21. பாதையை அகலப்படுத்த
By முனைவர் க. சங்கரநாராயணன் | Published On : 30th March 2019 10:00 AM | Last Updated : 30th March 2019 10:00 AM | அ+அ அ- |

பொதுப்பணித் துறை ஏதாவது செயல்களை மேற்கொண்டால் அதற்கு நில எடுப்பு முதல் பல்வேறு பணிகள் செய்யப்பட வேண்டும். அதற்குக் கால அவகாசம் தேவைப்படும். அத்துடன், அப்பணிக்கு உள்ளூர் அமைப்புகளும் மக்களும் உதவி செய்ய வேண்டும். வரலாற்றில் இதற்கான பதிவும் உண்டு. மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று, திருக்குவளையை அடுத்த திருவாய்மூரில் உள்ள தியாகராஜர் கோவிலில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு, மிகச் சரியாக 12.12.1210-ம் தேதியைச் சேர்ந்தது என்பது அதில் உள்ள வானியல் குறிப்புகளை வைத்து உணரமுடிகிறது. இந்தக் கல்வெட்டு ஒரு சுவாரசியமான தகவலைத் தருகிறது.
கட்டிமான் குடியான சோழபாண்டிய சதுர்வேதிமங்கலத்தைச் சேர்ந்த சபையார், அதாவது ஊராளும் மன்றத்தார், இறைவன் எழுந்தருளிப் புறப்பாடு செய்யும் திருவீதி அகலம் போதாமையால் அதனை அகலம் செய்ய அரசனின் ஆணை வந்தது. இதனால் ஊர்ச்சபையார் மேற்கொண்ட செயல்களை அந்தக் கல்வெட்டு கூறுகிறது.
அருளுகிற இடத்து பழய திருவீதி அகலம் போதாமையாலே.. அருள.. இந்தத் திருவீதிப்புறத்து உள்ளபடியே திருவீதியாக செய்யக்கடவதாய் திருவாய் மலர்ந்தருளினமையில்..
இந்த ஆற்றங்கரை துடங்கி திருமடைவிளாகம் உற வடகரை நின்ற அகலத்துக் கோக்க இரண்ட... க்கும் இந்த வேண்டும் இருந்த திருவீதியாகச் செய்யக் கடவதாகவும் இப்படிச் செய்யும் இடத்து திருவீதி செய்ய வேண்டும் ஆள் ஸ்ரீபண்டாரத்தே இட்டு செய்து கொள்ளக் கடவார்களாகவும்..
என்று, பணிக்குத் தேவையான நிலங்களைப் பற்றிய குறிப்பையும் மற்றைய குறிப்புகளையும் கல்வெட்டு தருகிறது.
ஆக, இறைவனை எழுந்தருள்விப்பதற்காக திருவீதியின் அகலம் குறைந்துபட்டமையில் கட்டமான்குடியின் ஊடாக புதிய திருவீதி அகலத்தோடு அமைக்கப்பெற்றமையையும், அதற்காக நிலம் எடுப்பது முதல் அதற்கான ஆட்களை ஸ்ரீபண்டாரச் செல்வத்திலிருந்து பெற்றது வரை எல்லாச் செயல்களும் கல்வெட்டில் பதிவாகியிருக்கிறது.
அத்துடன், வீதியை அகலப்படுத்த ஊராரும் சபையினரும் உடனுக்குடன் ஒத்துழைத்து செயல்கள் விரைந்து செயல்பட்டது தெளிவாகிறது. இது இறைவனுக்கானது என்ற எண்ணத்தில் அனைவரும் ஒப்புக்கொண்டிருந்தாலும், இன்றைய சூழ்நிலையிலும் இத்தகைய ஒத்துழைப்புகள் கிடைத்தால் வளர்ச்சிப் பணிகள் விரைவில் முடியும் என்பதில் ஐயமில்லை.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...