100. அருந்தூய்மை

என் சன்னியாசத்தின் நோக்கம், என் சுதந்தரம் மட்டுமே. சௌகரியங்கள் அல்ல. சந்தோஷங்கள் அல்ல. லாபங்களோ இன்னபிறவோ அல்ல. வெறும் சுதந்திரம்.

என்னால் மறக்கவே முடியாத ஒரு தினம் உண்டென்றால் அது அன்றைய தினம்தான். வாழ்வில் முதல் முறையாகவும், ஒரே முறையாகவும் நான் சில தீர்மானங்கள் செய்துகொண்டேன். அவை அனைத்துமே என் குருநாதர் எனக்குப் பிட்சையாக அளித்த யோசனைகள்.

‘விமல்! ஒரு சன்னியாசியிடம் இருக்கவே கூடாதவை மூன்று. முதலாவது பணம். இரண்டாவது அசையாச் சொத்து. மூன்றாவது நேரடி அதிகாரம்’ என்று அவர் சொன்னார்.

நான் உடனே, ‘பெண்?’ என்று கேட்டேன்.

குரு சிரித்தார். ‘இல்லாதிருந்தால் நல்லது. இருந்தே தீருமானால் அதனால் வரக்கூடிய சிறு இடையூறுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். ஆனால் நான் சொன்ன மூன்றும் பெண்ணைக் காட்டிலும் அபாயகரமானவை’.

‘அப்படியா?’

‘நிச்சயமாக’.

‘ஆனால் பணம் இல்லாமல் ஒரு மனிதன் எப்படி வாழ முடியும்? சன்னியாசிக்கும் பசி உண்டே குருஜி?’

‘அதற்குத்தான் உங்களுக்கெல்லாம் பிட்சை எடுக்கப் பயிற்சியளிக்கிறேன். வாரத்தில் மூன்று நாள்கள் கண்டிப்பாகச் சமையல் கிடையாது என்று ஏன் சொல்கிறேன்? பிட்சை எடுத்து உண்பது அகங்கார நாசம் என்பது பொதுவாகச் சொல்லப்படுவது. யோசித்துப் பார். அது அகங்காரத்தை நாசம் செய்வதில்லை. சமைக்கும் பணி அல்லது சம்பாதிக்கும் கடமையில் இருந்து உன்னை நகர்த்தி வைக்கிறது. உனக்கு சிந்திக்க நிறைய நேரம் கிடைக்கிறது’.

ஒரு விதத்தில் அது உண்மைதான் என்று தோன்றியது. ஆரம்பத்தில் பிட்சைக்குப் போகும்போது எனக்குச் சிறிது சங்கடம் இருந்தது. சில வீட்டு வாசல்களில் நின்று எத்தனை அழைத்தாலும் யாரும் வரமாட்டார்கள். குருநாதர் தெளிவாக எங்களுக்கு ஒரு கட்டளை இட்டிருந்தார். ஒரு வீட்டில் பிட்சை கேட்க முடிவு செய்து வாசலில் நின்றால், அந்த வீட்டில் மட்டும்தான் பிட்சை கேட்க வேண்டும். அங்கே கிடைக்காவிட்டால் திரும்பிவிட வேண்டுமே தவிர, அடுத்த வீடு நோக்கிப் போகக்கூடாது.

‘இது பயங்கரமான நிபந்தனையாக இருக்கிறது குருஜி. எந்த சன்னியாசியும் இப்படியொரு வழக்கம் வைத்திருந்ததாக எனக்குத் தெரியவில்லை’ என்று சொன்னேன்.

‘அதனாலென்ன? இந்த வழக்கத்தை நீ ஆரம்பித்து வைத்ததாக இருக்கட்டுமே?’

‘எதற்கு? என்னால் பசி பொறுக்க முடியாது’.

‘அப்படிச் சொல்லாதே. பசியைப் பழகிக்கொள். அது உனக்குப் பிற்காலத்தில் மிகவும் உதவும்’ என்று சொன்னார்.

அது வெகு விரைவில் உண்மையானது. எனக்குப் பசி பழகிவிட்டது. பசியைக் கட்டுப்படுத்தவும் நான் பழகியிருந்தேன். ஒருவேளை உணவில் இரண்டு மூன்று தினங்கள் தாக்குப்பிடிக்க என்னால் முடிந்தது. உண்மையில் அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. அதை நினைவுகூர்ந்துதான் அன்றைக்கு குருநாதர் சொன்ன மூன்று விஷயங்களையும் வாழ்வில் கடைப்பிடித்தே தீருவது என்று முடிவு செய்தேன். அதை அவருக்கு சத்தியமாகவும் செய்து கொடுத்தேன். எனக்கென்று என்றுமே ஒரு வங்கிக் கணக்கு இருக்காது. என் பெயரில் எந்தச் சொத்தும் எந்நாளும் சேராது. அதிகார நந்தியாக ஒருபோதும் நான் இருக்கப் போவதில்லை.

‘ஆனால் குருஜி, நான் இந்த தேசத்தின் தலையெழுத்தாவேன். அதை உங்களால் மாற்ற முடியாது’ என்று சொன்னேன்.

அவர் சிரித்தார். ‘விமல், நீ ஒரு ஆக்ரோஷமான அறிவுக் குழந்தை. உனது பலம் என்பது உன் மொழி. அதன் கூர்மை மங்காமல் பார்த்துக்கொள். உன் லட்சியத்தில் நீ நிச்சயமாக வெல்வாய்’ என்று சொன்னார்.

அன்றைக்கு நாங்கள் சந்தித்த அந்த சன்னியாசி அவர் சார்ந்திருந்த மடத்தின் பீடாதிபதியிடம் கூடச் சொல்லிக்கொள்ளாமல் கிளம்பி வந்திருந்ததாக குரு சொன்னார். அது எனக்கு மிகுந்த அதிர்ச்சியளித்தது.

‘என்ன காரணமாயிருக்கும்?’ என்று கேட்டேன்.

‘சொன்னேனே. அதிகாரம். பணம். நிர்வாகம். விதிமுறைகள். யாருக்கு யார் கட்டுப்படுவது என்ற வினா. அனைத்துக்கும் மேலாகத் தனியொரு பீடம் நிறுவ எண்ணம் வந்துவிட்டால் தீர்ந்தது கதை’.

‘இதையெல்லாம் அவர் உங்களிடம் சொன்னாரா குருஜி?’

‘எப்படிச் சொல்வார்? நான் என்ன அவருக்கு நண்பனா? முன்பின் தெரிந்தவனா? ஒன்றுமேயில்லை. அவர் அணிந்திருந்த காவியை நானும் அணிந்திருந்ததுதான் ஒரே பொருத்தம்’.

‘பிறகெப்படி இவ்வளவு தீர்மானமாக இதுதான் நடந்திருக்கும் என்கிறீர்கள்?’

அவர் சிரித்தார். ‘அவருடன் இருந்தவர்களை கவனித்தாயா? ஒருவர் கணக்காளர். ஒருவர் அரசியல்வாதி. இன்னொருவர் அவரது உதவியாளர். நான்காவது நபர் யாரென்று எனக்குத் தெரியவில்லை. ஐந்தாவது நபர் இந்த ஊர்க்காரன். அவருக்கு இங்கே வேண்டிய சகாயம் செய்து தரச் சித்தமாக இருப்பவன். அவன்தான் நம்மை காரில் அழைத்து வந்து விட்டது’.

‘சரி. அதனாலென்ன?’

‘ஒரு சன்னியாசிக்கு இத்தனை வல்லுநர்கள் நண்பர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை விமல். இது ஒரு ராஜனின் தேவைகள். ஒரு ராஜசபைக்கான தேவைகள்’.

‘இருந்துவிட்டுப் போகட்டுமே? அவர் ஒரு ராஜரிஷியாக இருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை?’

‘எனக்கென்ன பிரச்னை? அவருக்குத்தான் பிரச்னை. எந்த ராஜரிஷியும் ஞானமடைந்ததில்லை’ என்று அவர் சொன்னார். ‘அது ஒரு பதவி. அது ஒரு அந்தஸ்து. அவ்வளவுதான்’.

எனக்கு வெகுநேரம் பேச்சற்றுப் போய்விட்டது. அந்த சன்னியாசியையே நினைத்துக்கொண்டிருந்தேன். எத்தனை புகழ், எவ்வளவு செல்வம், எப்பேர்ப்பட்ட செல்வாக்கு!

‘ஆனால் விமல், எனக்கென்னவோ அவர் உதறிவிட்டு வந்திருப்பதுபோலத் தோன்றவில்லை. நான்கடி முன்னால் தாண்டுவதற்கு ஆறடி பின்னால் வந்துதானே ஓடிப் பாய முடியும்?’

‘ஓ. சரிதான்’.

‘அவர் நினைப்பது நடந்துவிடும். ஆனால் அவரது துறவின் அருந்தூய்மை அர்த்தமிழப்பது உறுதி’.

குருநாதர் கற்பு என்னும் கருத்துருவாக்கத்தைத் தொட்டுக்காட்டினார். அதன் புனிதம். அதன் மகத்துவம். அதன் முக்கியத்துவம். அதன் தீவிரம். காலம் காலமாகச் சொற்களால் அலங்கரிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் கருத்துருவாக்கம்.

‘ஆம் குருஜி. கடவுளைப் போலவே மிகக் கவனமாக அலங்கரிக்கப்பட்டது அது’ என்று சொன்னேன்.

‘சிலவற்றை அலங்கரித்து அந்த அந்தஸ்துக்குக் கொண்டு வரலாம். சிலவற்றைத் தன்னியல்புடனேயே அந்தப் பீடத்தில் வைத்துவிட முடியும். துறவு அதிலொன்று’.

‘அவர் என்ன ஆவார் என்று நினைக்கிறீர்கள்?’

குருநாதர் சிறிது நேரம் யோசித்துவிட்டு, ‘ஒன்று தற்கொலை செய்துகொள்வார். அல்லது என்றேனும் ஒரு கொலை வழக்கில் சிக்குவார்’ என்று சொன்னார்.

அன்றிரவு நான் முடிவு செய்தேன். என் சன்னியாசத்தின் நோக்கம், என் சுதந்தரம் மட்டுமே. சௌகரியங்கள் அல்ல. சந்தோஷங்கள் அல்ல. லாபங்களோ இன்னபிறவோ அல்ல. வெறும் சுதந்திரம். அனைத்தையும் உள்ளடக்கிய, அனைத்தினின்றும் விலகி நிற்கிற பூரண சுதந்திரம். அதனால்தான் என்னால் ஒரு நிறுவனமாகாமல் நகர்ந்து நிற்க முடிந்தது. மகாராஷ்டிரத்தின் முன்னணி துணி வர்த்தகர் ஒருவர், ஒரு டிரஸ்ட் அமைத்து அதன் வழியாக இயங்கக்கூடிய அமைப்பாக ஒன்றை ஆரம்பித்துத் தருவதாகச் சொன்னார். புனேவுக்கு அருகில் இருபது ஏக்கர் நிலம் அவருக்குச் சொந்தமாக இருந்தது. அதை எனக்குத் தந்துவிடத் தயாராக இருந்தார். அழகிய, பெரியதொரு ஆசிரமம். தியான மண்டபம். பிரசங்கக் கூடம். உணவு விடுதி. வந்து போகிறவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள்.

‘நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம் குருஜி. அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன். உங்கள் சேவையை நீங்கள் இங்கே இருந்து தொடர்ந்தால் போதும்’ என்று சொன்னார்.

நான் அன்போடு அதை மறுத்தேன். ‘எனக்கு நான் இருக்கும் சிறிய இடம் போதும். அந்த இடம் இப்போதும் அதன் உரிமையாளர் பெயரில்தான் இருக்கிறது. அவர் காலி பண்ணச் சொன்னால் நான் வேறிடம் பார்த்துக்கொண்டு போகவேண்டியதுதான். ஆனால் எனக்கு அதுதான் பிடித்திருக்கிறது’ என்று சொன்னேன்.

இன்னொரு சமயம் ஒரு வெளிநாட்டு பக்தர் என்னுடைய ஆசிரமத்துக்குப் பத்தாயிரம் டாலர் நிதி கொடுக்க வந்தார். அடக்கடவுளே! அதை நான் எந்த வங்கிக்கணக்கில் போடுவேன்? அதெல்லாம் வேண்டாமப்பா என்று சொல்லிவிட்டேன்.

பக்தருக்குத் தீராத ஆச்சரியம். வங்கிக்கணக்கு இல்லையா? அதெப்படி முடியும் என்று திரும்பத் திரும்பக் கேட்டார். அவர் ஊருக்குத் திரும்பிப் போவதற்கு முன்னால் ஆசிரமக் கட்டடத்தில் செய்யவேண்டியிருந்த சில மராமத்துப் பணிகளைச் செய்து கொடுத்து, வெள்ளையடித்துக் கொடுத்துவிட்டுப் போகச் சொன்னேன். வெளேரென்ற எனது பிரசங்க அரங்கமும் அதன் பளிங்குத் தரையும் பரிசுத்தமும் அவரால் உருவானவைதான்.

ஆறு வருடங்களுக்கு முன்னால் உஜ்ஜயினியில் ஒரு சன்னியாசிகள் சம்மேளனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாடு முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான சன்னியாசிகள் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகிக்க என்னைக் கூப்பிட்டார்கள். நான் மறுத்தேன். ‘ஒரு பார்வையாளனாக வந்து போகிறேன். தலைமையெல்லாம் எனக்குச் சரிப்படாது’ என்று சொன்னேன்.

நான் அந்தக் கூட்டத்தில் பேசக்கூட வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். வெறும் பார்வையாளன். போதுமே? ஆனால் பார்வையாளர்களாக வந்திருந்த பக்தர்கள் கூட்டம் பெரும்பாலும் என்னைச் சுற்றியே குவிந்திருந்தது. நான் அதை உள்ளூர மிகவும் ரசித்தேன். என்ன பெரிய மேடை? என்ன பெரிய கூட்டம்? அப்போது வெளியாகியிருந்த ஒரு அமிதாப் பச்சன் திரைப்படத்தை முன்வைத்து நான் அவர்களுக்கு நிரந்தரமில்லாத வாழ்வில் சந்தோஷமாக இருப்பது எப்படி என்று சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தேன்.

எத்தனை அரசியல்வாதிகள், எவ்வளவு பெரிய மனிதர்கள், எப்பேர்ப்பட்ட அரிய வாய்ப்புகள்! எனது அமைப்பை ஒரு மாபெரும் நிறுவனமாக்க எனக்குக் கிடைத்தது போன்ற வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் வேறெந்த சன்னியாசிக்கும் கிடைத்திருக்காது. ஆனால் இன்றுவரை என் அமைப்புக்கு நான் ஒரு பெயரைக்கூடத் தந்ததில்லை. அமைப்பு என்ற ஒன்றே இல்லாத ஏற்பாட்டைத்தான் கவனமாக அமைத்து வைத்திருந்தேன்.

குருநாதரைத்தான் அப்போது நினைத்துக்கொண்டேன். இயற்பெயரே இல்லாமல் ஒரு மனிதன் வாழ்ந்து முடித்துவிட்டுப் போக முடியுமென்றால் இதெல்லாம் என்ன பெரிய விஷயம்!

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com