அதிகாரம் - 5. இல்வாழ்க்கை

எதில் இருந்து கற்பதன் மூலமும், இல்வாழ்வில் இருந்துதான் அதிகமாகக் கற்க முடியும். அறவாழ்வை விடவும் இல்வாழ்வு மேலானது.
Published on
Updated on
2 min read

அதிகார விளக்கம்

உள்ளபடி இருத்தல் என்ற தன்மையே இல்வாழ்வு. இதன் பொருட்டு அடையும் நன்மைகள் அதிகம். துறவு பூண்டவர், வாழ்பவர், இறந்தவர் என்ற மூவருக்கும் உதவும் ஆற்றலும், விருந்தோம்பலும், பழிக்கு அஞ்சுவதும் இல்வாழ்வின் சிறப்புக்கூறுகள். எனவே, அன்புடனும், அறனுடனும் நடப்பதே பண்பும், பயனுள்ளதும் ஆகும். எதில் இருந்து கற்பதன் மூலமும், இல்வாழ்வில் இருந்துதான் அதிகமாகக் கற்க முடியும். அறவாழ்வை விடவும் இல்வாழ்வு மேலானது. பிறர் பழிக்காதபடி வாழ்வாங்கு வாழ்ந்தால் தெய்வமாகலாம்.

41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

ஏழை எளியவர், சுற்றத்தார், குடும்பத்தார் என மூவருக்கும், இல்வாழ்க்கையில் இருப்பவர்தான் உதவி செய்து உற்றதுணையாக இருக்க முடியும்.

42. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை. 

போதும் என்ற நிறைவை அடைந்தவர், போற்றத்தகுந்தவர், வறியவர்கள் என அனைவருக்கும் இல்வாழ்க்கையில் இருப்பவனே துணையாக இருப்பான்.

43. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

தெய்வமாக உறைந்த மூதாதையர், உற்றார் உறவினர், சுற்றத்தார்,  குடும்பத்தார் மற்றும் விருந்தினர்களை உபசரிப்பதுதான் இல்வாழ்க்கையில் முதன்மையானது.

44. பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். 

யாரும் பழிசொல் சொல்லாதவாறு அனைவருக்கும் பகுந்துண்டால் வாழ்க்கைப் பாதையில் எந்த இடையூறும் இருக்காது.

45. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. 

அன்பும் அறநெறியும்தான், இல்வாழ்க்கையை பண்புடையதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்குகிறது.

46. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன்.

அறநெறியுடன் கூடிய இல்வாழ்க்கையைவிட மேலானதை யாரால் பெற முடியும்.

47. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

இல்வாழ்க்கையில் இயல்பாக இருப்பவனே, வாழ்வின் உண்மையை அறிய முற்படுபவர்களில் தலையானவன்.

48. ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. 

வாழ்வின் முறை அறிந்து, அறத்துக்குக் கேடு செய்யாத இல்வாழ்க்கையே தவ வலிமையையும்விட வலிமையானது.

49. அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. 

அறமே இல்வாழ்க்கை; அது யாரும் குற்றம் சொல்லாத இல்வாழ்க்கையாக இருப்பது நல்லது.

50. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

வாழும் நெறியறிந்து இல்வாழ்க்கையில் ஈடுபடுபவரே, தெய்வத்துக்கு நிகரானவராக மதிக்கப்படுவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com