‘லவ் யூ ஸோ மச்’ சாரதா டீச்சர்!

அவளை மாதிரிக் குழந்தைகள் அழகா இருந்தா, பசங்களுக்கு அவங்க மேல ஈர்ப்பு வரது சகஜமான விஷயம் தான், நான் அந்தப் பையனைக் கூப்பிட்டுக் கண்டிக்கிறதையோ, பேசறைதையோ விட திவ்யாவோட இலக்குகளை இன்னும் கொஞ்சம்...
‘லவ் யூ ஸோ மச்’ சாரதா டீச்சர்!

சால்ட் சில்ட்ரன்... பெப்பர் பேரன்ட்ஸ்... 12

மதுபாலா,  தனியார் நிறுவனமொன்றில் விற்பனைப் பிரிவு மேலாளராகப் பணிபுரிகிறார். திருமணமாகி 15 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. ஆணொன்றும், பெண்ணொன்றுமாக இரண்டு குழந்தைகள். முதல் குழந்தை திவ்யாவுக்கு 13 வயது, மகன் சாரங்குக்கு 8 வயது. இருவரும் நகரின் பிரபலமான பள்ளியொன்றில் நன்றாகப் படிக்கும் சமர்த்துக் குழந்தைகள். மதுவுக்குத் தன் குழந்தைகளைப் பற்றி பெரிதாக மனக்கவலைகள் இருந்ததில்லை. கை நிறைய சம்பாதிக்கும் கணவர், கணவன், மனைவி இருவருமே வேலைக்காக வெளியில் சென்று விட்டாலும் கூட குழந்தைகள் பள்ளி விட்டு வரும் நேரத்தில் அவர்களை உடனிருந்து கவனித்து தேவைகளி நிறைவேற்ற மதுவின் பெற்றோர் அவளுடனே இருந்ததால் அவளால் நிம்மதியாகத் தன் அலுவலக வேலைகளைப் பார்த்துக் கொள்ள முடிந்தது. 

தினமும் மாலையில் அலுவலகம் விட்டு வந்ததுமே, தன்னைக் கொஞ்சம் ரெஃப்ரஷ் செய்து கொண்ட அடுத்த நொடியில் தன் குழந்தைகளுடன் குறைந்தபட்சம் 1/2 மணி நேரமாவது அரட்டையடித்து அவர்களைக் கலகலப்பாக்கி விட்டுத்தான் மது அடுத்த வேலையைப் பற்றி சிந்திப்பது வழக்கம். அவர்களது மாலை நேரத்தைய அந்த அரட்டையில் அவர்கள் புகுந்து புறப்படாத விஷயங்களென எதுவுமே இருக்காது. எல்லாமும் பேசுவார்கள். சில நேரங்களில் மதுவின் கணவர் சீக்கிரமாக வீடு திரும்ப நேர்ந்த சந்தர்பங்களில் அவரும் அரட்டையில் கலந்து கொள்வார். மதுவின் அம்மாவுக்கோ, மது உட்பட தான் பெற்ற முன்று பிள்ளைகளின் பெருமையையும், தனது பேரப் பிள்ளைகளிடம் எத்தனை முறை பகிர்ந்து கொண்டாலுமே அவருக்கு அது போதவே போதாது. ஆகவே அவர்களைப் பொறுத்தவரை அவர்களது குடும்பம் கலகலப்பான ஒரு குடும்பமாக இருந்து வந்தது.

மதுவின் மகள் திவ்யா இப்படி ஒரு பேச்சை ஆரம்பிக்கும் வரை வீட்டில் எல்லாமும் ஸ்மூத்தாகத் தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் ஒருநாள் மது அலுவலகத்தில் இருந்து திரும்பி வந்து அரட்டையடிக்க உட்கார்ந்த சில நிமிடங்களில், திவ்யா, தன் அம்மாவைப் பார்த்து இப்படித் தொடங்கினால்,

‘ம்மா... ஸ்கூல்ல இன்னைக்கு ஹெச்.எம் ரூம்ல ஆன்ஸர் பேப்பர் கொடுத்துட்டு வரும் போது லெவன்த் படிக்கிற பையன் ஒருத்தன் என்னையே முறைச்சுப் பார்த்துட்டு இருந்தான். அவன் கூட நின்னுக்கிட்டு இருந்தவன்... என்னைப் பார்த்ததும் அவன்கிட்ட ‘டேய் உன் ஆளு... வர்றாடானு சொல்லிட்டு இருந்தான்ம்மா’ அவனை இதுக்கு முன்னால நான் பார்த்ததில்லை. அவங்க ரெண்டு பேரும் பேசறதைப் பார்த்தா எனக்கு தனுஷோட ‘த்ரீ’ படம் ஞாபகம் வந்துதா... உடனே, அட லூசுங்களானு சிரிச்சிட்டேன்... இப்போ வீட்டுக்கு வந்தப்புறம் தான், நான் சிரிச்சதை வச்சு அந்தப் பையன் அவனை என்கரேஜ் பண்றதா நினைச்சிருப்பானோன்னு... வாட் டு டூம்மா? அவனைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கல...’ என்றாள் 13 வயது திவ்யா. 

மதுவுக்கு, மகள் திடீரென இப்படி ஒரு டாபிக்கை ஆரம்பித்ததும் உடனே என்ன சொல்வதெனத் தெரியாமல் சில நொடிகள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவள்; பிறகு சுதாரித்துக் கொண்டு;

நத்திங் டு வொர்ரிம்மா, அவனைக் கண்டுக்காத, ரெஸ்பாண்ட் பண்ணலைன்னா கொஞ்ச நாள்ள போரடிச்சுப் போய், அவனா உன் பின்னால சுத்தறதையும், உன்னைப் பார்க்கறதையும் விட்டுடுவான்’ என்றாள்.

யோசனையாக அம்மாவை ஏறிட்ட திவ்யா; ‘அப்படீங்கறீங்க?! அப்போ சரி’ நான் நீங்க சொல்றபடியே செய்றேன். என்று விட்டு, அதிருக்கட்டும், இந்த பாய்ஸ் ஏன் இப்படி எல்லாம் செய்யனும்?’ என்று மீண்டும் அதே டாபிக்கில் வந்து நின்றாள்.

மதுவும், ‘அது அப்படித்தான்மா, இந்த வயசுல எல்லா பாய்ஸ்க்கும் கேர்ள்ஸ் மேல சின்னதா ஒரு ஈர்ப்பு அதாவது இன்ஃபாச்சுவேஷன் வரும். அதனால அவங்க அப்படி இருப்பாங்க, ஆனா கேர்ல்ஸ் இதுக்காக ரொம்பலாம் மெனக்கெடத் தேவை இல்லைடா. சிச்சுவேஷன் தானா சரியாயிடும். சப்போஸ், சில பசங்க சினிமா, டி.வி சீரியல்ஸ், இப்போ புதுசா ஒரு டிரெண்ட் ஆரம்பிச்சிருக்கே வெப் சீரிஸ் ... இதெல்லாம் பார்த்துக் குழம்பிப் போய் உண்மையான காதலுக்கும், இனக்கவர்ச்சி ஐ மீன் இன்ஃபாச்சுவேஷன்ஸுக்கும் வித்யாசம் தெரியாம கேர்ள்ஸ் மேல ரொம்பத் ஆர்வமா இருந்து அதைக் காதல்னு வேற சாதிப்பாங்க. அந்த மாதிரி சந்தர்பத்துல கொஞ்சம் ஜாக்கிரதையா அதை ஹேண்டில் பண்ணனும். யூ டோண்ட் வொர்ரிம்மா. அம்மா எப்பவும் உன் கூடவே தானே இருக்கேன். லெட்ஸ்... ஹேண்டில் திஸ் வெரி ஈஸி.

அம்மாவிடமிருந்து இப்படி ஒரு அரவணைப்பான பதில் வந்தது திவ்யாவுக்கு சமாதானமாக இருந்தது. அதனால் அவளும் அப்போதைக்கு அந்தப் பேச்சை மூட்டை கட்டி வைத்து விட்டு; அடுத்த வேலைகளைக் கவனிக்கத் தொடங்கி விட்டாள்.

என்ன தான் மகளிடம் சமாதானமாகச் சொல்லி விட்டாலும் கூட மதுவுக்கு, திவ்யா தன்னை ஒரு மாணவன் பின் தொடர்வதைப் பற்றிச் சொன்னது முதல் மனதிற்குள் கொஞ்சம் சஞ்சலமாகவே இருந்தது. ஒரு வேளை அந்த மாணவன் மீண்டும், மீண்டும் தன் மகளைத் தொந்திரவு செய்தால் ஒரு வேளை படிப்பில் அவளது கவனம் சிதையக் கூடுமோ! இந்த வயதில் பெண் குழந்தைகளுக்கு காதல் வருகிறதோ இல்லையோ... நிச்சயமாக சக மாணவிகள் மற்றும் தோழிகளில் யாரெனும் ஒருவருக்கு இம்மாதிரியான விஷயங்களை அக்குவேறு, ஆணி வேராக அலசுவதில் ஆர்வமிருந்து கடைசியில் கதை வழக்கு எண் 18 சினிமா போல கியூரியாசிட்டியாகி வேண்டாத சிந்தனைகளை எழுப்பக் கூடுமோ! என்றெல்லாம் யோசனை விரிந்து கொண்டே சென்றது. ஆனாலும் வழக்கப்படி வேலைகளின் அழுத்தத்தில் எல்லோரும் எல்லாவற்றையும் சில மணி நேரங்களுக்கு மறப்போமே!... அப்படி மதுவும் தன் வேலைகளில் ஆழ்ந்து அந்தப் பிரச்னையை அப்போதைக்கு ஒத்திப் போட்டாள்.

ஆனாலும் மகளைப் பார்க்கும் போதெல்லாம்; இப்போதும் அந்த மாணவனால் ஏதாவது தொல்லைகள் உண்டா? என்று கேட்கத் தோன்றும். அவளே சொல்லாமல் இந்த வாரம் முழுக்க கேட்கவே கூடாது. அப்புறம் ஒன்றுமில்லாத விஷயத்தை நாமே ஞாபகப் படுத்தினார் போலாகி விடக் கூடாது. என்று அமைதி காத்தாள்.

வந்தது வாரக் கடைசி. சனிக்கிழமை இரவு அவர்களது வீட்டைப் பொருத்தவரை அது கொண்டாட்டமான நாள்.

அப்பா, அம்மா, பாட்டி, குழந்தைகள் இருவரும் மற்றும் அண்டை வீட்டிலுள்ள நட்புகள் என அனைவருக்குமே அந்த நாள் மாலை ஒரு கெட் டுகெதர் போலத்தான் இருக்கும். எல்லோருமாகச் சேர்ந்து ஒன்றாக ஒருவர் வீட்டில் செட்டிலாகி ஏதாவது நல்ல சினிமா பார்ப்பார்கள். குழந்தைகளில் 5 வயதுக்குட்பட்டவர்கள் தூங்கி விட்டாலும் மற்ற பெரிய குழந்தைகள் அவரவர் இஷ்டத்துக்கு கார்ட்டூன் சீரிஸ் புத்தகங்கள் வாசிப்பதும், பிசினஸ் ஆடிக் கொண்டும், செஸ், கேரம் என எதையாவது ஆடிக் கொண்டும் இரவு 11 மணி வரை பொழுதைக் கழிப்பார்கள். அப்படி ஒரு தருணத்தில் திவ்யா, திரையில் ஓடிக் கொண்டிருந்த காதல் காட்சியைப் பார்த்து விட்டு, அம்மா... நேத்து நாங்க பி.டி பீரியட்ல ட்ரிப்பிள் ஜம்ப் ஆடும் போது அந்தப் பையனும் அவன் ஃப்ரெண்ட்ஸும் மறுபடியும் எங்களையே முறைச்சுப் பார்த்துகிட்டு நாங்க இருந்த இடத்தையே சுத்திச் சுத்தி வந்தாங்கம்மா! நடு, நடுவுல டீச்சர் காதுல விழாத அளவுக்கு சினிமாப்பாட்டு வேற... இரிட்டேட்டிங்கா இருந்தது. என்றாள்.

மதுவுக்கும் இரிட்டேட்டிங்காகத் தான் இருந்தது முகம் தெரியாத அந்தப் பையனை நினைத்து; தன் மகள், இப்படி ஒழிவு மறைவின்றித் தனது விஷயங்களை அம்மாவான தன்னிடம் கூறி ஆலோசனை கேட்பது போல அந்தப் பையனும் அவனது அம்மாவிடம் கேட்டிருந்தான் என்றால் இந்நேரம் தன் ஆசை மகள் இப்படி வெறுத்துப் போய் புலம்பத் தேவை இருந்திருக்காதே! என்று ஒரு பக்கம் ஆற்றாமையாக இருந்தது. ஆனாலும் மகளிடம்; 

‘குட்டிம்மா, லீவ் இட் டா, இன்னும் ஒரு வாரம் பார்... அந்தப் பையன் உங்க வகுப்புல யாரைப் பார்க்க வர்ரானு உங்களுக்குத் தெரியுதோ இல்லையோ... ஆனா நீங்க அவனாலயும் அவன் ஃப்ரெண்ட்ஸ்னாலயும் டிஸ்டர்ப் ஆகறீங்கன்றது மட்டும் தெளிவா தெரியுது. அதனால இனி வெயிட் பண்ணத் தேவை இல்லை. அடுத்த வாரம், உங்க ஸ்கூல்ல உனக்கு ரொம்பப் பிடிச்ச பிராக்டிகலான டீச்சர் யாராவது இருந்தா... ஐ மீன் எந்த விஷயத்தையும் பொறுமையா அணுகற டீச்சர் யார்ன்னு பார்த்து அவங்க கிட்ட இந்த விஷயத்தைப் பத்திப் பேசுங்க. ஷி வில் கிவ் யூ குட் சொல்யூஷன். அவங்க அவனைக் கூப்பிட்டு சொல்ற விதத்துல சொல்லட்டும், இல்லைனா நானே நேரா ஸ்கூல்க்கு வந்து உங்க டீச்சரைப் பார்த்துப் பேசிடறேன். அப்புறம் இன்னொரு விஷயம் அவன் அந்த மாதிரி பிஹேவ் பண்ணும் போது நீங்க யாரும் சிரிச்சுகிட்டு அவங்க பண்றதை என்கரேஜ் பண்ணிட வேண்டாம். புரியுதா?!

‘ஓக்கேம்மா’

அப்புறம் நாட்கள் கடந்தன. திவ்யா, அதன் பிறகு தன் அம்மாவிடம் அவ்விதமான புகார்கள் எதையும் கொண்டு வந்தாளில்லை.

மதுவும் குழந்தைகளின் தேர்வு, தனது வேலைப்பளு, வீட்டு நிர்வாகம், என்று மூழ்கிப் போக அப்படி ஒரு பிரச்னை இருந்ததா? அதைப் பற்றி நாம் பேசினோமா என்ற ரேஞ்சுக்கு அம்மாவும், மகளும் வந்திருந்தனர்.

எல்லாம் ஸ்மூத்தாகப் போய்க்கொண்டிருந்த ஒருநாளில் வீட்டுக்குத் தேவையான சில பொருட்களை வாங்குவதற்காக அண்ணா நகர் சந்தோஷ் மார்கெட் வரை மது சென்றிருந்த போது எதேச்சையாக திவ்யாவின் ஆங்கில ஆசிரியை சாரதாவைப் பார்க்க நேர்ந்தது.  திவ்யாவுக்கு மிகப் பிடித்த ஆசிரியை அவர். தினமும் ஒரு முறையாவது அவரைப் பற்றி எதையாவது சொல்லாமல் திவ்யாவின் நாள் முழுமை பெறாது. அந்தம்மாளைப் பார்த்ததும் மது வழக்கமான எல்லா அம்மாக்களையும் போலவே தன் மகள் திவ்யாவின் படிப்பைப் பற்றி மேலோட்டமாக விசாரித்து விட்டு நகருகையில்;

சாரதா டீச்சர்; திவ்யாம்மா... ஐ நீட் டு டாக் அபெளட் திவ்யா, ஒரு 10 நிமிஷம் ஒதுக்கி எங்கூட வந்து பட்டர் கார்ன் சாப்பிடுங்க. அதுக்குள்ள நாம பேசி முடிச்சுடலாம். என்றார் புன்னகையுடன்’

திவ்யா குறித்துப் பேச வேண்டும் என்றதும் மதுவுக்கு மனதுக்குள் லேசாகக் கவலை எட்டிப் பார்த்தது. என்னவாக இருக்கும், அந்தப் பையன் விஷயமாக இருக்குமோ?! படிப்பு விஷயம் என்றால், அவள் வழக்கத்தை விட இப்போது இன்னும் நன்றாகப் படிக்கிறாள். கல்வியைப் பொறுத்தவரை மட்டுமல்ல பாட்டு, க்விஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, பள்ளி நிகழ்ச்சிகளில் காம்பியரிங் செய்வது, ஆங்கில இலக்கணம் தொடர்பான போட்டிகளில் பங்கேற்பது, சயன்ஸ் டேலண்ட், ஒலிம்பியாட் போட்டித்தேர்வுகள் உள்ளிட்ட தேர்வுகளுக்குத் தயார் ஆவது என்று அவள்  ஒரே சீராக முன்னேறிக் கொண்டே தான் இருக்கிறாள். வேறு என்ன பிரச்னையாக இருக்கும்? என்று யோசித்தவாறு மது, சாரதா டீச்சருடன் பட்டர் கார்ன் சாப்பிடத் தோதாக ஒரு ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டாள்.

சாரதா டீச்சர் புன்னகையுடன் தொடங்கினார்...

‘திவ்யா இஸ் வெரிமச் ஃபோகஸ்டு ஆன் ஸ்டடிஸ். ஸ்டடிஸ்னா சும்மா இல்லை. ஷி வாண்ட்ஸ் டு பி ஹை பொஸிசன் ஆல்வேஸ். அதுக்காக அவ ஹார்ட் வொர்க் பண்றா. சம் டைம்ஸ் அவ நினைக்கிற அளவுக்கு எல்லா நேரமும் ஃபர்ஸ்ட் பொஸிசன் வர முடியலேன்னாக் கூட, அது எதனாலன்னு ஷி அண்டர்ஸ்டுட் இட் வெல். ஸோ, அவளை மாதிரிக் குழந்தைகள் அழகா இருந்தா, பசங்களுக்கு அவங்க மேல ஈர்ப்பு வரது சகஜமான விஷயம் தான், நான் அந்தப் பையனைக் கூப்பிட்டுக் கண்டிக்கிறதையோ, பேசறைதையோ விட திவ்யாவோட இலக்குகளை இன்னும் கொஞ்சம் பெரிசாக்கினேன். அவளுக்குப் பின்னாடி வர ஸ்டுடன்ஸுக்கு அவ ஒரு ரோல் மாடலா இருக்கணும்னு பொதுவா எல்லாருக்குமா சேர்த்து சொல்லி வச்சேன்.

என் ட்ரிக் நல்லாவே வேலை செய்தது. இப்போ திவ்யாவுக்கு அந்தப் பையன் தன்னைப் பார்க்கறானா? பார்க்கலையான்னு எந்தப் பிரச்னையும் இல்லை. அவனும் கூட நல்லாப் படிக்கிற பையன் தான். ஸோ அவனை அவன் வகுப்புக்குச் செல்லக் கூடிய இன்னொரு டீச்சர் மூலமா கவனத்தை திசை திருப்பினோம். அவனுக்கும் படிப்பு மேல ரொம்ப அக்கறை இருக்கிறதை ஒப்புக்கத்தான் வேணும். அவனுமே இப்போ முன்ன மாதிரி ஹீரோ வேலையோ வில்லன வேலையோ எல்லாம் பண்றது இல்லை, அவனோட ஃப்ரெண்ட்ஸும் அவனை ஏத்தி விடற வேலையைச் செய்றதில்லை. அவனுக்கு ஸ்போர்ட்ஸ் இண்ட்ரஸ்ட்ங்கறதால அதுல ஃபோகஸ்டா இருக்கான். ஸ்டேட் லெவல் காம்பெடிஷன் எல்லாம் போய்க்கிட்டு இருக்கான். ஒரு டீச்சரா, எனக்கிது ரொம்ப சந்தோசமான மாற்றம்.

எங்க குழந்தைகளை... ஐ மீன் ஸ்டூடண்ட்ஸை மோட்டிவேட் பண்றதைக் காட்டிலும் எங்களுக்கு வேற என்ன முக்கியமான வேலை இருக்கு? சொல்லுங்க பார்க்கலாம். நல்ல விதமா மோட்டிவேட் பண்ண ஆட்கள் அமைஞ்சிட்டா நம்ம பிள்ளைங்க திசை மாறவோ, மோசமா நடந்துக்கவோ வழியே இல்லை பாருங்க!

இப்போ குழந்தகளோட பிரச்னையும் தீர்ந்தது, அவங்க கல்வியும் இம்ப்ரூவ் ஆகிட்டே வருது. பிராப்ளம் சால்வ்டு!’ -  என்றார்.

மதுவுக்கு பிக் பாஸ் சினேகன் ஸ்டைலில் அவரைக் கட்டிக் கொண்டு கைகளில் முத்தமிட வேண்டும் போல இருந்தது. ஆனாலும் ரொம்பவே சினிமாட்டிக்காக இருக்கும் என்பதால் தேங்யூ வெரி மச் மேம், தேங்க் யூ வெரி மச் மேம் என்று மட்டும் பலமுறை சொல்லி விடைபெற்றாள்.

ஒரு அம்மாவாக, வளரிளம் பருவத்துக் குழந்தைகளை சரியான விதத்தில் மோல்டு செய்து, மோட்டிவேட் செய்து அவர்களுக்கிருந்த சின்னத் தடுமாற்றத்தையும் சரி செய்ய சாரதா டீச்சர் மாதிரியான ஆட்கள் இருந்தால் நம் நாட்டில் பள்ளிக் குழந்தைகள் பலர் மிகப்பெரிய சாதனைகளைச் செய்வார்கள் என்பது உறுதி.

Note: அரசுப் பள்ளி ஆசிரியை அன்னபூர்ணாவின் புகைப்படம் இந்தக் கட்டுரைக்கு பொருத்தமாக இருக்குமென்பதால் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவரும் கூட இந்தக் கட்டுரையில் வரும் சாரதா டீச்சர் போன்று, தனது மாணவர்களின் நலனைத் தனது சொந்த நலனாக நினைத்துச் செயல்படுபவரே! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com