97. எட்டணா

பக்தனான சூட்டில் சிவனே வந்து அருள் பாலித்திருக்கிறான் என்றால், இனி அவன் சிவனுக்கு ஆயுள் சந்தா விசுவாசியல்லவா? சிவனையும் துறந்தால் அல்லவா சன்னியாசி?

நதியைப் பார்த்தபடி நெடுநேரம் நாங்கள் பேசாது அமர்ந்திருந்தோம். பேச என்ன இருக்கிறது? பிரதீப் விட்டுவிட்டுப் போனான். அவ்வளவுதானே? சன்னியாசிகளுக்கு வருத்தமில்லை என்று நாங்கள் மூவரும் சொல்லிக்கொண்டோம். ஆனால் அகல் விளக்கில் இருந்து ஒளி கிளம்பிச் சென்று அவன் நெற்றிப் பொட்டில் படர்ந்து மறைந்ததாக நான் சொன்னது அவர்கள் அனைவருக்குமே மிகுந்த அதிர்ச்சியளித்தது. குருநாதர்கூட ‘உண்மையாகவா?’ என்று கேட்டார்.

‘ஆம் குருஜி. நான் பார்த்தேன். ஆனால் துரதிருஷ்டவசமாக அவன் அதைப் பார்க்கவில்லை. அவன் கண்ணை மூடி தியானத்தில் இருந்தான். ஆனால் கண்ணை விழித்ததும் தனக்கு தீட்சை கிடைத்துவிட்டதாகச் சொன்னான்’.

‘அதைப் பார்த்தபோது உனக்கு என்ன தோன்றியது?’

‘நெருப்பு ஒரு பறவை என்று நினைத்தேன்’.

‘நீ அந்த சிவனை நினைக்கவில்லையா?’

‘மன்னிக்க வேண்டும் குருஜி. நான் ஆத்திகனாகவே இருந்தாலும் சிவனை நினைத்திருக்க மாட்டேன். நித்யகல்யாணப் பெருமாளை வேண்டுமானால் நினைத்திருப்பேன்’ என்று சொன்னேன்.

அவர் சிரித்தார். ‘விமல், அவனுக்கு ஞானம் கிட்டியதா, தீட்சை கிட்டியதா என்பதைக் காட்டிலும் நீ எனக்கு வியப்பளிக்கிறாய். கண் முன்னால் ஒளி நகர்ந்து சென்றதைப் பார்த்தபின் இந்நேரம் நீ அனைத்தையும் விட்டு ஓடியிருக்க வேண்டும். நீ அப்படிச் செய்யாததே எனக்கு நீ சொல்வது உண்மையாக இருக்காதோ என்று நினைக்க வைக்கிறது’.

நான் ஒன்றும் சொல்லவில்லை. ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. எனக்கு அப்போது நான்கு அல்லது ஐந்து வயது இருக்கலாம். எங்கள் வீதிக்கு அன்று ஒருவன் வந்தான். அவனை நாங்கள் அதற்குமுன் பார்த்ததில்லை. அவனது ஒரு கையில் பெரியதொரு மயிலிறகு விசிறி இருந்தது. மறு கையில் உடுக்கையோ அல்லது அதைப் போன்ற வேறெதோ ஒரு வாத்தியம் வைத்திருந்தான். அவன் தோளில் ஒரு பை தொங்கிக்கொண்டிருந்த நினைவு. தாடி மீசை நினைவிருக்கிறது. ஒரு தலைப்பாகை கட்டியிருந்தான். அது நினைவிருக்கிறது. அந்தத் தலைப்பாகைத் துணி நீல நிறத்தில் இருந்ததுகூட மனத்தில் அப்படியே பதிந்திருக்கிறது.

எங்கள் வீட்டு வாசலுக்கு வந்து நின்று அவன் உடுக்கையை அடிக்க ஆரம்பித்தான். ‘விஜய், யாரோ பிச்சைக்காரன் போலருக்கு. நான் இங்க வேலையா இருக்கேன். வந்து ஒரு பிடி அரிசி எடுத்துண்டு போ’ என்று அம்மா சமையல் அறையில் இருந்து குரல் கொடுத்தாள். அண்ணா இரு கைகளிலும் அரிசி அள்ளிக்கொண்டு வாசலுக்கு வந்தான். அந்த மனிதன் உடுக்கை அடிப்பதை நிறுத்திவிட்டு, ‘அரிசி வேண்டாம்; காசு கொடு’ என்று கேட்டான்.

அண்ணா மீண்டும் சமையலறைக்குச் சென்று அம்மாவிடம் அவன் சொன்னதைச் சொல்லி, காசு கேட்டான். அம்மா அவனிடம் நாலணாவைக் கொடுத்து அனுப்பினாள். வெளியே வந்த விஜய், அந்த மனிதனின் கையில் நாலணாவை வைத்தான். ‘எட்டணா கொண்டா’ என்று அவன் சொன்னான்.

இம்முறை அம்மாவே வெளியே வந்துவிட்டாள். ‘என்னப்பா பிரச்னை?’ என்று கேட்டாள்.

‘எட்டணா வேணுமாம்’ என்று அண்ணா சொன்னான். அம்மா அவனைச் சற்று வினோதமாகப் பார்த்தாள். என்ன நினைத்தாளோ. தானே உள்ளே சென்று எட்டணாவைத் தேடினாள். ஏனோ அவளுக்கு அப்போது எட்டணாக் காசு கிடைக்கவில்லை. ஒரு பழைய ஐந்து ரூபாய் நோட்டு இருந்தது. அதை எடுத்து வந்து அவனிடமே, ‘எட்டணா சில்றை இல்லே. நீ பாக்கி குடு’ என்று சொல்லிவிட்டு ஐந்து ரூபாய்த் தாளை நீட்டினாள். நோட்டை வாங்கியவன் இப்படியும் அப்படியுமாக அதைத் திருப்பிப் பார்த்தான். அம்மாவைப் பார்த்து சிரித்தான். பிறகு பணத்தை உள்ளங்கையிய்விட்ட்ல் வைத்து மூடினான்.

அவன் மீண்டும் கையைத் திறந்தபோது அதில் ஒரு எட்டணாக் காசு இருந்தது. ஐந்து ரூபாய்த் தாள் எங்கே போனதென்றே தெரியவில்லை. எனக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது. இது எப்படி எப்படி என்று. அவன் அந்த எட்டணாவை அம்மாவிடம் நீட்டினான்.

‘என்ன?’ என்று அம்மா கேட்டாள்.

‘எட்டணா இல்லேன்னு சொன்னிங்களே. இந்தாங்க’.

‘உன்னைத்தான் எட்டணா எடுத்துக்க சொன்னேன். பாக்கி நாலரை ரூபாவைக் கொடு’ என்று அம்மா கேட்டாள்.

அவன் மீண்டும் சிரித்தான். ‘பணம் வேணுமா?’ என்று கேட்டான்.

‘இதென்ன வம்பா போச்சு? எனக்கு வேலை இருக்குப்பா. எட்டணா எடுத்துண்டு மிச்சத்தக் குடு’ என்று அம்மா சொன்னாள்.

‘குடுத்துத்தான் தீரணுமா?’ என்று அவன் மீண்டும் கேட்டான். இப்போது அவனது விரித்த உள்ளங்கையின் நடுவே இருந்த எட்டணா மெல்ல நகர்ந்து அவனது மணிக்கட்டு அருகே வந்தது. எனக்கு ஒரே பயமாகிவிட்டது. ‘அம்மா, காசு நகர்றது’ என்று கத்தினேன். அவன் சிரித்தபடியே நின்றிருந்தான். அந்த எட்டணா மேலும் நகர்ந்து அவனது முழங்கை மடிப்பு வரை போனது. அம்மாவும் அண்ணாவும் அதையே பார்த்துக்கொண்டிருக்க, ‘சொல்லும்மா! காச குடுத்துத்தான் தீரணுமா?’ என்று அவன் மீண்டும் கேட்டான்.

அம்மா சில விநாடிகள் அவனை எரிச்சலுடன் பார்த்தாள். ‘சரி நீயே வெச்சிக்கோ’ என்று சொல்லிவிட்டுச் சட்டென்று உள்ளே போய்விட்டாள். அவன் அப்போதும் சிரித்தான். முழங்கை மடிப்பு வரை போன அந்த எட்டணாக்காசு அப்படியே அவன் சட்டை மடிப்புக்குள் ஏறி மறைந்துகொண்டது. அவன் போய்விட்டான்.

எனக்குத்தான் அதிர்ச்சி தாங்கவேயில்லை. ‘எப்படிடா விஜய்? காசு என்னமா நகர்ந்தது பாத்தியா?’ என்று கேட்டேன். விஜய் ஒன்றும் சொல்லவில்லை. இரண்டொரு நாள் கழித்து தற்செயலாக அந்தச் சம்பவம் பற்றி நான் மீண்டும் பேச்செடுத்தபோது, ‘விட்டுத்தொலை. பணம் பிடுங்க இதெல்லாம் ஒரு வழி’ என்று அம்மா சொன்னாள். சில வருடங்கள் கழித்து என்றோ ஒரு சமயம் நான் விஜயிடம் பேசிக்கொண்டிருந்தபோது அந்தச் சம்பவத்தை நினைவுகூர நேர்ந்தது. அப்போது அவன், ‘பெரிய விஷயமில்லை விமல். இதெல்லாம் சின்ன மேஜிக்தான்’ என்று சொன்னான்.

‘நீ செய்வியா?’

‘முயற்சி பண்ணா முடியும்னுதான் நினைக்கறேன்’.

‘அதெல்லாம் சும்மா. எங்கே பண்ணிக் காட்டு பாப்போம்?’ என்று விடாப்பிடியாகச் சொன்னேன்.

அவன் காசை நகர்த்திக் காட்டவில்லை. நாங்கள் அப்போது கோயிலின் முன் மண்டபத்தில் அமர்ந்திருந்தோம். தூண் ஓரம் ஒரு கட்டெறும்பு போய்க்கொண்டிருந்தது. அதைச் சுட்டிக்காட்டி, ‘அதை இப்போ என்கிட்டே வரவெச்சிக் காட்டட்டுமா?’ என்று கேட்டான்.

நான் அந்த எறும்பைப் பார்த்தேன். அது விஜய் இருந்த இடத்துக்கு நேரெதிர்ப் பக்கம் போய்க்கொண்டிருந்தது. அவனிடம் வர வேண்டுமானால் நின்று திரும்பி வர வேண்டும். ‘சரி, பண்ணு. பண்ணிக்காட்டு’ என்று சொன்னேன்.

விஜய் அந்த எறும்பைச் சில விநாடிகள் உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தான். எங்கோ விரைந்து சென்றுகொண்டிருந்த எறும்பு ஏதோ ஒரு கணத்தில் நின்றது. ஒரு வட்டமடிப்பது போலத் திரும்பி வர ஆரம்பித்தது. நான் பார்த்துக்கொண்டிருந்தபோதே அது விஜய்யின் காலருகே வந்தது.

நான் சட்டென்று சொன்னேன், ‘நான் நம்பமாட்டேன். அது தன்னிஷ்டத்துக்குத்தான் போயிருக்கு. உன்கிட்டே வந்தது ஃப்ளூக்கு’.

‘அப்படியா? சரி இப்போ அது எம்மேல ஏறும் பார்’ என்று சொன்னான். மீண்டும் எறும்பை உற்றுப் பார்த்தான்.

எறும்பு இங்குமங்கும் அலைந்து எங்கு போவதென்று புரியாமல் சிறிது தவித்தது. பிறகு அவனது இடது காலின் மீது ஏறி, சரசரவென்று கழுத்தருகே வந்து நின்றது.

‘போதுமா?’ என்று விஜய் கேட்டான். இது உண்மையில் அன்றெனக்கு மிகுந்த அதிர்ச்சியும் வியப்பும் அளித்த சம்பவம். அண்ணாவைக் குறித்த என் அபிப்பிராயங்கள் ஒன்று திரளத் தொடங்கியிருந்த நேரத்தில் நடந்த சம்பவம் என்பதால் அவன் விட்டுச் சென்றபோது இதையும் சேர்த்தேதான் எண்ணிக்கொண்டேன்.

குருஜியிடம் இந்தச் சம்பவத்தைச் சொல்லி, ‘ஒரு எட்டணாக் காசும் எறும்பும் எப்படி நகர்ந்ததோ அப்படித்தான் அந்தச் சுடரும் நகர்ந்திருக்க வேண்டும்’ என்று சொன்னேன்.

‘அதுசரி. ஆனால் பிரதீப்புக்கு எந்த மேஜிக்கும் தெரியாதே’.

‘அதனாலென்ன? சிவலிங்கத்துக்குத் தெரிந்திருக்கும்’ என்று சொல்லிவிட்டு நான் எழுந்து சென்றேன். குருஜி என்னை விடவில்லை. ஊர் திரும்பும் வழியெல்லாம் திரும்பத் திரும்ப அதையேதான் கேட்டுக்கொண்டிருந்தார்.

‘ஒருவேளை கடவுள் உண்மையிலேயே இருக்கத்தான் செய்கிறாரோ?’

எனக்கு எரிச்சலாக இருந்தது. 'விடுங்கள் குருஜி. அவர் சௌக்கியமாக இருக்கட்டும். எனக்கு அவர் தேவையில்லை. தேவைப்பட்டால் கூப்பிட்டுக்கொள்கிறேன்' என்று சொல்லிவிட்டேன். ஆசிரமத்துக்குத் திரும்பி வழக்கமான வாழ்க்கையை ஆரம்பித்து ஒன்றிரண்டு நாள்களான பின்பு ஒரு நாள் குருவிடம் கேட்டேன். ‘குருஜி, அவனுக்கு ஏன் நீங்கள் இத்தனைக் காலமாக தீட்சை அளிக்காமல் இருந்தீர்கள்?’

அவர் சிறிதும் யோசிக்காமல் உடனே பதில் சொன்னார், ‘அவனுக்கு சன்னியாச மனம் இல்லை. அவன் எந்நாளும் ஒரு சன்னியாசியாக முடியாது’.

‘உண்மையாகவா?’

‘இல்லாவிட்டால் எப்படி அவன் ஒரு பக்தனாகியிருக்க முடியும்? பக்தனான சூட்டில் சிவனே வந்து அருள் பாலித்திருக்கிறான் என்றால், இனி அவன் சிவனுக்கு ஆயுள் சந்தா விசுவாசியல்லவா? சிவனையும் துறந்தால் அல்லவா சன்னியாசி?’

நான் புன்னகை செய்தேன். ‘ஐ லவ் யு குருஜி’ என்று சொன்னேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com