ப. சிங்காரம் – பகுதி 3

1942-ம் ஆண்டு ஃபெப்ருவரி 18-லிருந்து மார்ச் 4 வரை சிங்கப்பூரில் இருந்த சீனர்களில் 70000 பேர் கொல்லப்பட்டார்கள். கொன்றது ஜப்பான் ராணுவம்.

1942-ம் ஆண்டு ஃபெப்ருவரி 18-லிருந்து மார்ச் 4 வரை சிங்கப்பூரில் இருந்த சீனர்களில் 70000 பேர் கொல்லப்பட்டார்கள். கொன்றது ஜப்பான் ராணுவம். ஆனால் ஜப்பானிய ராணுவத்தின் அப்போதைய தளபதியான தோமயூக்கி யாமஷித்தா (Tomoyuki Yamashita) அதற்குக் காரணமானவர் அல்லர்; பெண்களை வன்கலவி செய்தல், எதிரிகளிடமிருந்து கொள்ளையடித்தல், தீயிடுதல் ஆகிய மூன்று காரியங்களில் ஈடுபடக் கூடாது என்று தன் வீரர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார். மீறினால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்திருந்தார். ஆனால் அவருக்குக் கீழே 2,62,000 வீரர்கள் இருந்தனர். மேலும், யாமஷித்தாவுக்கும் ஜப்பானிய ராணுவ மந்திரிக்கும் மோதல் இருந்தது. காரணம், யாமஷித்தா சீனா மற்றும் அமெரிக்காவுடன் நட்பாகப் போய் விடலாம் என்று ஆலோசனை சொன்னார். அது மந்திரிக்குப் பிடிக்கவில்லை.

யாமஷித்தாவின் சிப்பாய்கள் இரண்டரை லட்சத்துக்கும் மேல் இருந்தனர். எந்த சிப்பாயும் அவர் பேச்சைக் கேட்கவில்லை. சீனர்கள் மீது ஜப்பானியருக்கு இருந்த காலம் காலமான வெறுப்பும் சேர்ந்து கொண்டது. 70,000 பேரைக் கொன்ற சம்பவம் Sook Ching படுகொலை என்றும் அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனைப் படுகொலை என்றும் அழைக்கப்படுகிறது. போரின் போது சீனர்கள் மட்டும் அல்லாமல் பிரிட்டிஷ்காரர்களும் சீக்கியர்களும் கொல்லப்பட்டனர்.  

(புகைப்படம்: சீக்கியர்களைக் கொல்லும் ஜப்பானிய சிப்பாய்கள்)

போரில் ஜப்பான் தோற்ற பிறகு யாமஷித்தாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. துருப்புகள் செய்த கொடுமைகளுக்காக யாமஷித்தா கொல்லப்பட்டார்.

இந்த வரலாற்றுச் சம்பவங்களுக்கும் ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’க்கும் என்ன சம்பந்தம்? இதெல்லாம்தான் ‘ புயலிலே ஒரு தோணி’. வாஸ்தவத்தில் இந்த நாவலைப் பற்றி எழுதத் துவங்கினால் ஆயிரம் பக்கப் புத்தகமே போதாது. அவ்வளவு வரலாற்று விபரங்கள் விரவிக் கிடக்கின்றன. ஒரு சிலவற்றைப் பார்ப்போம். 

‘தானா லாப்பாங் (சுமத்ரா தீவில் உள்ள மெடான் நகரம்) பூங்காவைச் சுற்றிலும் தென்பட்ட காட்சி மனதை மருட்டிற்று. கனவா, நனவுதானா? தலையிலும் கையிலும் துணிச்சுருள், சிகரெட் பொதி, சைக்கிள் உருப்புகள், ரேடியோ பெட்டிகள்... எங்கிலும் புத்தகம், புதிய பேனாக்கள், பொத்தான் அட்டைகள், சொக்கொலெட் பெட்டிகள் இறைந்து கிடந்தன. களத்துக்குப் புதிதாக வந்தவர்கள் கீழே கிடந்த சாமான்களை வாரி அள்ளினர்; ஓடின உடல்களிலிருந்து சிறியவற்றை எட்டிப் பற்றினர். பூங்காவின் வடக்கிலும் கிழக்கிலும் மானிட மந்தை இரைச்சல் நசுங்கலாய்க் கலங்கலாய் ஒலித்துக் கொண்டிருந்தது.’ 

என்ன விஷயம் என்றால், ஜப்பானியத் துருப்புகள் மெடான் நகரில் நுழையப் போகும் செய்தியை அறிந்த கிரிமினல்களும் ஏனைய லும்பன்களும் கொள்ளையில் இறங்கி விட்டனர். இந்தக் காட்சி சில பக்கங்களில் விவரிக்கப்படுகிறது. அதோடு, மதக் கலவரமும் சேர்ந்து கொள்கிறது.  

பெந்தெங் (கோட்டை) பகுதியிலிருந்து ஆரவாரமும் ஓலமும் கலந்த இரைச்சல் வந்தது.  

சைக்கிள்கள் இடப்புறம் திரும்பின.

மந்தைக் கூட்டம் பிளந்த வாயும் வெறித்த கண்ணுமாய்ச் சுழிந்து வளைந்து கத்திக் கூத்தாடுகிறது.

‘யா அலி! யா அலி!’

பானை, சட்டி, தட்டுமுட்டுச் சாமான்கள் சிதறிக் கிடந்தன. மேசை நாற்காலிகளும் மெத்தை தலையணைகளும் எரிந்தன. மெடானில் சிக்கிக் கொண்ட அம்பொனிய சிப்பாய்கள் - உடல் நலிவு காரனமாய் வெளியேற முடியாத நிலையிலிருந்தவர்கள் - அடி மிதி தாங்க முடியாமல் அலறினர். மண்டைகள் உடைந்து ரத்தம் கொட்டுகிறது.

‘யா அலி! யா அலி!’

பெந்தெங் மறைவிடங்களிலிருந்து பெண்களை இழுத்து வந்தனர். ஆடையை இழந்து அம்மணமாயிருந்த அபலைகள் கையால் முகத்தை மூடிக் கொண்டு அலறினார்கள்.

‘ஆயயயோவ்! ஓ மரியா! ஆயயயோவ்!’

கொண்டைப் பிடியாய்க் கைப்பிடியாய்க் கால்பிடியாய் இழுத்துச் சென்றனர், முன்னாலிருந்த புல் விரிப்புக்கு.

‘ஆயயயோவ்! ஓ மரியா! ஆயயயோவ்!’

புல்லாந்தரையில் பிறந்த மேனிக் கோலத்தில், மல்லாந்த உருவங்கள், சுற்றிலும் வேற்று மானிடர். சூரியனின் பட்டப்பகலில் ஊரறியக் காதறியக் கண்ணறியக் கட்டாய உடலாட்டு...

‘ஆயயயோவ்! ஓ மரியா! ஆயயயோவ்!’

பகலவன் பார்த்திருந்தான். நிலநங்கை சுமந்திருந்தாள். ஊரார் உற்று நோக்கக் களித்து நின்றனர்.

பாண்டியன் முகத்தைத் திருப்பினான். ஆ... ‘மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனில் இன்றால்...’

இந்த நாவல் வரலாற்று ஆவணம் மட்டும் அல்ல என்பதற்கு மேற்கண்ட வரி உதாரணம். அது சீத்தலைச் சாத்தனின் மணிமேகலை. சிறை செய் காதை. மன்னன் இல்லையேல் மாதவர்களின் தவத்துக்கும் மகளிர் கற்புக்கும் உத்தரவாதம் இல்லை. இப்படி பக்கத்துக்குப் பக்கம் பழந்தமிழ் இலக்கியத்திலிருந்து உப பிரதிகள் ஊடாடி ஊடாடி வந்து கொண்டே இருக்கின்றன.  

நாவலின் அடுத்த பக்கங்களில் யாமஷித்தாவின் சிப்பாய்கள் மெடான் நகரில் செய்த அட்டூழியங்களைப் பற்றி விவரிக்கிறது.

‘ஹக்கா - வில்ஹெல்மினா முக்கு வெற்றிடத்தில் பிறை வட்டமாய் இடம் விட்டுப் பார்வையாளர்கள் குழுமி நின்றனர்; கண் இமைக்காமல், ஊன்றிய சிலைகளாய் மெய்மறந்திருதார்கள்.

இடப்புற நடைபாதையோரம் ஒதுங்கி, வண்டியிலிருந்து இறங்காமல் ஒரு காலைத் தரையில் ஊன்றி நின்று பார்த்தான்.

இடுப்புயர மேசை மீது ரத்தம் சொட்டும் ஐந்து மனிதத் தலைகள் அடுக்கப்பட்டிருந்தன. மேசைக்குப் பின்னால் நின்ற சிப்பாய், ஒவ்வோர் உருப்படியாய், மெதுவாய், அக்கறையுடன் தலைகளின் கிராப் முடியைச் சீப்பினால் வாரி விட்டுக் கொண்டிருந்தான். சுற்றி நின்ற ஜப்பானியர் சிரித்து விளையாடினர்.  

பாண்டியன் இதற்கு முன்பும் வெட்டுண்ட தலைகள் பலவற்றைப் பார்த்திருக்கிறான். ‘கெண்டைத் துப்பட்டா’ வெள்ளிமுத்து, அவன் தம்பி மாயழகு, கையாள் புலிக்குத்தி ஆகியோர் தலைகலையும் இப்படித்தான் வயிற்றிலுப்பை சுமைதாங்கிக் கல்லில் வைத்திருந்தார்கள். ஆனால், அது தனிப்பட்ட பகை காரணமாய், ஒளிவு மறைவாய்...

சுற்றுமுற்றும் பார்த்தான். பார்வையாளர்களில் யாரும் கண் இமைக்கவில்லை. பேயறைந்தவர்கள் போல் நின்றனர்.

சிப்பாய்கள் நின்றும் குந்தியும் சிரித்து விளையானர். சீப்புக்காரன் மாறி மாறித் தலைகளை வாரி விட்டுக் கொண்டிருந்தான்.
***

‘புயலிலே ஒரு தோணி’யின் மற்றொரு விசேஷம், அது விவரித்திருக்கும் நிலவியல் மற்றும் அதைச் சார்ந்த கலாசாரம். எங்கோ இந்தோனேஷியாவில் உள்ள மெடான் என்ற ஊருக்கும் நான் பிறந்து வளர்ந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த (இப்போது நாகப்பட்டினம் மாவட்டம்) நாகூர் என்ற சிற்றூருக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? ‘புயலிலே ஒரு தோணி’க்கு ஆய்வுபூர்வமாக முன்னுரை எழுதியிருக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் சுனில் அம்ரித் இப்படிக் கூறுகிறார்:

‘தென்கிழக்காசியாவுண்டனான தமிழர் தொடர்புகள் ஓராயிரம் ஆண்டைக் கடந்தவை. மலேசியாவின் பூஜாங் பள்ளத்தாக்கின் தொல்லியல் எச்சங்கள் கி.பி. எட்டாம் நூற்றாண்டிலேயே தமிழ் வணிகர்கள் அங்குக் குழுமியிருந்ததைக் காட்டுகின்றன. சீனரோடான வணிகத்துக்குப் போட்டியாக இருந்த ஸ்ரீவிஜயப் பேரரசைக் கட்டுக்குள் கொண்டுவரும் முகமாக கி.பி. 1025-ல் இராஜேந்திர சோழன் தென்கிழக்காசியா மீது கடற்போர் தொடுத்தான். இதற்குப் பின் பல நூற்றாண்டுகளாக வங்கக் கடலின் விளிம்பெங்குமுள்ள துறைமுக நகரங்களில் தமிழ் பேசும் முஸ்லீம்களாகிய மரைக்காயர்கள் தங்கினர். அவர்களுள் பலர் உள்ளூர் மேட்டுக்குடிகளோடு மணவுறவு கொண்டு, அதிகாரமும் செல்வாக்கும் பெற்றிருந்தனர்.’

இப்படிச் சென்ற இஸ்லாமியரில் பெரும்பகுதி நாகூர் மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களில் இருந்த இஸ்லாமியர். அப்படிச் சென்று கொண்டிருந்தபோது பிரிட்டிஷ்காரர்கள் சுமத்ராவில் புகையிலை பயிரிடத் துவங்கினார்கள். அந்தத் தோட்டத் தொழிலுக்காக உடல்வலுவுள்ள பல கூலித் தொழிலாளிகள் சென்னை மாகாணத்தின் தமிழ்ப் பகுதிகளிலிருந்து கொண்டு செல்லப்பட்டார்கள். அதுதான் மலேஷியத் தமிழர்களின் பூர்வீகக் கதை. ‘உலக வரலாற்றில் நடைபெற்ற மிகப் பெரும் தொழிலாளர் குடிபெயர்வுகளில் இதையும் ஒன்றாகக் கருத வேண்டும்’ என்று குறிப்பிடுகிறார்.

நாகூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வாழும் இஸ்லாமியருக்கென்று தனிப்பட்ட கலாசாரம் உண்டு. (பேச்சு வழக்கு, உணவுப் பழக்கம், திருமண சடங்குகள் என்று நூற்றுக் கணக்கான விஷயங்கள் இதில் அடங்கும்.) இதன் அடையாளங்களை ‘புயலிலே ஒரு தோணி’யில் நான் கண்டேன்.  

படக் கடை நகுதா மரைக்காயர். (இந்த நகுதா மரைக்காயர் என்ற பெயர் நாகூரில் மிகவும் பிரசித்தம்.) நானா என்றால் நாகூர் மொழியில் அண்ணா என்று பொருள். நகுதா மரைக்காயரை பாண்டியன் நானா என விளிக்கிறான். இருக்கு என்று மற்றவர்கள் சொல்வதை நாகூரில் ‘இரிக்குது’ என்பார்கள். இந்த நாவலில் வரும் இஸ்லாமியர் அனைவரும் நாகூர் மொழியையே பேசுகிறார்கள்.   

‘புயலிலே ஒரு தோணி’யில் மெடான் நகரின் கெசாவன் தெரு பல இடங்களில் வருகிறது. அந்தக் கெசாவன் தெரு 1920-களில் இப்படித்தான் இருந்தது. நாவலில் வரும் மெடான் நகரத்தின் வில்ஹெல்மினா என்ற பகுதி டச்சுக்காரர்களின் காலத்தில் கட்டப்பட்டது. இப்போது அது இடிக்கப்பட்டு விட்டது. அது மட்டும் அல்ல; மிக முக்கியமான பல வரலாற்றுச் சின்னங்களைக் கொண்ட மெடான் நகரம் இன்று அதன் அடையாளத்தை முற்றிலும் இழந்து ஒரு நவீன நகரமாகக் காட்சியளிக்கிறது.

இது பற்றி சுனில் அம்ரித்:

இன்றைய மெடானில் ஒரு சிறு தமிழ்க் குடியிருப்பு எஞ்சியுள்ளது. ‘கம்பொங் மெட்ராஸ்’ (மெட்ராஸ் கிராமம்) என்று அதற்குப் பெயர். அதன் நடுவில் ஒரு மாரியம்மன் கோவில். 1881-ல் செட்டியார்கள் கட்டியது. இன்று சில தெருக்களை மட்டுமே கொண்ட பகுதி அது. சிங்காரம் நடமாடிய பகுதி இன்று குறுகிவிட்டது. பல பதிற்றாண்டுகளுக்குப் பிறகு அவர் நினைவு கூர்ந்தது போல் சுதந்திர இந்தொனேசியா அரசாங்கம் தெருப் பெயர்கள் பலவற்றை மாற்றி விட்டது. இன்று அங்கு செல்லும் ஒரு பயணி, பாண்டியன் கண்ட உலகத்தின் சில காட்சித் தெறிப்புகளையேனும் காணலாம்.’

இந்தப் புகைப்படங்கள் கேப்டன் ஜார்ஜ் எஸ். ஒய்ட் என்பவரால் எடுக்கப்பட்டது. 

புயலிலே ஒரு தோணி - காலச்சுவடு பதிப்பகம். 

(தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com