35. பெற்றோரின் கேலி

விமரிசனங்களை மூன்றாகப் பிரிக்கலாம். அவை: ஆக்கப்பூர்வமான விமரிசனங்கள், செப்பனிடும் விமரிசனங்கள், கேலியான விமரிசனங்கள்.
35. பெற்றோரின் கேலி

அளவுக்கு அதிகமான புகழ்ச்சி பிள்ளைகளை ஊக்குவிக்கும் என்பது பெற்றோர்களின் தவறான கண்ணோட்டம். அளவுக்கு மீறிய புகழ்ச்சி பொய்யான தன்னம்பிக்கையையும் போலியான துணிவையும் மட்டுமே வழங்கும். பிள்ளைகளின் வாழ்வில் சவாலான தருணம் வரும்போது, இப்படியான பொய்யான தன்னம்பிக்கையும் போலியான துணிவும் துணை வராது என்பதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பிள்ளைகளைக் கண்டிப்பதும், கேலி செய்வதும் இரண்டு வேறுபட்ட செய்கைகள். இரண்டிலும் கண்ணியம் காப்பது மிக மிக அவசியம். பெற்றோர் எனும் பொறுப்பு அதிகாரம் செலுத்துவதற்கானது அல்ல என்பதை முதலில் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பிள்ளைகளின் செயல்களை விமரிசனம் செய்யும் கடமையும் பொறுப்பும் பெற்றோர்களுக்கு உண்டு. ஆனால் அதே வேளையில், அந்த விமரிசனம் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு உதவுவதுபோல் அமைத்துக்கொள்வதும் பெற்றோர்களின் பொறுப்பு. பெற்றோர்கள் பெரும்பாலும் விமரிசனம் என்பது குற்றம் கண்டுபிடிப்பது என்பதாகவும், அதைப் பெற்றோர் அவசியம் செய்தாக வேண்டும் எனும் மனோபாவம் கொண்டவர்களாகவும் இருப்பது மிகவும் வேதனையான உண்மை.

விமரிசனங்களை மூன்றாகப் பிரிக்கலாம். அவை: ஆக்கப்பூர்வமான விமரிசனங்கள், செப்பனிடும் விமரிசனங்கள், கேலியான விமரிசனங்கள்.

ஆக்கப்பூர்வமான விமரிசனங்கள் மிகவும் பொறுப்புணர்ந்து செய்யப்படுபவை. பிள்ளைகளின் நிறை குறைகளை அவர்களின் வலிமை, போதாமை, பலவீனம் இவற்றை மிகவும் அக்கறை கொண்டு ஆராய்ந்து அவர்களுக்கு ஓர் உற்ற நண்பன்போல செய்யப்படுபவை. தன்னை உணர்ந்துகொள்ள பிள்ளைகளுக்கு இந்த வகை விமரிசனங்கள் மிகவும் உதவியாக இருக்கும். ஆக்கப்பூர்வமான விமரிசனங்களை பெற்றோர்கள் செய்ய வேண்டுமெனில், முதலில் அவர்கள் பிள்ளைகளின் செயல்கள் மீது பயம் கொள்ளக் கூடாது. பயம், ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கைக்கும் எதிரி. பயம் என்பதும் அக்கறை என்பதும் ஒன்றுபோலப் பெற்றோர்கள் நினைத்துக்கொள்வதால், அந்தப் பயத்தினால் அவர்கள் செய்யும் விமரிசனங்கள் அனைத்தும் அக்கறையால் செய்யப்படுபவை என நினைத்துக்கொள்கின்றனர். பெற்றோர்களின் இதுபோன்ற பயம் பெரும்பாலும் அவர்களின் அறியாமையால் விளைவது. இதுபோன்ற பயத்தின் காரணமாக தங்கள் பிள்ளைகளின் பலம் பலவீனம் இரண்டும் குறித்த சரியான அளவீடுகளும் மதிப்பீடுகளும் பெற்றோர்கள் செய்வதில்லை. படிப்பு தொடர்பாக பிள்ளைகள் மீது மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடுகளும், அவர்களது உளவியல் சார்ந்த நடவடிக்கைகள் மீது குறைவான மதிப்பீடுகளும் பெற்றோர்கள் கொண்டிருப்பது இதுபோன்ற காரணமில்லாத பயத்தின் காரணமாகத்தான்.

செப்பனிடும்விதமாக செய்யப்படும் விமரிசனங்கள் ஆழமானவை. இவை வெளிப்படையாக சில நேரங்களிலும், மறைமுகமாகப் பல நேரங்களிலும் சொல்லப்பட வேண்டும். பெரும்பாலும் இவை பெற்றோர், பிள்ளைகள் உரையாடலின்போது பகிர்ந்துகொள்ளப்படுவதுண்டு.

உதாரணமாக, பிள்ளைகளின் வெற்றியைக் கொண்டாடும் சந்தர்ப்பங்களில் நிகழும் உரையாடலில் இவை தெரியவரும். இதுபோன்ற விமரிசனங்களில் பெற்றோர்கள் கவனமாக இருப்பது அவசியம். பிள்ளைகளின் சுய கௌரவம், தன்மானம் போன்றவை காயப்படாமல் உரையாடலை அமைப்பது பெற்றோர்களின் பெரும் பொறுப்பு. ஏனையோரின் விமரிசனத்தைக் காட்டிலும் பெற்றோரின் விமரிசனம் முக்கியம் வாய்ந்தது. பெற்றோரின் விமரிசனத்தில் அங்கீகாரம் முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும், அதைத் தொடர்ந்து மதிப்பும் அதனைத் தொடர்ந்து மனநிறைவும் என இந்தக் கூட்டணி அன்பாகவும் அமைய வேண்டும். மிகவும் சூட்சுமமான இந்தக் கலவையின் விகிதாசாரம் மிகவும் முக்கியம். சுவையான உணவு என்பது எப்படி பல சுவைகளின் கூட்டணியோ அதுபோலத்தான் இதுவும்.

பல பெற்றோர்கள் தடுமாறுவது இங்கேதான். அவர்களது விமரிசனம் சில இடங்களில் தங்களின் அதிகாரத்தை வெளிப்படுத்துவதாக அமைவதை அவர்கள் அறிந்திருப்பதில்லை. அப்படி அதிகாரம் தொனிக்கும் விமரிசனம் மூலம் தங்கள் பிள்ளைகளுக்குச் செய்யும் பெரும் தீங்கை அவர்கள் அறிந்திருப்பதில்லை.

சில பெற்றோர்கள், பிள்ளைகளைத் தொடர் கேலி (Nagging) செய்யத் தொடங்குவது இந்தத் தடுமாற்றத்தின்போதுதான்.

பெற்றோர்களின் Nagging எனும் மிக முக்கியமான அம்சம் குறித்து இப்போது பார்க்கலாம்.

1. எழுந்தவுடன் படுக்கைய ஒழுங்கா எடுத்து வை.

2. wash basin-ல pipe-ஐ திறந்து விட்டுகிட்டே நின்னா எவ்வளவு தண்ணீர் வேஸ்ட் ஆகுது பார்.

3. cricket coaching class-க்குப் போய் வந்து நாலு நாள் ஆச்சு. shoe socks தோய்க்கப் போட்டியா. வீடு முழுக்க நாத்தம்..

4. குளிக்கப்போனியே.. பழைய துணியெல்லாம் ஒழுங்கா washing machine-ல போடுனு எத்தனை தரம் சொல்லிருக்கைன். அங்க பாரு எல்லாம் சுருட்டி மூலையிலே வெச்சிட்டு வந்திருக்க.

5. coffee குடிச்ச cup அங்கேயே இருக்கு பாரு. அதை sink-ல போட்டா என்ன?

6. உன் study table-ல பாரு. ஒரே குப்பை. ஒழுங்கா அடுக்கி வை.

7. எப்பப் பாரு அரட்டை.. நாளைக்கு test இருக்குல்ல.. போய்ப் படி.

8. டிவி பார்த்துகிட்டே இருந்தால் எப்ப படிப்பே..

இந்த list-க்கு அளவு கிடையாது. எழுத எழுத நீண்டுகொண்டே போகும்.

இப்போது விஷயத்துக்கு வருவோம்.

இதெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கும் பெற்றோரா நீங்கள். இதையெல்லாம் personal discipline அவசியம் எனும் ரகத்தில் நீங்கள் சேர்க்கிறீர்களா..

ஆமாம். இதெல்லாம் personal discipline ரகம்தான். ஆனால், அதைக் கொண்டுவருவதற்கு இந்த ‘சொல்லிக் காட்டும்’ nagging சரியான வழியில்லை.

பிள்ளைகளை Nagging செய்யும் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு செய்யும் மறைமுகமான தீமைகளைக் கவனிக்கலாம். Nagging செய்துகொண்டே இருந்தால்..

1. கோர்வையாக யோசிக்கும் திறனை பிள்ளைகள் இழக்கத் தொடங்குவார்கள்.

2. புதியவர்களுடன் பேச வேண்டும் என்ற சூழலில், அதிக தயக்கமும், கூச்சமும் உருவாகும்.

3. அவசியமான வேலைகளை (குறிப்பாக home work, project assignment, etc) இதையெல்லாம் அவசரகதியில் செய்து, மூடி வைத்துவிட்டு போக வேண்டும் என்ற urge உருவாகும். அந்த வேலைகளை ஒழுங்காகச் செய்யமாட்டார்கள்.

4. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் தயக்கமும் பயமும் உருவாகும்.

5. எதிர்பாலின கவர்ச்சி எனும் crush பாதிக்கப்படும்.

6. தங்களது முயற்சிகள் மூலம் கிடைத்த வெற்றியை சுவைக்க மனசு இல்லாமல் போகும் வெறுப்பு நிலை உருவாகும்.

7. யாரையும் எதற்கும் மன்னிக்கும் குணம் வளராமல், வன்மம் எனும் பேராபத்து நிறைந்த குணம் மேலோங்கும்.

இந்த list-ம் இன்னமும் பெரியதுதான் ஆனால், major அம்சங்கள் இவைதான்.

பெற்றோரின் கேலி தொடர்பாக அடுத்த வாரம் இன்னமும் விரிவாகப் பார்ப்போம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com