தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

பேல்பூரி

விடியல் என்பது கிழக்கில் அல்ல... நம் உழைப்பில் உள்ளது!

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 6:30 pm

கண்டது

(திருவாரூர் மாவட்டம், எரவாஞ்சேரி அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்)

'கூந்தலூர்.'

-ம.ஸ்ரீகிருஷ்ணா,

மேலமங்கைநல்லூர்.

(திருச்சியில் ஆட்டோ ஒன்றில் கண்ட வாசகம்)

'விடியல் என்பது கிழக்கில் அல்ல...

நம் உழைப்பில் உள்ளது!'

-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

(காஞ்சிபுரத்தில் வேன் ஒன்றில் எழுதப்பட்டிருந்த வாசகம்)

'எதிரியின் பலத்தை எடைபோடத் தெரிந்த எனக்கு நண்பனின் துரோகத்தை எடை போடத் தெரியவில்லை!'

-ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

கேட்டது

(கோவை காந்திபுரம் சாலையில் வாகனத்தில் இருவர்)

'ஏம்பா, முன்னாடி டூ வீலர்ல போற பொண்ணு பின்னாடியே நீயும் மெதுவாவே வண்டி ஓட்டிக்கிட்டுப் போறீயே... அந்தப் பொண்ணை ஃபாலோ பண்றீயா?'

'அடப் போங்க சார்... அந்தப் பொண்ணு ஹெட் போன்ல பேசிக்கிட்டே எந்தப் பக்கம் வண்டியைத் திருப்பும்னு தெரியாது... அதனாலதான் மெதுவா போறேன்!'

-எம்.பி.தினேஷ், இடையர்பாளையம்.

(விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருவர் பேசியது)

'மனைவிக்குப் பயப்படக்கூடாதுன்னு ஒரு புத்தகம் எழுதப்போறேன்...'

'அதை ஏன் மெதுவா சொல்றே?'

'பஸ்ஸூல ஜன்னல் ஓரம் என் மனைவி உட்கார்ந்திருக்கா... அவ காதுல விழுந்துடும்!'

-கே.இந்துகுமரப்பன், விழுப்புரம்.

(ஈரோடு ஒரு மல்ட்டி ப்ளக்ஸ் தியேட்டர் கேண்டீனில் கணவனும் மனைவியும்)

'என்னடி... பாப்கார்னுக்கும் கூல்டிரிங்ஸூக்கும் முந்நூறு ரூபாய் சொல்றான்?'

'கோயில்ல பிசினாறித்தனமா தேடித்தேடி சில்லறையை எடுத்து தட்டுல போட்டீங்கல்ல... இப்ப அழுவுங்க!'

-துடுப்பதி வெங்கண்ணா, கவுண்டச்சிபாளையம்.

யோசிக்கிறாங்கப்பா!

'யாரும் யாருடைய வலிகளையும் புரிந்துகொள்ளவேண்டாம்.

ஆனால், எல்லோருக்கும் வலிக்கும் என்று புரிந்துகொண்டாலே, போதும்!'

-அ.கருப்பையா, பொன்னமராவதி.

மைக்ரோ கதை

சாந்தி தேநீர் தயாரித்துவிட்டு, ஒரு டம்ளரில் எடுத்துக்கொண்டு வந்தபோது, கூடத்தில் அவள் கணவன் பாஸ்கர் யாரோடோ பேசிக்கொண்டிருப்பது கேட்டது. எனவே தேநீரை அங்கேயே வைத்துவிட்டு எட்டிப்பார்த்தாள். கணவர், அவரது அலுவலக நண்பர் குமாருடன் பேசிக்கொண்டிருந்தார்.

'ஐயயோ... இவருக்கு சேர்த்தெல்லாம் டீ கொடுக்கமுடியாது' என எண்ணியவளாக, கணவர் பாஸ்கரை கண்சாடை காட்டி அழைத்தாள். பாஸ்கரும் புரிந்துகொண்டு உள்ளே வந்து தேநீரை உறிஞ்சுவிட்டுப் போனார்.

அவர் அன்று மாலை குமாரின் வீட்டுக்குப்போக வேண்டியிருந்தது. குமாரின் மனைவி காஞ்சனா இஞ்சித் தேநீரை அவருக்குக் கொண்டுவந்து கொடுத்தார். பருகிவிட்டு, 'தங்கச்சி, டீன்னா இதுதாம்மா டீ. என் மனைவியும் போடுறா பாரு டீ....

அதைக் குடிக்கிறதே பெரிய தண்டனை. அதனாலதான் காலையில அவ டீ தந்தபோது, நான் மட்டும் தனியா உள்ளே போய்க் குடிச்சேன். குமார் அவனை விட்டுட்டு தேநீர் குடிச்சதா நெனைச்சியிருப்பான், பரவாயில்லை!' என்றார்.

-வசீகரன், தேனாம்பேட்டை.

எஸ்.எம்.எஸ்.

'உணரும்வரை உண்மை ஒரு பொய்தான்...

புரிகின்றவரை வாழ்க்கையும் ஒரு புதிர்தான்!'

-த.நாகராஜன், சிவகாசி.

அப்படீங்களா!

இரண்டு வாட்ஸ் ஆப் கணக்குகளை ஒரே அறிதிறன்பேசியில் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு புதிய சேவைகளை வாட்ஸ் ஆப் தொடங்கி உள்ளது.

முன்பு இந்த சேவை ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஐபோன் பயன்பாட்டாளர்களுக்கும் இந்த சேவை அறிமுகமாகி உள்ளது.

இதில் இரு பயன்பாட்டாளர்களுக்கு தனித் தனி புரோபைல் போட்டோவையும் வைத்துக் கொள்ளலாம்.

இதேபோல், பழைய ஆன்ட்ராய்ட் அறிதிறன்பேசியிலிருந்து புதிய ஐஓஎஸ் அறிதிறன் பேசிக்கு உங்கள் தொலைபேசி எண்களையும், போட்டோக்கள், விடியோக்கள் ஆகியவற்றை மாற்றிக் கொள்ளலாம்.

மேலும், இடப்பற்றாக்குறை பிரச்னையைத் தீர்க்க பெரிய அளவிலான விடியோக்களை மட்டும் தேர்வு செய்து டெலிட் செய்து கொள்ளலாம். இதனால் முக்கியமான சாட்களைப் பாதுகாக்கலாம்.

போட்டோக்களைப் பகிர்வதற்கு முன் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பல்வேறு மாற்றங்களை செய்வதற்கும் புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சேவைகள் அனைத்தும் ஐஓஎஸ் பயன்பாட்டாளர்களுக்கு விரைவில் அறிமுகமாகி வருகின்றன.

-அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.