23. கோயில் நிலத்தில் குடியிருப்போர் கவனத்துக்கு..

அரசுத் துறையோ அல்லது தனியார் துறையோ எதுவாக இருந்தாலும், முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கும் வேறு சில ஊழியர்களுக்கும் தாற்காலிகமாகத் தங்கிக்கொள்வதற்கு
23. கோயில் நிலத்தில் குடியிருப்போர் கவனத்துக்கு..
Published on
Updated on
1 min read

அரசுத் துறையோ அல்லது தனியார் துறையோ எதுவாக இருந்தாலும், முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கும் வேறு சில ஊழியர்களுக்கும் தாற்காலிகமாகத் தங்கிக்கொள்வதற்கு நிறுவனம் சார்பில் இடம் ஒதுக்கப்படும். இது பொதுவாக நடைபெறக்கூடிய செயல்முறைதான்.

பணிக்காலம் முடிந்த பிறகு, தனக்கு அளிக்கப்பட்ட இடத்தை அந்தந்த நிறுவனத்திடமே திருப்பி வழங்க வேண்டும். அடுத்த அப்பொறுப்புக்கு வருபவர்களுக்கு வழங்குவதற்கு வசதியாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆனால் சிலரோ, தனக்கு வழங்கப்பட்ட இடத்தை (அது நிலமோ, வீடோ) தனக்கே சொந்தம் என்று நினைத்து அடகு வைப்பதோ அல்லது விற்பதோகூட நேர்வதுண்டு. இத்தகைய செயல்கள் பண்டைய காலத்திலும் நிகழ்ந்திருக்கின்றன.

கோயில் பணியாளர்களுக்கென்று நிலம் கொடுக்கும்போதே இத்தகைய நிபந்தனைகளையும் விதித்தே கொடுத்திருப்பது இந்தக் கருத்தை உறுதி செய்கிறது.

சுசீந்தரம் தாணுமாலய சுவாமி கோயிலில், கொல்லம் 404, அதாவது பொ.நூ. 1228-ஐ சேர்ந்த ஒரு கல்வெட்டு உள்ளது. அந்த ஆண்டில் கீழ்க்கரையில் உள்ள பிரமஸ்வமும், அதாவது அந்தணர் குடியிருப்பும் மடங்களும் மாடங்களும் வீடுகளும், மேலும் சில ஊர்களில் வீடுகளும் இதைத் தவிர நிலங்களில் இருந்து வரும் நெல்லையும் பணியாளர்கள் அனுபவிக்கும் உரிமையைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஆனால், அதில் அதிகாரிகளாக உள்ளவர்கள் இதனை ஒற்றியோ அதாவது அடகுவைத்தோ விற்றோ செய்யும் செயலுக்கு உடன்படக் கூடாது என்றும் குறிப்பிடுகிறது. அவ்விதம் செய்தால், பன்னிரண்டு கழஞ்சு மற்றும் அஞ்சு காணம் பொன் அபராதமாக விதிக்கப்படும் என்றும் அந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும், எட்டு அடைவுகளாகப் பிரிக்கப்பட்ட இந்த வாழிடங்களில் இருப்போர் அனைவரையும் கலந்தே முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் முடிவு எட்டப்பட்டிருக்கிறது.

இக்கிராமத்தில் க்ராமாதிகாரம் உள்ளவாள் கன்றி மேவுற ஒற்றியும் விலையும் கொடாப்போமாகவும் கொடுப்பாருளராகில் அன்றாடு ஸ்வாமிக்கு பந்நிரு கழஞ்சே யஞ்சு காணம் பொன் தண்டமும் வைச்சு விற்றவன் ஸோமம் ஸபைப் பொதுவாவதாகவும்..

என்பது கல்வெட்டு வரி.

அதாவது, அதிகாரிகளைத் தவிர, பணியாளர்கள் தாமாகவே ஒற்றியோ அல்லது விற்கவோ செய்யக் கூடாது என்றும், அவ்விதம் செய்தால் அவர்கள் அன்றிருக்கும் தலைவருக்குப் பன்னிரண்டு கழஞ்சு அஞ்சு காணம் பொன் அபராதமாகத் தர வேண்டும் என்றும், அவர்களுடைய சொத்தும் சபையினருக்குப் பொதுவாகுமென்றும், அதாவது பறிமுதல் செய்யப்படுமென்றும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இன்றும், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர், தமக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை (குறிப்பாக கோயிலுக்குச் சொந்தமான) மீண்டும் ஒப்படைக்காமலும், அவற்றை முறையற்ற வகையிலும் பயன்படுத்துவதையும் பார்க்கும்போது, இத்தகைய முடிவுகள் இன்றைய நிலையிலும் பொருந்திவரும் திறத்தை வரலாற்றின் வண்ணமாக உணர முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com