Enable Javscript for better performance
Brinjal tasty recipe | வழுதனங்கா மெழுக்கு பெரட்டி- Dinamani

சுடச்சுட

  
  aravanai_payasam

   

  தசரத புத்திரர்கள் அனைவருக்கும் தனித்தனியே கோவில் உள்ளதென்றால் அது கேரளத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில்தான். த்ருப்ரயாரில் ராமருக்கும், இரிஞாலக்குடாவில் பரதனுக்கும், முழிக்குளத்தில் லக்ஷ்மணனுக்கும், பயம்மாலில் சத்ருக்னனுக்கும் கோவில்கள் உள்ளன.  இதில் த்ருப்ரயார் ராமர் கோவிலுக்கும், இரிஞாலக்குடா பரத ஷேத்ரத்திற்கும் நான் சென்றிருக்கிறேன். இரண்டும் அவ்வளவு அழகானவை. பரத ஷேத்திரத்தின் சிறப்புகளைத்தான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம். அதற்கும் ஒரு காரணமுண்டு.

  அந்த இடத்தின் பெயர் கூடல். இரு நதிகள் சங்கமிக்கும் இடம். அங்குதான் பாரதனுக்குரிய கோவில் இருக்கிறது. மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வட்டக் கருவறை. அதனுள் ஐந்தடி உயரமுள்ள, பரதனின் திருவுருவம். ராமனின் வரவுக்காக காத்திருக்கும் பரதன் சங்கு சக்கரம், கதை, ஜெபமாலையுடன் தியான ஸ்வரூபியாக நின்ற திருமேனியாக இருக்கிறான். கருவறைக்குள் முத்து முத்தாய் எரியும் மிகப்பெரிய கொத்து விளக்குகள். மிகுந்த சாந்நித்யம் பொங்கும் இடம். இந்தக் கோவிலின் சிறப்புகள் பல. இங்கே பரதன் மட்டுமே மூலவராகக் கோயில் கொண்டிருக்கிறான். வேறு உபதேவதைகளின் சந்நிதிகள் எதுவும் இக்கோவிலில் இல்லை. எல்லாக் கோவில்களிலும் இருக்கும் விநாயகருக்குக் கூட இங்கு சந்நிதி கிடையாது. பரப்பிரம்ம மூர்த்தியாக இருக்கும் பரதன் மட்டுமே இங்கு ஒற்றை தெய்வமாக இருக்கிறான்.

  கருவறை மூர்த்தியின் நெற்றியிலிருந்து ஒரு சமயம் ஒளி பீறிட்டது. அது என்ன ஒளி என்று யாருக்கும் புரியவில்லை. அது ஏதேனும் விலைமதிப்புள்ள மாணிக்கக் கல்லின் ஒளியாக இருக்குமோ என்று, காயங்குளம் ராஜாவிடம் இருந்த விலையுயர்ந்த ஒரு மாணிக்கக் கல்லை ஒப்பிட்டு நோக்குவதற்காகக் கொண்டு வந்தனர். காயங்குளம் ராஜாவின் மாணிக்கத்தை கருவறை மூர்த்தியின் அருகே கொண்டு சென்ற போது, அந்த மாணிக்கம் திடீரெனப் பறந்து சென்று மூலவரின் நெற்றியில் ஒட்டிக் கொண்டு மறைந்து போனது. அன்றுமுதல் இவர் கூடல்மாணிக்கம் என்று அழைக்கப்படுகிறார்.

  இவர் தன்வந்திரி பகவானின் அம்சமாகவும் கருதப்படுவதால் நோய் தீர்க்கும் மருத்துவனாகவும் இங்கு விளங்குகிறார். கோவில் ஊழியர் ஒருவருக்கு தீராத வாயிற்று வலி வந்த போது, எந்த மருந்துக்கும் குணம் ஏற்படாமல் அவர் அவதிப்பட்டார். அப்போது அவரது கனவில் 101 வழுதனங்காயுடன் (கத்திரிக்காய்) கோவிலுக்கு வந்து வழிபாடு செய்யுமாறு ஒரு குரல்கேட்டது.  அவர் மறுநாளே 101 வழுதனங்காய்களுடன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு பிரசாதமாகப் பெற்று வந்து உண்டார். தீராத அவரது வாயிற்று வலி ஒரு நொடியில் தீர்ந்தது. அன்று முதல் இங்கு வழுதனங்கா நிவேத்யம் சிறப்பு பெற்று,. பலரது பிணிகளைத் தீர்த்திருக்கிறது.

  இது வெறும் கட்டுக்கதை அல்ல என்பதற்கு மற்றொரு சான்றும் உள்ளது. நமக்கெல்லாம் மிக நன்கு தெரிந்த ஒரு சங்கீத வித்வான், செம்பை வைத்தியநாத பாகவதர். இவர் பாலக்காட்டின் செம்பை கிராமத்தைச் சேர்ந்தவர். தெய்வ கடாட்சம் கொண்டவர். திரு யேசுதாஸ் அவர்களின் சங்கீத குரு. என் சின்ன வயதில் நான் செம்பை பாகவதரைக் கண்டிருக்கிறேன். பாபநாசம் சிவன் சாலையில் ரோசரி மெட்ரிக் பள்ளிக்கு எதிரில்தான் அவர் வீடு. அவர் வீட்டில் என்ன விசேஷம் என்றாலும் என் அப்பாவிடம்தான் பட்சணங்கள் ஆர்டர் செய்வார். என் அத்தை கணவர் அப்பள வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அவரிடமிருந்துதான் செம்பை வீட்டுக்கு பப்படம் மற்றும் அப்பளம் வடகங்கள் போகும். பட்சணங்களையும் அப்பளங்களையும் எடுத்துக் கொண்டு என் அத்தை பெண்களோ, என் அக்காவோ அவர் வீட்டுக்குச் செல்லும் போது என்னையும் உடன் அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

  காம்பவுண்டு சுவருக்கு உள்ளே வீட்டு வாசலில் ஒரு திண்ணை இருக்கும். அதன் மீது பொக்கை வாய் சிரிப்போடு ஒரு பெரிய கனிந்த மாம்பழம் போல் அமர்ந்திருப்பார் செம்பை பாகவதர். அல்லது அவர் வீட்டுக்குள் அவர் பாடிக் கொண்டிருப்பது கேட்கும். அப்போதெல்லாம் அவரைப் பற்றியோ அவரது பாடல்கள் பற்றியோ எதுவும் தெரியாத வயசு. அவரைப் பார்த்தால் பயந்து கொண்டு என் அக்காவின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வேன். அப்படி ஒரு முறை என் அக்காவின் தாவணியைப் பற்றிக் கொண்டு அவர் கண்ணில் படாமல் நானும் உள்ளே செல்ல முயன்ற போது அவரது இடது கரம் லாவகமாய் என்னைப் பற்றியது. வாடீ குட்டி என்றபடி இழுத்து தொப்பை சரிந்திருந்த தன் மடியில் உட்கார வைத்துக் கொண்ட போது பயத்தில் மிரண்டு போய் தொண்டையில் சத்தம் கூட வராமல் அழுகை பிசிறிப் போய் கேவியிருக்கிறேன். இப்போது நினைத்தால் ச்சே மிஸ் பண்ணிட்டோமே என்று தோன்றுகிறது. அவர் மரணமடைந்த பின்னரும் கூட அவரது மகளோடு எங்கள் குடும்பத்திற்குத் தொடர்பிருந்தது.

  செம்பை வைத்தியநாத பாகவதர் சிறந்த குருவாயூரப்ப பக்தரும் கூட. செம்பை கிராமத்தில் இவர் வீட்டிற்கு எதிரே ஒரு கிருஷ்ணன் கோவில் உண்டு. இவரது வீட்டு ஹாலில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து ஆடியபடி எதிரில் உள்ள கருவறை கிருஷ்ணனை தரிசிக்கலாம். அவரது செம்பை வீட்டிற்கும் சென்று அவர் அமர்ந்த அதே ஊஞ்சலிலும் அமர்ந்து ஆடி, எதிரில் உள்ள கிருஷ்ணன் கோவிலையும் தரிசிக்கும் பாக்யமும் எனக்கு கிடைத்திருக்கிறது.

  சங்கீத வித்வான்களுள் மிகுந்த தெய்வ பக்தியும் ஆசார அனுஷ்டானமும் உள்ளவராகத் திகழ்ந்தவர் செம்பை வைத்தியநாத பாகவதர். ஒரு முறை கள்ளிக் கோட்டையில் அவருடைய கச்சேரி இருந்தது. நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு சற்று முன்னால் திடீரென்று அவருக்குத் தொண்டை கட்டிக் கொண்டது. பாடுவது கஷ்டம் என்று உணர்ந்தார். நாள்பூராக நன்றாயிருந்த குரல் திடீரென்று ஏன் இப்படி ஆயிற்று என்று திகைத்த செம்பை, 'இன்று என்ன திதி?' என்று விசாரித்தார். கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசி என்று பஞ்சாங்கத்தைப் பார்த்து சொன்னார்கள். பிறகு தான் செம்பைக்குப் புரிந்தது. கார்த்திகை மாத சுக்ல பட்ச ஏகாதசியன்று குருவாயூர் சன்னதியில் பாடுவதை பலகாலமாக விரதமாகக் கொண்டிருந்தவர் அவர். அன்று அதை மறந்ததை நினைத்து வருந்தி, கச்சேரி ஏற்பாடு செய்தவரிடம் அனுமதி பெற்று, காரில் குருவாயூருக்குப் போனார். சுவாமி சன்னதியில் பாடிய போது  அவரது சாரீரம் சரியாகிவிட்டது.  இன்றும் கூட குருவாயூர் ஏகாதசி சமயம் செம்பை சங்கீதோல்சவம் நடைபெறுவது வழக்கம்.

  மற்றொரு முறை செம்பை பாகவதருக்கு தீராத வயிற்று வலியும், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் இருந்தது. அச்சமயம் அவர்  கூடல்மாணிக்கம் கோவிலைப்பற்றி கேள்விப்பட்டு உடனே அங்கு சென்றார். அங்கே 101 வழுதினிங்காய் சமர்ப்பித்து வழிபட்டு அவற்றை சிறிதளவு பிரசாதமாகப் பெற்று உண்டார். அவரது வயிற்று வலியும் உபாதைகளும் தீர்ந்தன.

  ஆமாம் அதென்ன வழுதினிங்காய்? வேறொன்றுமில்லை கத்திரிக்காயைத்தான் அங்கு அப்படி சொல்கிறார்கள்.

  இனி வழுதனங்காயில் செய்யப்படும் மெழுக்கு பெரட்டியைப் பார்ப்போம்.

  119)  வழுதனங்கா (கத்திரிக்கா) மெழுக்கு பெரட்டி

  தேவையான பொருட்கள்

  கத்திரிக்காய் – அரை கிலோ

  கடுகு – 1 சிறிய ஸ்பூன்

  உளுத்தம்பருப்பு - ஒரு ஸ்பூன்

  வரமிளகாய் – 2

  தேங்காய் எண்ணெய். – ஒரு டேபிள் ஸ்பூன்

  செய்முறை

  கத்திரிக்காயை நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துக் கொண்டு அடுப்பைப் பற்றவைத்துக் கொள்ளவும். சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து மிளகாயைத் தாளித்து, அதில் நறுக்கிய கத்திரிக்காயை நன்கு பிழிந்தெடுத்து போட்டு, தேவையான உப்பும், மஞ்சள் தூளும் சேர்த்து வதக்கவும். பாதி வெந்த பிறகு மீதமிருக்கும் எண்ணெயும் விட்டு கைவிடாமல் கிளற வேண்டும். கத்திரிக்காய் நன்கு வெந்து வதங்கி ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும். அடுப்பை அணைத்து விடலாம். இந்த மெழுக்குபெரட்டியின் சிறப்பே அதில் வீசும் தேங்காய் எண்ணெயின் வாசனைதான்.

  121)  நெய்ப் பாயசம்

  எங்களது அடிமக்காவு (குலதெய்வம்) காவச்சேரி பரக்காட்டு பகவதி. பாலக்காட்டிலிருந்து திருச்சூர் செல்லும் வழியில் நாற்பது நிமிட தூரத்தில் உள்ளது காவச்சேரி பகவதி ஆலயம். என் திருமணமான புதிதில் ஆண்டுதோறும் என் மாமனார் மாமியார் உட்பட அனைவரும்  குடும்பத்தோடு அங்கு செல்வது வழக்கம். மிக அழகான கோவில். மிக அழகான பகவதி. எண்பதுகளில் இந்தக் கோவில் மிகச்சாதாரணமாக இருந்தது. குலதெய்வ வழிபாடு செய்பவர்களும், உள்ளூர்க்காரர்களும்தான் இங்கு வந்து செல்வார்கள்.  உட்கட்டமைப்புகள் எல்லாம் சாதாரணமாகத்தான் இருக்கும். கோவிலில் இருப்பவர்களை என் மாமனாருக்கு நன்கு தெரியும்.  எப்போது அங்கு வழிபாட்டுக்குச் சென்றாலும் அங்கு பாயசத்திற்கு பணம் கட்டிவிட்டு ஓரிடத்தில் உட்கார்ந்து அவர்களோடு பேசிக் கொண்டிருப்பார். கருவறைக்குப் பின்னால் திடப்பள்ளி இருக்கும். அங்குதான் வெண்கல உருளியில் மணிக்கணக்காய் பாயசம் செய்வார்கள். காலை எட்டு மணிக்கெல்லாம் சென்று விடும் நாங்கள், அங்கேயே குளத்தில் குளித்து, அங்கிருக்கும் ஒரு அறையில் உடைமாற்றிக் கொண்டு, பகவதியைத் தரிசனம் செய்வோம். அவளுக்கு பாவாடை சார்த்தி, முடிந்து வைத்த பிரார்த்தனை பணங்களை உண்டியலில் செலுத்தி, பாயசம் தயாராகி நைவேத்தியம் செய்து, கையில் கொண்டு போயிருக்கும் பெரிய தூக்கில் பாயசத்தைப் பெற்றுக் கொண்டு கிளம்பும் போது உச்சிக் காலமாகியிருக்கும். அங்கிருந்து பாலக்காட்டில் இருக்கும் சின்ன மாமியாரின் வீட்டிற்கு வருவதற்குள் பசி வயிற்றைக் கிள்ளும். சில நேரம் கோவிலிலேயே அமர்ந்து ஆளுக்குக் கொஞ்சம் பாயசத்தை ருசிபார்த்து விடுவோம். பிரசாத பாயசத்தின் ருசி அருமையாக இருந்தாலும் அதிகம் சாப்பிட முடியாது. திகட்டிவிடும். இனிப்புப் பிரியர்கள் ஆனந்தமாக சாப்பிடுவார்கள்.

  இதை அரவணைப் பிரசாதம் என்றும் சொல்வார்கள். அரவணையில் அரிசி முழுவதுமாக வெந்திராது. வாயில் கடுக் முடுக்கென்று அரைபடும். இதை வீட்டில் செய்யும் போது குழந்தைகளுக்குப் பிடிக்காமலும் போகலாம். எனவே இதை வீட்டில் எல்லோருக்கும் பிடித்தாற்போல் செய்வதெப்படி என்று பார்ப்போம்.

  தேவையான பொருட்கள்

  அரிசி – ஒரு கப் (சீராக சம்பா அரிசி என்றால் ஒரு நல்ல வாசமிருக்கும்)

  வெல்லம் – அதே கப்பில் இரண்டரை கப்

  சர்க்கரை – அரை கப்

  ஏலக்காய் – 6

  முந்திரி அல்லது பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் – ஒரு டேபிள் ஸ்பூன்

  நெய் – 150 gm

  செய்முறை:

  முதலில் அரிசியைக் கழுவி ஒன்றுக்கு மூன்றரை கப் நீர் விட்டு குக்கரில் குழைவாக வேக வைத்துக் கொள்ளவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி கொதிக்க விடவும். அதோடு சர்க்கரையையும் சேர்த்து விட்டு நுரைத்து கொதிக்கும் போது ஏலக்காயைப் பொடித்து சேர்த்து விட்டு வேக வைத்த அரிசியை நன்கு மசித்து அதில் போட்டு நன்கு கலக்க வேண்டும். இரண்டும் ஒன்றோடொன்று நன்கு கலக்க வேண்டும். பிறகு சிறிது சிறிதாக நெய் சேர்த்து அடி பிடிக்காமல் நன்கு கிளற வேண்டும். அதிக கெட்டியாகவும் இல்லாமல், அதிக நீர்க்கவும் இல்லாமல் பளபளவென்று ஒரு பதம் வந்தபின் அடுப்பை அணைத்து விட்டு, நெய்யில் முந்திரி அல்லது தேங்காய் பல்லுகளை சிவக்க வறுத்து அதில் சேர்க்க வேண்டும். மணமான சுவையான நெய்ப் பாயசம் ரெடி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai