19. கோயில் நிலத்தில் வீடு கட்டினால்..

கோயில் திருமடவிளாகத்தில் வீடு கட்டி குடியிருந்த சிலரை, அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த ஆட்சியில் இருந்தவர்கள் எடுத்த நடவடிக்கைகள்தாம் வரலாற்றின் வண்ணங்களாக நமக்குப் பாடமாக அமைபவை.
19. கோயில் நிலத்தில் வீடு கட்டினால்..
Published on
Updated on
1 min read

பொதுவாக, நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுவோர் இருவகைப்படுவர். தெரிந்தே ஆக்கிரமிப்பவர் ஒருவகை என்றால், தெரியாமல் ஆக்கிரமித்துவிட்டோ அல்லது ஆக்கிரமித்துவிட்டவரிடம் இருந்து திரும்பப் பெற்றோ வாழ்பவர்கள் சிலர். இத்தகைய வழக்கு பழங்காலத்திலும் நிகழ்ந்திருக்கிறது. கோயில் திருமடவிளாகத்தில் வீடு கட்டி குடியிருந்த சிலரை, அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த ஆட்சியில் இருந்தவர்கள் எடுத்த நடவடிக்கைகள்தாம் வரலாற்றின் வண்ணங்களாக நமக்குப் பாடமாக அமைபவை.

இதற்கான சான்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள மூன்றாம் குலோத்துங்கனின் கல்வெட்டு ஒன்று இத்தகைய தகவலைக் கொண்டிருக்கிறது. மூன்றாம் குலோத்துங்கனின் 26-ஆவது ஆட்சியாண்டை, அதாவது பொ.நூ. 1203-ஐ சேர்ந்த கல்வெட்டு அது. இந்தக் கல்வெட்டு, கோயிலின் மாகேசுவரர்கள், அதாவது நிர்வாகக் குழுவினர் திருமடவிளாகத்தில் எடுப்பித்திருந்த மனைகளை விற்க முற்பட்டனர். அதற்கான விலையையும் கண்காணி நிர்ணயித்தான். அப்படி விற்கும்போது, அதன் உடைமையாளர்களைப் பற்றியும் எண்ணிப் பார்த்தார்கள். தெரியாமல் மனையை வாங்கிய அவர்களுக்கும் ஏதாவது செய்ய முனைந்தார்கள். ஆகவே, விற்றுக் கிடைத்த காசில் செம்பாதியைக் கோயில் பண்டாரத்திலும், மீதியை மனையை வாங்கியவர்களுக்கும் கொடுப்பதென்று முடிவெடுத்தார்கள். இதற்கான ஆவணமாக அந்தக் கல்வெட்டு திகழ்கிறது.

உடையார் திருவண்ணாமலை உடையார் கோயில் சீருத்திர சீமாஹேச்வரரோம் இந்நாயனார் திருமடைவிளாகத்து எடுப்பாயிருந்த மனைகள் விற்குமிடத்து பண்டாரக் கண்காணி புறப்பட்டு விலை நிச்சயித்து நிச்சயித்த விலையில் பண்டாரத்துக்கு செம்பாதி குடுப்பதாகவும் மனையுடையவனுக்கு செம்பாதி குடுப்பதாகவும் இப்படியன்றியே இப்பொருள் பண்டாரத்தில் புகாமல் விக்நம் பண்ணுதல் பண்ணுவித்தால் செய்தாநுண்டாகில் பொருளிரட்டியும் கொண்டு மனையுமிழந்து போக கடவதாகவும் இப்படிச் சம்மதித்துக் கல்வெட்டினோம்.

இவ்விதம் கல்வெட்டு செல்கிறது.

ஆக, மனையின் விலையை நிர்ணயித்து அதில் கிடைக்கும் செல்வத்தில் பாதியைக் கோயில் பண்டாரத்தில் செலுத்தி மீதியை மனையை வாங்கியவர்களுக்கு வழங்கச் சொன்ன செய்தி குறிப்பிடத்தக்கது. இதனைப் போலவே, ஒருவேளை கோயில் பண்டாரத்தில் சேர்க்காதுபோனால் இரட்டிப்பு அளவு செல்வத்தைச் செலுத்தவும் மனையையும் இழக்கவும் வைக்கும் தண்டனையும் நோக்கத்தக்கது.

அதாவது, தெரியாமல் மனைகொண்டாரும் பேரளவில் நட்டம் அடையாமலும், கோயிலுக்கும் பங்கம் நேராமலும் மேற்கொண்ட செயல் பல புதிய வழியைத் தரும் வண்ணமாக அமைந்திருக்கிறது. இன்றும் பலர் ஆக்கிரமிக்கப்பெற்ற நிலங்களில் வீட்டைக் கட்டிவிட்டு அவற்றை நீக்கும்போது பெருந்துயர் அடைகின்றனர். இதுபோன்ற ஏதாவது வழியை மேற்கொண்டு உடனுக்குடன் திட்டங்களை வகுத்தால் எவருக்கும் அதிகப் பாதிப்பின்றி இருக்குமல்லவா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com