சுடச்சுட

  

   

  பணம் செய்ய விரும்புவோருக்கு முதல் தேவை அறிவு. அதற்கு அடுத்ததாகத் தேவை துணிவு. எந்த நிலையிலும் அவர்களுக்கு எப்போதும் தேவை அறம். அறம் என்பது தான தர்மம் செய்வதல்ல, நெறியோடு நிற்றல். நெறி பிறழ்ந்து வருகின்ற எந்தவகைச் செல்வமும் ஏற்புடையது அல்ல, ஏற்றம் தருவதும் அல்ல. இதனைத் திருவள்ளுவப் பெருந்தகை ‘வினைத்தூய்மை’ என்ற அதிகாரத்தில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

  பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்

  கழிநல் குரவே தலை. (857)

  பழி மலைந்து எய்திய ஆக்கம் என்றால், பழி பாவங்களை ஏற்படுத்துகின்ற தீய செயல்களை மேற்கொண்டு உருவாக்குகின்ற செல்வம் என்று பொருள். நல்குரவு என்றால் வறுமை; கழி நல்குரவு என்றால் மிகுந்த வறுமை என்று பொருள். தீய செயல்களால் வருகின்ற செல்வத்தைவிட, சான்றோர் அனுபவிக்கின்ற மிகுந்த வறுமையே உயர்ந்தது என்று இக் குறள் வலியுறுத்துகிறது. ஆகையால், தீய செயல்களை ஒதுக்கிவிட்டு அறிவின் துணைகொண்டு, துணிவோடு செயல்பட்டு பொருள் ஈட்டுதல் வேண்டும்.

  பொதுவாக வங்கி முதலீடு, அரசுப் பத்திரங்களில் முதலீடு ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அதிகம் இருந்தாலும், இவ்வகை முதலீடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் குறைவாகவே இருக்கும். அதேநேரத்தில், இடர்பாடுகளும் இருக்கும் - அவற்றைச் சமாளித்துவிட்டால் பயன்களும், அதாவது லாபமும் அதிகம் கிடைக்கும் என்ற வகையிலான முதலீடுகளும் உள்ளன. அவ்வகை முதலீடுகளில் முன்நிற்பது பங்கு முதலீடு எனப்படும் ஷேர் முதலீடு. இந்தப் பங்கு முதலீட்டை ‘எடுத்தோம், கவிழ்த்தோம்’ என்று மனம்போன போக்கில் முதலீடு செய்துவிடலாகாது. நுணுக்கமாக ஆய்ந்து முடிவெடுக்க வேண்டும். மற்ற வகை முதலீடுகளைவிட இதில் பல்வேறு அம்சங்களை தீர ஆராய்ந்து முடிவெடுக்கவேண்டி உள்ளது.

  பங்குச் சந்தை முதலீடு என்பது அதிர்ஷ்டம் தருகின்ற வாய்ப்பு அல்ல, அறிவுப்பூர்வமான முதலீடு. அதேநேரத்தில், விவரங்கள் தெரிந்திருந்தாலும் மேலும் பணம் குவிக்க வேண்டும் என்ற வெறியில் முதலீடு செய்தால், சூதாட்டம்போல் நமது மொத்த செல்வத்தையும் சுருட்டி எடுத்துச் சென்றுவிடும் அபாயமும் இதில் உண்டு. ஆகையால், குளிர்காய்வதற்காக உருவாக்கப்பட்ட தீக்கு மிக அருகிலும் சென்றுவிடக் கூடாது, மிகவும் தள்ளியும் அமர்ந்துகொள்ளக் கூடாது என்ற வகையில், பங்கு முதலீட்டையும் மிகப் பக்குவமாகக் கையாள வேண்டும். ‘பறப்பதைப் பிடிக்கிறேன் என்று இருப்பதையும் கைவிட்டுவிடக் கூடாது’ என்றொரு பழமொழி உண்டு. இது பங்கு முதலீட்டுக்கு மிகவும் பொருத்தமானது. இதனை திருக்குறளின் ‘தெரிந்து செயல்வகை’ அதிகாரத்தில் உள்ள கீழ்க்கண்ட குறள் தெளிவாக எடுத்தியம்புகிறது.

  ஆக்கம் கருதி முதலிழக்கும் செயலினை

  ஊக்கார் அறிவுடை யார். (463)

  பின்னால் மிகுந்த செல்வம் வரப்போகிறது என்று கருதி, இப்போது தன்னிடம் உள்ள முதலை இழந்துவிடுகின்ற செயலைச் செய்வதற்கு, அறிவுள்ளோர் துணியமாட்டார்கள் என்று இக் குறளில் நேரடியாகவே முதலீட்டாளர்களுக்கு அறிவுறுத்துகிறார் முப்பால் தந்த முனிவர். ஆகையால், பங்கு முதலீட்டில் இறங்குபவர்கள், பேராசை வயப்பட்டு தம்மிடமுள்ள கைப்பணத்தையும் இழந்துவிடுகின்ற இழிசெயலில் இறங்கிவிடக் கூடாது.

  பங்குகளில் இடுகின்ற முதலீட்டை நேரடியாக ஒரு நிறுவனம் வெளியிடுகின்ற பங்குகளை வாங்கி மேற்கொள்கின்ற முதல்நிலைச் சந்தை முதலீடு என்றும், பங்குகளை வாங்கி விற்கின்ற பங்குச் சந்தையில் (ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில்) இருந்து வாங்குகின்ற இரண்டாம்நிலைச் சந்தை முதலீடு என்றும் பிரிக்கலாம். இதில், பங்கு வெளியீட்டின்போது நேரடியாக பங்குகளை வாங்கும்போது, அது தனிப்பட்ட முதலீட்டுக்காக மட்டுமின்றி நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும் உதவிகரமாக அமைகிறது. அதேநேரத்தில் பங்கு வெளியீட்டுக்குப் பின்னர் குறிப்பிட்ட பங்கு, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இரண்டாம் நிலையில் அல்லது பிறர் கைமாறி நாம் வாங்கும்போது அது தனிப்பட்ட முதலீடாக மாத்திரமே அமையும்.

  முதல் நிலையில் நேரடியாக வாங்கினாலும் சரி அல்லது இரண்டாம் நிலையில் பங்குச் சந்தையில் வாங்கினாலும் சரி, வாங்கவுள்ள பங்குகளின் தரம் பார்த்து அவற்றை வாங்க வேண்டும். இதற்கு பங்குகளை வெளியிட்டுள்ள நிறுவனத்தின் பின்னணி, அந்த நிறுவனம் சார்ந்துள்ள தொழில் துறையின் நிலவரம், அத்தொழிலுக்கு தற்போதுள்ள மற்றும் எதிர்காலத்தில் இருக்கப்போகின்ற வாய்ப்புகள், அந்தப் பங்குகளின் தற்போதைய விலை – எதிர்காலத்தில் அது உயர்வதற்கான வாய்ப்புகள், நாட்டின் மற்றும் உலகப் பொருளாதாரச் சூழலால் குறிப்பிட்ட தொழில் துறைக்கும், குறிப்பிட்ட நிறுவனத்துக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என பல்வேறு காரணிகளை அலசி ஆராய்ந்த பிறகே அப் பங்குகளை வாங்க வேண்டும். இதுகுறித்து ‘தெரிந்து தெளிதல்’ அதிகாரத்தில் திருவள்ளுவர் ஓர் அறிவுரை வழங்கியுள்ளார். அந்த அறிவுரை –

  குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

  மிகைநாடி மிக்க கொளல். (504)

  ஆங்கிலத்தில் மெரிட்ஸ் அண்ட் டீமெரிட்ஸ் என்று சொல்வார்கள். எது ஒன்றைத் தீர்மானிப்பதற்கும் இவற்றைப் பார்க்க வேண்டும். இதனைத்தான் வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மொழிந்திருக்கிறார். ஒருவரிடமுள்ள குணத்தையும் பார்க்க வேண்டும், குறைகளையும் பார்க்க வேண்டும். இவற்றுள் எது மிகுதியாக இருக்கிறதோ அதுதான் அவருடைய தன்மை என்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இக்குறள் கூறுகிறது. இதனையே இப்போது பங்கு முதலீட்டுக்குப் பாங்காகப் பார்ப்போம். குறிப்பிட்ட ஒரு நிறுவனப் பங்கைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக, அவற்றுக்குள்ள நற்குணங்கள், அதாவது சாதக அம்சங்கள் என்னென்ன என்பதைப் பார்க்க வேண்டும். இதேபோல், அதில் உள்ள குற்றங்குறைகள், அதாவது பாதக அம்சங்கள் என்னென்ன என்பதையும் அறிய வேண்டும். இந்த இரண்டில் எது மிகுதியாக இருக்கிறதோ அதுதான் அந்தப் பங்கினுடைய தன்மை என்பதைப் புரிந்துகொண்டு, குணம் அதிகமாக இருக்கும் பங்குகளையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

  சிறந்த பங்குகளை எப்படி இனங்காண்பது? செய்திகள் வாயிலாகவும், நிபுணர்கள் வாயிலாகவும் கேள்விப்படுகின்ற நிறுவனப் பங்குகள் சிலவற்றை முதலில் தோராயமாகத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அவற்றின் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும். குறிப்பிட்ட பங்குகளை வெளியிட்டுள்ள நிறுவனத்தில் யார் யார் இயக்குநர்களாக இருக்கின்றனர்? அவர்களுடைய தொழில், இதர பின்னணி என்ன? குறிப்பிட்ட நிறுவனம் சார்ந்திருக்கின்ற தொழிலின் நிலைமை என்ன? அந் நிறுவனத்தின் கடந்த காலச் செயல்பாடு (குறைந்தபட்சம் முந்தைய மூன்றாண்டுகள்) எவ்விதம் உள்ளது? அதன் லாபம் மற்றும் முதலீட்டாளர்களுக்கு முறையாகவும் நியாயமாகவும் லாப ஈவுத்தொகை வழங்கியிருக்கிறார்களா? உள்ளிட்ட விவரங்களை அறிய வேண்டும்.

  பின்னர் அந் நிறுவனப் பங்கின் தற்போதைய விலை நிலவரம் எப்படி உள்ளது? அது சரியானதுதானா? என்பதைப் பரிசோதிக்க வேண்டும். இதற்கு அந்த நிறுவனப் பங்கின் விலை வருவாய் விகிதத்தை அறிய வேண்டும். ஆங்கிலத்தில் இதனை பிரைஸ் இயர்னிங் ரேஸியோ என்பார்கள். சுருக்கமாக பி.இ. ரேஸியோ. இந்த பி.இ. விகிதத்தை எப்படிக் கண்டறிவது? அதற்கு முதலில் ஈ.பி.எஸ்-ஸைக் கண்டறிய வேண்டும். இ.பி.எஸ். என்பது இயர்னிங் பெர் ஷேர் என்பதன் சுருக்கம். இதனைத் தமிழில், பங்கு வீத வருவாய் என்று கூறலாம்.  

  ஒரு நிறுவனத்தின் லாபத் தொகையை, அந் நிறுவனத்தின் மொத்த சாதாரணப் பங்குகளால் வகுத்தால் கிடைப்பதுதான் பங்கு வீத வருவாய். ஒரு பங்குக்கு எவ்வளவு லாபம் கிடைத்துள்ளது என்பதே இது. அந் நிறுவனம் முன்னுரிமைப் பங்குகளை (பிரெஃபர்டு ஷேர்ஸ்) வெளியிட்டிருக்கும்பட்சத்தில், லாபத்தில் இருந்து முதலில் முன்னுரிமைப் பங்குகளுக்கான லாப ஈவுத்தொகையை (பிரெஃபர்டு டிவிடெண்ட்) கழித்துவிட்டு, பின்னர் அவற்றை மொத்த சாதாரணப் பங்குகளால் வகுக்க வேண்டும்.

  இப்போது, பி.இ. விகிதத்துக்கு வருவோம். குறிப்பிட்ட நிறுவனப் பங்கின் சந்தை விலையை (அதாவது தற்போது விற்கப்படும் விலையை) மேலே கண்டறிந்த இ.பி.எஸ்-ஸால் வகுத்தால் கிடைப்பதே பி.இ. விகிதம்.  உதாரணத்துக்கு, எக்ஸ் என்ற நிறுவனப் பங்கின் சந்தை விலை ரூ.100. அதன் இ.பி.எஸ். ரூ.20 என்றால், அப் பங்கின் பி.இ. விகிதம் 5. அதாவது குறிப்பிட்ட நிறுவனப் பங்கின் மூலம் நமக்கு ரூ.20 வருவாய் கிடைக்க, நாம் ரூ.100 முதலீடு செய்ய வேண்டும் என்பது இதன் பொருள். இதன் விகிதம்தான் 5. அதாவது ரூ.1 லாபம் கிடைக்க ரூ.5 முதலீடு செய்யப்படுகிறது. இந்த விகிதத்தை எதற்காகக் கணக்கிட வேண்டும்? மற்ற நிறுவனப் பங்கின் பி.இ. விகிதத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து அறியத்தான். உதாரணத்துக்கு, ஒய் என்ற நிறுவனப் பங்கின் சந்தை விலை ரூ.50. அதன் இ.பி.எஸ்ஸும் ரூ.20 என்றால் அதன் பி.இ. விகிதம் 2.5. இந்த ஒய் நிறுவனப் பங்கில் ரூ.20 வருவாய் கிடைக்க, நாம் ரூ.50 முதலீடு செய்தால் போதும். அதாவது, ரூ.1 லாபம் கிடைக்க ரூ.2.5 முதலீடே போதுமானது. ஆக, எக்ஸ் நிறுவனப் பங்கைவிட ஒய் நிறுவனப் பங்கு விலை மலிவானது. 

  எனவே, ஏறத்தாழ இ.பி.எஸ். ஒரே அளவில் இருந்தாலும் பி.இ. விகிதத்தைப் பார்த்து மலிவான பங்கையே நாம் வாங்க வேண்டும். என்னதான் மிகச் சிறந்த நிறுவனமாக இருந்தாலும் சரி, அதன் பி.இ. விகிதம் மிக அதிகமாக இருந்தால், அவற்றை வாங்காமல் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அதிக பி.இ. விகிதம் உள்ள பங்குகளின் விலை விரைவில் சரிவடையும் என்பது பங்குச் சந்தை வரலாறு காட்டுகின்ற உண்மை. மேலும், மிகவும் உச்சத்தை எட்டிய நிறுவனம் அதற்கும் மேல் வளர்வதற்கு வாய்ப்பில்லை. அவற்றின் பங்குகளின் விலையும் இதற்கு மேல் பெரிதாக உயர வாய்ப்பில்லை என்பதால், அதில் நமக்கு லாபமும் இருக்காது. ஆகையால் நன்கு செயல்படக்கூடிய, பி.இ. விகிதம் குறைவாக உள்ள நிறுவனப் பங்குகளைத் தேர்வு செய்வதே சாலச் சிறந்தது.

  பங்குகளில் ஒரு முதலீட்டாளர், இரண்டுவித காரணங்களுக்காக முதலீட்டை மேற்கொள்ளலாம். வாங்குகின்ற பங்குகளை நீண்ட காலம் வைத்திருந்து அவற்றின் மூலம் கிடைக்கும் ஆண்டு லாபப் பகிர்வான ஈவுத்தொகை (டிவிடெண்ட்), ஊக்கப் பங்குகள் (போனஸ் ஷேர்ஸ்) ஆகிய பயன்களை ஆண்டுதோறும் அனுபவிப்பதற்கானது முதல் வகை. அவ்வாறின்றி, வாங்குகின்ற பங்குகளை குறித்த காலம் தம்வசம் வைத்திருந்து விலை உயரும்போது அவற்றை விற்று லாபத்தை ஈட்டுவது இரண்டாவது வகை. இவ்வாறு லாபநோக்கில் பங்குகளில் முதலீடு செய்வதையும் குறுகிய கால முதலீடு, நடுத்தரக் கால முதலீடு, நீண்ட கால முதலீடு என்று பிரித்து நோக்கலாம். இந்தக் கால அளவு, முதலீட்டின் தன்மையைப் பொருத்து மாறுபடும். பொதுவாக, பங்கு அல்லாத இதர வகை முதலீடுகளைப் பொருத்தவரை, மூன்றாண்டுக் காலம் வரை குறுகிய கால முதலீடு என்றும், மூன்றாண்டுகளுக்கு மேல் 10 ஆண்டுகளுக்கு உட்பட்டது என்றால் நடுத்தரக் கால முதலீடு என்றும், 10 ஆண்டுகளுக்கு மேற்பட்டால் நீண்ட கால முதலீடு என்றும் வகைப்படுத்தப்படுகிறது.

  ஆனால், பங்கு முதலீட்டைப் பொருத்தவரை இந்தக் கால அளவு, ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் அவரது செல்வ மதிப்பு, அவர் வாங்குகின்ற பங்குகளின் தன்மை ஆகியவற்றைப் பொருத்து மாறுபடும். எனினும், தோராயமாக இதற்கோர் வரையறை வைக்கலாம். அதன்படி, ஓராண்டுக்குள்ளாக நாம் முதலீடு செய்துள்ள பங்குகளை விற்றுவிடுவது குறுகிய கால முதலீடு. ஓராண்டுக்கு மேல் மூன்றாண்டுகளுக்குள்ளாக இருந்தால் நடுத்தரக் கால முதலீடு. மூன்றாண்டுகளுக்கு மேல் பல ஆண்டுகள் வைத்திருந்து பின்னர் லாபம் ஈட்டுவது நீண்ட கால முதலீடு.

  அதிக விலையில் நாம் வாங்குகின்ற பங்குகளை, பொதுவாக குறுகிய காலத்திலேயே விற்று லாபம் ஈட்டிவிட வேண்டும். இல்லையேல், விலை குறைந்து நாம் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடலாம். குறைந்த விலையில் வாங்குகின்ற சிறந்த நிறுவனப் பங்குகளை சில ஆண்டுகள் வைத்திருந்து, நல்ல விலையேற்றம் வரும்வரையில் காத்திருந்து பின்னர் விற்றுவிடலாம். நீண்டகால முதலீட்டைப் பொருத்தவரை, பங்குகளை விற்று லாபம் ஈட்டுவதைவிட, லாப ஈவுத்தொகை, ஊக்கப் பங்குகள் ஆகியவற்றைக் கருதியே மேற்கொள்ள வேண்டும்.

  பங்குகளை வாங்கும்போது ‘அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பி வாங்கினேன்’ என்ற கதை பெரும்பாலும் புலம்பலில்தான் போய் முடியும். பங்குத் தரகர்கள், நிபுணர்கள், தொலைக்காட்சியில் தோன்றி ஆலோசனை தருவோர், நமக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் என யார் வேண்டுமானாலும் பங்கு முதலீடுகள் குறித்த யோசனைகளை நமக்குத் தெரிவிக்கலாம். ஆனால், யோசனை அவர்களுடையதாக இருந்தாலும், முடிவு நம்முடையது என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். ஏனெனில், முதல் நம்முடையது, முடிவும் நம்முடையதாகத்தானே இருக்க வேண்டும்?

  தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை

  தீரா இடும்பை தரும். (508)

  என்று இதே ‘தெரிந்து தெளிதல்’ அதிகாரத்தில் எச்சரிக்கிறார் திருவள்ளுவர். மற்றவனை ஆராய்ந்து பார்க்காமல் இவன் நல்லவன் என்று கருதி ஒருவர் ஏற்றுக்கொள்கின்ற செயலானது, அவருக்கு மட்டுமின்றி அவரது வழிமுறைக்கும், அதாவது சந்ததிக்கும் அது தீராத தொல்லையைத் தரும் என்று இதற்குப் பொருள். பங்கு முதலீடுகளுக்கு இதை சற்று மாறுபாட்டுடன் பொருத்திப் பார்க்கலாம். பங்குகளைப் பொருத்தவரை, அதுகுறித்த விவரங்களை நேரடியாக தாம் அறிந்து தெளிவடைந்து ஏற்றுக்கொண்டு முதலீடு செய்வதற்குப் பதிலாக, பிறர் சொல்வதை ஏற்றுக்கொண்டு முதலீடு செய்கின்றவருடைய செயல்முறை தீராத துன்பத்தைத் தரும்; அதனால், அவரது குடும்பத்தார் உள்ளிட்ட அவரைச் சார்ந்தவர்களும் துயரடைவார்கள்.

  பங்கு முதலீடு என்பது பொதுவாக இடர்களுக்கு உட்பட்டதுதான். இந்த இடர்களை அறிந்துகொண்டு, அவற்றைக் கடந்து செல்லும்போது மிகுந்த பயன் பெறலாம் என்பதற்காகத்தான் இந்தவகை முதலீடுகளை ஒருவர் தேர்ந்தெடுக்கிறார். ஆகையால், பங்கு முதலீடுகளில் இடையில் வருகின்ற சிறு சிறு இழப்புகளுக்கு அஞ்சி, அவற்றைப் பாதியிலேயே கைவிட்டுவிடக் கூடாது. முதலில் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு தெளிவடைதலில், சிலவகை இடர்பாடுகள் இதில் உண்டு - அவற்றைச் சமாளித்தாக வேண்டும் என்பதும் முக்கியமானது. சரியாகப் புரிந்துகொண்டு பங்கு முதலீட்டில் இறங்கி, துணிவுடன் செயல்பட்டால், முடிவினில் சுபமே.

  ‘வினைத்திட்பம்’ என்ற அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள ஒரு குறள், இதனை எடுத்துரைக்கும் வண்ணம் அமைந்துள்ளது. அக்குறள் –

  துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

  இன்பம் பயக்கும் வினை. (669)

  நாம் எடுத்துக்கொண்டுள்ள ஒரு முயற்சியின் இடைவழியில் துன்பம் வந்தாலும் சரி, இறுதியில் இன்பம் தரக்கூடிய அந்தச் செயலை, துணிவுடன் தளர்வின்றிச் செய்ய வேண்டும் என்பது இக்குறளின் பொருள். பங்குச் சந்தையில் தடாலென்று பல பங்குகளின் விலை ஒரே நாளில் சரிவதற்கு, பெரும்பாலும் பீதியே காரணமாக இருக்கும். அச்சப்படுவோர் இந்தச் சமயத்தில் தங்கள் வசமிருக்கும் சிறந்த பங்குகளையும் விற்றுவிடுவர். பின்னர் நிலைமை சரியானதும், நல்ல பங்குகள் விரைவில் விலையேற்றம் காணும். அப்போது ‘அடடா! அந்தப் பங்குகளை அப்போதே விற்றுவிட்டோமே, இப்போது வைத்திருந்தால் லாபம் அடைந்திருக்கலாமே!’ என்று புலம்புவார்கள். இதனைத் தவிர்க்க வேண்டும். தேர்ந்தெடுத்து முதலீடு செய்துள்ள சிறந்த பங்குகளை, சிறு சிறு இடையூறுகளைக் கண்டு அஞ்சி கைவிட்டுவிடாமல், தொடர்ந்து வைத்திருப்பதன் மூலம், பின்னர் உரிய காலத்தில் லாபத்தைப் பதிவு செய்வதே அறிவுடையோர் செயல்.

  அதுமட்டுமல்ல, பங்குச் சந்தை சரிவடைவதை, சிறந்த பங்குகளை குறைந்த விலையில் கொள்முதல் செய்வதற்குக் காலம் தந்துள்ள வாய்ப்பு என்று கருதி முதலீடு செய்பவரே அதிபுத்திசாலி. மேலும், குறைந்த விலையில் வாங்கப்பட்ட ஒரு பங்கு விலை உயர்ந்துகொண்டே செல்லும்போது, மேலும் மேலும் உயருமென்று கருதி பேராசைப்படாமல், உகந்த காலத்தில் அதனை விற்று உரிய லாபத்தை அறுவடை செய்பவரும் அதிபுத்திசாலியே. ஆக, பங்குகளை வாங்குவதையோ விற்பதையோ அவசரப்பட்டு மேற்கொள்ளாமல், அறிவோடும் துணிவோடும் முடிவெடுப்பதே சிறந்த முதலீட்டாளருக்கான இலக்கணம்.

  ***

  துணைத் தகவல்

  இந்தியாவால் பிறந்த பங்குச் சந்தை

  இன்றைய பொருளாதார வளர்ச்சி என்பது பங்குச் சந்தையுடன் மிகவும் தொடர்புடையதாக இருக்கிறது. முதல்நிலை மூலதனச் சந்தை நேரடியாகவும், இரண்டாம் நிலை மூலதனச் சந்தை (பங்குச் சந்தை) மறைமுகமாகவும் ஒரு நாட்டின் பொருளாதார வளத்தைத் தீர்மானிக்கின்றன. இதில் பங்குகளை வாங்கி, விற்கும் ஸ்டாக் மார்க்கெட் அல்லது ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் எனப்படும் பங்குச் சந்தை உருவானதில் இந்தியாவின் பங்கு அலாதியானது.

  கிறிஸ்தவர்களான ஐரோப்பிய வர்த்தகர்களுக்கும், இஸ்லாமியர்களான அரேபியர்களுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக நீடித்த சிலுவைப்போர் அல்லது புனிதப்போர் காரணமாக, இந்தியாவுடனான ஐரோப்பியர்களின் தரைவழி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக, கடல்வழி வர்த்தகத்தை ஐரோப்பியர்கள் மேற்கொண்டபோது, அதிலும் ஒரு தலைவலி ஏற்பட்டது. அதுதான் கடற்கொள்ளையர்களின் அட்டகாசம். கப்பல்களில் இந்தியாவுக்கு அனுப்பப்படும் அல்லது அங்கிருந்து வாங்கி வரப்படும் வர்த்தகப் பொருள்கள் கடற்கொள்ளையர்களால் சூறையாடப்படும்; இல்லையேல், சண்டையில் கப்பல் கடலில் கவிழ்ந்து அனைத்தும் வீணாகும். இதனால், குறிப்பிட்ட கப்பலில் அல்லது அதில் வரும் வர்த்தகப் பொருள்களுக்காக முதலீடு செய்தவர்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டனர். ஏறத்தாழ ஐரோப்பிய வர்த்தகக் கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கு கப்பல்கள், கடற்கொள்ளையர்களால் இழப்பைச் சந்தித்தன.

  இதற்கு மாற்றாக, முழுமையான இழப்புக்குப் பதில் இடர்களைப் பகிர்ந்துகொள்ளும் அல்லது வரையறை செய்யும் லிமிடெட் முறை, பிரிட்டன் தலைநகர் லண்டனில் கடந்த 1600-ம் ஆண்டு அறிமுகமானது. இதன்படி, ‘கவர்னர் அண்ட் கம்பெனி ஆஃப் மெர்சன்ட்ஸ் ஆஃப் லண்டன் டிரேடிங் வித் த ஈஸ்ட் இண்டீஸ்’ என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது. இதன்படி, குறிப்பிட்ட கப்பலில் ஒரு வர்த்தகர் மொத்தமாக முதலீடு செய்வதற்குப் பதிலாக இந் நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும். இதுபோல் முதலீடு செய்யும் பல்வேறு வர்த்தகர்களின் சார்பில் இந்நிறுவனம் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய கப்பல்களை அனுப்பும். இப்போதும் கடற்கொள்ளையர்களின் பாதிப்பு மூன்றில் ஒரு பங்கு இருந்தாலும், பாதிப்படையாமல் தப்பிவந்த மற்ற கப்பல்களின் மூலம் சரக்குகள் வந்துசேரும். குறிப்பிட்ட ஒரு கப்பலில் முதலீடு செய்யாமல், பொதுவாக முதலீடு செய்ததால் தப்பிவந்த கப்பல்களில் அனைவருக்கும் பொதுவான பங்கு உண்டு. இதன்மூலம் இழப்பும் முதலீடுகளுக்கு ஏற்ப பகிர்ந்துகொள்ளப்பட்டது. இந்த ‘கவர்னர் அண்ட் கம்பெனி...’ என்ற நீளப் பெயர் கொண்ட நிறுவனம்தான் பிற்காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த, இந்தியாவையும் அடிமைப்படுத்திய ஈஸ்ட் இண்டியா கம்பெனி எனப்படும் கிழக்கிந்திய கம்பெனியாக பெயர் மாற்றம் பெற்றது. (கொள்ளையர்களுக்குப் பயந்து இந்தியாவுடன் எப்படியாவது வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதற்காக கம்பெனி ஆரம்பித்த வர்த்தகர்கள், பின்னர் அதன்மூலமே நம்மை அடிமைப்படுத்தியது தேசத்தின் சோகக் கதை).

  பிரிட்டனைப் பின்பற்றி நெதர்லாந்து நாட்டில் 1602-ம் ஆண்டில் டச்சு ஈஸ்ட் இண்டியா கம்பெனி தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம், ஆம்ஸ்டர்டாம் நகரில் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சை நிறுவி, அதன் பங்குகளையும் கடன்பத்திரங்களையும் முதலீட்டாளர்களிடம் விற்றது. இந்நிறுவனம்தான் அதிகாரப்பூர்வமாக முதன்முறையாக பங்குகளை வெளியிட்டு விற்பனை செய்த நிறுவனம். பின்னர் பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் பங்குகளை வெளியிடும் முறை பரவியது. அப்போது இந்நாடுகளின் பிரபல காபி ஷாப்களில் பல நிறுவனங்களின் பங்குகள் கூவி விற்கப்படத் தொடங்கின. இப்போதும் பல பங்குச் சந்தைகளில் வர்த்தகர்கள் கூவி விற்கும் நடைமுறை உள்ளது. ஆனால், பங்கு மோசடிகள் அப்போதே தொடங்கிவிட்டன. இதனால் 18-ம் நூற்றாண்டில் பிரிட்டனில் புதிய பங்குகளை வெளியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை 19-ம் நூற்றாண்டின் தொடக்கமான 1825-ம் ஆண்டு வரை நீடித்தது.

  இந்தத் தடைக்கு மத்தியில், தற்கால முறையிலான நவீன பங்குச் சந்தையின் முன்னோடியான லண்டன் பங்குச் சந்தை, கடந்த 1801-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தடை நீடித்ததன் காரணமாக, இந்தப் பங்குச் சந்தை உலக அளவில் வலிமைபெற முடியவில்லை. இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1817-ல் தொடங்கப்பட்ட பங்குச் சந்தை (நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் – என்.ஒய்.எஸ்.இ.) தற்போது உலக அளவில் சக்தி வாய்ந்த பங்குச் சந்தையாகத் திகழ்கிறது. அமெரிக்காவில் என்.ஒய்.எஸ்.இ. தவிர நாஸ்டாக் என்ற பங்குச் சந்தையும் பிரபலமாகத் திகழ்கிறது. பிரிட்டன், அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியா (மும்பை), ஜப்பான் (டோக்கியோ), கனடா (டொரன்டோ), சீனா (ஷாங்காய்), ஹாங்காங், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் பங்குச் சந்தைகள் தொடங்கப்பட்டன.

  ஆசியாவின் முதல் பங்குச் சந்தை என்ற பெருமையை மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ.) பெற்றுள்ளது. மும்பையில் கடந்த 1875-ம் ஆண்டில் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் என்ற பெயரில் இது தொடங்கப்பட்டது. இப் பங்குச் சந்தை அமைந்துள்ள தெருவுக்குச் சூட்டப்பட்ட பெயர் தலால் ஸ்ட்ரீட். ஹிந்தி மொழியில் வர்த்தகர்கள், தரகர்களுக்கு தலால் என்று பெயர். விற்பனையாகும் பங்குகளின் பணமதிப்பைப் பொருத்தவரை, உலக அளவில் 11-வது பெரிய பங்குச் சந்தையாக உள்ள பி.எஸ்.இ., உலகின் அதிவேகமான பங்குச் சந்தை என்ற தனிப் பெருமையைப் பெற்றுள்ளது. இங்கு 6 நுண்விநாடிகளுக்கு (மைக்ரோ செகன்ட்டுகளுக்கு) ஒரு பங்கு வர்த்தகம் என்ற அளவில் விற்பனை அதிவேகமாக நடைபெறுகிறது. மும்பையில் பி.எஸ்.இ. தவிர, தேசியப் பங்குச் சந்தை (என்.எஸ்.இ.) என்ற மற்றொரு பங்குச் சந்தை, 1992-ல் தொடங்கப்பட்டது. நாட்டின் முதலாவது மின்மய (எலெக்ட்ரானிக்) பங்குச் சந்தை இதுதான். பி.எஸ்.இ., என்.எஸ்.இ. ஆகிய இரண்டுமே நாடு தழுவிய அளவில் இயங்கும் பங்குச்சந்தைகள். இவை தவிர, சென்னை, கொல்கத்தா, தில்லி, வதோதரா, ஆமதாபாத், கொச்சி உள்ளிட்ட 21 இடங்களில் பிராந்திய பங்குச் சந்தைகள் உள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai