ரோஜா மலரே - 11

இன்று என்னை எல்லோரும் நகைச்சுவை நாயகி என்று பாராட்டுகிறார்கள். அன்றே என்னுள் இருந்த சிறிய நகைச்சுவை விளக்கை, எண்ணெய் விட்டு, திரி போட்டு ஒளியேற்றி பிரகாசிக்க செய்தவர் கலைவாணர்.
ரோஜா மலரே - 11

நான் கேட்டது யாரிடம் தெரியுமா? கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனிடம்தான். அந்த ஸ்டூடியோவில் ‘ராஜாதேசிங்கு’ படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அது கிருஷ்ணா பிக்சர்ஸ் எடுக்கும் படம். அதே கம்பெனியில் நான் ‘மருமகள்’, ‘காவேரி’ போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். அதனால் அந்த கம்பெனி எனக்கு நன்றாக தெரிந்த கம்பெனி. அதனால் அவர்களின் படமான ‘ராஜா தேசிங்கு’ படத்தில் நான் இல்லை என்று தெரிந்தவுடன், எனக்கு யாரிடம் சென்று கேட்பது என்றுகூட தெரியவில்லை. அதனால் நான் சென்றபோது கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், மதுரம், டைரக்டர் ரகுநாத் போன்ற பலர் அங்கே உட்கார்ந்து இருந்தார்கள். நேராக அவர்களிடம் சென்று ‘நான் இந்த படத்தில இல்லையா’ என்று மழலை மாறாமல் கேட்க, எல்லோரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.

உள்ளபடியே அந்த படத்தில் குழந்தைக்கான வேஷம் எதுவும் இல்லை. இந்த நிலையில் நான் இப்படி கேட்க, என்ன பதில் சொல்வது என்று யாருக்கும் தெரியவில்லை. அதனால் யாருமே ஒன்றும் சொல்லாமல் மௌனம் காத்தனர். உண்மையை சொல்லப்போனால், யாருமே திடீரென்று இப்படி கேட்கமாட்டார்கள். பெரியவர்களாக இருந்தால், நாசூக்காக வாய்ப்பு கேட்பார்கள். இப்படி தடாலடியாக யாரும் கேட்கமாட்டார்கள் இல்லையா? ஆனால், நான் சின்னக் குழந்தை என்பதால் எனக்கு எந்தவிதமான கூச்சமோ, சங்கோஜமோ இல்லை என்பதைவிட, இப்படி கேட்கக் கூடாது என்றும் எனக்கு தெரியவில்லை. நான் வெளிப்படையாக இப்படி கேட்டுவிட்டதால், அங்கு உட்கார்ந்துகொண்டிருந்தவர்கள் எல்லோருக்கும் என்ன பதில் சொல்வது என்று முதலில் தெரியவில்லை.

எல்லோரும் எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். தயாரிப்பாளர் லேனா செட்டியார் அங்கு இருந்தார். அவர்தான் மெல்ல சொல்ல ஆரம்பித்தார். ‘இந்த படத்தில் குழந்தை பாத்திரம் இல்லையே’ என்று சொல்ல, அந்த சூழ்நிலையை கலைவாணர்தான் அழகாக சமாளித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். எப்பொழுதுமே அவர் என்னை ‘சச்சு குட்டி’ என்றுதான் அழைப்பார்கள்.

‘சச்சு குட்டி கேட்டுவிட்டதால் ஒரு வேஷம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். என்னோடு நீ நடிக்கிறே’ என்று கூறினார். கலைவாணர் என்றுமே மற்றவர்களுக்கு உதவும் உள்ளம் கொண்டவர். ‘ராஜா தேசிங்கு’ படத்தில் இவர் ஏற்று இருக்கும் பாத்திரம் ஒரு நாட்டு வைத்தியர். அவரது பெண்ணாக என்னை நடிக்கவைத்தார். எனக்கு படிப்பு சொல்லிக்கொடுக்கும் ஆசிரியராக கே.ஏ. தங்கவேலு வருவார். எப்பவுமே வாத்தியார் வீட்டிற்கு பாடம் சொல்லிக் கொடுக்கவந்தால் குழந்தைகளுக்கு பிடிக்காது. நானே பல தடவை இம்மாதிரி உண்மையிலேயே செய்திருக்கிறேன். வாத்தியார் பாடம் சொல்லிக்கொடுக்க வந்தால், தலை வலி அல்லது வயிறு வலி என்று சொல்லிவிட்டு, எப்படியாவது இன்று பாடம் நடக்காமல் இருந்தால் போதும் என்று ஓடிவிடும் பழக்கம் உண்டு.

அதையே ஒரு நல்ல காட்சியாக படத்தில் வைத்தார் கலைவாணர். காட்சிப்படி வாத்தியார் தங்கவேலு வரும்போது, எனக்கும் பாடம் படிக்க பிடிக்காமல் இருக்க, நடத்தும் நாடகம், இங்கும் அரங்கேறும். காட்சிப்படி எப்படியாவது அவரை பாடம் நடத்தவிடாமல் செய்ய வேண்டும் என்பதுதான் என் எண்ணம். இதற்கு என்ன செய்வது என்று நன்றாக யோசித்து, அவர் நாளைக்கு வராமல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்படி என்னதான் செய்தேன் என்பதைத்தான் ஒரு காட்சியாக வைத்திருந்தார் கலைவாணர் . அவர் தினமும் வந்து அமரும் ஒரு நாற்காலியில், வீட்டில் இருந்த பசையை (ஒட்டுவது) கொண்டுவந்து அவர் உட்காரும் இடத்தில் நன்றாக தேய்த்துவிடுவேன். இதை எம்.என். ராஜம் பார்த்துவிடுவார். ஆனால் வெளியே சொல்லமாட்டார்கள். இவருக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்பதுபோல் பேசாமல் இருந்துவிடுவார்.

காரணம், எப்பொழுது வந்தாலும் ராஜம் ஏதாவது சொல்லி தங்கவேலு என்றுமே கிண்டல் செய்வார். அதனால் ராஜம் பேசாமல், படட்டும் என்று இருந்துவிடுவார்கள். எப்பொழுதும் போலவே தங்கவேலு பாடம் நடத்த வீட்டினுள் நுழைவார். பசை தடவிய நாற்காலி எதிரில் உள்ள நாற்காலியில் நான் தயாராக உட்கார்ந்திருப்பேன். இது எதுவுமே தெரியாமல் அவர் அந்த பசை தடவிய நாற்காலியில் உட்கார்ந்துவிடுவார். பாடம் நடத்த ஆரம்பிக்க, அவர் கேட்க, எதற்குமே நான் சரியாக பதில் சொல்லமாட்டேன். அதற்கு தங்கவேலு ‘நான் கேட்கும் எதற்கும் சரியாகவே பதில் சொல்லாமல் இருக்கிறாய்’ என்று கோபத்துடன் சொல்ல, சரியாக பசை ஒட்டிவிட்டதா என்பதில் மட்டும்தான் என் கவனம் முழுவதும் அன்று இருந்ததால், முன்னுக்கு பின்னாக வார்த்தைகளை சொல்வேன்.

எனக்குத்தான் பயமில்லையே? ஒரு வார்த்தைக்கு மற்றொரு வார்த்தை கொஞ்சம்கூட ஒட்டமாட்டேங்குது என்று தங்கவேலு கேட்க, கண்டிப்பாக ஒட்டியிருக்கும், ஸ்ட்ராங்காக ஒட்டி இருக்கும் என்று நான் சிரித்துக்கொண்டே சொல்ல, அப்பொழுது பார்த்து கலைவாணர் வீட்டிற்குள் நுழைவார். ‘என்னது ஒட்டி இருக்கும், எது ஒட்டல’ என்று நாங்கள் பேசிய கடைசி வாக்கியதை கேட்டுவிட்டு கலைவாணர் சொல்ல, வாத்தியார் மரியாதையாக எழுந்து நிற்க முயற்சிக்க, நாற்காலியும் அவருடனேயே ஒட்டிக்கொண்டு வர, ‘இதுபோலத்தான் ஒவ்வொரு நாளும் வீட்டில் இருந்து பொருள்களை எடுத்துக்கொண்டு போகிறாயா’ என்று கலைவாணர் கேட்பதுபோல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இந்த முழு காட்சியையும் உருவாக்கியது என்.எஸ்.கே.தான். அதுவும் எனக்காக என்று சொல்லும்போது நான் அந்த சமயம் குழந்தையாக இருந்ததால் அதன் பெருமை எனக்கு சரியாக தெரியவில்லை. குழந்தை கேட்டாளே என்று ஒரு மிகப்பெரிய சீனையே எனக்காக உருவாக்கி, அதில் என்னையும் நடிக்கவைத்த கலைவாணரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நான் கேட்டேன் என்பதற்காக ஒவ்வொரு கட்சியிலும் என்னை வரச்சொல்லி, அந்தக் காட்சியில் என்னை ஓரமா நிறுத்திவைக்காமல், எனக்கும் பேர் வர வேண்டும் என்று செய்த அவர் எவ்வளவு பெரிய மனிதர். அதனால்தான் அவர் கலைவாணர் என்று பெயர் வாங்கினரோ என்னவோ?. அவரது உள்ளம் வெள்ளை. மக்கள் எல்லோரையும் மிகவும் மதிப்பு கொடுத்து நடத்துவார்.

தன்னுடன் நடிக்கும் நடிகர் எல்லோருக்கும் முக்கியம் உள்ள பாத்திரங்களாகவும், பார்த்து, அதில் நடிக்கவைப்பார். இன்றும் கே.ஏ தங்கவேலுவோ, குலதெய்வம் ராஜகோபால் அவர்களோ பேர் எடுத்துள்ளார்கள் என்றால் அன்று கலைவாணர் அவர்கள் இவர்களுக்கு சரியான பாத்திரங்களை கொடுத்து, அவர்களும் மக்களிடையே புகழ் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணம் அவரிடம் இருந்தது. அன்று மட்டும் அல்ல, பலரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் இன்று பலருக்கு இருப்பதில்லை. ஆனால் கலைவாணரை பொறுத்தவரை தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் எல்லோரும் சரியாக நடிக்க வேண்டும் அவர்களும் புகழ் பெற வேண்டும் என்று நினைப்பவர். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று என்றும் நினைப்பவர். யார் எதை கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் பண்பாளர். இப்படி அவரைப் பற்றி நான் சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்று என்னை எல்லோரும் நகைச்சுவை நாயகி என்று பாராட்டுகிறார்கள். அன்றே என்னுள் இருந்த சிறிய நகைச்சுவை விளக்கை, எண்ணை விட்டு, திரி போட்டு, நெருப்புப் பெட்டியினால் ஒளியேற்றி பிரகாசிக்க செய்தவர் கலைவாணர் அவர்கள்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. நான் ஏதோ குழந்தை கேட்கிறேன் என்று தள்ளாமல் எனக்கும் ஒரு காட்சி, அவர் படத்தில் இருக்க செய்தவர் அவர்தான். இன்றும் அவருடன் நடித்த பலருள், நானும் நடித்திருக்கிறேன் என்று பெருமையாக சொல்லலாம். அவரிடம் உள்ள ஒரு மிகுந்த நல்ல தன்மையை நான் இங்கே சொல்லாமல் இருக்க முடியாது. அவரது கொடை வள்ளல் தன்மையை பலரும் பாராட்டுவார்கள்.

அது மிகச் சிறந்த பண்புதான் என்றாலும், இன்னுமொரு சிறந்த பண்பும் அவரிடம் உண்டு. யாரையும் எதிர்மறை சொல்லால் ஏசமாட்டார். கோபம் வந்தாலும் தவறான வார்த்தைகள் பேசமாட்டார். சுடுசொல் எப்பவுமே அவர் வாயில் இருந்து வராது. உதாரணமாக சனியனே, வெளியே போ என்று என்று சொல்லமாட்டார். சண்டைக் காட்சி என்றாலும் தவறான வார்த்தைகளை சொல்லக் கூடாது என்று சொல்வார். தான் மற்றவர்களுக்கு சொல்வதை அவரும் கடைப்பிடித்து காட்டுவார். நான் பார்த்தவரை அவர் இப்படிப்பட்ட சொற்களை என்றும் சொன்னதே கிடையது. இதை அவருடன் நடித்த பலரும் சொல்ல கேட்டிருக்கிறேன். நானும் அவருடன் இருந்தபோது நல்ல வார்த்தைகளை பேசி மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். நான் குழந்தை என்பதால் எனக்காக சிறு சிறு மேஜிக் எல்லாம் செய்து காட்டுவார். நான் மட்டும் அல்ல அவருடன் நடிக்கும் பலரும் அவர் செய்து காட்டும் மேஜிக் பற்றி எல்லாம் சொல்லி இருக்கிறார்கள்.

இப்படி நான் பல பெரிய மனிதர்களுடன் நான் பழகி இருக்கிறேன். அவர்களுடன் நான் நடித்திருக்கிறேன் என்பது எனக்கு பெருமையான விஷயம். இப்படி பல சூப்பர் ஸ்டார்களுடன் நான் நடித்திருக்கிறேன் என்று சொன்னால், அதை எனக்கு ஆசீர்வாதமாகத்தான் நான் நினைக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய ஒரு நடிகர், பாடகர், சூப்பர் ஸ்டார் என்றும் சொல்லலாம் அவருடன் நடித்ததை சொன்னால் நீங்கள் கண்டிப்பாக சந்தோஷப்படுவீர்கள். அவர் யார் என்று அடுத்த வாரம் கண்டிப்பாக சொல்கிறேன்.

(தொடரும்)

சந்திப்பு: சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com