Enable Javscript for better performance
ஆசனம் 43. வியாக்ராசனம் (புலி ஆசனம்)- Dinamani

சுடச்சுட

  

  அஷ்டாங்க யோகம்

  இயமம் (கட்டுப்பாடு)

  யோக நீதிக் கதைகள்

  ரயிலுக்கு நேரம் இருக்கு

  மகளிர் விடுதியில் இரவு உணவு வேளை.

  வாராளுக பாருடீ. இவளுக்கு அவதான் புருஷன். அவளுக்கு இவதான் புருஷன் என்று ரேணுகா பேசுவதை அனிதாவும் ஸ்ரேயாவும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

  அவர்கள் தங்களைப் பற்றி யார் என்ன பேசினாலும் பொருட்படுத்துவதில்லை.  

  புருஷன் பொண்டாட்டி மாதிரியே போறாளுக பாருடீ என்று மறுபடியும் சீண்டினாள் ரேணுகா.

  ஆனால் பொறுமைக்கும் எல்லை உண்டு.

  ஆமான்டி. நாங்க புருஷன் பொண்டாட்டி மாதிரிதான் இருக்கோம். உன்னைக் கூப்பிடலையே என்றாள் அனிதா.

  ச்சீ, எனக்கெதுக்குடீ இந்த வாழ்க்கை. ரொம்ப ஓவரா ஒட்டிட்டு அலையறீங்களே, அதுக்குச் சொன்னேன். கொஞ்சம் “கேப்பு” விட்டுட்டு நடங்க.

  ஒட்டிட்டு நடக்கறதுக்கே இப்படிச் சொல்பியே, மெஸ்ல வந்து பாரு. நாங்க ரெண்டு பேரும் ஒரே தட்டுல சாப்பிடப் போறோம் என்றாள் அனிதா.

  ஒரே பெட்டுலயே படுத்துக்கறீங்க. அதையே பாத்தாச்சு, இது என்ன? ம்ஹும், எங்க போய் முடியப் போகுதோ?

  வேணும்னா நீயும் வந்து கூடப் படுத்துக்கோ என்றாள் ஸ்ரேயா.

  ச்சீய்… பொண்ணுங்களா நீங்க…

  ஏய் லூசுங்களா, அவங்க ஒண்ணாவே குளிக்கற அளவுக்குப் போயிட்டாங்க. நாளைக்கு ஒரே ஆளையேகூட கல்யாணம் பண்ணிப்பாங்க. அவங்க விஷயத்துல நீங்க
  எதுக்குடி தலையிடறீங்க என்று சொல்லிக்கொண்டே போனாள் கிரைண்டர் பொன்னம்மா.

  பொல்லாதவடி இந்தப் பொன்னம்மா! இவ வாயிலயா விழுந்தீங்க? லேசுல விடமாட்டளே. கிரைண்டர் ஓஞ்சாலும் இவ ஓயமாட்டா. உங்க மேட்டரை ஊரெல்லாம்
  போயி அரைச்சிக் கொட்டிடுவாளே என்றாள் இன்னொருத்தி.

  எவ என்ன சொன்னா எங்களுக்கு என்னடி. இவ சொல்றத மாதிரி, நாங்க ஒரே புருஷனைக்கூட கட்டிக்கிட்டு ஒத்துமையா இருப்போம். வாழப்போறது நாங்க.
  வெச்சிக்கப்போறது புருஷன். இவங்களுக்கு ஏன்டி பத்திக்கிட்டு வருது என்றாள் அனிதா.

  அனிதாவும் ஸ்ரேயாவும் தெரேஸா மகளிர் விடுதியின் இணைபிரியா தோழிகள். ஒன்றாகவே படித்து, ஒன்றாகவே வேலைக்குச் சேர்ந்து, ஒன்றாகவே தங்கியிருப்பவர்கள்.

  இந்தக் கணத்தை மட்டும் இனிமையாகக் கழியுங்கள் என்ற தத்துவத்தின்படி இணைபிரியா தோழிகளாக வாழும் ஜோடிகள்.

  இருக்கும் வரை நாங்க ஒத்துமையா இருப்போம். இல்லேன்னா செத்துடுவோம் என்று மற்றவர்களுக்குச் சொல்லிக்கொண்டே போனார்கள்.

  எல்லா விஷயத்திலும் ஒற்றுமையாக இருப்பவர்கள் அனிதாவும் ஸ்ரேயாவும். ஆனால், ஆண்டவன் எங்கேனும் ஓரிடத்தில் மட்டும் வேறுபாடு வைக்காமலா போய்விடுவான். இருவரையும் தனித்தனிப் பிறவிகளாகப் படைத்ததற்கு அர்த்தமில்லாமல் போய்விடுமே!

  கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது!

  இது கல்லடியா? இல்லை கண்ணடியா?

  தீபாவளிக்கு மூன்று நாள் சேர்ந்தார்போல் விடுமுறை.

  நாங்க ஊருக்கு வரல. ரெண்டு பேரும் ஏற்காடுக்கு டூர் போறோம். எங்களை யாரும் தொந்தரவு செய்யாதீங்க என்று அவரவர் வீடுகளுக்கு ஃபோன் செய்து சொல்லிவிட்டார்கள் அனிதாவும் ஸ்ரேயாவும்.

  டிக்கெட் ரிசர்வ் செய்தாகிவிட்டது.

  தீபாவளி விடுமுறைக்காக, சென்னையே புலம் பெயர்வதுபோல் மக்கள் வெள்ளம், எழும்பூருக்கும் சென்ட்ரலுக்குமாக அலைபாய்ந்து கொண்டிருந்தது.

  அது மாலை வேளை -

  தீபாவளி தொடர் விடுப்பைக் கொண்டாட, மக்கள் சொந்த ஊருக்கு சிட்டாய்ப் பறக்கும் சீசன் மாலைப் பொழுது.

  போக்குவரத்து நெரிசலில் ஆட்டோக்கள் மாட்டிக்கொண்டு எந்தப் பக்கமும் திரும்ப முடியாமல் திக்குமுக்காடின. அவற்றில் ஒரு ஆட்டோவில், சீக்கிரம் போங்க என்று கத்திக்கொண்டிருந்தார்கள் அனிதாவும் ஸ்ரேயாவும்.

  இன்னும் கால் மணி நேரம்தான் இருக்கு. டிரெய்ன் கிளம்பிடும் என்று பரிதவித்தாள் அனிதா.

  அதுக்கு நான் என்னம்மா பண்ண முடியும். டிராஃபிக் ஜாம். நான் இன்னிக்கு நேத்தா பாக்கறேன். எல்லா வருஷமும் இப்படித்தான். கொஞ்சம் பொறுமையா இருங்க, போயிடலாம் என்று ஆறுதல் சொன்ன ஆட்டோக்காரர், கிடைத்த சந்துபொந்துகளில் ஆட்டோவை ஓட்டி வந்து அவர்களை சென்ட்ரலில் இறக்கிவிட்டார்.

  ‘பயணிகளின் கனிவான கவனத்திற்கு, ஈரோடு வரை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் எட்டாவது பிளாட்ஃபாரத்திலிருந்து புறப்படும்’
  அறிவிப்பை கேட்டு இருவரும் பரபரப்புடன் விழுந்தடித்துக்கொண்டு பிளாட்ஃபாரத்துக்கு ஓடினார்கள். அனிதா அளவுக்கு ஸ்ரேயாவால் ஓட முடியவில்லை!

  காடுகளில், மரம் செடி கொடிகளைக்கூட விலக்கிக்கொண்டு ஓடிவிடலாம். ஆனால், பிளாட்ஃபாரத்தில் மரம்போல் நின்று நகர மறுக்கும் மனிதர்களை விலக்கிக்கொண்டு ஓடுவது சுலபமில்லையே…

  இருவரும் ஒரே எடைதான். ஆனால், அனிதா முதுகுப் பையோடு புகுந்து புகுந்து ஓடிக்கொண்டிருந்தாள். ஸ்ரேயாவோ, சூட்கேஸுடன் விழுந்தடித்து ஓடிக்கொண்டிருந்தாள். கூட்டத்தை விலக்கிக்கொண்டு அனிதாவைப்போல் அவளால் ஓட முடியவில்லை.

  அனிதா, ஓடினாள் ஓடினாள் ஓடிக்கொண்டே இருந்தாள்.

  ஸ்ரேயா, துரத்தினாள் துரத்தினாள் துரத்திக்கொண்டே இருந்தாள்.

  ஏற்காடு எக்ஸ்பிரஸ் மலைப்பாம்புபோல் நகர ஆரம்பித்துவிட்டது.

  ஒருவழியாக, அனிதா கம்பார்ட்மென்ட்டுக்கு வந்துவிட்டாள். சிறிது தூரத்தில் ஸ்ரேயா.

  நீ ஏறுடீ…

  அனிதா ஏறிவிட்டாள்.

  ஸ்ரேயா இன்னும் ஓடி வந்துகொண்டிருந்தாள்.

  ரயில் மெள்ள வேகம் எடுத்தது.

  நீ உள்ள போயிடு. நான் எப்படியாவது ஏறிடறேன்…

  பின்னால் ஏறியவர்கள் அவசரப்படுத்த பெட்டிக்குள் நகர்ந்த அனிதாவின் வயிறு கலங்கியது.

  ஸ்ரேயா ஏறியிருப்பாளா…

  வெளியே, இன்னும் ஸ்ரேயா ஓடி வந்துகொண்டிருந்தாள். கையில் இருந்த சூட்கேஸ் அவள் வேகத்தை மட்டுப்படுத்தியது. அன்ரிசர்வ்டு பெட்டியிலயாவது ஏறிவிட்டால் பரவாயில்லை என்று நினைத்து ஓடிவந்தாள்…

  ஆனால், ரயில் அவளுக்கு முதுகைக் காட்டி கண்ணை விட்டு மறைய, அதே நினைவில் அவள் மயங்கிக் கீழே சாய்ந்தாள்.

  தூக்கி ஆசுவாசப்படுத்தியவர்கள், அடுத்த ரயில்ல ஏறிப் போயிடும்மா என்றார்கள்.

  அதற்குள் அனிதா அழைப்பில் ஃபோன் அலறியது.

  நல்ல யோசனையாகத்தான் பட்டது ஸ்ரேயாவுக்கு. எப்படியாவது அடுத்த ரயில்ல வந்துடறேன். நீ ஈரோட்டுல வெயிட் பண்ணு என்றாள் ஸ்ரேயா.

  அடுத்த வண்டிக்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு காத்திருந்தாள். ரயிலும் வந்தது, பொங்கி வழியும் கூட்டத்துடன்.

  ஸ்ரேயாவுக்கு அதிர்ச்சியில் தலை சுற்றியது!

  ஸ்ரேயா அழுதபடியே, தான் ஹாஸ்டலுக்கு திரும்பிப் போவதாகச் சொன்னதும், அனிதா வழியில் அரக்கோணத்தில் இறங்கிவிட்டாள்.

  ஹாஸ்டலில் யாருக்கும் தெரியாமல் தனது அறைக்குப் போய் படுக்கையில் விழுந்தாள் ஸ்ரேயா.

  அரக்கோணத்திலிருந்து பஸ்ஸில் சென்னைக்கு வந்துகொண்டிருந்தாள் அனிதா. ஜாலியா டூர் போலாம் என்ற எண்ணத்தில் இருந்த அனிதாவுக்கு, நடந்த விஷயத்தில் கடும் கோவம். அது அப்படியே ஸ்ரேயா மேல் திரும்பியது. போனை எடுத்து, மனத்தில் இருந்த எல்லாவற்றையும் கொட்டிவிட்டு செல்லை ஆஃப் செய்தாள்.

  அனிதா பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ஸ்ரேயாவுக்கு ஈட்டியாகக் குத்தின. அறைக்குள் கிடந்த சூட்கேஸ் மீது அவள் பார்வை பட்டது.

  “…நான் அப்பவே ஒனக்கு படிச்சுப் படிச்சு சொன்னேன். நாம போறது டூர். சும்மா ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வரணும். போறது புது ஊரு. நம்மை யாருக்குமே அடையாளம் தெரியாது. மூணு நாள் தங்கப் போறோம். ரெண்டே செட் போதும்னு சொன்னேன் கேட்டியா? பகல்ல போட்டதை நைட்டுல வாஷ் பண்ணிப் போட்டுக்கலாம். மாத்தி மாத்தி போட்டுக்கலாம், அளவா எடுத்துட்டுவாடீன்னு சொன்னேன். டெய்லி ரெண்டு டிரெஸ் சேஞ்ச் பண்ணனும்னு, எல்லாத்தையும் சூட்கேஸ்ல திணிச்சி எடுத்துட்டு வந்தே. என்னை பாரு. ரெண்டே செட்டு, ஹேண்ட் பேக்குல திணிச்சி எடுத்து வந்துட்டேன். கூட்டத்துக்கு நடுவுல ஓடிப்போய் ரயில்ல ஏறிட்டேன். நீயும் என்னை மாதிரி அளவா எடுத்துட்டு வந்திருந்தா டிரெய்ன மிஸ் பண்ணியிருப்போமா. எல்லாம் உன்னாலதான், ஜாலியான டூர் மிஸ் ஆய்டுச்சே…

  தப்புதான் அனிதா. ஆசைதான்டி என் தோல்விக்கு காரணம். தப்பு பண்ணிட்டேன்டீ அனிதா. என்னால உனக்கும் கஷ்டம். என்னை மன்னிச்சுடுடீ… என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள் ஸ்ரேயா.

  கடைசியாக அனிதா சொன்னது அவள் நினைவுக்கு மீண்டும் வந்தது.

  டிரெஸ் மட்டும் இல்லடி ஸ்ரேயா. வாழ்க்கையில நாம எதையுமே அளவோட யூஸ் பண்ணா, கடைசி வரைக்கும் சந்தோஷமாவும் நிம்மதியாவும் வாழ்க்கைய அனுபவிக்கலாம் என்ற அனிதாவின் வார்த்தைகள் ஸ்ரேயா மனத்தில் ஆழமாகப் பதிந்தது.

  ***

  ஆசனம்
  வியாக்ராசனம் (புலி ஆசனம்)

  பெயர்க் காரணம்

  வியாக்ரம் என்றால் புலி. இந்த ஆசனம் செய்யும்போது, உடல் தோற்றம் புலி பாய்வதுபோல் இருக்கும் என்பதால், இதற்கு வியாக்ராசனம் என்று பெயர்.

  செய்முறை

  கால்களை மண்டியிட்டு வஜ்ராசனத்தில் அமரவும்.

  பின்னர் மார்ஜரி என்ற பூனை ஆசனத்துக்கு வரவும். நான்கு கால் விலங்குபோல் இரண்டு கைகள் கால்களால் நிற்கவும்.

  பிறகு வலது கையை முன்னோக்கி மேலே நீட்டவும்.

  இடது காலைப் பின்னோக்கி உயர்த்தி நீட்டவும்.

  சில சுவாசங்கள் இருக்கவும்.

  பின்னர் வலது கையையும் இடது காலையும் பழையபடி கீழே ஊன்றிவிட்டு, இந்த முறை இடது கையை நீட்டி உயர்த்தவும். அதே சமயம், வலது காலை நீட்டி உயர்த்தவும்.

  சில சுவாசங்கள் அதே நிலையில் இருக்கவும்.

  பிறகு கை கால்களை பழைய நிலைக்கு ஊன்றி நிற்கவும்.

  இதை நான்கைந்து முறை செய்யலாம்.

  பலன்கள்

  கையில் இருந்து கால் வரை ரத்தச் சுழற்சி இருக்கும்.

  சிறுகுடல் பெருங்குடல் பகுதிகள் புத்துணர்ச்சி பெறும்.

  ஜீரண உறுப்புகளுக்கு ரத்தம் ஓட்டம் சிறப்பாக இருப்பதால், பித்த நீர், கணைய நீர்கள் நன்றாகச் சுரக்கும்.

  பெருங்குடல் சிறுகுடல், பிறப்பு உறுப்பு ஆகியவற்றுக்கு நல்ல ரத்த ஓட்டமும், பிராண வாயு ஓட்டமும் கிடைக்கும். அதனால் எந்த நோயும் தாக்காது.

  ஆண்மை, பெண்மைக் குறைபாடு உள்ளவர்கள் செய்ய வேண்டிய ஆசனம் இது.

  காணொளி: சி.மகேஷ்
  புகைப்படம்: சந்தோஷ் – சுகன்யா தம்பதிகள்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai