நேரா யோசி

கவனம் என்பது மனக்குவியத்திலிருந்து வேறுபட்டது. Focus என்பது, கவனம் போன்ற பல கட்டங்களைத் தன்னுள் கொண்டது. கவனம் சிதறுதல் ஒரு கீழ்ப்படி நிலை.
நேரா யோசி

வெளியே வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. வெப்பநிலை முப்பத்திரண்டு டிகிரி செல்சியஸ் என்றும், புழுக்கம் 75 சதவீதமென்றும் நிலவிய கொடுமையான கோடை நாள் அது. கருத்தரங்கு அறையின் கதவைத் திறந்துகொண்டு வந்த பெண்மணி, அங்கு இருந்த மூன்று பேருக்கும், சூடான காபியை மேசையில் சத்தமெழாமல் வைத்துவிட்டு அகன்றாள். மூவரும் அவள் வந்தததைக்கூடக் கவனிக்காமல், வியர்வை வழிய, தங்கள் முன்னே இருந்த திரையில் ஓடிக்கொண்டிருந்த எண்களையும், அவற்றின் நிறத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, தங்கள் குறிப்பேடுகளில் பென்ஸிலால் எழுதிக்கொண்டிருந்தார்கள். ஏஸி நின்றுபோயிருந்தது.

மும்பையின் பவாய் பகுதியில், பிரம்மாண்டமான அலுவலகக் கட்டடம் ஒன்றின் ஏழாவது மாடியில் அமைந்திருந்த அந்தப் பன்னாட்டு நிறுவனத்தில் மின்சாரம் இல்லாமல் இல்லை. அந்தக் கருத்தரங்கு அறை தவிர, அனைத்து அறைகளிலும், தங்குதடையின்றி ஏ.ஸி. ஓடிக்கொண்டிருந்தது.

இந்தியா தவிர பல நாடுகளிலும் தங்கள் இயக்கத்தைக் கொண்ட அந்நிறுவனத்தில் வேலைக்குச் சேருவது என்பது குதிரைக் கொம்பு. பிற கல்லூரிகளில் வேலைக்கு ஆளெடுக்க வரும் கம்பெனிகள் மூன்றரை லட்சம் என வருட ஊதியம் பேசும்போது, இவர்கள் இருபத்தைந்து லட்சம் என்பார்கள். ப்ரோக்ராமிங் அறிவும், மிகச் சிறந்த தன்னாளுமையும் அவர்களுக்குத் தலையாயத் தேவைகள்.

“எங்கள் நிறுவனத்தின் முக்கியப் பிரிவுகளில் முதலீட்டு வங்கி முதன்மையானது. கொலம்பியாவில் பருவத்துக்கு முந்தி மழை பெய்தது என்று செய்தி வந்தால், நீங்கள் பார்க்காமல் போய்விடலாம். ஆனால் நாங்கள் நகம் கடித்து நிற்போம். காபிக் கொட்டைகள் தகுந்த அளவு பயிராகாது போனால், உலகச் சந்தையில் காபியின் விலை கிடுகிடுவென ஏறும். அதில் பணத்தை முடக்கிவைத்திருக்கும் எங்களுக்குப் பல மில்லியன்கள் நஷ்டப்படும். இதனைச் சரிகட்ட எங்கு முதலீடு செய்திருக்கிறோம் என்று பார்க்க வேண்டும். கரீபியன் நாடுகளில் கரும்பு அமோக விளைச்சல் என்றால், அங்கு உடனே தாவ வேண்டும். பல மில்லியன்களை நொடிக்கு நொடி கவனித்து வர வேண்டிய அழுத்தமான பணி அது” என்றார் அதில் பணி செய்யும் ஈஸ்வரன்.

‘‘ப்ரோக்ராமிங் அறிவும், தருக்கமும் உள்ள இளைஞர்களை எடுத்து, தகவல்களையும், புள்ளிவிவரங்களையும் அறிந்து, அதில் மறைந்திருக்கும் செய்தியைப் பாலில் இருந்து நெய் எடுப்பதைப்போல எடுக்கப் பயிற்சி கொடுக்கிறோம். இந்த இளைஞர்கள்தாம் எங்கள் எதிர்கால ஆளுமைகள். இதற்குப் போதிய மனக்குவியமும், மன ஆளுமையும் இருக்கிறதா என்று முதலிலேயே சோதித்துவிடுகிறோம்” என்றார், மனிதவளப் பிரிவின் தலைவர் ஜூலியா டிசொஸா.

அந்த வருடம், மூன்று பேர் மட்டுமே கடைசிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கருத்தரங்கில் தனித்தனியே கணினிகள் கொடுக்கப்பட்டு, திரையில் ஒருவருக்கு, காபிக்கொட்டையின் விலை நொடிக்கு நொடி மாறி வருவதையும், மற்றொருவருக்கு சர்க்கரையின் விலை உலகச் சந்தையில் மாறி வருவதைக் காட்டுகிறார்கள். மூன்றாமவருக்குக் கச்சா எண்ணெய். மூவருக்கும் சில செய்திகள் திரையின் கீழே ஓடிக்கொண்டிருக்கின்றன. ‘சிரியா மீது ரஷ்யா போர் தொடுக்கிறது. ஃபிஜித் தீவில் தொழிலாளர்கள் போராட்டம்’ – இது, கச்சா எண்ணெய் கவனிப்பவரின் திரையில் ஓடுகிறது. காபி கவனிப்பவரின் திரையில் ஓடிய செய்தி – ‘உலகளவில் கச்சா எண்ணெய் விலை சரிவைச் சரிகட்ட, ஒபெக் நாடுகளின் கூட்டமைப்பின் அறிக்கை நாளை வெளிவருகிறது’.

மூன்றரைக்குத் திரை அணைந்துபோக, அடுத்த கட்டத்துக்கு அவர்கள் காத்திருக்கிறார்கள். நான்கு மணி வரை அழைப்பு வராத நிலையில், அவர்கள் தங்களுக்குள் பேசத் தொடங்குகிறார்கள். இதனை, ஒரு சி.சி.டிவியில் சில சீனியர் மேனேஜர்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள்..

நாலரை மணியளவில், அவர்களது தனிப்பட்ட இன்டர்வியூ முடிகிறது. அன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. காபி விலையைக் கவனித்தவர் தேர்ச்சிபெறவில்லை. சர்க்கரையைக் கவனித்தவர் அடுத்த நிலைக்குத் தேறுகிறார். கச்சா எண்ணெய் விலையைக் கவனித்த பெண்ணை அழைத்து “நீ இதில் இப்போது தேர்ச்சி பெறவில்லை; ஆனால், மென்பொருள் சோதனை செய்யும் பிரிவில் வேலை இருக்கிறது” என்கிறார்கள். அப்பெண் மறுத்து, இது என் தகுதிக்குச் சரியான வேலையில்லை, மன்னிக்கவும் என்று போய்விடுகிறார்.

சரி, மனக்குவியம் என்பதற்கும் இந்த நேர்முகத் தேர்வுக்கும் என்ன தொடர்பு?

ஒரு வேலையைச் செய் என்று ஆணை வரும்போது, மூளை இரு வேலைகளைச் செய்கிறது. தனக்குப் பிடிக்காத, தேவையில்லாதது எனக் கருதுவதைக் கவனத்திலிருந்து விலக்கிவைக்கிறது. உணர்ச்சியுடன்கூடிய நிலையில் “இதனைக் கவனி” என்று அட்ரீனலின், நார் எபினெஃப்ரின் போன்ற ஹார்மோன்களைத் தூண்டிக்கொண்டு, பதற்றத்துடன் தனக்கு இட்ட வேலையைக் கவனிக்க எத்தனிக்கிறது. காபி விலையைப் பார்ப்பவர், கீழே ஓடிய கச்சா எண்ணெய் பற்றிய செய்தியைக் கவனிப்பதில்லை. அவர் கண்ணில் படுகிறது, ஆனால் கவனத்தில் செல்வதில்லை.

கவனம் என்பது மனக்குவியத்திலிருந்து வேறுபட்டது. Focus என்பது, கவனம் போன்ற பல கட்டங்களைத் தன்னுள் கொண்டது. கவனம் சிதறுதல் ஒரு கீழ்ப்படி நிலை.

வாழ்வில் ஒவ்வொரு படியிலும் கவனம் தேவை. அதே நேரத்தில், மேலதிகத் தகவல்களை நாம் அறிய வேண்டுமென்பதும் ஒரு முரண். ‘கண்டது கற்கப் பண்டிதனாவான்’ என்ற அதே மூத்தோர் சொன்ன மொழிதான், “பலமரம் கண்ட தச்சன், ஒரு மரமும் வெட்டான்”. இதில் எது சரி? இரண்டும் சரிதான். எப்போது யாருக்கு, எது தேவைப்படும் என்ற தேர்ந்தெடுத்தலில் நம் அறிவும் முதிர்வும் இருக்கிறது.

குவியம் என்பதையும், கவனம் என்பதையும் நாம் குழப்பிக்கொண்டுவிடுகிறோம். 19 இன்ஞ் திரையில், கீழே ஓடிக்கொண்டிருக்கும் செய்தி அவர்கள் கண்ணில் படாமலோ, அவர்கள் நினைவில் தேங்காமலோ இல்லை. அதிகப்படித் தகவலை, வேண்டாத ஒன்றென்றால், மூளை தனது உள்ளறைகளில் சேமித்து வைப்பதில்லை. அது மிஞ்சிப்போனால் இரண்டு மணி நேரம் நினைவில் இருக்கும். இந்தக் கவனம் குவியத்தின் வெளிப்பாடு. எந்த அளவுக்குக் குவியம் செறிவடைகிறதோ, அந்த அளவுக்குக் கவனம் பலப்படும்.

ஃபிஜியில் தொழிலாளர் போராட்டம் என்பதைப் பார்த்த இளைஞன் அதனைத் தெரிவித்திருந்தால், சர்க்கரை விலையைக் கவனித்தவன், உள்ளே வாங்கியிருக்க முடியும். அவனது விலை அவதானிப்பு மாறியிருக்கும். இதுபோலவே, கச்சா எண்ணெய் கதையும். தங்களுக்குள் அவர்கள் ரிலாக்ஸாக பேசிக்கொண்டிருக்கையில், தேவையான தகவல்களைத் தங்கள் குழுவுக்குத் தந்து உதவுகிற மனப்பாங்கு இருக்கிறதா என்பதைக் கவனிக்கிறார்கள். ஒருவர் கவனத்தில் இருந்து ஆவியாகிப்போகிற செய்தி, மற்றவருக்கு உதவக்கூடும். இந்தப் பரந்த மனப்பாங்கு தன்னாளுமைத் திறத்தின் ஓர் அங்கம். தன் எல்லைகளை அறிந்துகொண்டு, பிறரிடம் தனக்கு வேண்டிய தகவலைப் பெறுகிற பண்டமாற்று வித்தையைத் தன்னகத்தே கொண்டவர்கள் எந்தப் பணிக்கும் தேவையானவர்கள். இதனைப் பயிற்சி மூலம் கொண்டுவர, கம்பெனிகள் பெரும்பாடு படவேண்டி இருக்கும்.

தன் விருப்பம், தேவைகளை அறிந்து நிற்பவர்களால் மட்டுமே தகவல்களை அலசித் தேக்கி, பிறருக்கு அளித்து முன்னேற முடியும். அந்தப் பன்னாட்டு நிறுவனம், மூன்று பேருக்கு அந்த ஒருநாள் செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா? மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள்… இரண்டு லட்சம். இத்தனைக்கும் ஏஸி ஓடவில்லை.

இந்த இரண்டு லட்சம், பல கோடிகளை சம்பாதிக்கவோ, இழக்கவோ செய்துவிடும் என்பதால், அதனைச் செலவாகக் கருதாமல், முதலீடாக அந்நிறுவனத்தின் மனிதவளத் துறை கருதுகிறது.

நாம் நல்ல வேலைக்குச் சேர்வதென்பதும், தொழிலில் வளர்வதும் புத்திசாலித்தனமாகப் பேசிவிடுவதிலோ, நம் எடுத்திருக்கும் மதிப்பெண்களிலோ மட்டுமல்ல; நமது ஒழுங்கில், சில விஷயங்களில் தனித்துக் காணப்படும் குவியம், கவனம், சுயக் கட்டுப்பாடுகளிலும் இருக்கிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மனக்குவியம், கவனம், ஒழுங்கு பற்றி மேலே பார்க்கும் முன், மனக்குவியத்தின் சில எதிரிகளைப் பார்த்துவிடுவோம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com