Enable Javscript for better performance
9. சக்கைப் பழத்தில் பச்சடியா?- Dinamani

சுடச்சுட

  
  iStock-484196012_wide

   

  என் மாமியார் வீட்டில் ஒருமுறை ஏதோ விசேஷம். என் கணவர் சக்கைப் பழம் வாங்கி வந்து வைத்ததைப் பார்த்தேன். பாயசத்திற்காக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் மாமியார் பால் பாயசம்தான் வைத்திருந்தாள். வாங்கி வந்த சக்கைப் பழத்தையும் காணவில்லை. சக்கைப் பழம் எங்கேதான்  போயிற்று என்று யோசித்த நான் மாமியாரிடமே கடைசியில் கேட்டு விட்டேன். அதுல பச்சடியாக்கும் பண்ணினேன் என்றாள் மாமியார். சக்கைப் பழத்தில் பச்சடியா என்று ஒரு மாதிரி கேட்டேன். ஆனால் சாப்பிட்ட போது....ஆஹா ஆஹா  என்று இன்னும் இரண்டு கரண்டி போட்டுக் கொண்டேன். அவ்வளவு சுவை.

  உப்பு, புளிப்பு, காரம் எல்லாம் பக்காவாக சேர்ந்த ஒரு சுவையான பச்சடி இது. என் மாமியாரிடமிருந்துதான் நான் இதைக் கற்றுக் கொண்டேன். இதை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

  22) சக்கைப் பழப் பச்சடி:

  தேவையானவை

  சிறிய துண்டுகளாக நறுக்கப்பட்ட சக்கைப் பழங்கள் – ஒரு கோப்பை

  புளி – ஒரு நெல்லிக்காய் அளவு

  மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

  உப்பு – தேவையான அளவு

  தேங்காய் துருவியது – ஒரு கப்

  கறிவேப்பிலை – ஒரு கொத்து

  காய்ந்த மிளகாய் – சிறியது – 3

  வெல்லம் – சுண்டைக்காய் அளவு

  தாளிக்க, கடுகு, ஒரு சிறிய மிளகாய்,

  கறிவேப்பிலை ஒரு கொத்து  

  செய்முறை:

  புளியைக் கரைத்துக் கொள்ளவும்

  வாணலியை அடுப்பில் வைத்து சிறிது வெளிச்செண்ணெய் விட்டு, கடுகு, ஒரு மிளகாய், நான்கு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் சக்கைத் துண்டுகளைப் போட்டு சிறிது வதக்கவும். பின்னர் புளிக்கரைசலை அதில் ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு, வெல்லம், இவற்றையும் சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும். புளிக்கரைசலும் சக்கைப் பழமும் நன்கு ஒன்றோடொன்று கலந்து பளபளப்பாக ஒரு வாசனையோடு கெட்டியாகி இருக்கும். இந்நிலையில், மிக்சியில், தேங்காய், இரண்டு அல்லது மூன்று வரமிளகாய் (உங்கள் காரத்திற்கேற்ப) கறிவேப்பிலை, கால் ஸ்பூன் கடுகு இவற்றைப் போட்டு சிறிது நீர் விட்டு அரைத்தெடுத்துக் கொள்ளவும். அரைத்த கலவையை வாணலியில் சேர்த்து நன்கு கலந்து ஒரே ஒரு கொதி விடவும். உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்து தேவை என்றால் சேர்க்கவும். மிகச் சுவையான ஒரு பச்சடி இது.  

  ***

  இனி கறி வகைகள் பற்றி பார்ப்போம். பாலக்காட்டு அக்ரஹார வீடுகளில் எல்லாம் நிச்சயம் நீண்ட கொல்லைப்புறமும், அது நிறைய பல்வகையான மரங்களும், செடிகளும் இருக்கும். தெங்கு, மா, பலா, கறிவேப்பிலை, கத்திரி, வெண்டை, முருங்கை,, சேம்பு, செம்பருத்தி, நந்தியாவட்டை, செத்தி, பாரிஜாதம் என்று அந்த கொல்லைப் பகுதி பச்சைப் பசேலென்று இருக்கும். அதுவும் மழைக்காலங்களில் இதன் பசுமை கூடும். தானாய் முளைத்த பல்வேறு தாவரங்கள் பார்க்கவே அழகாக இருக்கும். ஒரு முறை நான் பாலக்காட்டின் புதியகல்பாத்தியில் இருக்கும் என் சின்ன மாமியாரின் அகத்திற்குச் சென்றிருந்தேன். சித்தி அருமையாக சமைப்பாள் அதோடு  அலுத்துக் கொள்ளாமல் விதம் விதமாய் சமைப்பாள். சித்தியின் வீடு விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற இடம். மொத்த உறவுகளும் சங்கமிக்கும் இடம் அது என்றும் சொல்லலாம். அதுவும் கல்பாத்தி தேர்த் திருவிழா சமயத்தில் தில்லி, மும்பை, சென்னை, பெங்களூர் என்று எல்லா ஊர்களிலிருந்தும் உறவுகள் அங்கு கூடிக் களிப்போம். 

  ஒருமுறை நானும் என் பெண்களும் காவசேரியில் இருக்கும் எங்கள் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வருவதற்குள் சித்தி சமைத்து வைத்திருக்க,. பசியோடு சாப்பிட உட்கார்ந்தோம். டைனிங் டேபிளில் இருந்த ஒரு ஐட்டம் எனக்கு மிகவும் புதிதாக இருந்தது. அதை சுவைத்துப் பார்த்ததும் என் வியப்பு கூடியது. இதென்ன சித்தி என்று கேட்டேன். சேம்பிலைக் கறி என்றாள் சித்தி. வித்யாசமான சுவையோடு இருந்தது அது. விரும்பி சாப்பிட்டோம் நாங்கள். எப்டி பண்ணினேள் சித்தி இதை? சேம்பிலை எங்கே கிடைச்சுது என்றேன். கொல்லைல இருக்கே. இன்னிக்கு காய் எதுவும் சரியா இல்ல. அதான் பார்த்தேன். கொல்லைலேர்ந்து சேம்பிலை எடுத்துண்டு வந்தேன். நீங்களும் இதை சாப்ட்ருக்க மாட்டேளேன்னு இதைப் பண்ணினேன் என்றாள். சேம்பிலைகள் இதய வடிவத்தில் பெரிதாக இருக்கும். மஞ்சள் கிழங்கைப் போல கொத்து கொத்தாக வளரும். மழைக்காலங்களில் தானாகவும் முளைத்து வளரும். இனி சித்தி செய்த சேம்பிலைக் கறியை எப்படி செய்வதென்று பார்ப்போமா?

  23) சேம்பிலைக் கறி

  சேம்பிலைகள் – 15

  கடலைமாவு – 100 gm

  மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்

  மிளகாய்த் தூள் – ஒன்று அல்லது ஒன்றரை ஸ்பூன்

  உப்பு – தேவையான அளவு

  பெருங்காயம் – சிறிது.

  தாளிக்க

  கடுகு, - ஒரு ஸ்பூன்

  உடைத்த உளுந்து, - அரை ஸ்பூன்

  வெளிச்செண்ணெய்  - இரண்டு ஸ்பூன்

  செய்முறை

  சேம்பிலைகளை நன்கு கழுவித் துடைத்து நடு நரம்பை மட்டும் கீறி எடுத்துவிட வேண்டும். பெரிய இலை என்பதால் இதை நான்காக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

  கடலைமாவு, மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயம் இவற்றோடு சிறிது நீர் விட்டு கொஞ்சம் கெட்டியாக பேஸ்ட் போல குழைத்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை நான்காக நறுக்கிய இலை ஒவ்வொன்றிலும் ஒரு ஸ்பூனால் ஜாம் தடவுவது போல் தடவி விட்டு இலையை அப்படியே சுருட்ட வேண்டும். சுருட்டிய இலை ஒவ்வொன்றின் மத்தியிலும் நூலால் அதன் சுருள் பிரியாமல் கட்டி விட வேண்டும். இப்படி மொத்த இலைகளையும் கடலைமாவு பேஸ்ட் தடவி சுருட்டி நூலால் கட்டி முடித்ததும் எல்லாவற்றையும் இட்லித் தட்டில் வைத்து ஸ்டீம் பண்ண வேண்டும். பத்து அல்லது பன்னிரண்டு நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் இலைகள் நன்கு வெந்திருக்கும். பிறகு அவற்றை வெளியில் எடுத்து நூலை மட்டும் எடுத்து விட்டு சுருட்டிய இலைகளைப் பிரிக்காமல் குறுக்கு வாட்டில் அப்படியே ஒரு இன்ச் நீளத்திற்கு இரண்டாகக் கட் பண்ணி வைத்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் கட் பண்ணி முடித்ததும் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, மிளகாய் உளுந்து இவற்றைத் தாளித்து கட் பண்ணி வைத்திருக்கும் சேம்பிலைகளை அதில் சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து விடலாம். இலையின் சுவை, அதில் தடவிய கடலைமாவுக் கலவையின் சுவை எல்லாம் சேர்ந்து ஒரு புது மாதிரியான சுவை கொண்ட சேம்பிலைக் கறி உங்கள் நாவில் நெடுநேரம் நிற்கும்.

  சேம்பிலை ஒரு மருத்துவ மூலிகை. இதில் வைட்டமின் ஏ மற்றும் சி, இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீஷியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் உள்ளது., ஆல்கலாய்ட்ஸ் உள்ளிட்ட வேதி பொருட்களையும் உள்ளடக்கி உள்ளதால், உடலுக்கு பலம் தரும். மூலநோய்க்கு நல்லது. மலச்சிக்கலைத் தீர்க்கும். இனி இந்த சேம்பிலையில் உடலுக்கு நலம் தரும் ஒரு சூப் எப்படி தயாரிப்பதென்றும் பார்க்கலாம்.

  24) சேம்பிலை சூப்

  தேவையான பொருட்கள்:

  சேம்பிலை -  2 அல்லது 3

  புளி  – நெல்லிக்காய் அளவு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

  நல்ல எண்ணெய் – ஒரு ஸ்பூன்

  பெருங்காயம் – சிறிது

  பூண்டு – நான்கு பற்கள்

  வெங்காயம் – பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்

  மிளகு பொடி – கால் ஸ்பூன்  

  சமையல் உப்பு – தேவையான அளவு

  செய்முறை:

  சேம்பிலையை சுத்தப்படுத்தி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, பூண்டு பற்கள், வெங்காயம், இவற்றோடு நறுக்கிய சேம்பிலையையும் சேர்த்து வதக்கவும். பின்னர் உப்பு சேர்த்த  பிறகு நன்கு மசிக்கலாம் அல்லது மிக்சியில் ஒரு திருப்பு திருப்பி பின்னர் வாணலியில் விட்டு அதில் புளி கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் இதனுடன் சிறிது மிளகுத்தூள், மற்றும் கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து அருந்தலாம். சேம்பிலையை சூப் செய்து குடித்தால் மலச்சிக்கல், ஆசன வாயில் ரத்த கசிவு, வெளி மூலம், உள் மூலம் போன்ற மூல வகை நோய்களுக்கு மருந்தாகிறது. மேலும் உடலில் காயம் ஏற்படும்போது  குருதியை உடனடியாக உறையச் செய்யும் என்பார்கள்.  பூண்டு வெங்காயம் வேண்டாம் என்றால் அவை இல்லாமலும் செய்யலாம்.

  எனவே கறியாகவோ, அல்லது சூப்பாகவோ எப்படி வேண்டுமானாலும் சேம்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உடலுக்கு நல்லது அது.

  25) இடி சக்கைத் தோரன்

  சக்கை, மற்றும் தேங்காய், வெளிச்செண்ணெய், நேந்திரன்பழம், நேந்திரங்காய் இதெல்லாம் இல்லாமல் பாலக்காட்டு சமையல் சிறப்பு பெறாது. கறிவகைகளுக்கு இங்கு பல பெயர்கள் உள்ளன. ஒரு சிலவற்றை மெழுக்குபெரட்டி என்பார்கள். சிலவற்றை பொடுத்துவல் என்பார்கள். இன்னும் சிலவற்றை தோரன் என்றும் உப்பேரி என்றும் சொல்வதுண்டு. சரி அதென்ன இடிச்சக்கைத் தோரன். முதலில் அந்தக்காலத்தில் இதை எப்படி செய்வார்கள் என்று பார்ப்போம்.

  தேவையான பொருட்கள்

  பலா பிஞ்சு – 1

  (மார்க்கெட்டில் சிறிய அளவில் பிஞ்சு பலாக்காய்கள் கிடைக்கும். இதை கறிச்சக்கை என்றும் சொல்வார்கள். கையில் கொஞ்சம் வெளிச்செண்ணெய் தடவிக் கொண்டு அதன் கனமான தோலை சீவி எடுப்பதற்குத் தனித்திறன்  வேண்டும். கத்தி நல்ல ஷார்ப்பாக இருக்க வேண்டும்.)

  மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

  பெருங்காயத் தூள் – சிறிது 

  உப்பு – தேவையான அளவு

  பச்சை மிளகாய் – 4  (காயின் அளவைப் பொறுத்து குறைத்தோ கூட்டியோ கொள்ளலாம்.

  தேங்காய் – துருவியது ஒரு கோப்பை.

  கறிவேப்பிலை – ஒரு கொத்து

  செய்முறை

  அந்தக் காலத்தில் கேஸ் அடுப்பு கிடையாது. குக்கர் கிடையாது. இடிச்சக்கையின் மேல் தோலை அப்பாதான் நீக்கி அரிந்து கொடுப்பார். சக்கையின் நடுப்பாகத்திலும் ஒரு கட்டை மாதிரி கனமாக இருக்கும். அதையும் முடிந்தவரை  நீக்கிவிட வேண்டும். பிறகு அதை ஓரளவுக்கு பெரிய துண்டுகளாகவே நறுக்கிக் கொள்வார்கள்.  அம்மா அந்த சக்கைத் துண்டுகளை ஒரு வெண்கலப் பாத்திரத்தில் போட்டு உப்பும் மஞ்சள் தூளும், அதற்கேற்ப நீரும் சேர்த்து குமுட்டி அடுப்பில் வைத்து மூடி விடுவார். ஒரு அரைமணியாகும் அது வேக. பிறகு நன்கு வெந்து விட்டதா என்று நசுக்கிப் பார்த்து அடுப்பிலிருந்து இறக்கி,. ஒருவேளை அடியில் நீர் நிறைய இருந்தால் வடிகட்டி விடுவாள். பிறகு வெந்த சக்கைத் துண்டுகளை நாங்கள் யாராவது  ஆட்டுக்கல்லின் குழியிலிட்டு உலக்கையால் லேசாக இடிப்போம். சக்கைத் துண்டுகள் சிதையும். அது அப்படியே பூப்பூவாகப் பிரிந்து சிதைந்த பிறகு (அரைந்து கூழாகிவிடக் கூடாது. சதைத்தால் போதும்.) அதை ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு வந்து கொடுப்போம். ஆட்டுக்கல் பக்கத்திலேயே அம்மி இருக்கும். அம்மியில், அரை மூடி தேங்காய்த் துருவலையும், நான்கு பச்சை மிளகாயும், ஒரு கொத்து கறிவேப்பிலையும் உருவிப்போட்டு அதிகம் அரைந்து விடாமல், அவற்றை ஒன்றாக்கி சதைத்துக் கொடுப்போம். பிறகு அடுப்பில் ஒரு சீனிச்சட்டியை (வாணலி) வைத்து அதில் நான்கு டீஸ்பூன் வெளிச்செண்ணெய் ஊற்றி, கடுகு, மிளகாய், உளுத்தம்பருப்பு, கொஞ்சம் பெருங்காயம் போட்டு தாளித்து அதில் சதைத்து வைத்த சக்கை, தேங்காய்க் கலவை இவற்றை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளலாம். ஆக இடித்து செய்யும் கறிவகை என்பதால்தான் இதற்கு இடிச்சக்கை என்ற பெயர் ஏற்பட்டிருக்கக் கூடும்.

  இப்போது நவீன வசதிகள் வந்து விட்டது. சக்கைத் துண்டுகளை குக்கரில் மூன்று சவுண்டுகள் விட்டு வேக வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ளலாம். கீரை மசிக்கும் மத்தினால் ஒரு பாத்திரத்தில் வைத்து நசுக்கி சிதைத்துக் கொள்ளலாம். எப்படிப் பார்த்தாலும் செய்முறை ஒன்றுதான். மோர்க் குழம்பிற்கு சூப்பர் காம்பினேஷனாக இருக்கும் இந்த இடிச்சக்கை தோரன். சிலர் இதை இடிச்சக்கை பொடுத்துவல் என்றும் சொல்வதுண்டு.

  ***

  அடுத்தவாரம் பிரமாதமான கறிவகை ஒன்றைப் பார்ப்போம். அதுவரை.....வெயிட் ப்ளீஸ்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai