ரோஜா மலரே - 12

தான் ஒரு பெரிய நடிகர் என்றோ அல்லது இசை விற்பன்னர் என்றோ எண்ணாமல், நாங்கள் கேட்டவுடன் பாடியது, அவரது நல்ல மனதையும், மனிதத்தன்மையையும், பெருந்தன்மையான குணத்தையும் எடுத்துக் காட்டியது.
ரோஜா மலரே - 12

அப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய ஒரு நடிகர், பாடகர், சூப்பர் ஸ்டார் என்று நான் சொன்னது யார் தெரியுமா? அவர்தான் தியாகராஜ பாகவதர். ‘ஹரிதாஸ்’ படத்துக்குப் பிறகு அவர் ஜெயிலுக்கு போய்விட்டு வந்ததற்கு பின்னர், ஒரு படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் பெயர் ‘சியாமளா’. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்தப் படத்தை எடுத்தார்கள். இதில் எஸ்.வரலக்ஷ்மி அம்மாதான் கதாநாயகியாக நடித்தார்கள். குழந்தை நட்சத்திரமாக அந்தப் படத்தில் நான் நடித்திருந்தாலும், கதாநாயகி குழந்தையாக இருந்தபோது எப்படி இருப்பார் என்று என்னை வைத்துத்தான் கதையின் போக்கே செல்லும். அதாவது எஸ்.வரலக்ஷ்மிக்கு நான் ஜூனியராக இந்தப் படத்தில் நடித்தேன். ஒரு காட்சியில் குளம் ஒன்று இருக்கும். அதில் ஒரு பிறைச் சந்திரன் இருப்பதுபோல் காட்சி அமைத்திருந்தார்கள். அந்தப் பிறைச் சந்திரனில் என் முகம் இருக்கும். அந்தப் பிறைச் சந்திரன் வளர்ந்து முழு நிலவாக வரும்போது எஸ்.வரலக்ஷ்மி அம்மா முகம் தெரியும். இயக்குநர் நான் வளர்ந்து பெரிய பெண்ணாக மாறிவிட்டேன் என்று சொல்லாமல் சொல்லும் காட்சி இது.

எங்கள் வீட்டில் உள்ளவர்கள் எல்லோருக்குமே இசையும், நடனமும் இரு கண்கள் என்று சொல்லலாம். வீட்டின் பெண்கள் மட்டும் மேடையில் நடனமாடக் கூடாது அல்லது மேடையில் பாட்டு பாடக் கூடாது என்று நினைத்தார்களே ஒழிய, கர்நாடக சங்கீதம் அல்லது சினிமாப் பாட்டு என்றால் எல்லோருக்குமே பிடிக்கும். அதிலேயும் தியாகராஜ பாகவதர் என்றால் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான நட்சத்திரம். காரணம், அவரது காந்த குரல் மட்டும் அல்ல; அவரது தெளிவான உச்சரிப்பு, ஏற்ற இறக்கத்துடன் பாடும் தன்மை, இது எல்லாவற்றையும்விட, அவரது சங்கீத ஞானம், இவையாவும் காரணம் என்று சொல்லலாம்.

தியாகராஜ பாகவதர் படத்தில் என்னை நடிக்க அழைத்தவுடன் பாட்டி மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்றார். உடனே சரி என்று நடிக்கச் சொல்லிவிட்டார். நான் ஒன்றும் அவரது படத்தின் கதாநாயகி இல்லை. கதாநாயகியான எஸ்.வரலக்ஷ்மியின் குழந்தைப் பருவமாக மட்டுமே நடிக்கிறேன் என்றாலும், தியாகராஜ பாகவதரின் படத்தில் தன் பேத்தி நடிக்கிறாள் என்றாலே அது பெருமை என்று அவர் நினைத்தார். காரணம், தமிழ் திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்று அவரை கூறுவார்கள்.

நான் நடனம் ஆடுவது தொடர்ந்தது என்றாலும், பாட்டையும் என் வீட்டில் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்கள். சுமார் 6, 7 வயதில் இருந்தே பாட்டு கற்றுக்கொடுக்கப்பட்டது என்று சொல்லலாம். வீட்டில் கற்றுக்கொடுக்கிறார்கள் என்பதற்காக, நானும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

ஆனால், நடனத்தின் மீதிருந்த பற்றுபோல், எனக்கு பாட்டின் மீது இல்லை. ஆனால், எங்கள் வீட்டில் கர்நாடக இசையை எல்லோரும் தெரிந்துவைத்திருந்தார்கள். ஒரு பாட்டை நாம் பாடினால், அது எந்த ராகம் என்று எங்கள் வீட்டில் உள்ள பலரும் சரியாகச் சொல்லிவிடுவார்கள். அதுபோல நானும் இருக்க வேண்டும் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் நினைத்தார்கள். அது மட்டுமல்லாமல் நாங்கள் வசித்த மயிலாப்பூரில் பல்வேறு வகை இசை வல்லுநர்கள், பாடகர், பாடகிகள் இருந்தார்கள். உதாரணத்துக்குச் சொல்ல வேண்டும் என்றால், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் இதே மயிலாப்பூரில்தான் அன்று இருந்தார். இப்படி பலரும் உள்ள இந்த மயிலாப்பூரில் இருக்கும் நான் நல்ல பாடகியாக இருக்க வேண்டும் என்று என் குடும்பம் விரும்பியது. நாங்கள் வெளியே போய் மேடையில் கச்சேரி பண்ண வேண்டாம். ஆனால், இசையின் அடிப்படை கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.

இதற்காகவே ஒரு கர்நாடக இசை வல்லுநர் ஒருவர், எனக்கு காலையில் வந்து கற்றுக் கொடுப்பார். படப்பிடிப்பு இருக்கும் நாட்களில், விடியற்காலை 6 மணிக்கு எங்கள் வீட்டுக்கு வந்து கிளாஸ் எடுப்பார். இந்த இசைப் பயிற்சி நாள்தோறும் நடக்கும் என்பதால் என்னை காலை 5 மணிக்கே எழுப்பி விட்டுவிடுவார்கள். நானும் விருப்பம் இருக்கிறதோ, இல்லையோ அந்த பாகவதர் (தியாகராஜ பாகவதர் இல்லை) சொல்லிக்கொடுத்ததை நான் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அவர் வந்தவுடன் ச, ப, ச என்று சொல்ல, நான் அவர் சொன்னதுபோல் பாட இசைப்பயிற்சி தொடர்ந்தது.

இன்று மந்தைவெளி பஸ் டெர்மினஸ் இருக்கும் இடம் காலி மனையாக அன்று இருந்தது. அதன் அருகில் ஒரு பிள்ளையார் கோயில் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சதுர்த்தி அன்று கோலாகலமாக பாட்டு கச்சேரி, நடனம், என மிகவும் விமரிசையாக இந்தப் பிள்ளையார் சதுர்த்தி விழாவை கொண்டாடுவார்கள். அந்தச் சமயம் பார்த்து நான் சினிமாவில் நடித்து புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரமாக இருந்ததால், என்னையே பாட வைக்கலாமே என்று அவர்களுக்குள்ளேயே பேச்சு நடந்திருக்க வேண்டும். எனக்கு இசை சொல்லிக்கொடுக்கும் பாகவதரை இவர்களுக்குத் தெரியும்போல் இருக்கு. அவரிடம் சொல்லி இருக்கிறார்கள். அவரும் சந்தோஷமாக சரி என்று சொல்லியிருக்கிறார். நான் தியாகராஜ பாகவதருடன் நடிப்பதனால் எல்லோருக்கும் சந்தோஷம். எங்களிடம் இந்த விழாவைப் பற்றி சொல்ல, எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. அந்த கச்சேரியில் நான் 4 பாடல்கள் பாட முடிவானது. அந்த அளவுக்குத்தான் நான் பயிற்சி பெற்றிருந்தேன். இதன் நடுவில், அந்த விநாயகர் கோயிலில் உள்ள ஒருவர் எப்படியோ சென்று தியாகராஜ பாகவரிடம் சொல்லி விழாவுக்கு வர வைத்துவிட்டார்.

நான் முதன்முறையாக கச்சேரி செய்யும் நாளும் வந்தது. மேடையில் நான் உட்கார்ந்துகொண்டிருந்தபோது தியாகராஜ பாகவதர் வந்து முன் வரிசையில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்தவுடன் எனக்கு மூச்சே வரவில்லை. எங்கே எனக்கு பாட்டு வரும்? எனக்கு கற்றுக்கொடுத்த இசை ஆசிரியர் என்னிடம் சைகையில் 3 கட்டை அல்லது 4 கட்டை என்று கூறுகிறார். எனது ஆசிரியர் என்னை எப்படியாவது பாடவைக்க வேண்டும் என்று பல்வேறு வகையில் முயற்சி செய்கிறார். இதை எல்லாம் முன் வரிசையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த தியாகராஜ பாகவதருக்குப் புரிந்துவிட்டது. குழந்தை தன்னைப் பார்த்தவுடன் பாட பயப்படுகிறது என்று தெளிவாகத் தெரிந்துவிட்டது. அதனால், திடீரென்று எழுந்து மேடைக்கு வந்து, என் அருகில் அமர்ந்துகொண்டார்.

என் இசை ஆசிரியரிடம், ‘என்ன பாட்டெல்லாம் சொல்லிக்கொடுத்துள்ளீர்கள்?’ என்று கேட்டார். ஆசிரியர் ‘முதலில் விநாயகர் பாடல் சொல்லிக்கொடுத்திருக்கேன்’ என்று சொல்ல, என்னைப் பார்த்து, இரண்டு பேரும் சேர்ந்து பாடலாமா என்று என்னிடம் கேட்டு, அதே பாடலை இருவரும் பாடத் தொடங்கினோம். பாட ஆரம்பித்த பிறகு நான் மட்டும் தனியாக பாட மெல்ல மெல்ல அவர் நிறுத்திவிடுவார்.. இப்படி அந்த கச்சேரி இனிதாக நடந்து முடிந்தது. இன்றும், என்றும் மேடையில் நானும் தியாகராஜ பாகவதருடன் ஒன்றாக கச்சேரி செய்திருக்கிறேன் என்று சொன்னால் அது மிகை இல்லை. இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன், என்னைப் பார்த்து, ‘உன் குரல் மிகவும் நன்றாக, இனிமையாக இருக்கிறது. சினிமாவில் நடித்துக்கொண்டே, பாடகியாகவும் இருப்பது பெரிய விஷயம். திறமையான குழந்தையாகவும் நீ இருக்கே. நானே உனக்கு பாட்டு சொல்லிக்கொடுக்கிறேன்’ என்றார்.

வீட்டுக்கு வந்தவுடன் நான் அவரிடம் பாட்டு கற்றுக்கொள்ளமாட்டேன். காரணம், நான் ஏதோ விளையாட்டுக்கு பாட்டு கற்றுக்கொள்கிறேன். இவரிடம் சென்றால் கண்டிப்பாக பாட்டு கற்றுக்கொள்ள வேண்டியதாகிவிடும். அது என்னால் முடியாது என்று என் குடும்பத்தாரிடம் சொன்னேன்.

அதேபோல் ஒருமுறை நானும் என் பாட்டியும் ஒரு படப்பிடிப்புக்கு ரயிலில் சென்றுகொண்டிருந்தோம். நாங்கள் இருப்பதை கேள்விப்பட்டு எங்கள் கம்பார்ட்மெண்டுக்கு தியாகராஜ பாகவதர் வந்துவிட்டார். எங்கள் எல்லோருடனும் சகஜமாக பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது என் பாட்டி, ‘சிந்தாமணி’ படத்தில் அவர் பாடிய ஒரு பாட்டை எங்களுக்காக பாடக் கேட்க, எந்தவிதமான தயக்கமும் இல்லாமல், அந்தப் பாட்டை எங்களுக்காகப் பாடி எங்களை எல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.

தான் ஒரு பெரிய நடிகர் என்றோ அல்லது இசை விற்பன்னர் என்றோ எண்ணாமல், நாங்கள் கேட்டவுடன் பாடியது, அவரது நல்ல மனதையும், மனிதத்தன்மையையும், பெருந்தன்மையான குணத்தையும் எடுத்துக் காட்டியது என்று சொல்லலாம். அன்று அவர் புகழின் உச்சியில் இருந்தார். இப்பொழுதும் அவரது முகமும், அவரது பேச்சும் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. அப்பொழுதுதான் என் பாட்டி எங்களுக்கு ஒரு மிக முக்கியமான செய்தியையே சொன்னார். என் பாட்டியின் அப்பா ஒரு சிறந்த விலங்கியல் மருத்துவர். அந்தக் காலத்தில் தியாகராஜ பாகவதர் ஒரு வெள்ளைக் குதிரையில் மயிலாப்பூரில் உள்ள நான்கு மாட வீதியிலும் வலம் வருவாராம். அன்று அவர் வீடு அடையாறு பகுதியில் இருந்ததாம்.

காரில் வராமல் வெள்ளைக் குதிரையில் ராஜா மாதிரி வருவாராம். அந்தக் குதிரை பளபளவென்று இருக்குமாம். ‘நீங்கள் வலம் வரும் குதிரையை பாராமரிப்பது அல்லது வைத்தியம் பார்த்தது என் அப்பாதான் என்று சொல்ல’, அப்படியா என்று கேட்டு சந்தோஷப்பட்டாராம் தியாகராஜ பாகவதர். இன்றும் பலர் கேட்கிறார்கள், ‘நீங்கள் எப்படி அவருடன் நடித்தீர்கள்?’. அவர் கடைசியாக நடித்த சில படங்களில் ஒன்றான ‘சியாமளா’வில் நான் நடித்திருக்கிறேன். ஆக, நானும் தியாகராஜ பாகவதருடன் நடித்துவிட்டேன் என்று பெருமையாகக் கூறலாம். அதேபோன்று எனது சிறிய வயதிலேயே நடிப்புக்கே ஒரு சிறந்த உதாரணமாக திகழ்ந்த ஒரு நடிகையுடன் நடித்து, அவரிடமே பாராட்டும் பெற்றுவிட்டேன் என்று சொன்னால் அது மிகை இல்லை. அவர் யார் என்று அடுத்த வாரம் சொல்லாமல் இருப்பேனா என்ன? கண்டிப்பாக சொல்கிறேன்.

(தொடரும்)

சந்திப்பு: சலன்

படங்கள் உதவி: ஞானம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com