30. முடிவை அறிவதும் முடித்துக் காண்பிப்பதும்..

இலக்கு என்பது வெறும் எண்ணமல்ல. அது காகிதத்தில் எழுதிவைத்து எப்போதாவது எடுத்துப் பார்த்து, மறந்துபோவதல்ல. அது மனதில் எழுதிய ஓவியம்.
30. முடிவை அறிவதும் முடித்துக் காண்பிப்பதும்..
Published on
Updated on
3 min read

செயல்திறனில் மூன்றுவிதமான பழக்கங்கள் கொண்டவர்கள் உண்டு. எடுத்த வேலையை எப்படியாவது முடிப்பவர்கள்; எடுத்த வேலையை அழகாகத் திட்டமிட்டு செய்து முடிப்பவர்கள்; எந்த வேலையை எடுத்தாலும் அதை ஏனோதானோ எனச் செய்துவிட்டு, பாதியிலேயே போட்டுவிட்டு அடுத்த வேலைக்குத் தாவுபவர்கள்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின். (குறள் 666)

இந்தத் திருக்குறள் நாம் நம் பள்ளி நாள்களில் இருந்து வாசிக்கும் குறள். மனப்பாடப் பகுதியில் இருந்து நமக்கு ஓரிரண்டு மதிப்பெண்கள் பெற்றுத்தந்த குறள்.

எவரால் ஒரு வேலையை நினைத்தபடி முடிக்க முடியும் என்பதை வள்ளுவர் சொல்கிறார். திண்ணியர் மட்டுமே அப்படிச் செய்ய முடியும். அப்படியென்றால் என்ன?

ஒரு வேலைக்கான முயற்சியைக் கைவிடாது இருக்க வேண்டும். அது என்ன..

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்

ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். (குறள் 662)

தடங்கல் வருவதற்கு முன்பே அதைச் சரியாக யூகித்து அதைத் தீர்ப்பதற்கு வழியும் தெரிந்துவைத்திருந்தால் மட்டுமே செயலைச் செய்து முடிக்க முடியும்.

ஆங்கிலத்தில் Begin with End in Mind என்பார்கள்.

இதுதான் முடிவு என்பதைத் தெரிந்துகொண்டு, அதை அடைந்தே தீர்வது என்பதுதான் திண்மை.

கட்டடம் கட்டும் பொறியாளர், மேஜை நாற்காலிகள் செய்யும் தச்சர், நகைகள் உருவாக்கும் பொற்கொல்லர், ஓவியம் வரையும் ஓவியர், கதைகள் படைக்கும் கதாசிரியர், சினிமா டைரக்டர் இவர்களிடமெல்லாம் பேசிப் பாருங்கள். அவர்களின் படைப்புகளை மனதில் உருவாக்கும்போதே அது நிஜத்தில் வெளியே வரும்போது எப்படி இருக்க வேண்டும் என்ற காட்சி அவர்களிடம் இருக்கும். எதுவும் இரண்டு முறை படைக்கப்படுகிறது. ஒன்று, முதலில் மனதில்; பிறகு நிஜத்தில்.

இப்படியான பழக்கம் இருந்தால் மட்டுமே எண்ணிய எண்ணியாங்கு வாழ இயலும். இந்தப் பழக்கத்தை எப்படி வளர்ப்பது எனக் கவனிக்கலாம்.

முதல்படியாக, குறுக்கு வழிகளைப் புறக்கணியுங்கள். குறுக்கு வழி என்பது முறையற்ற வழி என்பது மட்டுமில்லை; அது சரியான இலக்குக்குக் கொண்டுசெல்வதில்லை. மாணவர்களுக்கு இருக்கும் முதல் இலக்கு, தேர்வுகளுக்குத் தயார் செய்வது. குறிப்பிட்ட பாடத்தை குறிப்பிட்ட காலத்தில் படிப்பது என்பது. இதில், முடிவு நிலை என்ன என்பதை தெரிந்துகொண்டுவிட்டோம். அதாவது, ஒரு குறிப்பிட்ட காலத்தில் நாம் பாடத்தில் இவ்வளவு முன்னேறியிருக்க வேண்டும் என்பதை மனக்கண்ணில் கொண்டுவருவது. அதை மனக்கண்ணில் கொண்டுவந்தால் மட்டுமே நிஜத்தில் அடைய இயலும் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதை அடைவதற்கு குறுக்கு வழிகள் பயன்படாது. நல்ல முயற்சியும், தொடர் முயற்சியும் மட்டுமே அதைச் சாதித்துத் தரும்.

இங்கே திண்மை என்பது எண்ணியதால் வர வேண்டும். எண்ணியதை எண்ணியபடி நல்வழியில் அடைய வேண்டும் என்பதே திண்மை.

தொடங்கிய வேலையைப் பாதியிலேயே விட்டுவிட்டு, அதை பெருமிதமாகப் பேசுபவர்களிடம் கேட்டுப் பாருங்கள். ‘அப்பாடா இப்போதுதான் நிம்மதி. அதிலே போய் தெரியாமல் சிக்கிக்கொண்டேன். எப்படியோ வெளியில் வந்துவிட்டேன்’ என்பது பொதுவான பேச்சாக இருக்கும்.

இதில், அந்த ‘தெரியாமல்’ எனும் சொல்லைக் கவனிக்க வேண்டும். இதுதான் முடிவு என்ன என்று தெரியாமல் பொறியில் மாட்டிய எலிபோல பேசுவது. ஆனால், வாழ்க்கை பொறி இல்லை. சிக்கவைத்து, அழவைத்துப் பார்ப்பதற்கு. அது அழகானது. யாருக்கு அழகானது? என்ன செய்வது என்பதைத் தெரிந்து மனக்கண்ணில் கண்டு வியந்து, அதைச் செய்பவர்களுக்கு. ஆலயங்களில் நாம் வியந்து பார்க்கும் சிற்பங்களின் சிற்பிகள் எவரும் இப்படி பாதியில் போட்டுவிட்டுப் போகவில்லை. மனத்தில் கண்ட வடிவத்தை கல்லிலே செதுக்கினர்!

எடுத்த வேலையை முடிக்காமல் இருப்பவர்கள் அதற்கு தன்னைக் காரணம் எனச் சொல்லமாட்டார்கள். உறவினர் வேறு வேலை கொடுத்தார், ஆசிரியர் வீட்டுப்பாடம் எழுதச் சொன்னார், கணவன் உதவவில்லை, மனைவி கோபம் கொண்டார்.. இத்தியாதி இத்தியாதி. முடிக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தால், வாழ்வில் நமக்கிருக்கும் பல்வேறு உறவுகள் நம்மை மேம்படுத்தவே இருக்கின்றன என்ற எண்ணம் மேலோங்கும். அப்படி எண்ணம் மேலோங்கியபோது, எவை எந்தச் சமயத்தில் என்ன நோக்கங்களுக்காக முக்கியம் என்பதும் புரிந்துபோகும். இந்த இரண்டும் புரியும்போதுதான் மனக்கண்ணில் நமது செயல் நல்ல வடிவம் பெறும். நாமும் எண்ணிய எண்ணியாங்கு எய்துபவராவோம்.

உடலியல் சார்ந்த மருத்துவ விஞ்ஞான உலகம், குறிப்பாக மனிதனின் மூளையில் இயங்கும் பலவிதமான நியூரான்களின் தொகுப்புகளைக் குறித்து ஆராயும் மருத்துவ உலகம், Reticular Formation System தொடர்பாக விரிவாகப் பேசுகிறது. நாம் செய்யவிருக்கும் செயலின் முடிவை மனக்கண்ணில் கண்டு மகிழ்ந்து, அதனை நமது முயற்சிகளின் வழியே செயல்படுத்தி, நிஜத்தில் அடைந்து, நிறைவுகொள்வதற்கு நம் மூளையில் இருக்கும் பல்வேறு நியூரான்கள் உதவி வேண்டும். மனக்கண்ணில் நாம் வடிவுக்குக் கொண்டுவரும்போதே, அது தொடர்பான நியூரான்கள் இயக்கப்பட்டு, நமக்கு அதன் மீது குவிந்த கவனம், அக்கறை, ஆவல், செய்து முடிப்பதில் இருக்கும் மகிழ்ச்சி இவையாவும் தூண்டப்படுகிறது. விஞ்ஞானரீதியான திண்ணியர் என்பவர் இவரே.

விளையாட்டு, தொழில், வியாபாரம், கல்வி என எந்தத் துறையாக இருந்தாலும், ஒவ்வொரு துறையிலும் சிறப்பாகச் சாதனை படைத்தவர்கள் அனைவருக்கும் இந்த அமைப்பு மிகச் சிறப்பாக அமைந்திருப்பதைக் காணலாம்.

என் நண்பர். முனைவர் பட்டம் பெற்றவர். கல்லூரிப் பேராசிரியர். தனது தினசரி வகுப்புகளை இன்றளவும் மனக்கண்ணில் வடிவமைத்துக்கொண்டு, அதன்பின்னரே அதற்காகத் தன்னைத் தயார் செய்துகொள்கிறார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற வீரர் ஒருவரை பேட்டி கண்டபோது அவர் சொன்னது, ‘நான் வெற்றிபெறுவதுபோலவும், மேடையேறி மக்கள் ஆரவாரத்துக்கிடையே பதக்கம் பெறுவதுபோலவும் தினமும் மனக்கண்ணில் தோன்றும். அது மட்டுமல்ல, ஒவ்வொரு நாள் பயிற்சிக்கு முன்பும், தடகளத்தில் நான் ஓடுவதும், உடற்பயிற்சி செய்வதும்கூட மனக்கண்ணில் கொண்டுவருவேன்’.

இலக்கு என்பது வெறும் எண்ணமல்ல. அது காகிதத்தில் எழுதிவைத்து எப்போதாவது எடுத்துப் பார்த்து, மறந்துபோவதல்ல. அது மனதில் எழுதிய ஓவியம். திடமான நினைவு எனும் தூரிகை கொண்டு, செயல் வடிவங்கள் எனும் வர்ணங்களைக் கொண்டு தீட்டப்படும் ஓவியம். அந்த ஓவியத்தைத்தான் நிஜவாழ்வில் நடைமுறையில் செயல் வடிவமாக வரைய முடியும். பிறர் பார்த்து வியக்கும் ஓவியமாக நம் வாழ்வை அமைத்துக்கொள்ள மனக் கண் ஓவியம் வரைந்து பழக வேண்டும். அப்போதுதான் முடிவை அறிவதும், முடித்துக் காண்பிப்பதும் நிகழும். அப்படியான ஒரு வாழ்க்கைதான் நூற்றுக்கு நூறு எனும் நிறைவான வாழ்க்கை.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com