Enable Javscript for better performance
ஆசனம் 33. உந்தி பத்மாசனம்- Dinamani

சுடச்சுட

  

  அஷ்டாங்க யோகம்

  பிரத்யாகாரம்

  மன பாரங்கள்

  உலகப்புகழ் பெற்ற மருத்துவமனையின் ஐ.சி.யூ.வில் மயான அமைதி.

  விசும்பி விசும்பி அழும் ஒரு பெண்ணின் குரல் மட்டும் அந்த அமைதியைக் குலைத்துக்கொண்டிருந்தது. நோயாளியின் தாயார்தான் அது என்று பார்த்தாலே புரிந்துகொள்வார்கள். அழுகைச் சத்தங்களையே கேட்டுக் கேட்டு சலித்துப்போன டாக்டர்களும் நர்ஸ்களும் திரும்பிப் பார்க்காமல் நடந்துகொண்டிருந்தார்கள்.

  ரோல்ஸ்ராய்ஸ் காரில் வந்து இறங்கிய நோயாளியின் தந்தை சுபாஷை, மருத்துவமனையின் டீன் நேரில் வந்து அழைத்துச்சென்றார்.

  ஒண்ணும் பயப்பட வேண்டாம். ட்ரிப்ஸ் போய்ட்டு இருக்கு. ஸ்லீப்பிங் இன்ஜெக்ஷன் போட்டிருக்கோம். சீக்கிரம் எல்லாம் நார்மலாயிடும். சும்மா போய் எட்டிப் பார்த்துட்டு மட்டும் வந்துடுங்க. எல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம்.

  காதில் கேட்டுக்கொண்டே, கோட்டின் இடது பாக்கெட்டிலிருந்து, ஏற்கெனவே கையெழுத்து போட்டிருந்த ஒரு செக் லீஃப்பை எடுத்து இடது கையினாலேயே டீனிடம் நீட்டினார் சுபாஷ். டீன் அதைக் கையால்கூடத் தொடவில்லை. கண் அசைவிலேயே, பின்னால் வந்துகொண்டிருந்த ஒருவர் அதை வாங்கி மேனேஜரிடம் நீட்ட, அவர் அதை அக்கவுண்ட்ஸ் பெண்ணிடம் நீட்டினார். அவள் அதைப் பார்த்து மயக்கம் போட்டு விழாத அளவுக்கு, அதில் தொகை நிரப்பப்பட்டிருந்தது.

  ஸ்வேதாவுக்கு கொஞ்ச நாளாகவே உடல் நலம் சரியில்லை. செல்வச் செழிப்புமிக்க சுபாஷ் - சோனியா தம்பதிகளின் ஒரே செல்ல மகள். நகரின் மிகப் பிரபலமான பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறாள். அவளை பள்ளிக்கு அழைத்துச் சென்று வீட்டுக்கு அழைத்து வருவதற்கு மட்டுமே தனி கார், டிரைவருடன்.

  ஐ.சி.யூ.வில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டாள் ஸ்வேதா.

  டாக்டர்கள் அவள் தலையை ஸ்கேன் செய்தார்கள்.

  மருந்து மாத்திரை ஊசிகளை ஏற்றினார்கள். அதிலேயே பத்து தினங்கள் கழிந்தன. குணம் இல்லை!

  பின்னர், கழுத்துப் பகுதியைப் படம் பிடித்து தைராய்டு சிகிச்சை மேற்கொண்டார்கள். அதிலும் குணம் இல்லை!

  பின்னர் மார்பை படம் பிடித்தார்கள். இதயத்துக்குச் சிகிச்சை அளித்தார்கள். அதிலும் குணம் இல்லை!

  அடுத்து வயிற்றைப் படம் பிடித்து சிகிச்சை! அதிலும் குணம் இல்லை!

  அடிவயிற்றின் குடல் பகுதியை படம் பிடித்தார்கள். அதிலும் குணம் இல்லை.

  ரோஜாப்பூ நிறத்தில் இருந்த ஸ்வேதாவின் முகம் நீலக்கத்தரிக்காய் நிறத்துக்கு மாறிவிட்டது.

  ஒன்றரை மாதம் ஆகிவிட்டது.

  அவளின் பெற்றோரை வரவழைத்து டாக்டர் பேசினார்.

  எனக்கு என்னமோ பயமா இருக்கு டாக்டர். என் பொண்ணுக்கு எதாச்சும் ஆச்சுன்னா நான் உயிரோடயே இருக்கமாட்டேன் என்றாள் சோனியா.

  சுபாஷ் ஓரக் கண்ணால் மனைவியைப் பார்த்தார்.

  அப்படி சொல்லாதீங்க மேடம். உங்க பொண்ணை கட்டாயம் குணமாக்கிடுவோம். அது உறுதி. அவ்ளோ கேர் எடுத்து பார்த்துக்கிட்டிருக்கோம். இருந்தாலும்…

  பெற்றோர் இருவரும் டாக்டரையே பார்த்தனர்.

  உங்க பொண்ணு சைக்கலாஜிகலா அஃபெக்ட் ஆயிருப்பாளோன்னு நெனைக்கிறோம்.

  ஓ காட் என்றார் சுபாஷ்.

  இருக்காது. அவள பத்தி எனக்கு நல்லாத் தெரியும். அவளுக்கு அப்படி பாதிப்பு வர்றதுக்கு சான்ஸே இல்ல. அவள பார்த்துப் பார்த்து வளர்க்கறோம். அவளுக்கு இல்லேன்னு எதுவுமே இல்லாம வாங்கித் தர்றோமே என்றாள் சோனியா.

  எஸ். நீங்க சொல்றது எல்லாமே நிஜம்தான். எனக்கு நல்லாவே தெரியும். அவ பிரெய்ன்ல கோதுமை சைஸுக்கு ஒரு சின்ன கட்டி இருக்கற மாதிரி தெரியுது.

  டாக்டர்… இருவருமே அலறினர்.

  உங்களுக்கு டாக்டர் நம்பூதிரி தெரியும்ல. வேர்ல்டு ஃபேமஸ் சைல்ட் சைக்கியாட்ரிஸ்ட். அவருதான் அதை கன்ஃபர்ம் பண்ணாரு. ரெண்டு நாளைக்கு முன்னாடி அவர் இங்க வந்தப்போ, உங்க பொண்ண அவர் பார்த்தார்…

  நாங்க இங்க செக் பண்ணப்போ அந்த கட்டிய சஸ்பெக்ட் பண்ணல. யூஷுவலா எல்லாருக்குமே அந்த இடத்துல கட்டி இருக்கற மாதிரிதான் இருக்கும். அந்த இடம், முக்கியமான மூளை நரம்புகள் சேர்ற ஜங்ஷன். உங்க பொண்ணுக்கு அந்த இடத்துல ஒரு சின்னதா வீக்கமா இருக்கலாம்னு நெனைக்கிறேன். அதுக்கு ஒரு மாசம் மருந்து குடுத்துப் பார்ப்போம். அதுலேய அது கரைஞ்சிடும். விளையாடும்போது எங்காவது இடிச்சிக்கிட்டிருப்பா. ஸோ, பயப்பட வேண்டாம்.

  டாக்டர் மாத்திரையால குணம் ஆகலேன்னா…

  ஏன் இப்படி பேசறீங்க. ஒரு டாக்டரா நாங்க எந்த வகையிலாவது பேஷன்ட்டை குணப்படுத்தத்தான் பார்ப்போம். நான் உங்க ஃபேமிலி டாக்டரும்கூட. கவலைப்படாதீங்க. நாங்க இருக்கோம். பாத்துக்கறோம்.

  *

  ஒரு மாதம் கழிந்தது.

  சுபாஷ் – சோனியா முன் உட்கார்ந்திருந்த டாக்டர் நம்பூதிரி, ஒரு மாசம் மருந்து குடுத்தும் கட்டி குணமாகல. அதனால, சின்னதா ஒரு ஆபரேஷன் பண்ணலாம்னு இருக்கோம் என்றார்.

  ஆபரேஷனா…

  ஆபரேஷன்னா நீங்க நெனைக்கிற மாதிரி பெரிய ஆபரேஷன் இல்ல. சின்னதா, ஒரு ஸ்பூனை வெச்சி சுரண்டி விட்டுடுவோம். அவ்ளோதான். அப்பறம் உங்க பொண்ணு நார்மலாயிடுவா.

  மூளையில பண்ணறது பெரிய ஆபரேஷன் இல்லையா?

  இது மூளைக்கு மேல பண்ற ஆபரேஷன், ரொம்ப மைனர். ஆபரேஷனுக்கு பின்னாடி ரெண்டு நாள் பெட்ரெஸ்ட்ல இருந்தா போதும். டிஸ்சார்ஜ் பண்ணி அவளை நீங்க நேரா பீச்சுக்குகூட கூட்டிட்டு போலாம். ஓகே…

  *

  ஆபரேஷன் முடிந்தது.

  ஸ்வேதா மிகவும் தளர்ந்துபோய்க் கிடந்தாள்.

  நாங்க இவள வீட்டுக்கு கொண்டுபோய் ட்ரீட்மென்ட்ட கன்டினியூ பண்றோம் டாக்டர்…

  எதுவும் நம்ம கையில இல்ல. நமக்கு மேல ஒருத்தன் இருக்கான். நாங்களும் எவ்வளவோ போராடினோம். பட் ஒன் திங். அவளுக்கு நல்ல ரெஸ்ட் தேவைப்படுது. வீட்டுக்கு கூட்டிட்டு போய் நல்லா பாத்துக்கங்க. ஊட்டிலதான் உங்களுக்கு கெஸ்ட் அவுஸ் இருக்கே. அங்கபோய் ஒரு மாசம் தங்கிட்டு வாங்க. நல்லாயிடுவா. அவளுக்கு ஒரு பிரச்னையும் இல்ல. மருந்து மாத்திரைகளை கன்டினியூ பண்ணுங்க. அடுத்த மாசம் நான் ஊட்டி வருவேன். அப்ப வந்து பாக்கறேன்.

  வீட்டுக்குக் கொண்டு வரப்பட்ட ஸ்வேதாவை, அவளது பள்ளி வகுப்பு நண்பர்களும், பள்ளியில் இருந்து வகுப்பாசிரியர்களும் வந்து பார்த்துச் சென்றனர்.

  அப்போதுதான் ஸ்வேதாவின் கண்கள் யாரையோ தேடின.

  யாரைத் தேடற?

  யோகா மிஸ்…

  ஓ, அவங்களா? நாளைக்கு வருவாங்க…

  ஸ்வேதா எப்பவுமே அப்பா செல்லம். அவர் மீது காலைப் போட்டுத்தான் தூங்குவாள். அன்றும் அப்படித்தான்.

  இரவு மூன்று மணி.

  ஸ்வேதாவின் குரல் கேட்டு சுபாஷ் கண் விழித்து எழுந்து பார்த்தார். ஸ்வேதா யாரிடமோ தூக்கத்தில் பேசுவதுபோல் இருந்தது.

  யோகா மிஸ், யோகா மிஸ்… எனக்கு வீட்டுக்கு போகவே பிடிக்கலை மிஸ். காலைல எழுந்திருச்சதுமே டியூஷன் அனுப்பிடறாங்க. வந்ததும் வராததுமா ஸ்கூல்ல கொண்டுபோய் விடறாங்க. சாயந்தரம் வீட்டுக்கு வந்ததும் ஹிந்தி கிளாஸ். அப்பறம் கீபோர்டு. அப்பறம் ராத்திரி எட்டு மணி வரை டான்ஸ் கிளாஸ். இதெல்லாம் முடிச்சப்பறம் ஹோம் ஒர்க்...

  அருகில் படுத்திருந்த மனைவியை எழுப்பினார் சுபாஷ்.

  பதறி எழுந்த சோனியா, மகள் தூக்கத்தில் புலம்புவதைப் பார்த்து, சுபாஷையும் பார்த்தாள்.

  அவளை அமைதிப் படுத்திவிட்டு, தான் பதிவு செய்ததை அவளுக்குப் போட்டுக் காட்டினார் சுபாஷ்.

  அதைக் கூர்ந்து கேட்ட சோனியா, கணவனை குற்ற உணர்ச்சியோடு பார்த்தாள்.

  வீட்டுக்கு எல்லா டீச்சர்ஸும் வந்தாங்க. யோகா மிஸ் மட்டும் வரலை. ஏன் வரலேன்னு தெரியுதா? ஸ்வேதா சின்னப்பொண்ணு. எல்லாத்தையும் கத்துக்க முடியாம கஷ்டப்படறா. எல்லாத்தையும் அவ தலையில ஏத்தாதீங்கன்னு கொஞ்சம் ஹார்ஷா சொல்லிட்டு வந்தேன்னு சொன்னியே.

  ஆமாங்க.

  உடம்புக்கும் மூளைக்கும் ஓரளவுக்குதான் வேலை கொடுக்கணும். ஒரேயடியா பாரத்தை ஏத்தினா தாங்குமா. அதனாலதான் அவள் அதை யோகா மிஸ் கிட்ட சொல்லியிருக்கா. குழந்தை மேல அந்த யோகா மிஸ் பரிதாபப்பட்டப்போ நீ எவ்ளோ டென்ஷன் ஆனே. அத்தனை பாரங்களும் சேர்ந்துதான் குழந்தையோட உடலையும் மனசையும் பாதிச்சிருக்கு. எல்லாத்துக்கும் காரணம் நாமதான். பாவம் ஸ்வேதா. இனிமே அவ எந்த கிளாஸுக்கும் போக வேணாம். யோகா கிளாஸுக்கும் மட்டும் போகட்டும். அப்பறமா அவளுக்கு பிடிச்ச பாட்டு கிளாஸுக்கு வேணா அனுப்பு, போதும். அதுக்கு முன்னாடி யோகா மிஸ்ஸை பார்த்து சமாதானம் பேசி வீட்டுக்கு கூட்டிட்டு வா.

  மறுநாள் அதிகாலை, யோகா மிஸ் வர, படுக்கையில் இருந்து எழுத்மு ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள் ஸ்வேதா. ஓவென்று குலுங்கிக் குலுங்கி அழுதாள். அதைப் பார்த்த சுபாஷ், சோனியா கண்களில் கண்ணீர்.

  இனிமே, காலைல உனக்கு யோகா கிளாஸ். சாயங்காலமா பாட்டு கிளாஸ் என்றாள் சோனியா.

  ஹே என்றபடி தனது இரண்டு கைகளையும் விரித்தபடி ஓடிவந்து சோனியாவைக் கட்டிக்கொண்டாள் ஸ்வேதா. சுபாஷும் வந்து அவளைக் கட்டிக்கொண்டார்.

  ***

  உந்தி பத்மாசனம்

  பெயர்க் காரணம்

  பத்மாசனத்தில் அமர்ந்தவாறு உடலை உந்தி உந்தித் தூக்குவதால் உந்திப் பத்மாசனம் ஆயிற்று.

     செய்முறை

   

  • பத்மாசனத்தில் அமர்ந்து இரண்டு உள்ளங்கைகளையும் தரையில் ஊன்றவும். அப்படியே உடலை உந்தித் தூக்கி நிறுத்தவும். பின்னர் கீழே உட்காரவும். மீண்டும் தூக்கவும். இப்படியே பலமுறை செய்யவும்.

  உந்தி பத்மாசன கிரியை

  • உந்தி பத்மாசனத்தில் இரண்டு கைகளுக்கும் இடையே உடலைத் தூக்கி நிறுத்தி, ஊஞ்சல் ஆடுவதுபோல் முன்னும் பின்னும் அசைக்கவும். பின்னர் கீழே உட்காரவும்.

  • அடுத்து, உந்தி பத்மாசனத்தில் இருந்தபடியே புட்டத்தை பொத் பொத்தென்று விரிப்பின் மீது இடித்து இடித்து தூக்கவும். பின்னர் கீழே உட்காரவும்.

  பலன்கள்

  • மூலநோய் குணமாகும். மீண்டும் வராது.

  • கைகள் மற்றும் புஜங்களுக்கு நல்ல பயிற்சி ஏற்பட்டு அவை உறுதி அடைகின்றன.

  • உள்ளங்கைகள் தரையில் நன்றாக அழுந்திப் படிவதால், அக்குபிரஷர் என்ற வைத்தியம் கிடைத்து, ஆரோக்கியம் பெறுகிறது.


  ***

  காணொளி - மரியா, ஸ்லோவோக்கியா
  புகைப்படம் - பாலாஜி

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai