15. முதுகுத் தண்டு வழிக் குறுக்கம் என்றால் என்ன?

குறிப்பிட்ட காரணத்தால் வரும் முதுகு வலியின் ஒரு வகையான 'Spinal canal Stenosis' என்றால் என்ன
15. முதுகுத் தண்டு வழிக் குறுக்கம் என்றால் என்ன?

இந்த வாரம் குறிப்பிட்ட காரணத்தால் வரும் முதுகு வலியின் ஒரு வகையான 'Spinal canal Stenosis' என்றால் என்ன என்பதையும், இது எப்படி ஏற்படுகின்றது, இதற்கான மூலகாரணம், மற்றும் சிகிச்சைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

'Spinal canal Stenosis" என்பது முதுகுத்தண்டு திகைப்பில் ஏற்படும் குறுக்கம் ஆகும். கடந்த வாரத்தில் நான் கூறியது போல், நமது உடலில் 33 முதுகெலும்புகள் உள்ளன. இவை நம் உடலில் கழுத்திலிருந்து ஆரம்பித்து கீழ் முதுகு வரை உள்ளன. இந்த முதுகெலும்புகளிலுருந்து 31 ஜோடி நரம்புகள் வெளியே வருகின்றன. இவை முதுகெலும்பின் பக்கவாட்டில் உள்ள இரண்டு திறப்புக்களில் (Opening)  இருந்து வெளி வருகின்றது. இந்த நரம்புகள் (Nerves) நம் உடலின் உள்ள வெவ்வேறு பாகங்களுக்கு தேவையான ரத்த ஓட்டம், இயக்கங்கள் (Movements) போன்றவற்றிற்கான வேலையை செய்கின்றன. உதாரணமாக, கழுத்திலுருந்து வெளிவரும் நரம்புகள் கைகளுக்கும், மார்பு பகுதிக்கான வேலையை செய்கின்றன. அதே போல், கீழ்முதுகிலுருந்து வெளிவரும் நரம்புகள் கால்களுக்கும், இடுப்பிற்கும் தேவையான வேலையைச் செய்கின்றன.

இந்த நரம்புகள் பாதிக்கப்பட்டால், உங்கள் கைகளிலோ, கால்களிலோ வலி (Pain), மறத்துப்போதல் (Numbness), தசை வலுவிழத்தல் (Loss of  Strength), ஊசி குத்துதல் போன்ற வலி (Pins and Needles) போன்றவைகள் ஏற்படக்கூடும். உங்கள் முதுகுத்தண்டு என்பது பல்லாயிரக்கணக்கான நரம்புகள் உள்ள இடம். இதில் ஏதாவது ஒன்று செயலிழந்தாலும் நமக்கு நிறைய பிரச்னைகள் ஏற்படும்.

Spinal Canal Stenosis (முதுகுத்தண்டு வழிக் குறுக்கம்)
Spinal Canal Stenosis (முதுகுத்தண்டு வழிக் குறுக்கம்)

இப்போது இந்த 'Spinal canal Stenosis’ எப்படி ஏற்படுகிறது என்பதைப் பார்ப்போம். இந்த முதுகுத்தண்டு வழி குறுக்கம் எனபது இரண்டு முதுகெலும்புக்கிடையில் உள்ள இடைவெளி குறைந்து அங்கிருந்து வெளிவரும் நரம்புகளை அழுத்துகிறது. இந்த இடைவெளி குறைவு நீண்ட நேரம் உட்காருவதால் வருகின்றது. அதேபோல் அந்த குறிப்பிட்ட இடத்தில ஏற்படும் அழுத்தமும் இந்த இடைவெளி குறைப்பு செய்ய வாய்ப்புள்ளது. ஆனால், இது ஏற்பட மிக முக்கியக் காரணம், நீண்ட நேரம் ஒரே இடத்தில உட்காருவது. ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்காருவதால், உங்கள் முதுகில் உள்ள தசைகள் கடினமாகும் (Stiffness), இதனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இத்தசைகள் வலிமை இழந்து 'Weak' ஆகும். இவ்வாறு தசைகள் 'Weak' ஆவதால் அந்த ஒரு குறிப்பிட்ட முதுகெலுப்புக்கிடையில் உள்ள இடைவெளி குறைகின்றது. இத்தகையான இந்நிகழ்வு மீண்டும் மீண்டும் ஏற்படுவதால் இந்த இடைவெளி குறைந்து குறைந்து நரம்புகளை அழுத்த ஆரம்பிக்கும். அதேபோன்று இவ்வகையான 'Spinal canal Stenosis" பளுதூக்கும் வேலை செய்பவர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். உதாரணமாக, கட்டுமான மற்றும் இயந்திர வேலைகளில் உள்ளவர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சிகள் கூறுகிறது. இப்போது 'Spinal canal Stenosis’ ஐ எப்படி குணப்படுத்துவது என்பதை பார்ப்போம்.

சிகிச்சை முறைகள்:

➜ மேம்படுத்தப்பட்ட பிசியோதெரபி சிகிச்சை முறைகள் (Advanced Physiotherapy Treatment)

➜ அறுவை சிகிச்சை முறை (Surgical Treatment)

➜ Nerve Block Injection 

மேம்படுத்தப்பட்ட பிசியோதெரபி சிகிச்சை முறைகள் (Advanced Physiotherapy Treatment):

'Spinal canal Stenosis" குணமடைய மேம்பட்ட பிசியோதெரபி சிகிச்சைகள் மிகவும் முக்கியமானவை. நான் கடந்த வாரத்துல கூறியதை போல Manual Therapy, Trigger point release, Exercise மற்றும் வலுப்பயிற்சிகள் செய்வதன் மூலம் இதைக் குணப்படுத்த முடியும். இதில் முக்கியமாக கை மற்றும் கால்கள் வலுவிழந்தாலோ, மறத்துப் போதல் ஏற்பட்டாலோ தேவையான உடற்பயிற்சிகளை செய்து இழந்த வலுவை(Strength) மீட்டெடுக்க வேண்டும். அப்போது மட்டுமே இறுக்கப்பட்ட (Blocked/Compressed) நரம்புகளால் ஏற்படும் உபாதைகளை தவிர்க்க முடியும்.

இவ்வகையான வழிகளில் நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது Back Extension எனப்படும் பின் குனிதலை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை நரம்புகளின் மீதான இறுக்கத்தை அதிகரிக்கும். இதேபோல் மேம்படுத்தப்பட்ட பிசியோதெரபி சிகிச்சைகளில் ஒன்றான 'Dry Needling’ சிகிச்சை முறை 'Spinal canal Stenosis’ ஆல் ஏற்படும் வலிகளை குணப்படுத்த மிகவும் உதவுகிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றது. இப்போது 'Dry Needling’சிகிச்சை என்ன என்பதை பார்க்கலாம். 

Dry Needling:

'Dry Needling' சிகிச்சை என்பது, சிறு சிறு ஊசிகளை (Needles) எந்தெந்த இடத்தில வலி உள்ளதோ அல்லது மறைத்து போதல் உள்ளதோ அந்த இடத்தில ஊசிகளை வைத்து அந்த நரம்பு மற்றும் தசைகளை தூண்டச்(Stimulate) செய்வதால் இழந்த வலிமை மற்றும் உணர்வு (Sensation) போன்றவற்றை மீட்டெடுக்க முடியும். "Spinal canal Stenosis" ஆல் வரும் வலிகளுக்கு மருந்தாக "Dry Needling" சிகிச்சைகள் உள்ளன என ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.

அறுவை சிகிச்சை முறை (Surgical Treatment):

நான் மேலே கூறியது போல், நமது முதுகெலும்பில் பல்லாயிரக்கணக்கான நரம்புகள் மற்றும் நிறைய உதிரி பாகங்கள் உள்ளன. இவை அனைத்துமே மிக மிக முக்கியமானவை. எனவே, அறுவை சிகிச்சை முறை என்று போனால் எந்த பாகத்திற்கும் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே எவ்வளவு  முடியுமோ அந்த அளவு அறுவை சிகிச்சையைத் தவிர்க்க வேண்டும். கடந்த வாரத்தில் கூறியது போல, அறுவை சிகிச்சையை விட மேம்படுத்தப்பட்ட பிஸியோதெரபி சிகிச்சைகளின் மூலம் குணமடைய வாய்ப்புகள் அதிகம்.

Nerve Block Injection:

இவ்வகையான மருந்து ஊசிகள் பாதிக்கப்பட்ட நரம்புகளில் போடப்படுகின்ற ஊசி. இதனால் பாதிக்கப்பட்ட நரம்புகில் ஏற்படும் வலி, மறத்துப் போதல் போன்றவைகளை குணப்படுத்தலாம். ஆனால், இதற்குப் பிறகு உடற்பயிற்சிகள் செய்தாலே முழுமையாக குணமடைய முடியும்.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com