18. ஆட்சி மாறினால் கோயில் காட்சி மாறும்

ஆட்சி மாறினாலும் உடனேயே பழைய ஆட்கள் மாற்றப்படவில்லையென்றும், அவர்கள் செய்த அட்டூழியம் கண்டே அனைவரும் கொதித்தெழுந்து அவர்களை மாற்ற முனைந்ததும் கண்கூடு.
18. ஆட்சி மாறினால் கோயில் காட்சி மாறும்

பொதுவாக, ஒரு ஆட்சி மாறி மற்றொருவர் ஆட்சிக்கு வந்தால் முன்னவர் வைத்த ஆட்சி நிர்வாகிகளை மாற்றுவர். அவர்கள் சரியாக இருந்தாலும் அல்லது இல்லாமல் போனாலும் அவர்களை மாற்றுவதே மரபாகிவிடுகிறது. கோயில் அலுவலர்களும் இதில் விதிவிலக்கில்லை. ஆனால், பண்டைக் காலத்தில் முன்பு நியமிக்கப்பட்ட அலுவலர்கள் செய்த கேட்டைக் கண்டே அவர்களை மாற்றினர். இதற்கான ஆவணம் திருவரங்கத்தில் கிடைக்கிறது.

சோணாடு வழங்கியருளிய மாறவர்மன் சுந்தரபாண்டியன் பொ.நூ. 1216-ல் ஆட்சிக்கு வந்தவன். அவனுடைய ஒன்பதாவது ஆட்சியாண்டில், அதாவது பொ.நூ. 1225-ல் நாராயணதாசர் என்னும் ஜீயரும் கோயில் அதிகாரியான அழகியசோழபிரமராயரும் ஸ்ரீவைஷ்ணவர்களும் திருப்பணி செய்யும் மக்களும் ஸ்ரீபாகவத நம்பிமாரும் பல்வேறு கட்டளைக்காரர்களும் கோயில் அகத்து பட்டர்களும் எம்பெருமானாரான ஸ்ரீராமானுசரை அடைந்த ஸ்ரீவைஷ்ணவர்களும் நடந்து வணங்க வந்த பதினெண் மண்டலத்து ஸ்ரீவைஷ்ணவர்களும் இராசமகேந்திரன் திருவீதியில் மேலைப்பக்கம் கூடினர். அவர்கள் கோயில் நிர்வாகத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்தனர்.

அதற்கு முன்னர் ஒட்டர்கள் என்பார் உள்புகுந்து கோயில் நிர்வாகத்தில் முழுவதும் ஊடுருவியிருந்தனர். ஒட்டரோடு சேர்ந்துகொண்டு நிர்வாகிகளும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டனர். கோயிலிலும் கட்டளைக்காரரிடமும் ஒட்டுக்காசைக் கூட்டிக்கொடுத்தும் நிலையான ஆட்கள் என்று ஒட்டரைக் காட்டி கோயில் நிலங்களில் இருந்து வந்த நெல்லைக் கொடுத்தும், ஒரு நாளுக்கான படியைக் கொண்டு பல நாள்கள் கோயில் பூஜைகளை நடத்தியும் இவ்விதம் அட்டூழியம் செய்து வந்தார்கள். இதனைக் கண்டு பொறாத பக்தர்கள் அனைவரும் கொதித்தனர். இதுவரை அட்டூழியம் செய்து வந்தவர்கள் ஒட்டர்களால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதாலும், ஆட்சியும் மாறிப்போனதாலும், அவர்களை நீக்கிவிட்டு புஷ்பயாகத்தில் இருந்தவாறே பதினெட்டு மண்டல ஸ்ரீவைஷ்ணவர்களும் கூடி கோயில் கொத்திலிருந்தே தகுதியுடையாரை நியமித்து, ஆண்டு முடிந்தவுடன் மீண்டும் வேறு நபர்களைத் தேர்ந்தெடுக்குமாறு ஒரு முடிவை எடுத்தனர்.

முன்னாளில், கோயிலுக்கு நிர்வாஹகராய் பதினமுசெய்து போந்த பத்துபேருமாக அவவர் காலத்து ஒட்டரோடே கூடி நின்று கோயிலிலும் நிமந்தக்காறர் பக்கலிலும் ஒட்டுக்காசு கூட்டிக் குடுக்கையாலும் நிலையாள் என்று கூட்டி திருவிடையாட்டங்களில் நெல்லை எடுத்து ஒட்டருக்குக் கொடுக்கையாலும் மற்றும் பல வழிகளாலே திருவிடையாட்டத்தில் உடல்களை அழிக்கயாலே இரண்டு ஸம்வத்ஸரத்திலாக முன்னூற்று சின்னம் நாள் திருவாராதனம் ஒருநாள்ப்படி கொண்டு பலநாள் படி செலுத்த ................. மாறகம் கொதித்து கூப்பிட்டு திரியச்செய்தே இவர்கள் தாங்கள் வறுமைப்பட திரிகையாலும் இப்போது ஒட்டருக்குக் காலமன்றியே ராஜகீயமாய் நம் சாமந்தனாரே கோயிலைக் கைக்கொண்டு இரண்டுகரை நாட்டு திருவிடையாட்டங்களையும் தந்து....

என்று கல்வெட்டு செல்கிறது.

ஆட்சி மாறினாலும் உடனேயே பழைய ஆட்கள் மாற்றப்படவில்லையென்றும், அவர்கள் செய்த அட்டூழியம் கண்டே அனைவரும் கொதித்தெழுந்து அவர்களை மாற்ற முனைந்ததும் கண்கூடு. ஆக, ஆட்சி மாறும்போது காட்சி மாறுவதென்பது பண்டைக் காலத்தில் அவர்கள் பணியை வைத்தே இருந்ததேயன்றி, முன்னாட்சி நியமித்ததனாலேயே மாற்றுதல் என்பதில்லை என்பது தெரிகிறது. மேலும், அட்டூழியங்களைக் கண்டு பொங்கிய அடியார்களே இத்தகைய முடிவுக்கு வழிவகுத்ததும் தெரியவருகிறது. இனிவரும் ஆட்சியாளர்களும் அடியார்களும் இவற்றை மனத்தில் கொள்வரா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com