

புதுதில்லி, ஜன.9- இந்தியாவில் தடை செய்யப்பட்ட உல்பா தீவிரவாத இயக்கத்தின் தலைமைத் தளபதி பரேஷ் பராஹ் சீனாவில் தங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம், பிகார் மாநிலத்தில் மணிப்பூரி தீவிரவாத இயக்கமான (யுஎன்எல்எப்) தலைவர் ஆர்.கே. சனாயமா என்னும் மேஹெனை தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்ஐஏ) போலீஸார் கைது செய்தனர்.
போலீஸாரின் விசாரணையின்போது உல்பா தீவிரவாத இயக்கத்தின் தலைமைத் தளபதி சீனாவில் தங்கியிருக்கும் விவரத்தை அவர் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஆண்டு சீனாவில் உள்ள ஷாங்கை நகரில் பரேஷ் பராஹ்வை தான் சந்தித்துப் பேசியதாகவும் சனாயமா கூறியுள்ளார்.
54 வயதான உல்பா தலைமைத் தளபதி பரேஷ் பராஹ் சீனாவில் உள்ள யுனான் மாகாணத்தில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அந்த பகுதி மியான்மர் எல்லையோரத்தில் உள்ளது. மேலும், அவர் அடிக்கடி சீனாவில் இருந்தபடி மியான்மருக்கு சென்று வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உல்பா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அரவிந்த ராஜ்கோவா 2009 நவம்பரில் கைது செய்யப்பட்டார். 2011 ஜனவரி 1-ம் தேதி நீதிமன்றம் அவர் ஜாமீனில் விடுதலை செய்தது. இதையடுத்து, அவர் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உல்பாவின் தலைமைத் தளபதி பரேஷ் பராஹ் சீனாவில் தங்கியுள்ள தகவல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.