடும். எவ்வளவு கழிவுகள், எவ்வளவு நாற்றமெடுத்த சமாசாரங்கள், மியூகஸ் மற்றும் இதர நச்சுகள் நமது திசுக்களிலும் உடல் முழுவதிலும் சேர்ந்துள்ளன என்பதற்கு அதுவே அத்தாட்சியாகும்.

  எக்ஸ்ரேயைவிட தெளிவாக உங்கள் உடம்புக்குள் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு விரதம் இருந்து பாருங்கள். அல்லது வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டுப் பாருங்கள். உங்கள் நாக்கின் மேல்புறம் நன்றாகத் தடித்துவிடும் என்கிறார் எஹ்ரட்.

  விரதத்தை முடித்த பிறகு, சகட்டுமேனிக்கு ஒரு கட்டு கட்டாமல், நீங்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்துக்கொள்வது நல்லது. வழக்கமான உணவுக்குப் பதிலாக இயற்கையாகக் கிடைக்கும் பழங்கள், மாவுச்சத்து அற்ற காய்கறிகளைச் சாப்பிடுவது நல்லது. அப்போதுதான், உடல் தன்னைத் தளர்த்திக்கொண்டு மியூகஸ் போன்ற கழிவுகளை வெளியேற்ற உதவியாக இருக்கும்.

  நாக்கின் மேலே தெரியும் ‘கண்ணாடி’யானது உள்ளே எந்த அளவுக்கு தடைகள் ஏற்பட்டுள்ளன, எந்த அளவுக்கு உடல் குழந்தைப் பருவம் முதலே தேங்கிய சாக்கடை மாதிரி ஆகிவிட்டது என்பதை எடுத்துக்காட்டும். அந்த நேரத்தில், சிறுநீரை சில மணி நேரங்கள் தேங்கவிட்டுப் பார்த்தால், சிறுநீரிலும் கழிவுகள் இருப்பதைக் காணலாம். உங்கள் நாக்கைப் பார்த்து நீங்கள் எந்த மாதிரி உணவை அடிக்கடி எடுத்துக்கொள்வீர்கள் என்றுகூட சொல்லிவிடலாம் என்கிறார் எஹ்ரட்!

  முதலில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு விரதம் இருக்க வேண்டும். நீங்கள் கொஞ்சம் குண்டான ஆளாக இருந்தால், விரதத்தின்போது திரவ உணவையே உட்கொள்ள வேண்டும். விரதம் தொடங்கும்போது உடலில் எங்காவது வலி தோன்றினால், அந்த இடம் உங்கள் உடலில் மிகவும் பலவீனமான பகுதி என்று புரிந்துகொள்ள வேண்டும். விரதம் இருக்கும்போது சம்பந்தப்பட்டவர் ரொம்பவும் பலஹீனமாகவோ பரிதாபத்துக்குரிய தோற்றத்துடனோ இருந்தால், அந்த அளவுக்கு அவரது உடலுக்குள் கழிவுகள் தேங்கிக்கிடக்கின்றன என்றும், அவரது வீரியம் குறைந்துள்ளது என்றும் புரிந்துகொள்ளலாம். அதைவைத்து, ட்ரான்சிஷன் டயட்டுக்குப் போய்க்கொள்ளலாம். அல்லது விரதத்தைத் தொடர்வதா விட்டுவிடுவதா என்ற முடிவுக்கு வரலாம்.

  நாக்குத் தடிப்பு மாறி சுத்தமாகும்வரை நோன்பு இருப்பது அபாயகரமானது. குறுகியகால நோன்பை முடித்துக்கொண்டு வழக்கமான உணவுக்குச் சென்றவுடன் நாக்கு தடிப்பு நீங்கி சுத்தமாவது ஏன்? விரதத்துக்குப் பிறகும் நீங்கள் பழங்களையே சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும் நாக்கு மீண்டும் தடித்துப்போவது ஏன்? ஏனெனில், தாற்காலிகமாக கழிவுகளை வெளித்தள்ளும் வேலை நிறுத்தப்படுகிறது. தவறான உணவுகளை மீண்டும் எடுத்துக்கொள்வதன் மூலம் நீங்கள் மீண்டும் தெம்பாக ஆகிவிட்டதைப்போல உணர்வீர்கள்.

  தொடர்ந்து விரதம் இருந்துகொண்டும் இயற்கை உணவுகளை மட்டும் எடுத்துக்கொண்டிருந்தால் உங்கள் உடம்புக்குள் உள்ள எல்லா அசுத்தங்களும் நீக்கப்படுவதற்கு இரண்டு மூன்று ஆண்டுகளாவது ஆகும்! அதன்பிறகுதான், உடல் எப்படி தொடர்ந்து எளிதாக கழிவுகளையும் வெளியேற்றிக்கொண்டிருக்கிறது என்று புரியும். சிறுநீர், மலம் மட்டுமல்ல, உங்கள் தோலில் உள்ள சிறுசிறு ஓட்டைகள் வழியாகவும், கண்கள், காதுகள் என்றும் உடல் முழுக்க கழிவுகள் அவ்வப்போது வெளியேறிக்கொண்டே இருக்கும்.

  ஆனால், பல ஆண்டுகளாக இருந்த நாள்பட்ட ஒரு நோயை நீண்ட விரதத்தின் மூலமாகவோ பழங்களை மட்டும் சாப்பிடுவதனாலோ போக்கிவிடலாம் என்று நினைத்தால் அது தவறாகும்.

  உணவில் எளிமை

  விரதம் இருக்கும்போதும் சரி, சாதாரண நேரங்களிலும் சரி, நமது உணவில் எளிமை இருக்க வேண்டும் என்று எஹ்ரட் கூறுவது சிந்திக்கத்தக்கது.

  நம்முடைய இந்தக்கால உணவில் எளிமை என்பதே இல்லாமல் போய்விட்டது. உணவில் எளிமை என்றால் என்ன? ஒரு கப் சூப், இரண்டு இட்லி, ஒரு தோசை, ஒரு சப்பாத்தி, கொஞ்சம் கோபி மஞ்சூரியன் 65, ஒரு பூரி – இப்படி சாப்பிடுவது எளிமையல்ல. ஒரு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, பொரித்த இறால் கொஞ்சம், ஒரு ஸ்வீட் – இப்படி சாப்பிடுவதும் எளிமையான உணவல்ல.

  இட்லி என்றால் இட்லி மட்டும்தான். பூரி என்றால் பூரி மட்டும்தான். மட்டன் பிரியாணி என்றால் அது மட்டும்தான். ஒருவகை உணவோடு வேறொரு வகை உணவைக் கலக்காமல் இருப்பதுதான் சாப்பாட்டில் எளிமை. ஆனால், இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட எளிமை அருகிவிட்டது. இது நாம் மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம். ஆனந்தபவன்களும் சரவணபவன்களும், சீஷெல்களும் ஜைத்தூன்களும் நமக்கு எளிமையான உணவையா வழங்குகின்றன!

  எளிமைக்கு உதாரணமாக எஹ்ரட் என்ன கூறுகிறார் தெரியுமா? கேளுங்கள் – ‘எந்தக் காட்டு மாடாவது புல்லைத் தவிர, இலை, தழை, பழங்கள், கொட்டைகள் என்று கலந்து சாப்பிடுகிறதா? எந்த மிருகமும் தன் உணவில் கலப்படம் செய்வதில்லை. மனித மிருகத்தைத் தவிர’!

  விரதத்தை எப்படி முடிப்பது

  எந்த உணவைக்கொண்டு விரதத்தை முடிப்பது என்று தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அது ஆபத்தாக முடியலாம். எப்போதுமே இறைச்சி உணவையே சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒருவர், ஒரு வாரம் விரதம் இருந்த பிறகு பேரீச்சம் பழங்களைக் கொண்டு விரதத்தை முடித்தார். ஆனால் இறந்துபோனார்! அறுபது வயது முதியவர் ஒருவர் 28 நாட்கள் விரதம் இருந்தார். அவர் அதை முடித்தபோது, முதலில் வேகவைத்த உருளைக்கிழங்குகளைச் சாப்பிட்டார். ஆனால் அவரது குடல்களில் அது மியூகஸுடன் சேர்ந்து ஒட்டிக்கொண்டது. அறுவை சிகிச்சை செய்துதான் அதை அகற்றவேண்டி இருந்தது! ஆபரேஷன் நடந்த கொஞ்ச நேரத்தில் நோயாளி இறந்தும் போனார்!

  மது குடிப்பதை விடாமல், தண்ணீரை மட்டும் அதிகமாகக் குடித்துக்கொண்டிருப்பதால் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாது என்று எஹ்ரட் சொல்வது சிந்திக்கத்தக்கது. விரதமாக இருந்தாலும் அதை முறைப்படி செய்யவேண்டி உள்ளதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

  எஹ்ரட் டயட் பற்றி முடிவாக

  எஹ்ரட் டயட் என்பது பழங்களும், காய்கறிகளும், விரதமும் சேர்ந்தது. எல்லா நோய்களுக்கும் காரணம் கழிவுகளின் தேக்கம்தான் என்ற அவரது கண்டுபிடிப்பு மகத்தானது. ஆனால், சமையல் செய்த உணவையோ அல்லது அசைவ உணவையோ அவர் ஏற்றுக்கொள்வதில்லை. எல்லாவிதமான அசைவ உணவும், குறிப்பாக இறைச்சி, சீழாக மாறுகிறது என்று அவர் கூறுவது உண்மையல்ல. விஞ்ஞானபூர்வமானதுமல்ல. மீன், முட்டை, இறைச்சி போன்ற அசைவ உணவுகள் நம்மை மகிழ்ச்சியாக வைக்கக்கூடிய செரொடோனின் என்ற வேதிப்பொருளை மூளையில் உருவாக்குகின்றன என்பது நவீன விஞ்ஞானம் அறிந்த உண்மை.

  இன்றைய காலகட்டத்தில் கிடைக்கக்கூடிய எல்லா காய்கறிகளிலும்கூட வேதிப்பொருள்கள் கலக்கப்பட்டுள்ளன. வேதிப்பொருள் தூவப்பட்ட மண்ணிலிருந்துதான் அவை வெளியே வருகின்றன. அப்படிப்பட்ட காய்கறிகளை சமைக்கும்போது அவ்வேதிப்பொருள்களின் தீமை செய்யும் தீவிரம் மட்டுப்படுத்தப்படுகிறது (உபயம்: ஹீலர் உமர்).

  முட்டை, பால், தானியங்கள், அரிசி எதுவுமே உடலுக்கு நல்லதில்லை என்று எஹ்ரட் கூறுகிறார்! மேற்கத்தியர்களுக்கு, குறிப்பாக ஜெர்மானியர்களுக்கு அவர் சொல்வது பொருத்தமாக இருக்கலாம். நமக்கு சோழநாடு சோறுடைத்து! எஹ்ரட் சொல்லும் எல்லாம் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல. ஆனால், கழிவுகளைப் பற்றிய அவரது கண்டுபிடிப்பும், விரதம் பற்றிய தகவல்களும் நமக்கு அவசியமானவைதானே?

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai